Saturday, August 27, 2011

ஜணுத ஜணுத தக...

(தொடர்ச்சி)

5. ஊர்த்துவ தாண்டவம்

தாண்டவத்துக்கு சிவன் அதிபதி போல, லாஸ்யத்துக்கு சக்தி அதிபதியாம். அதாவது தாண்டவத்தை சிவன் ஏற்படுத்தியதி போல, லாஸ்யத்தை ஏற்படுத்தியவள், சக்தி. லாஸ்யம் என்பது மென்மையும் நளினமும் கொண்டது.


ஒரு முறை சிவனுக்கும், சக்திக்கும், தத்தம் திறமையே உயர்ந்தது, அப்படின்னு கலகம் ஏற்பட்டதாம். அதைத் தீர்க்கறதுக்காக, அவங்க ரெண்டு பேரும் கந்தர்வர்கள், கின்னரர்கள், இன்னும் பல தேவசாதியினரின் முன்னால் நடனம் ஆட ஆரம்பிச்சாங்களாம். இரண்டு பேரின் நடனமுமே உயர்வு தாழ்வு பிரிச்சு சொல்ல முடியாதபடி ரொம்ப அருமையா இருந்ததாம். போகப் போக இலேசா சக்தியின் கை ஓங்கும் போல இருந்ததாம். அந்த சமயம், சிவன் அவரோட ஒரு காலை தலை வரை தூக்கி வச்சு தாண்டவம் செய்தாராம். சக்திக்கு அப்படிச் செய்ய விருப்பமில்லாமல் தோல்வியை ஒப்புக் கொண்டாளாம். அந்த சமயத்தில் சிவபெருமான் ஆடிய நடனம்தான் ஊர்த்துவ தாண்டவம்.

6. உமாமகேசுவர தாண்டவம்

அனைத்தையும் சிவபெருமான் தன்னுள் அடக்கிக் கொள்கிற சமயம், அவனும், அம்பிகையும், மயானத்தில் நடனம் செய்கின்றனராம். வீர பைரவனாக சிவ பெருமானும், வீர பைரவியாக அம்பிகையும், நிருத்தம் செய்யறாங்க. ஒவ்வொரு உடலினின்றும் விடுபடுகிற உயிர் வந்து அவர்களோட கலக்க, மயானத்தில் எரிஞ்சிக்கிட்டிருக்கும் சிதைகளில் இருந்து பொறிகளாக ஒளிக் கதிர்கள் அவர்களுக்குள்ளே புகுந்து விடுகின்றனவாம். அப்போது அவர்களுடைய நடனம், மலைகள் உருள, கடல்கள் பொங்க, நிலமே தடுமாறி அசைகிற மாதிரி வீராவேசமா இருக்காம். இந்த தாண்டவத்தையே உமா தாண்டவம் அல்லது உமாமகேசுவர தாண்டவம், அப்படின்னு சொல்றாங்க.

7. சம்ஹார தாண்டவம்

உலகங்கள் எல்லாத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்ட பின்னால் பரமசிவன் புரிகிற பிரளய தாண்டவத்தைத் தான் சம்ஹார தாண்டவம் அப்படிங்கிறாங்க. இந்தத் தாண்டவமும் மயானத்தில் தான் நடக்கிறதாம். உடலெங்கும் திருநீறணிந்து, செஞ்சடையில் சந்திரனின் கலை அசைந்து ஆட, உலக மாயையிலிருந்து சீவர்களை விடுவித்து தன்னில் அடக்கிக் கொண்டு விட்ட பெருமையை வெளிப்படுத்தும் வண்ணம் சிவன் இந்த தாண்டவத்தை ஆடுகிறானாம்.

இன்னும் எத்தனையோ விதமான தாண்டவங்களும், சில சமயங்களில் வெவ்வேறு பெயர்களிலும் அறியக் கிடைக்கின்றன. இவற்றை முக்கியமான ஏழு தாண்டவங்களாகக் கொள்ளலாம்.


அன்புடன்
கவிநயா

நன்றி: கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் 'பரதநாட்டிய சாஸ்திரம்'.

படம் இங்கேர்ந்து. அங்கேயே இன்னும் வேற நல்ல படங்களும் பார்த்தேன்.

6 comments:

 1. அரன் ஆடிய வேகத்தில் அவரது செவியணி கழண்டு விழ, ஆட்டத்தை நிறுத்தாமல் காலால் அதை எடுத்து காலை காது வரைத்தூக்கி காதில்

  செவியணி அணிந்தபடியே ஆடியதாக என்றோ ஒரு கதை படித்தேன்;

  அந்த போஸ் தானோ இது?ரொம்ப அழகு!

  ReplyDelete
 2. நல்ல இடுகை...ஆமாம், ஈசனுக்கும், அம்பிகைக்கும் போட்டி நடந்ததை விளக்கும் விதமாக மதுரையில் ஸ்வாமி சன்னதியில் கொடி மரத்திற்கு அருகில் ஸ்வாமியின் சிலை இதே போஸிலும், அம்பிகை இவ்வாறு காலைத்தூக்க இயலாது போட்டியில் தோல்வியை நாணத்துடன் தலை தாழ்த்தி ஏற்கும் விதமாகவும் சிலைகள் இருக்கிறது.

  ReplyDelete
 3. வாங்க லலிதாம்மா. ஆமாம், நீங்க சொன்ன மாதிரி நானும் படிச்சிருக்கேன்; ஆனா இங்கே இந்த புத்தகத்தில் இருக்கிறதை மட்டும்தான் எடுத்து எழுதியிருக்கேன் :)

  வருகைக்கு நன்றி அம்மா.

  ReplyDelete
 4. வாங்க மௌலி. ஆமாம், நானும் கோவிலில் பார்த்திருக்கேன்.

  வருகைக்கு நன்றி :)

  ReplyDelete
 5. படங்களும் விளக்கமும் அருமை

  ReplyDelete
 6. //படங்களும் விளக்கமும் அருமை//

  மிக்க நன்றி கைலாஷி.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)