Monday, September 13, 2010

ஜலதோஷமும் சந்தோஷமும்


சந்தோஷம் என்பது பூமணம் போல. உங்ககிட்ட ஒரு கை மல்லிகைப்பூ இருக்குன்னு வைங்க, அதை நீங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுக்கறீங்க. அவங்க அதை வைக்கிற இடம் கமகமக்கும். பிறகு அதை அவங்க இன்னும் ரெண்டு பேருக்கு கொடுக்கறாங்க, இப்ப இன்னும் கொஞ்ச பேரோட இடம் மணமணக்கும்! இப்படியே உங்க பூவோட மணம் எவ்வளவு தூரத்துக்கு பரவுது பாருங்க.

சந்தோஷமும் அப்படித்தான். நீங்க கொஞ்சம் அடுத்தவங்களுக்கு குடுத்தா, அந்த சந்தோஷத்தில் அவங்க இன்னொருத்தவங்களுக்கு குடுப்பாங்க, அவங்க இன்னொருத்தங்களுக்கு, இப்படியே பரவும். மல்லிகைப் பூவாச்சும் ஒரு கட்டத்தில் தீர்ந்து போயிடும். ஆனா நாம பரப்பற சந்தோஷம் இருக்கே, அது இரட்டிப்பாகுமே தவிர, குறையாது.

அது சரி, ஒருத்தரை சந்தோஷப்படுத்த சுலபமான வழி எதுன்னு நினைக்கிறீங்க?

அவங்களைப் பாராட்டறதுதான்!

அன்னை தெரசா என்ன சொல்றாங்க பாருங்க –
“There is more hunger for love and appreciation in this world than for bread.”~ Mother Teresa

உங்களைப் பாராட்டினா உங்களுக்கு சந்தோஷமா இருக்காதா? நிச்சயமா இருக்கும். ஆனா, பாராட்டுவது சுலபமில்லைங்க, அதுவும் ஒரு கலைதான். ஒருத்தரைப் பாராட்டும் போது மனதார, உணர்ந்து, உண்மையா பாராட்டணும். அப்பதான் அது பாராட்டறவங்க, பாராட்டப்படறவங்க, இரண்டு பேருக்குமே உண்மையான சந்தோஷத்தைத் தரும்.

ஆனா பல சமயங்களில் நடப்பது என்ன? ஒருத்தர்கிட்ட காரியம் ஆகணும்கிறதுக்காக வலியப் போய் பொய்யான பாராட்டுக்களை அள்ளி விடறவங்கதான் அதிகமா இருக்காங்க.

அதோட மட்டுமில்லாம, பொதுவாகவே மற்றவங்களோட குறைகள்தான் நம் கண்ணில் அதிகம் படும்; நிறைகள் கண்ணில் படுவது அபூர்வம். அதனாலதான் நாம் மனதார பாராட்டுவதும் அபூர்வமா இருக்கு போல.

இப்படி செய்து பார்க்கலாம்… ஒரு நாளைக்கு குறைஞ்சது ஒருத்தரையாவது உண்மையா பாராட்டணும் அப்படின்னு வச்சுக்குவோம். அந்த ஒருத்தர், நம்ம குடும்பத்தில் ஒருத்தரா இருக்கலாம், அலுவலகத்தில் வேலை செய்கிறவரா இருக்கலாம், ஏன், காய்கறிக் கடைக்காரராகக் கூட இருக்கலாம். அன்றைக்கு முழுக்க நாம சந்திக்கக் கூடிய நபர்களில் யாராக வேணும்னாலும் இருக்கலாம்.

ஒவ்வொருத்தரையும் ‘இவங்களை எப்படி பாராட்டலாம்?’ என்கிற எண்ணத்தோட பார்க்கும் போது என்ன ஆகும்? நாம இது நாள் வரை அவங்ககிட்ட பார்த்திருக்காத பல நல்ல விஷயங்கள் நம் கண்ணில் பட ஆரம்பிக்கும். அப்படி ஆகும்போது, அவங்களோட குறைகள் நம் பார்வையிலிருந்து மறைய ஆரம்பிச்சிடும்.

எவ்வளவு நல்ல விஷயம் பாருங்க அது! எங்கேயும் எப்பவும் நல்லதை மட்டுமே பார்க்கப் பழகுவது சாதாரணமான விஷயம் இல்லை. அப்படி ஒரு நல்ல விஷயத்தை எடுத்து, நீங்க ஒருத்தரை மனதார பாராட்டினீங்கன்னு வைங்க! அந்த சந்தோஷத்தில் அவர் இன்னொருவரிடம் அன்பாக நடந்து கொள்வார்; வேறொருவரை பாராட்டுவார், பிறகு அவங்க தங்களுடைய மகிழ்ச்சியை இன்னும் சிலரிடம் கொடுப்பாங்க… நீங்க ஆரம்பிச்ச சந்தோஷம் இப்படியே பரவிக்கிட்டேதானே போகும்!

அட, பாராட்ட எதுவும் கிடைக்கலையா, அன்பா ஒரு சில வார்த்தைகள். அதுவும் முடியலையா, கனிவா ஒரு புன்னகை, இப்படி ஏதாவது…

ஆக மொத்தம், ஜலதோஷம் போல சந்தோஷமும் ஒரு தொற்று வியாதிதான்!
(அப்பாடி, தலைப்பு வந்திருச்சா?)

பரப்புவோமா? :)

இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி: முகஸ்துதி பண்றது, காக்கா பிடிக்கிறது அப்படிங்கிற பிரயோகங்கள் எப்படி வந்தது?

அன்புடன்
கவிநயா

பி.கு.: படத்துக்கு நன்றி: தினமலர்

29 comments:

  1. //ஒவ்வொருத்தரையும் ‘இவங்களை எப்படி பாராட்டலாம்?’ என்கிற எண்ணத்தோட பார்க்கும் போது என்ன ஆகும்? நாம இது நாள் வரை அவங்ககிட்ட பார்த்திருக்காத பல நல்ல விஷயங்கள் நம் கண்ணில் பட ஆரம்பிக்கும். அப்படி ஆகும்போது, அவங்களோட குறைகள் நம் பார்வையிலிருந்து மறைய ஆரம்பிச்சிடும்.//

    அந்த பூக்களைப் போலவே அழகு. மிக அருமையான பதிவு.

    முகஸ்துதி: முகத்துக்கு நேரே ஸ்துதி பாடிக்கிட்டே இருப்பது..

    காக்கா பிடிப்பது: காக்காவை லேசுல பிடிக்க முடியாது. பக்கத்துல போனா பறந்திடும். ஆனாலும் விடாம பிடிக்கப் பார்க்கறது..

    ஹி..

    ReplyDelete
  2. //ஒவ்வொருத்தரையும் ‘இவங்களை எப்படி பாராட்டலாம்?’ என்கிற எண்ணத்தோட பார்க்கும் போது என்ன ஆகும்? நாம இது நாள் வரை அவங்ககிட்ட பார்த்திருக்காத பல நல்ல விஷயங்கள் நம் கண்ணில் பட ஆரம்பிக்கும். அப்படி ஆகும்போது, அவங்களோட குறைகள் நம் பார்வையிலிருந்து மறைய ஆரம்பிச்சிடும்.//










    இனிமையான பதிவு கவிநயா .அந்த பூக்கள் கொள்ளை அழகு .ஜலதோஷத்தை சாரி சந்தோஷத்தை பரப்புவோம்

    ReplyDelete
  3. \\அட, பாராட்ட எதுவும் கிடைக்கலையா, அன்பா ஒரு சில வார்த்தைகள். அதுவும் முடியலையா, கனிவா ஒரு புன்னகை, இப்படி ஏதாவது\\

    ;) ;) ;)

    நல்ல பதிவுக்கா ;)

    ReplyDelete
  4. ஆஹா..இப்ப உங்க ஜலதோஷமும் அத்துடன் சந்தோஷமும் இங்கேயும் பிடித்து கொண்டது...நல்ல பதிவு...சந்தோசம்..

    ReplyDelete
  5. அம்மா அப்பா விடம் கேட்டபொழுது:
    எங்க கவி நயா மாதிரி ஒரு பொண்ணு பிறக்கறதுக்கு நாங்க ஏழு ஜன்மம் தபஸ் பண்ணியிருக்கணும்.
    கணவரிடம் கேட்டபொழுது:
    அவள் எனது பெட்டர் ஹாஃப் இல்லை ; பெஸ்ட் ஹாஃப்.
    மகனிடம் கேட்டபொழுது:
    எங்க அம்மா தெரஸா அன்னை மாதிரி. ஏன் அதற்கும் ஒரு படி மேல... ஆமாம்.
    கவினயா.ப்ளாக்ஸ்பாட் காம் படிக்கும் வாசகர்கள்:
    கவினயா உலகத்திலே ஒரு தன்னிகரில்லா கவிதாயினி.
    பக்தி பரவசத்தில் அவர்கள் ஒரு முன் மாதிரி.

    இதெல்லாம் படிக்கும்பொழுது எப்படி இருக்கு ?
    சந்தோஷமா !!
    ஆனால் இதெல்லாம் உண்மைதானே.

    தாத்தா.
    http://kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
  6. //அந்த பூக்களைப் போலவே அழகு. மிக அருமையான பதிவு.//

    வாங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி.

    //முகஸ்துதி: முகத்துக்கு நேரே ஸ்துதி பாடிக்கிட்டே இருப்பது..//

    இது ஓகே...

    //காக்கா பிடிப்பது: காக்காவை லேசுல பிடிக்க முடியாது. பக்கத்துல போனா பறந்திடும். ஆனாலும் விடாம பிடிக்கப் பார்க்கறது..//

    இது தெரியலை :) தெரிஞ்சவங்க யாராச்சும் வந்து ஓகே பண்றாங்களான்னு பார்ப்போம் :)

    ReplyDelete
  7. //ஜலதோஷத்தை சாரி சந்தோஷத்தை பரப்புவோம்//

    நல்ல காலம், திருத்திட்டீங்க. இல்லன்னா மருத்துவரே இப்படி செய்யலாமான்னு கேள்வி வந்திருக்கும் :)

    வருகைக்கு மிக்க நன்றி பூங்குழலி.

    ReplyDelete
  8. //கனிவா ஒரு புன்னகை, இப்படி ஏதாவது\\

    ;) ;) ;)//

    அது சரி :) நன்றி கோபி.

    ReplyDelete
  9. //அம்மா அப்பா விடம் கேட்டபொழுது:
    எங்க கவி நயா மாதிரி ஒரு பொண்ணு பிறக்கறதுக்கு நாங்க ஏழு ஜன்மம் தபஸ் பண்ணியிருக்கணும்.
    கணவரிடம் கேட்டபொழுது:
    அவள் எனது பெட்டர் ஹாஃப் இல்லை ; பெஸ்ட் ஹாஃப்.
    மகனிடம் கேட்டபொழுது:
    எங்க அம்மா தெரஸா அன்னை மாதிரி. ஏன் அதற்கும் ஒரு படி மேல... ஆமாம்.
    கவினயா.ப்ளாக்ஸ்பாட் காம் படிக்கும் வாசகர்கள்:
    கவினயா உலகத்திலே ஒரு தன்னிகரில்லா கவிதாயினி.
    பக்தி பரவசத்தில் அவர்கள் ஒரு முன் மாதிரி.//

    தாத்தா! இதெல்லாம் கொஞ்சம்... இல்லையில்லை... ரொம்பவே ஓவர்னு என் அம்மா அப்பாவே சொன்னாலும் சொல்வாங்க :) நிறைய குற்றங் குறைகள் உள்ள சாதாரண பொண்ணுதான் நானு :)

    //இதெல்லாம் படிக்கும்பொழுது எப்படி இருக்கு ?
    சந்தோஷமா !!
    ஆனால் இதெல்லாம் உண்மைதானே.//

    இன்னிக்கு என்னை சந்தோஷப் படுத்தறது அப்படிங்கிற உங்க தீர்மானத்துக்கு நன்றி தாத்தா :)

    ReplyDelete
  10. கால்-கை பிடிப்பது (காலைக் கையைப் பிடித்து சாதித்துக் கொள்வது) என்பது தான் காக்கா பிடிப்பது என்று வழக்கத்தில் வந்ததாகச் சொல்வார்கள்.

    ReplyDelete
  11. காக்க பிடிப்பது பற்றி ஜீவி அவர்களின் விளக்கம் ஏற்புடையதாய் உள்ளது.

    ReplyDelete
  12. //கணவரிடம் கேட்டபொழுது:
    அவள் எனது பெட்டர் ஹாஃப் இல்லை ; பெஸ்ட் ஹாஃப்.
    //

    shall i try something in thakku style??..:P

    //அவள் என்னோட பெட்டர் ஆப் இல்லை எனக்கு நானே அடிச்சுண்ட ஆப்பு//...;)))

    ReplyDelete
  13. ஜலதோஷமும் சந்தோஷமும்.. தலைப்பே வித்தியாசமாய் இருக்கிறது..

    ஒருவரை சந்தோஷப்படுத்த நிறைய ஐஸ் வைத்தால், அவருக்கு ஜலதோஷம் வருவது உறுதி...

    பதிவின் முடிவில் தலைப்பை கோர்த்தது, அழகான மல்லிகைப்பூவை தொடுத்து அந்த ஃபோட்டோவில் உள்ளது போல பந்தாக்கியது போலிருந்தது..

    கால், கை பிடித்து காரியம் சாதிக்கும் முறையே, பின் மறுவி காக்கா பிடிப்பது என்றானதாக கேள்வி...

    அந்த மல்லிகைப்பூப்பந்தின் வாசம் இங்கு வரை வருகிறது...

    வாசமான பதிவிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி திரு.நடராஜன்.

    ReplyDelete
  15. //கால்-கை பிடிப்பது (காலைக் கையைப் பிடித்து சாதித்துக் கொள்வது) என்பது தான் காக்கா பிடிப்பது என்று வழக்கத்தில் வந்ததாகச் சொல்வார்கள்.//

    வாருங்கள் ஜீவி ஐயா. நீங்கள் சொன்னது சரியாகத்தான் தெரிகிறது :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  16. //காக்க பிடிப்பது பற்றி ஜீவி அவர்களின் விளக்கம் ஏற்புடையதாய் உள்ளது.//

    ஆம், மீள்வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  17. //அவள் என்னோட பெட்டர் ஆப் இல்லை எனக்கு நானே அடிச்சுண்ட ஆப்பு//...;)))

    ஆப்பு வைக்கிறதில் நீங்க க்ரேட்தான் அப்பு :) ஊருக்கு போயிட்டு வந்தாச்சா? நலம்தானே? :)

    ReplyDelete
  18. //ஒருவரை சந்தோஷப்படுத்த நிறைய ஐஸ் வைத்தால், அவருக்கு ஜலதோஷம் வருவது உறுதி...//

    அட, ஆமாம்.

    //வாசமான பதிவிற்கு வாழ்த்துக்கள்...//

    வருகைக்கும் ரசனைக்கும் நன்றி (ஆர்.) கோபி :)

    ReplyDelete
  19. சந்தோஷத்தைப் பரப்புவோம்! ஜலதோசம்? நோ நோ! :-)

    ReplyDelete
  20. //சந்தோஷத்தைப் பரப்புவோம்! ஜலதோசம்? நோ நோ! :-)//

    ரொம்ப சரி :)

    வருகைக்கு நன்றி குமரா.

    ReplyDelete
  21. /பரப்புவோமா? :) //
    பரப்புவோம்!
    பரப்புவோம்!
    நல்ல பதிவு! பாராட்டியாச்சு இல்லே? :-))

    ReplyDelete
  22. //நல்ல பதிவு! பாராட்டியாச்சு இல்லே? :-))//

    ஆமாம், திவாஜி :) சொன்னபடி செய்துட்டீங்களே... நன்றி :)

    ReplyDelete
  23. மற்றவர்களைப் பாராட்டுவது ஒரு கலை.
    அதைக் கற்றுக் கொண்டால் வாழ்வு வசந்தமே என்பதை தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்.

    ஒரு நல்ல வலைப்பூவை அறிமுகம் செய்த வலைச்சரத்துக்கு நன்றி.

    ReplyDelete
  24. //மற்றவர்களைப் பாராட்டுவது ஒரு கலை.
    அதைக் கற்றுக் கொண்டால் வாழ்வு வசந்தமே என்பதை தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்.

    ஒரு நல்ல வலைப்பூவை அறிமுகம் செய்த வலைச்சரத்துக்கு நன்றி.//

    முதல் வருகைக்கும், ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி, அமைதி அப்பா :)

    ReplyDelete
  25. //வலைச்சரத்திலும், முத்துச்சரத்திலும் தாங்கள்!//

    பார்த்தேன் ராமலக்ஷ்மி :) முத்துச்சரத்தில் மட்டும் பின்னூட்டினேன். உங்கள் அன்புக்கு மிக மிக நன்றி!

    ReplyDelete
  26. தற்போதுதான் தங்கள் பதிவைப் படித்தேன்
    மிக அழகாக பாராட்டுதலின் சிறப்பை விளக்கிப் போகிறீர்கள்
    தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. //மிக அழகாக பாராட்டுதலின் சிறப்பை விளக்கிப் போகிறீர்கள்//

    தங்கள் கவிதையும் அப்படியே :) வாசித்தமைக்கு மிக்க நன்றி ரமணி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)