Thursday, September 24, 2009

பால்வெள்ளை கமலத்தில்...

நவராத்திரி சிறப்பு பதிவு.




பால்வெள்ளை கமலத்தில் பனிமலர் கொடிபோலே
தேன்மொழியாள்அவள் வீற்றிருப்பாள்
வீணையிரு கரமேந்தி வேல்கள்இரு விழியேந்தி
கோலஎழில்வடிவுடையாள் கொலுவிருப்பாள்

வேதவடி வானவளாம் வேதனைகள் களைபவளாம்
நாதவடி வானவளாம் ஞானஒளி தருபவளாம்
நான்முகனின் நாயகியாய் நாவினிலே உறைபவளாம்
கோதகன்ற உள்ளமதை கோவிலென கொள்பவளாம்

நாடிவரும் நல்லவர்க்கு நலம்சேர்த் தருள்புரிவாள்
தேடிவரும் வினைகளைந்து கோடிசுகம் நல்கிடுவாள்
பாடிவரும் பக்தர்தம்மை பரிவுடன் பேணிடுவாள்
ஓடிவரும் தென்றலைப்போல் தேவிஅன்பு செய்திடுவாள்!


--கவிநயா

சுப்பு தாத்தா குரலில்... நன்றி தாத்தா!

Tuesday, September 22, 2009

பூமகளே பசும்பொன்னழகே !

நவராத்திரி சிறப்பு பதிவு.




திருமாலவனின் திருமார்பினிலே
சுடராய் ஒளியாய் இருப்பவளே!
திரைமாக் கடலை ததியாய் கடைய
மலராய் மகிழ்வாய் முகிழ்த்தவளே!

பகலினில் எத்தனை சூரியரோ என
பகலவன் மயங்கிடும் பேரெழிலே!
இரவினில் மலர்ந்திட்ட தாமரையோ என
சந்திரன் மயங்கிடும் சுந்தரியே!

வண்டுகள் போலிரு கருவிழிகள் எழில்
மாதவன் மலர்முகம் சுற்றிடுமே!
செண்டுகள் போலிரு தளிர்க்கரங்கள் அந்த
மாயவன் திருவடி பற்றிடுமே!

பூமகளே பசும்பொன் னழகே இந்த
நானிலம் காத்திடும் நாயகியே!
வான்மகளே எங்கள் தேவதையே இந்த
மாநிலம் வணங்கிடும் வசுந்தரியே!

தாமரை மலரெழில் விஞ்சுகின்ற செந்
தாமரைப் பதங்கள் சரணம் அம்மா!
தாமோ தரன்அவன் கொஞ்சுகின்ற பூந்
தாமரை வடிவே வரணும் அம்மா!!

--கவிநயா

ஷைலஜா அக்கா குரலில் - நன்றி அக்கா!

SriLakshmi_song_su...

Sunday, September 20, 2009

ஓம் ஓம் ஓம் !

நவராத்திரி சிறப்பு பதிவு.



சிம்ம வாஹினி காந்த ரூபிணி சத்ய ஜோதிநீ
ஓம் ஓம் ஓம்!
சண்டி காளி நீ கமல வாசினி கர்ம நாசினி
ஓம் ஓம் ஓம்!

நெற்றிக் கண்ணிலே நெருப்பை உமிழ்ந்தபடி
நீலியாக வந்து நின்றவளே!
பற்றிக் கொண்டவரின் துயரம் போக்கவே
சூலமேந்தி பகை வென்றவளே!

பகைவர் நடுங்கவே பதினெண் கரங்களில்
படைக்கலம் தாங்கி வந்தவளே!
உலகம் உய்யவே ஊழிக்காற்று போல்
உக்கிர வேகம் கொண்டவளே!

கொடிய அசுரரைக் குத்தி கிழித்து அவர்
உதிரம் உறிஞ்சியே களிப்பவளே!
பணியும் அடியவர் பாவந் தொலையவே
கனிந்த அன்பினை அளிப்பவளே!

அணிகள் ஜொலித்திருக்க சிலம்பும் ஒலித்திருக்க
அரனுடன் திருநடம் இடுபவளே!
கணங்கள் சூழ்ந்திருக்க நிதமும் புகழ்ந்திருக்க
கயிலை நாதனுடன் திகழ்பவளே!

உள்ளம்ஒன்றி தினம் உந்தன் நாமந்தனை
ஓதும் அன்பினிலே மகிழ்பவளே!
வெள்ளம் போலப்பொங்கி பெருகும் கருணையினால்
விரைந்து ஓடிவந்து அருள்பவளே!

துக்கம் அகற்றவே துர்க்கை வடிவிலே
தோற்றம் கொண்டுவந்த தூயவளே!
பக்கம்நின் றெம்மைக் காக்க வேண்டியே
பாதம் பணிகின்றோம் பூமகளே!!


--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரலில் - நன்றி தாத்தா!

Friday, September 18, 2009

தங்கப் பெண்ணே... தங்கப் பெண்ணே...!

மகளுக்கும் ஒரு தாலாட்டு வேணும்னு கீதாம்மா சொன்னப்போ இந்த கவிதைதான் நினைவு வந்தது - இது தாலாட்டு இல்லைன்னாலுமே...

'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா', 'சின்னஞ்சிறு பெண்போலே', இந்த பாடல்களையெல்லாம் ரசிக்காதவங்களே இருக்க முடியாது. புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட கதையா அன்னை பராசக்தியை குட்டிப் பொண்ணா நினைச்சு எழுத எனக்கு வந்த ஆசையின் விளைவுதான் இது. நவராத்திரிக்கும் பொருத்தம்தானே? :)

***

பட்டுப்பா வாடை கட்டி
பச்ச மரு தாணி வச்சு
பட்டுக் கன்னம் பளபளங்க
பச் சரிசிப் பல்லு மின்ன

சின்னப் பிறை நெத்தியிலே
செந் தூரப் பொட் டொளிர
வண்ணப் பிஞ்சுப் பாதத்திலே
வெள்ளி மணிக் கொலு சொலிக்க

சுத்திஜொ லிக்கும் கண்ணு
சூரி யனத் தோற்கடிக்க
கத்திக் கல கலக்கும்
கைவளையல் கதைகள் பேச

தத்தி நடை பழகும்
தங்கப் பெண்ணே தங்கப் பெண்ணே
கொத்திக்கொத்தி என் மனசை
கொள்ளை கொண்ட சின்னப் பெண்ணே

மோகமுல்லைச் சிரிப்பைக் கண்டு
சோகந் தொலைஞ்சு போச்சுதடி
பால்நிலவின் குளிர்ச்சி யிலே
பார மெல்லாங் கரைஞ்சதடி

உன்னழகைப் பாக்கையிலே
உள்ளம் உருகிப் போகுதடி
வாரி உன்னைக் கட்டிக்கத்தான்
வாஞ்சை மீற ஏங்குதடி!

--கவிநயா

***

அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!

Monday, September 14, 2009

நன்றி ஸ்வர்ணரேக்கா!

ஸ்வர்ணரேக்கா அன்போடு எனக்கு இந்த விருதுகளை வழங்கி சில வாரங்கள்(தான்) ஆச்சுங்க! :) வேற யாருக்கு பகிர்ந்து கொடுக்கறதுன்னு தெரியலை. இந்த பதிவை வந்து படிக்கிறவங்களுக்கெல்லாம் கொடுத்ததாக வச்சுக்கோங்க! சிறப்பா குறிப்பிட்டு குடுக்கலைன்னு கோவிச்சுக்காம ஏத்துக்கோங்க!





ஸ்வர்ணரேக்காவின் அன்பிற்கு மீண்டும் நன்றிகள்!

அன்புடன்
கவிநயா

Sunday, September 13, 2009

சிட்டுப்போல் கண்ணுறங்கு...!



ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

என்செல்லமே கண்ணுறங்கு
சிட்டுப் போல் நீயுறங்கு
அன்னை நான் தாலாட்ட
அற்புதமே கண்ணுறங்கு

தண்ணிலவு தான் வீச
வெண்மேகம் தொட்டில் கட்ட
தென்றலது தவழ்ந்து வந்து
தேவனுனைத் தழுவி நிற்க
கண்ணே நீயுறங்கு
கற்பகமே கண்ணுறங்கு

எந்தன்கலி தீர்க்க வந்த
என்னுயிரே மன்னவனே
புன்னகையில் முகம்ஒளிர
பூப்போலக் கண்ணுறங்கு
பொன்போல நீயுறங்கு
பெட்டகமே கண்ணுறங்கு

சின்னத் தமிழ்ச் சொல்லெடுத்து
சித்திரம் போல் தான் கோத்து
முத்து மணிச் சொல்லெடுத்து
முல்லைப் பூப்போல் தான் கோத்து
வண்ணத் தமிழ்ச் சொல்லெடுத்து
வானவில் போல் தான் கோத்து
கன்னித் தமிழ்ச் சொல்கோத்து
கதைகள் சொல்ல வந்தாயோ

வள்ளுவனின் வழியினிலே
வாழ வைக்க வந்தவனோ
கம்பனவன் வழியில் வந்து
காவியங்கள் செய்பவனோ
பாரதியின் வழியில் வந்து
பாட்டிசைக்க வந்தவனோ
முத்தமிழின் காவலனோ
மூவுலகின் மன்னவனோ
செல்லமே நீயுறங்கு
சிட்டுப்போல் கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ


--கவிநயா

பி.கு. எப்பவும் இடற தாலாட்டு போல இல்லாம, இது நானே எழுதினதாக்கும் :)

தூளி படம் வல்லிம்மா வலைல இருந்து சுட்டேன். நன்றி அம்மா!

Sunday, September 6, 2009

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில்வண்டி...!



சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயில் வண்டி
கத்திகத்தி கரும்புகை விடும் வண்டி
திக்கிதிக்கி மூச்சிரைக்க வரும் வண்டி
முத்துமுத்து புன்னகையை தரும் வண்டி!

குடுகுடு குடுவென வரும் வண்டி
விடுவிடு வேகமெடுத் திடும் வண்டி
கடகட கடகட எனும் வண்டி
தடதட தண்டவாளம் அதிர் வண்டி!

காடுகடல் மலையெல்லாம் புகும் வண்டி
மேடுபள்ள பேதமில்லா புகை வண்டி
ரோடுஇல்லா பாதையிலும் வரும் வண்டி
கோடுபோல நீண்டுநெளிந் திடும் வண்டி!

பெட்டிபெட்டி யாகஇழுத் திடும் வண்டி
சுட்டிப்பிள்ளை களின்உள்ளம் கவர் வண்டி
பட்டிதொட்டி யிலும்நிற்கும் ஒரு வண்டி
பத்திரமாய் கொண்டுசேர்க்கும் ரயில் வண்டி!

அன்னை யெனதாலாட்டி விடும் வண்டி
பிள்ளை யெனகூவிஓடி வரும் வண்டி
உன்னைஎன்னை ஏற்றிக்கொண்டு செல்லும் வண்டி
நம்மைநல்ல நண்பராக்கும் ரயில் வண்டி!!


--கவிநயா