Tuesday, September 30, 2008

பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள் !

நவராத்திரி சிறப்பு பதிவு. துர்க்கை அம்மாவை நல்லா வணங்கிக்கோங்க!


வீரதுர்க்கை வடிவெடுத்து வினைகள் தீர்க்க வந்தவள்!
தீரவேங்கை யாகி வந்து அசுரர்களை வென்றவள்!

கோபத்திலே தகதகத்து நெருப்பைப் போல ஜொலிப்பவள்!
வேகத்திலே சுழன்றடித்து காற்றைக் கூட ஜெயிப்பவள்!

மோகத்திலே உழலும் மனதின் மாயம் நீக்குகின்றவள்!
சோகத்திலே துவளும் போது தோள் கொடுக்கும் தாயவள்!

தேவருக்கு அருள வென்றே தோற்றம் கொண்டு வந்தவள்!
மூவருக்கும் முதல்வியாகி முத் தொழில்கள் புரிபவள்!

காளி யாகி வந்த போதும் கனிந்த அன்பால் குளிர்ந்தவள்!
நீலியாகி சூலியாகி தீமை எரிக்கும் தீ அவள்!

ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அச்சம் நீக்க வந்தவள்!
பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!

நேசம் கொண்ட நெஞ்சுக்குள்ளே தேசு கொண் டொளிர்பவள்!
வீசும் தென்ற லன்பில் எந்தன் மாசு நீக்கு கின்றவள்!

சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!

ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
எட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://i151.photobucket.com/albums/s140/sidatha/durga_QA91_l.jpg

Sunday, September 28, 2008

மீனாட்சி அம்மன் தாலாட்டு

தாலாட்டு பாடி ரொம்ப நாளாச்சுல்ல? அதான் நவராத்திரியும் அதுவுமா மீனாட்சி அம்மன் தாலாட்டு... :))) அம்மா படத்தை அவசியம் க்ளிக்கிப் பாருங்க.

இதுவரை பாடின மற்ற தாலாட்டெல்லாம் இங்கே .
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே ஆரிரரோ
பொழுது மினுமினுங்க – என் கண்ணே
மீனாட்சி அம்மன் பூக்கடையும் ஜோதி மின்ன
ஜரிகை தளதளங்க – என் கண்ணே
மீனாட்சி அம்மன் சந்நிதியும் ஜோதி மின்ன
ஆராரோ ஆரிரரோ என் கண்ணே கண்ணுறங்கு

கொத்தனில்லாக் கோபுரமாம் என் கண்ணே
மீனாட்சி அம்மன் குமரி விளக்குகளாம்
தச்சனில்லாக் கோபுரமாம் என் கண்ணே
மீனாட்சி அம்மன் சக்தி விளக்குகளாம்

கோபுரத்தின் கீழிறங்கி மீனாட்சி
குழந்தை வரம் தந்தாளோ
பக்கத்து முத்தெடுத்து மீனாட்சி அம்மன்
பத்திரமாய் உன்னைத் தந்தாளோ

மாவிளக்கு கொண்டு மதிலோரம் போகையிலே
மாவிளக்கை வாங்கி வைத்து மீனாட்சி அம்மன்
உன்னை மணிவிளக்காய்த் தந்தாளோ
காணிக்கை கொண்டு கடைத்தெருவில் போகையிலே
காணிக்கையை வாங்கி வைத்து மீனாட்சி அம்மன்
உன்னை மாணிக்கமாய்த் தந்தாளோ

நெய்விளக்கு கொண்டு நெடுந் தெருவிற் போகையிலே
நெய் விளக்கை வாங்கி வைத்து மீனாட்சி அம்மன்
உன்னை நிறை விளக்காய்த் தந்தாளோ
நீதி நிலவிளக்கோ என் கண்ணே
மீனாட்சி அம்மன் நிச்சயமாய்த் தந்த கண்ணோ
கண்ணான கண்ணே கண்ணுறங்கு கண்மணியே!

***

அனைவருக்கும் மனம் கனிந்த நவராத்திரி வாழ்த்துகள்!

--கவிநயா

Sunday, September 21, 2008

தகுதி


வீறிட்டு அழுத குழந்தையின் குரல் கேட்டு தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தாள், கவிதா. மூன்று வயதிருக்கும். கண்ணீர் வழிய, சுற்றும் முற்றும் பார்த்தபடி அழுது கொண்டிருந்தது. கூட வந்த அம்மாவையோ, அப்பாவையோ தேடுகிறது போலும். குழந்தைகள் அழுதால் அவளால் தாங்கவே முடியாது. ஓடிச் சென்று அந்தக் குழந்தையை வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது, அவளுக்கு. சின்னக் குழந்தையை அழ விட்டு மறைந்து விட்ட, முகம் தெரியாத அதன் பெற்றோரை மனதுக்குள் திட்டி முடிக்கும் முன், இரண்டடி தள்ளி குழந்தைகள் துணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த நிறை மாத கர்ப்பிணி ஒருத்தி, "என்னம்மா கண்ணா. அம்மா இங்கதான் இருக்கேன் பாரு", என்று சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றாள். சற்றே நிம்மதியுடன், மறுபடியும் தான் பார்த்துக் கொண்டிருந்த சட்டையை நோக்கி கவனத்தைத் திருப்பினாள். அவள் தோழி சாந்திக்கு, இரண்டு நாள் முன்னால்தான் மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்திருந்தது. முதல் இரண்டும் பையன்கள். பெண்ணுக்கு மிகவும் ஆசைப்பட்ட கணவனும் மனைவியும், அவர்கள் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று விட்டார்கள். அவள் கை தன்னிச்சையாகத் தன் வயிற்றுக்குச் சென்றது. ஐந்து வாரங்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளாக இப்போதே எண்ண ஆரம்பித்து விட்டாள். இன்னும் இரண்டு நாளில் குழந்தைக்குப் பெயரும் வைத்து விடுவாள். கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது, "இம் முறையேனும்..." என்ற நம்பிக்கையில்.

திருமணமாகி பத்து வருடங்கள் ஆகி விட்டன. அவள் மாமியார் சொல்வது போல அவள் வயிற்றில் இன்னும் ஒரு புழு, பூச்சியும் உண்டாகவில்லை. நான்கு வருடங்கள் வரை ஒரு கவலையும் இல்லை. ஐந்து வருடங்கள் ஆன பின், "என்னம்மா, அனுபவிச்சது பத்தாதா? எப்ப எனக்கு ஒரு பேரனைப் பெத்துத் தரப் போற?" என்று அம்மாவும், அப்பாவுமே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆறு வருடங்களுக்குப் பிறகு அவளுக்கே கவலை வந்து விட்டது. எத்தனை நாளுக்குத்தான் மற்றவர் குழந்தைகளையே கொஞ்சிக் கொண்டிருக்க முடியும்? அவள் கணவன் ராமும், அவளும் மருத்துவர்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். சின்னச் சின்னதாக ட்ரீட்மெண்ட் ஆரம்பித்தது. இது வரை எந்தப் பலனும் இல்லை. குழந்தைகளுடன் யாரைப் பார்த்தாலும் பொறாமையாக இருந்தது. கர்ப்பிணிப் பெண்களைப் பார்த்தால் ஏக்கமாக இருந்தது. இரண்டு நாள் தள்ளிப் போனாலும் சந்தோஷமாகி, கனவுகளை வளர்த்துக் கொள்வது வழக்கமாகிப் போனது. அதே போல நம்பிக்கை சிதைந்த பின், ஏங்கி அழுவதும் வாடிக்கையானது. பொது இடங்களுக்கோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ போவதைத் தவிர்க்க ஆரம்பித்தாள். ராமுக்கு அவள் போக்கு கவலையை அளித்தது. அதனால்தான், சாந்திக்குக் குழந்தை பிறந்த செய்தி வந்த பின் அவளை வற்புறுத்தி வெளியே அழைத்து வந்திருக்கிறான்.

மறு நாள் இருவரும் சாந்தியையும் அவள் குழந்தையையும் பார்க்கச் சென்றார்கள். ரோஜாக் குவியல் போல் இருந்த குழந்தையைக் கைகளில் ஏந்தியதும், பரவசமாக உணர்ந்தாள், கவிதா. ஆனால் அந்தக் குவியல் தனதில்லை என்ற எண்ணம் வந்ததும் சோகம் கனமாக மனசை அழுத்தியது. கிளம்ப வேண்டும் என்று கணவனிடம் சைகையில் உணர்த்தினாள்.

போகும் வழியில் கடற்கரையில் காரை நிறுத்தினான், ராம். அதே மன நிலையுடன் வீட்டுக்குச் செல்ல இருவருக்குமே இஷ்டமில்லை. மணற் பரப்பை நோக்கி இருவரும் மெதுவாக நடந்தார்கள்.

"ராம்"

"ம்"

"அந்தக் குழந்தையைப் பாத்தீங்களா, எவ்வளவு அழகு!"

"....."

"நமக்கு அந்தப் பாக்கியமே இல்லாமப் போயிடுமோன்னு பயம்மா இருக்கு, ராம்"

"இல்லன்னா என்ன? எனக்கு நீ குழந்தை; உனக்கு நான் குழந்தை", பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகவும் சொன்னான், ராம்.

"என்னால அப்படி ஈஸியா எடுத்துக்க முடியலயே", குரல் தடுமாறியது, கவிதாவுக்கு.

ஆதரவுடன், அவள் கையை எடுத்துத் தன் கையில் கோர்த்துக் கொண்டான், ராம். மெரீனா "ஜே, ஜே", என்று இருந்தது. கஷ்டப்பட்டு ஒரு இடம் தேடி இருவரும் அமர்ந்து கொண்டனர்.

"கவி, நமக்கு அப்படி என்ன வயசாயிடுச்சு? 40 வயசுல குழந்தை பெத்துக்கிட்டவங்கல்லாம் இருக்காங்க."

கவிதாவுக்கு 32 வயது. ராம் அவளை விட இரண்டு வயது பெரியவன்.

"என்னால அவ்வளவு நாள் காத்திருக்க முடியும்னு தோணல"

ராம் அவளைத் தோளுடன் அணைத்துக் கொண்டான். "அப்படியே இல்லன்னாலும், எவ்வளவோ அனாதைக் குழந்தைங்க ஆதரவில்லாம இருக்காங்களே, அவங்களத் தத்தெடுத்துக்கலாமே. அதப் பத்தி யோசிச்சயா?"

"ராம், எனக்கு என்ன தோணுது, தெரியுமா? எனக்கு நல்ல அம்மாவா இருக்கிற தகுதி இல்லயோன்னு தோணுது. அதனாலதான் கடவுள் எனக்கு அம்மாவாகிற பாக்கியத்தைக் குடுக்கலயோ, என்னவோ?"

"கவி, என்ன சின்னக் குழந்தை மாதிரிப் பேசற? இந்த மாதிரியான நெனப்பெல்லாம் உனக்கு எங்கேருந்து வருது? அப்படிப் பாத்தா, இந்த உலகத்துல குழந்தை பெத்துக்கிற பெண்களெல்லாம் அம்மாவாக ரொம்பத் தகுதியானவங்கன்னு எப்படிச் சொல்ல முடியும்? டீனேஜ்ல தெரியாத்தனமா தப்பு செஞ்சுட்டு புள்ள பெத்துக்கிறவங்கள்ல இருந்து, பொண்ணாப் பொறந்துடுச்சேன்னு அதக் கொலையே பண்றவங்க வரைக்கும் இந்த உலகத்துல பல விதமான அம்மாக்கள் இருக்காங்கன்னு தெரிஞ்சுமா இப்படிப் பேசற?"

அவன் சொல்வதிலிருந்த நியாயம் உறைத்தது, கவிதாவிற்கு.

"அதோட உன்ன ஒரு முறை பார்த்தவங்க கூடச் சொல்ல மாட்டாங்க, உனக்குப் போய் அம்மாவாகிற தகுதி இல்லன்னு"

"அதுக்கில்லை, ராம். நான் முந்தி எங்கயோ படிச்சிருக்கேன். இன்பமோ, துன்பமோ, எந்த விஷயமா இருந்தாலும் இறைவன் நம்மால சமாளிக்க முடியற அளவுதான் கொடுப்பாருன்னு. அதப் பத்தி யோசிச்சப்போதான் எனக்கு இந்த மாதிரி தோணுச்சு"

"கவி, கண்டதையும் நெனச்சு மனசக் குழப்பிட்டிருக்க. அந்தக் கருத்துப்படியே பார்த்தாலும், நீ அதுக்கு அர்த்தம் செய்துகிட்ட முறை தப்பு"

"வேற என்ன அர்த்தம் இருக்க முடியும், அதுக்கு?"

"எல்லாப் பெற்றோர்களுக்கும், தங்கள் சொந்தக் குழந்தைங்க மேல அன்பு செலுத்தறது ரொம்ப சுலபம். அதுவே யாரோ பெத்த குழந்தைங்க மேல வருமா? ஆனா உன்கிட்ட அந்த அளவு அன்பு இருக்கு, கவி. இந்த உலகத்துக்கு தர்றதுக்கு உன்கிட்ட அன்பு, பண்பு, பாசம், நேசம், அறிவுன்னு எவ்வளவோ இருக்கு. எல்லாத்துக்கும் மேலா, உன் குழந்தைங்கிற சின்ன வட்டத்தை விட்டுட்டு எல்லாக் குழந்தையும் உன்னுடையதா நெனக்கிற பெரிய மனசும், தகுதியும் உனக்கு இருக்குன்னு நான் மனப்பூர்வமா நம்பறேன். அதனால கூட கடவுள் உனக்குன்னு ஒரு குழந்தையைக் கொடுக்காம இருக்காரோன்னு சொல்லலாம், இல்லயா?"

இனிமையான சங்கீதம் போல் கணவன் பேசுவதைக் கேட்டபடி, அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்ட கவிதாவின் மனசு, இப்போது தெளிவாய் இருந்தது.

-- கவிநயா

இந்தக் கதை முன்பு 'திசைகளி'ல் வெளியானது.
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/wtlphotos/2357618089/sizes/m
/

Monday, September 15, 2008

இந்த உலகில் எப்படி வாழ வேண்டும்?

பெரிய பெரிய செய்திகளையும் தத்துவங்களையும் மிக எளிமையான குட்டிக் கதைகள் மூலம் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கி விடுதல் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் தனிச் சிறப்பு. "Gospel of Sri Ramakrishna" புத்தகத்தினின்றும் அப்படிப்பட்ட சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன் இதனை எழுதுகிறேன். ஏற்கனவே குரங்குக்குட்டி பூனைக்குட்டி கதையைப் பார்த்திருக்கிறோம்... இப்போது இந்த உலகத்தில் வாழும் முறை பற்றி அவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்...


நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை முழுமையாகச் செய்ய வேண்டும்; அதே சமயம் இறைவனிடம் இதயத்தைப் பதிக்கவும் வேண்டும். அன்னை, தந்தை, மனைவி, மக்கள், என்று அனைவருடனும் வாழலாம். அவர்களிடம் அபரிமிதமான அன்பு செலுத்தும் அதே சமயம், அவர்கள் நமக்குரியவர்கள் அல்ல என்பதையும் உணர்வது அவசியம்.

ஒரு ஊரில் ஒரு பெரிய தனவந்தர் இருக்கிறார். அவர் குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருக்கிறாள். அவளும் அவர் குடும்பத்தையும் பிள்ளைகளையும் தன்னுடையவர்கள் போல மிகவும் அன்புடனும் கவனத்துடனும் கவனித்துக் கொள்கிறாள். அவர் இல்லத்தையும் தன்னுடையதாய் பாவித்து சுத்தம் செய்து அழகு படுத்தி, கவனித்துக் கொள்கிறாள். இத்தனையும் அவள் உண்மையான அன்புடன் செய்கின்ற போதிலும், அவள் தன் உள்மனதில் அந்த வீடும் குடும்பமும் பிள்ளைகளும் தனக்குச் சொந்தமில்லை என்று அறிந்திருக்கிறாள். அவள் உடல் இங்கே இருந்தாலும் அவளுடைய எண்ணங்கள் அவளுடைய சொந்த ஊரிலும் அவள் சொந்த பிள்ளைகளிடமுமே இருக்கின்றன.

அந்த பெண்மணியைப் போலத்தான் நாமும் இந்த உலகத்தில் வாழ வேண்டும். நாம் இங்கு வாழ்ந்தாலும், இங்கிருப்பவைகள் எதுவும் நமக்கு சொந்தமில்லை, அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்பதை உணர வேண்டும். அப்படி உணர்ந்து சுற்றி உள்ளவர்களிடம் பற்றில்லாத அன்பு மட்டுமே செலுத்தி, மனதை இறைவனிடம் செலுத்தி வாழ வேண்டும்.

***

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவடிகள் சரணம்.

Thursday, September 11, 2008

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் !

பாரதியின் நினைவு நாளன்று எனக்குப் பிடித்த அவருடைய கவிதை ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்.
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர் சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

"நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றேயுல கேழும்
அறைந்திடு வாய்முரசே!
சொல்லத் தகுந்த பொருளன்ற காண் இங்குச்
சொல்லு மவர்தமையே
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்.
கும்பிட்டெந் நேரமும் "சக்தி" யென் றாலுனைக்
கும்பிடு வேன்மனமே.
அம்புக்குந் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாதபடி
உம்பர்க்கு மிம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு,
போற்றி யுனக்கிசைத்தோம்;
அன்னை பராசக்தி யென்றுரைத் தோம்தளை
யத்தனையுங் களைந்தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய்மன
மேதொழில் வேறில்லைகாண்;
இன்னும தேயுரைப் போம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி வேல்!

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி, நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடுவேன்,
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல்சக்தி
வேல்சக்தி வேல்சக்தி வேல்!


இந்த பாடலை எம்.எஸ். அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம். சுட்டி தந்த குமரனுக்கு நன்றி.

அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்! ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் !

Sunday, September 7, 2008

அன்பே செல்வம்; அதுவே தெய்வம்; அதுவே இன்பம் !

ஒரு காலத்துல குழந்தைகளுக்கான பாடல்கள் / கவிதைகள் எழுதணும்னு ஒரு எண்ணம் இருந்தது. ஆனா அப்படி எழுதினா அதை யார் படிப்பா, குழந்தைகளுக்கு எப்படி போய்ச் சேரும் அப்படிங்கிற நினைப்பு, அந்த எண்ணத்துக்கு தடை போட்டது. சமீபத்துல ஜீவி ஐயாவுடைய ஒரு 'தினம் தினம் சந்தோஷம்' பதிவுக்கு பின்னூட்டம் இட்டப்போ, அவர் இப்படி சொல்லியிருந்தார்:

//குழந்தைகளின் மனதில் நல்ல சிந்தனைகள் பதிகிற மாதிரி,ஓரிரண்டு எளிமையான கவிதைகளை நீங்கள் எழுதலாம் என்பது என் கோரிக்கை. அது உங்களால் முடியும். ஒரு நல்ல இறைப்பணியாகவும் அமையும்.//

அதன்படி இது ஒரு கன்னி முயற்சி.

குளத்துல விழறோமா, குட்டையில விழறோமா, கடல்ல விழறோமா, ஏரியில விழறோமா, இல்ல சாக்கடையிலதான் விழறோமான்னு பார்த்து பார்த்து மழை பெய்யறதில்லை. அதை போல நாம நல்லதை நினைச்சு எழுதுவோம்; அது நாலு பேருக்கு சேரணும்னு இருந்தா தானா போய்ச் சேரும். சரிதானே? :)


பாப்பா பாப்பா கொஞ்சம் நில்
பாட்டொன்று சொல்வேன் கேட்டுச் செல்
அன்பே செல்வம் அதுவே தெய்வம்
அதுவே இன்பம் நினைவில் கொள்!

மேகம் நீரை உண்டதனாலே
மழையாய்ப் பொழியும் அழகைப் பார்!
நிலமும் நீரைத் தேக்கியதாலே
ஆறாய் ஊற்றாய் மாறுது பார்!

(பாப்பா)

பூக்கள் தங்கள் வாசனையெல்லாம்
காற்றில் பரப்பும் விந்தையைப் பார்!
அன்பால் நிறைந்த மனமிருந்தாலே
மற்றவர்க் களித்தல் சுலபம் பார்!

பாப்பா பாப்பா கொஞ்சம் நில்
பாட்டொன்று சொல்வேன் கேட்டுச் செல்
அன்பே செல்வம் அதுவே தெய்வம்
அதுவே இன்பம் நினைவில் கொள்!

-- கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/jeremyhall/2327422231/

Tuesday, September 2, 2008

முந்தி விநாயகரே...!

வணக்கம்ங்க! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

விநாயகருக்கு வாழ்த்து சொல்லிட்டு, அப்படியே ஒரு தரம் ஜோரா கை தட்டுங்க பார்ப்போம்! அட என்ன விசேஷம்னு கேக்கறீங்களா? அதொண்ணுமில்லங்க, இது 50-வது பதிவு. அம்புட்டுதான். முதல் பதிவும் விநாயகர் பாடலோட ஆரம்பிச்சேன். சரியா சதுர்த்தியப்போ 50 ஆனதுல ஒரு மகிழ்ச்சி :)

பதிவுகளை படித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் / அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!


முந்தி விநாயகரே
எங்கள்
முத்தமிழ் காவலரே
வந்தனம் செய்தோமய்யா
உன்னை எங்கள்
சொந்த மாய்க் கொண்டோமய்யா!

விக்ன விநாயகரே
எங்கள்
வினைகளைத் தீர்ப்பவரே
சித்தி விநாயகரே
உன்னை எங்கள்
சிந்தையில் வைத்தோமய்யா!

மூஞ்சூறு வாகனரே
எங்கள்
முக்கண்ணனின் மைந்தரே
துஞ்சாமல் காப்பவரே
உன்னை எங்கள்
நெஞ்சுக்குள் வைத்தோமய்யா!

மஞ்சள் விநாயகரே
எங்கள்
மனம்போல அருள்பவரே
தொந்திக் கணபதியே
உன்னை எங்கள்
புந்தியில் வைத்தோமய்யா!

--கவிநயா