குழந்தை அழுகிறாளோ? கண்கள் மூடியே இருக்க, கை தன்னிச்சையாக அருகில் துழாவியது, தட்டிக் கொடுக்க. காலியான படுக்கையில் கை ‘பொத்’தென்று விழவும், ‘சட்’டென்று கண் விழித்தாள். ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. சுவரில் கடிகாரம், இரவு பத்து மணி என்றது.
“சே, இந்த நேரத்தில் இப்படித் தூங்கிப் போனோமே?” தன்னைத்தானே கடிந்து கொண்டபடி எழுந்து அமர்ந்தாள். “ஃபோன் பண்ணிப் பார்க்கலாமா?” என்று எண்ணம் ஓடியது. “வேண்டாம், இந்நேரம் தூங்கியிருப்பாங்க”, பதிலும் தானே சொல்லிக் கொண்டாள்.
அவள் குழந்தை ப்ரியா, அவள் தோழி வினிதா வீட்டில் இருக்கிறாள். ஒன்றரை வயதுதான் ஆகிறது; அதற்குள் என்ன துறுதுறுப்பு! குழந்தையை நினைத்ததும் வித்யாவின் முகத்தில் புன்னகை அரும்புகிறது. அவளைப் பார்த்தவுடன் மாயக் கண்ணனைப் பார்த்தது போல் மக்கள் அவளிடம் மயங்கி விடுகிறார்கள். அப்படி மயங்கியவர்களில் ஒருத்திதான் வினிதா.
ஆனால் வினிதா மட்டும் மயங்கவில்லை; குழந்தையும்தானே அவளிடம் மயங்கி விட்டாள்!நினைப்பிலேயே நெற்றி சுருங்குகிறது. குழந்தைக்கு வினிதாவிடம் ஏனோ அப்படி ஒரு ஒட்டுதல். அவளைப் பார்த்து விட்டால் போதும், அம்மாவிடம் கூட வர மாட்டாள். வித்யாவுக்கு அந்த விஷயத்தில் வினிதா மேல் பொறாமைதான்.
“என் பிள்ளையை என்னிடமே வர விடாம என்னடி சொக்குப் பொடி போட்டு வச்சிருக்கே?” என்று பாதி விளையாட்டும் பாதி உண்மையுமாகக் கேட்பாள்.
இன்றைக்குக் காலையில் கோவிலுக்குப் போயிருக்கையில் வினிதாவும் வந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் குழந்தை அவள் கால்களைக் கட்டிக் கொண்டு விடவே இல்லை. அவளைத் தூக்கச் சொல்லி ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டாள். பிறகு அவள் இடுப்பிலிருந்து இறங்கவே இல்லை. அவளுடனேயே போக வேண்டுமென்று ஒரே அடம்.
“அக்கா, ப்ளீஸ்க்கா. ப்ரியாக் குட்டியை நான் வீட்டுக்குக் கூட்டிப் போறேன்க்கா. இன்னிக்கு மட்டும்… ப்ளீஸ்…”, கெஞ்சிக் கேட்டாள்.
ரொம்ப நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாள், இவளுக்குத்தான் மனசே இல்லை. இவளைக் காட்டிலும் இவள் கணவன் குழந்தையை விட்டு இருக்கவே மாட்டான். இன்றைக்கு அவன் வேலை விஷயமாக வெளியூர் போயிருக்கிறான். இரண்டு நாளாகும், வர. அதனால் அரை மனதாகச் சம்மதித்தாள். கூடவே வைத்திருக்கும் மாற்றுத்துணி, விளையாட்டுச் சாமான், எல்லாவற்றையும் வினிதாவிடம் ஒப்படைத்தாள், குழந்தையுடன். ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு என்ன தேவை என்று பட்டியலிட்டாள்.
“எதுவாயிருந்தாலும் உடனே ஃபோன் பண்ணு. சரியா. பத்திரம்”, என்று ஆயிரம் முறை சொல்லி, மனசே இல்லாமல் வழி அனுப்பி வைத்தவள்தான்.
இதுவரை எந்த ஃபோனும் வரவில்லை. இவளும் குருட்டு யோசனை பண்ணிக் கொண்டே தூங்கிப் போயிருக்கிறாள். குழந்தை இனி நம்மைத் தேட மாட்டாளோ என்று மனசு சஞ்சலப் பட்டுக் கொண்டே இருக்கிறது. அம்மாவை விட இன்னொருவர் மேல் எப்படி அவ்வளவு பிடித்தம் ஏற்படும்? ஒரு வேளை நான் நல்ல அம்மாவாக இல்லையோ? வினிதா அளவு அவளை நான் பார்த்துக் கொள்வதில்லையோ? குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். ஒரு வேளை என் அன்பு பற்றவில்லையோ? எது எப்படியானாலும் சரி, காலையில் முதல் வேலையாக ப்ரியாக் குட்டியைக் கூட்டி வந்து விட வேண்டியதுதான். ப்ரியாக் குட்டி பிறப்பதற்கு முன் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதே அவளுக்கு மறந்து விட்டிருந்தது.
கண்டதையும் யோசித்து தலை வலித்தது. மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்று எழுந்திருக்கையில், தொலைபேசி அழைத்தது. வினிதாதான். குழந்தை எப்படி இருக்கிறாள் என்று இவள் கேட்கும் முன்,
“அக்கா, குழந்தை ரொம்ப அழறா. சாயந்திரம் வரை நல்லாதான் விளையாடிக்கிட்டு இருந்தா. ஆனா இப்ப ராத்திரி எதுவும் சாப்பிடல; தூங்கவும் மாட்டேங்கிறா. நானும் ரொம்ப நேரம் சமாளிச்சுப் பார்த்துட்டு, முடியாதனால உங்களைக் கூப்பிடறேன்”
குழந்தை அழுவதைக் கேட்டு சந்தோஷப்படும் முதல் அம்மா நானாகத்தான் இருப்பேன், என்று எண்ணமிட்ட வண்ணம், அதே சமயம், அழுகிறாளே என்ற பதட்டத்துடன், “ரொம்ப அழறாளா வினிதா? கொஞ்சம் பொறு… இப்பவே ஆட்டோ பிடிச்சு வந்துடறேன்…”
“இல்லக்கா. ராத்திரில நீங்க தனியா வர வேண்டாம். நான் என் கணவரோட வந்து குழந்தையை விடறேன். ரொம்ப ஸாரி அக்கா”
“பரவால்ல வினிதா. பாவம் உனக்குத்தான் சிரமம். பத்திரமா வாங்க.”
தொலைபேசியை வைத்து விட்டு அழைப்பு மணிக்குக் காத்திருக்க ஆரம்பித்தாள். தலைவலி காணாமல் போயிருந்தது.
--கவிநயா
நல்லாருக்கு..;)
ReplyDeleteஅதுதான், குழந்தை விசயத்தில் மட்டும் எந்த தாயையும் அசைக்கவே முடியாது..
ReplyDeleteஅந்த தாய்மையும் அதன் பாசமும் ஈடுஇணையற்றதுதான்..
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..
முதல் வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி, கோபிநாத்!
ReplyDelete//அந்த தாய்மையும் அதன் பாசமும் ஈடுஇணையற்றதுதான்..//
உண்மை, கோகுலன். உங்களுடைய அம்மாவுக்கான கவிதை எனக்கு மிகப் பிடித்தமானது. வாசித்ததற்கு நன்றி!
அன்பின் கவிநயா,
ReplyDeleteகதை அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள் சகோதரி :)
மிக்க நன்றி, ரிஷான்!
ReplyDeleteஅருமை அக்கா. இந்த மாதிரி கேள்விகளும் எண்ணங்களும் எல்லா தாய்மார்களுக்கும் வரும் போல. சில நேரங்களில் குழந்தைகள் என்னிடம் ஒட்டிக்கொள்ள என் தங்கமணிக்கும் இதே கேள்விகள் தான். புலம்பித் தள்ளிவிடுவார்.
ReplyDeleteஅண்மையில் ஓரிரவு எங்கள் மகள் அவளுடைய தோழியின் வீட்டில் தங்கிவிட்டாள். இங்கே தங்கமணி ஒரே புலம்பல். அவள் வீட்டில் இருந்தாலும் படுத்துகிறாள்; இப்படி எங்காவது சென்றாலோ தனிமையாக இருக்கிறது - என்றெல்லாம் சொல்லி. இத்தனைக்கும் குட்டிப்பையன் பக்கத்திலேயே படுத்துக் கொண்டிருக்கிறான். :-)
அதொன்றுமில்லை குமரா. தங்கமணிகளுக்கெல்லாம் தங்கமான மனசு மட்டுமில்லை; ரொம்ம்ப மென்மையான மனசும். அதான் :) உங்களுக்குக் கதை பிடித்திருப்பது குறித்து ரொம்ப மகிழ்ச்சி :)
ReplyDeleteவாவ்..
ReplyDeleteஇது உங்கள் வாழ்க்கையில் நடந்ததா.. ஏன் கேட்கிறேன் என்றால் இது போல எங்கள் குடும்பத்தில் நடந்துள்ளது. ஒரு குழந்தையை அவர் அத்தை வீட்டில் கூட்டிபோய் வைத்திருந்தார்கள், அம்மாவையே கேட்கவில்லை காலை முதல் மாலை வரை விளையாட்டு இரவு 11 மணிக்கு ஒரே அழுகை அவர்கள் நள்ளிரவு கொண்டுவந்து தாய் வீட்டில் விட்டார்கள். குழந்தைகளுக்கு தூங்கும்போது தாயின் அரவணைப்பு அல்லது பாதுகாப்பு உணர்வு தேவைபடுகிறது என்று நினைக்கிறேன்.
சரவணன்
வாங்க சரவணன்! மீண்டும் நன்றி :) ஒரே சமயம் ரெண்டு கதையும் படிச்சிட்டீங்க போல. வாழ்க்கையில நடந்தது இல்லை. அம்மா மனசும் குழந்தை மனசும் தெரிஞ்சதால, கற்பனை கலந்து எழுதினது. நீங்க உங்க அனுபவத்தைப் பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றிகள்!
ReplyDelete