Thursday, March 20, 2008

மனசு

(1)

"அம்மா, அமெரிக்கா ஆன்ட்டிகிட்ட இருந்து ஒனக்கு லெட்டர் வந்திருக்கு போலருக்கு", வேலையிலிருந்து திரும்பிய விவேக் வந்திருந்த கடிதங்களைப் பார்வையிட்டபடி விசாரித்தான். "ஏம்மா, இன்னும் பிரிக்கவே இல்லயா?"

"ப்ச், நான் பாக்கிறேன், உனக்கு காஃபி போடவான்னு சொல்லு", சுவாரஸ்யமில்லாமல் சொல்லியபடி அவன் அருகில் வந்து அமர்ந்தாள், அகிலா.

"இல்லம்மா, ஒரேடியா சாப்பிட்டர்றேன். பசிக்குது. நான் போய் மாத்திட்டு வந்துர்றேன்"

மகன் அந்தப் பக்கம் சென்றவுடன், ஏற்கனவே தயாராக இருந்த சாப்பாட்டை மேசை மேல் எடுத்து வைத்து விட்டு, அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்தாள்.

"என் இனிய அகிலாவுக்கு" என்று ஆரம்பித்த கடிதம், அவள் அமெரிக்கத் தோழி வசந்தி இன்னும் மூன்று வாரங்களில் இந்தியா வருவதாக அறிவித்தது. இந்த முறை குறைந்தது இரண்டு மாதங்களாவது இருப்பாளாம். "என் பிள்ளைகள் இரண்டு பேரிடமும் உன்னைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். உன்னைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்", என்ற வரிகளைப் படித்ததும் சற்றே குற்ற உணர்வு ஏற்பட்டது. ஏதோ ஒரு அமெரிக்க ஆன்ட்டியிடமிருந்து அவ்வப்போது கடிதம் வரும் என்பதைத் தவிர மகனிடம் வசந்தியைப் பற்றி அவளாக எதுவும் சொல்ல முற்பட்டதில்லை.

"என்னம்மா, என்ன விஷயம்? ஒரு மாதிரியா இருக்கீங்க?" சாப்பிட அமர்ந்தபடி விசாரித்தான்.

"என் ப்ரெண்டு வசந்தி அமெரிக்காவுல இருந்து வராளாம். அப்ப நம்மோட ஒரு வாரம் தங்கணுமாம்"

"தங்கட்டுமே? நாம இங்கதான இருக்கோம்? என்ன பிரச்சினை?" அவனுக்குப் புரியவில்லை.

"ஒண்ணும் பிரச்சினை இல்ல கண்ணா. நீ சாப்பிடு", அவனுக்கு சாப்பாட்டைப் பரிமாறினாள்.

"ஏம்மா, நீ அவங்களப் பத்தி ஒண்ணுமே சொன்னதில்லயே? அவங்கள உனக்கு எப்படித் தெரியும்?"

"நானும், வசந்தியும் சின்ன வயசில இருந்து காலேஜ் வரைக்கும் ஒண்ணாப் படிச்சோம். கல்யாணத்துக்குப் பிறகு அவ அமெரிக்கா போயிட்டதால அவ்வளவாத் தொடர்பில்லாமயே போயிடுச்சு. அவ்வளவுதான்", ஒரு காலத்தில் நெருங்கிய தோழியாயிருந்த வசந்தியுடனான தன் நட்பை இரண்டே வரிகளில் அடக்கி விட்டாள்.

"அவங்கள்ட்ட இருந்து அப்பப்ப லெட்டர் வந்துகிட்டுதான் இருக்கு. நீதான் அவங்களுக்கு எழுதுறதே இல்ல போலருக்கு?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. அது சரி, நாளைக்குப் பெரியம்மா பொண்ணுக்கு வளைகாப்பு இருக்கு; நாம காலைல சீக்கிரமே போகணும். ஞாபகம் இருக்கா? நீ லீவு சொல்லிட்டியா?"

அம்மா பேச்சை மாற்றுவதை உணர்ந்தாலும், கவனித்த மாதிரிக் காட்டிக் கொள்ளாமல், "சொல்லிட்டேம்மா", என்றபடி கை கழுவ எழுந்தான், விவேக்.

(2)

அக்கா பெண்ணின் வளைகாப்பு களை கட்டி இருந்தது. சந்தோஷமான அந்த சூழலில் தான் ஒட்டாதது போல் உணர்ந்தாள், அகிலா. இது ஒன்றும் அவளுக்குப் புதுசில்லை. கணவனை இழந்த அவள் எப்போதும் ஒரு எளிமையான புடவையும், சின்னக் கறுப்பு பொட்டுமாகத் தான் இருப்பாள். எந்த விசேஷத்துக்கும் போவதை முடிந்த வரை தவிர்த்து விடுவாள். ஆனால், உள்ளூரிலேயே இருக்கும் அக்காவின் விசேஷத்துக்கு எப்படி வராமல் இருப்பது?

"அகிலா, வா, வா. என்ன நீ பாட்டுக்கு மூணாம் மனுஷி மாதிரி தாமதமா வர்றே? இங்க வந்து எனக்கு அடுப்படியில ஒரு கை குடு", உரிமையுடன் அவள் கையைப் பற்றி இழுத்துச் சென்றாள், அவள் அக்கா, ரமா.

"அவல் பாயசம் வச்சேன்; கொஞ்சம் பாத்து எறக்கிட்டு வா; எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க", நிற்க நேரமின்றி பேசியபடியே வந்தவர்களைக் கவனிக்கச் சென்றாள், ரமா.

தனியாக அடுக்களையில் விடப்பட்ட அகிலாவிற்கு மனசுக்குள் வசந்தியின் கடிதமும், விவேக் கேட்ட கேள்வியுமே சுற்றிச் சுற்றி வந்தன. விவேக் கேட்டதில் தப்பில்லை. இவள்தானே வசந்தியிடமிருந்து விலகி விலகிப் போனாள். ஆனால் ஏன்? தூக்கம் வராத இரவில் நிதானமாக யோசித்த போது, அவள் அடிமனது அவளுக்கு சுத்தமாகவே கோடிட்டுக் காட்டி விட்டது, காரணத்தை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பொறாமை. அவளுக்கே அதிர்ச்சியாகத் தான் இருந்தது, முதலில். ஒப்புக் கொள்ளாமல், உள்மனதுடன் பெரும் அடிதடியே நடத்தி விட்டாள். பிறகு ஒவ்வொரு விஷயமாகத் திரும்பிப் பார்க்கையில், வேறு வேறு காரணங்கள் சொன்னாலும், அடிப்படைக் காரணம் இதுதான் என்பது தெளிவாகியது. இவள் வாழ்க்கையில் வேண்டி ஆசைப்பட்டதெல்லாம், வசந்திக்கு அமைந்து விட்டது. இவளுக்கும் கணவன் அன்பானவன்தான்; வசதியானவன்தான்; ஆனால் அல்பாயுசில் போய் விட்டான். வசந்திக்கு அன்பான, ஆசையான கணவன். அமெரிக்காவில் வாசம்; ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்றாக இரண்டு குழந்தைகள். இரண்டு பேருமே இப்போது மருத்துவம் படித்து வருவதாகக் கேள்வி. துன்பம் என்றால் என்ன விலை என்று கேட்கும் வாழ்க்கை.

இவளுக்கு, சின்ன வயசில் கணவனை இழந்த பின், ஒரு வயதுக் குழந்தையை வைத்துக் கொண்டு வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். மாமனார் வீட்டிலும் சரி, அம்மா வீட்டிலும் சரி, மற்ற பொறுப்புகள் இருந்தபடியால், யாரும் இவளுடன் வந்து தங்க முடியாத நிலைமை. சென்னையில் புறாக் கூண்டுக்குள் தங்கிக் கொண்டு, டவுன் பஸ்ஸில் இடிபட்டு, அலுவலகத்தில் வேறு விதமான துன்பங்களைச் சந்தித்து, இப்படியாக எப்படியோ பிள்ளையை நல்லபடியாக வளர்த்து விட்டாள். அவனும் இப்போது பொறியியல் வல்லுநராக ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். அவளும் தன் அலுவலகத்தில் இப்போது மதிப்புக்குரிய ஒரு பொறுப்பில் இருக்கிறாள். இருந்தாலும்...

வெறும் நினைவுகளே ஆயாசம் தர, பெருமூச்சொன்று வெளிப்பட்டது, அகிலாவிடமிருந்து.

"அகிலா, வா வா. இன்னுமா பாயசம் ரெடியாகல? வளையல் போட ஆரம்பிக்கணும். வா", அக்கா வந்து மறுபடியும் அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துப் போனாள்.

இவள் "வேண்டாம்" என்று சொல்லச் சொல்ல விடாமல் இவளையும் வளையல் போட வைத்தாள். தன்னைப் போலவே மற்றொரு பெண்ணும் சற்று ஒதுங்கியே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள், அகிலா.

"வாம்மா வனிதா. நீயும் போடு", அவளையும் வற்புறுத்திப் போடச் செய்தாள், அக்கா.

அப்போதுதான் அவள் யாரென்று நினைவு வந்தது, அகிலாவிற்கு. அக்காவின் பக்கத்து வீட்டுப் பெண். பத்து வருடங்களாகக் குழந்தை இல்லாதவள்.

(3)

ஒரு வழியாக வைபவம் முடிந்து எல்லோரும் கிளம்பி விட்டார்கள். வெறிச்சோடியிருந்தது, வீடு.

"அக்கா, நீ வேணாப் போய்க் கொஞ்சம் படுத்துக்கோயேன்", பரிவுடன் பகிர்ந்தாள், அகிலா.

"இல்ல; இப்ப தூங்கினா, ராத்திரிக்குத் தூக்கம் வராது. சும்மா இப்படிக் கொஞ்சம் சாஞ்சுக்கிறேன்"

அக்காவின் பக்கத்தில் அகிலாவும் அமர்ந்தாள்.

"ஏங்க்கா, சிவப்புப் பொடவை கட்டிகிட்டு ஒரு பொண்ணு வந்தாளே, வனிதா, அவளுக்குக் குழந்தை இல்லதானே?"

"ஆமா. பாவம். பத்து வருஷமாச்சு"

"பொதுவா என்ன மாதிரி, அவள மாதிரி ஆளுங்கள வளையல் போடச் சொல்ல மாட்டாங்க. நீ என்னடான்னா, எங்க ரெண்டு பேரையும் விடல"

"இந்த மாதிரி எந்த விசேஷத்துக்கும் நம்ம எல்லோரையும் கூப்பிடறது ஆசீர்வாதம் வாங்கிறதுக்குத்தான். அப்படி ஆசீர்வாதம் தர்றதுக்கு நல்ல மனசிருந்தாப் போதும்; வேற என்ன வேணும்? நீ என் தங்கை; என் பொண்ணு நல்லா இருக்கணும்னுதான் நினைப்ப"

"அப்ப வனிதா? .... நீ செஞ்சது தப்புன்னு நான் சொல்ல வரல; ஆனா உன்னோட காரணத்தை தெரிஞ்சுக்கணும்கிறதுக்காகக் கேக்கிறேன்"

"வனிதாவப் போல நல்ல மனசுள்ள பொண்ணப் பாக்கவே முடியாது. பொதுவா எல்லாம் இருக்கவங்ககிட்ட பெரிய மனசு இருந்தா அதுல ஒண்ணும் ஆச்சரியமே இல்ல. ஆனா தனக்கு இல்லாதப்பவும், மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்? அப்படிப்பட்ட பெரிய மனசு வனிதாகிட்ட இருக்கு. தனக்கு இல்லாட்டியும், இருக்கவங்களப் பாத்து பொறாமையோ, வயிற்றெரிச்சலோ படவே மாட்டா. அதனாலதான் அவளயும் வற்புறுத்திப் போட வச்சேன்"

அக்கா சொன்ன வார்த்தைகள் வேறு எங்கேயோ சென்று சுருக்கென்று தைத்தன, அகிலாவிற்கு. வீட்டுக்குப் போனவுடன், முதல் வேலையாக வசந்தியைக் கட்டாயம் குடும்பத்துடன் வரச்சொல்லிக் கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

--கவிநயா

12 comments:

 1. தலைப்பிற்கு பொறுத்தமான, நல்ல சுருக்கமான கதை, எளிய நடை. தொடர்ந்து எழுதவும்.

  ReplyDelete
 2. நிஜமாவே படிச்சுட்டீங்களே :) உங்க ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி, ஜெயகாந்தன்!

  ReplyDelete
 3. ஆஹா, அருமை. அருமை. எதுக்கு ரெண்டு தடவை என்று கேப்பீங்களே ! ஒன்று கதைக்கு. விமர்சிக்கும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை. நல்ல flow.

  ரெண்டாவது அருமை தனிக்கட்சி தொடக்கத்திற்கு ! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. கதை நல்லாயிருக்குங்க..

  முதல் முறையா உங்க வலைபக்கத்துக்கு வந்திருக்கேன். ஆமாம், 2006-ல ஆரம்பிச்சு எழுதவேயில்லையா ரொம்ப நாள்?....

  ReplyDelete
 5. நல்லா இருக்குங்க.
  இந்த காலத்துல கடிதம் அப்படிங்கிறது கொஞ்சம் வேறு பட்டு தெரிகிறது,ஆனாலும் கதையின் போக்கிற்கு கடிதம் என்பதுதான் சரிவரும்.
  வாழ்த்துகள்...!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, சதங்கா!

  //2006-ல ஆரம்பிச்சு எழுதவேயில்லையா ரொம்ப நாள்?....//

  வாங்க, மதுரையம்பதி அவர்களே! ம், எழுதிக்கிட்டுதான் இருந்தேன், ஆனா யாருக்கும் காண்பிக்கல :) ஆனா வலைப்பூ ஆரம்பிச்சது இப்பதான். அயிகிரி நந்தினி தமிழில் எழுதினதையும் படிச்சு கருத்து சொன்னா சந்தோஷப்படுவேன்!

  //இந்த காலத்துல கடிதம் அப்படிங்கிறது கொஞ்சம் வேறு பட்டு தெரிகிறது//

  சரியா சொன்னீங்க; கதை எழுதும்போது அப்படி யோசிக்கல. வருகைக்கு நன்றி, நாடோடி இலக்கியன்!

  ReplyDelete
 7. கதையும் தலைப்பும் அருமையாக இருந்தது கவிநயா. இந்தக் கதையைப் படிக்கும் போது என் மனம் கொஞ்சம் சோர்வாக இருந்தது. கதையைப் படித்து முடித்த போது கொஞ்சம் அமைதி பெற்றது போல் உணர்ந்தேன்.

  ReplyDelete
 8. ஒரு நல்ல கதை படித்த உணர்வு

  ReplyDelete
 9. //கதையைப் படித்து முடித்த போது கொஞ்சம் அமைதி பெற்றது போல் உணர்ந்தேன்.//

  மிக்க மகிழ்ச்சி, குமரன்! மிகுந்த நன்றிகளும்!

  ReplyDelete
 10. //ஒரு நல்ல கதை படித்த உணர்வு//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, சக்தி!

  ReplyDelete
 11. சரவணன்June 26, 2008 at 11:15 PM

  வணக்கம் கவிநயா அவர்களே,

  கதையோட்டம் எளிமையாக தங்கு தடை இன்றி செல்கிறது, வாழ்த்துக்கள்.

  அகிலா சிறு வயதில் விதவை ஆன பின் ஏன் மறுமணம் செய்யவில்லை, அதை அவள் உயிர்த்தோழியோ அல்லது அக்காவோ என் வலியுறுத்தவில்லை என்று படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது. அது கதைக்கு சம்பந்தமில்லாதது எனினும் அந்நினைவு வந்தது என்பதை தங்களுடன் பகிரவே சொல்கிறேன். நன்றி.

  சரவணன்

  ReplyDelete
 12. வாங்க சரவணன். முதல் வருகைக்கும், கதை ரசிச்சதுக்கும் நன்றி!

  அடுத்ததா நீங்களே கேள்வியும் கேட்டு, பதிலும் நீங்களே சொல்லிட்டிங்க. மறுமணம் செய்துக்க விரும்பாத பெண்கள்ல ஒருத்தின்னு நெனச்சுக்கோங்க :)

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)