Sunday, October 28, 2012

மேகம்




நிறைந்த வெண்ணெய்த் தாழி ஒன்றை
நீலக் கண்ணன் உடைத்தானோ
நீல வானை அலங்கரிக்க
மேகம் என்று அழைத்தானோ!

பிஞ்சுப் பாதம் எங்கும் பதித்து
பஞ்சுப் பொதியாய் அமைத்தானோ
புல்லாங் குழலின் இசைக்குத் துணையாய்
மின்னல் இடியைப் படைத்தானோ!

காதல் கதிரவன் பார்வை கண்டு
நீயும் நாணிச் சிவந்தனையோ
அழகாய் வரைந்த ஓவியம் போலே
அற்புத வர்ணம் கொண்டனையோ!

நிர்மலமான மழலை நெஞ்சாய்
நீல வானம் நிறைத்தனையோ
நீரைக் கருவாய்ச் சுமந்து வந்து
நீள்நிலப் பசியைத் தணித்தனையோ!

ஊடல் கொண்ட தலைவி போலே
வதனம் கறுத்து வாடினையோ
கோபக் குமுறல் நீங்கும் வரையில்
கொட்டி தீர்ந்து ஓய்ந்தனையோ!

தாயை அணைக்கும் சேயைப் போலே
தரணியை முத்தம் இட்டனையோ
புலவர் பாடும் தமிழைப் போலே
பொங்கிப் பெருகிப் பொழிந்தனையோ!

-- கவிநயா


Friday, October 19, 2012

எழில் மிகு அலைமகள்

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!

நவராத்திரிக்கு துர்க்கை பாடல் இங்கே இட்டிருந்தேன், சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் பாடித் தந்தார்... இப்போது மகாலக்ஷ்மிக்கான பாடல் இங்கேயே :) சுப்பு தாத்தா அடானாவில் பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!


மதியொளி முகத்தினள் கதிரொளி நிறத்தினள்
தாமரைக் கரத்தினள் தங்கத்தின் குணத்தினள்!

அலைகடல் நடுவினில் அவதரித்தவள் அவள்
அரிதுயில் மாலவன் மனங்கவர் மனையவள்
விரிமலர் மீதினில் வீற்றிருப்பவள் அவள்
பரிகின்ற தாயென புவியினைக் காப்பவள்!

மரகத வண்ணனின் மார்பினில் உறைபவள்
மறைக ளெல்லாம் போற்றும் மங்கலப் பெண்ணவள்
கருவிழி இரண்டினால் உறுவினை அழிப்பவள்
கவிமழை யில்மகிழ்ந்து கனிமழை பொழிந்தவள்!


--கவிநயா

நன்றி: வல்லமை

Monday, September 24, 2012

ரோஜா நேரம்!



ரு நாள் சாயந்திரம் என்ன பண்றதுன்னு தெரியாம, தொ(ல்)லைக் காட்சியைப் போட்டுப் பார்த்துக்கிட்டிருந்தேன். ஏதோ ஒரு சானல்ல ஏதோ ஒரு படம் போய்க்கிட்டிருந்தது. கொஞ்சம் வித்தியாசமான படமா இருந்தது. எதைப் பற்றிய படமா இருக்கும்னு தெரிஞ்சுக்கிற ஆவலில் தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சேன். புரிந்தும் புரியாமலும் காட்சிகள் ஓடிக்கிட்டே இருந்தது. இது என்ன மாதிரிப் படம், எதைப் பற்றிய படம், அப்படின்னு அனுமானிக்கிறதுக்கு முன்னாடி படமே முடிஞ்சிருச்சு!

இப்படித்தானே நம்ம வாழ்க்கையும் ஓடுது, அப்படின்னு தோணுச்சு. நாம வந்த வேலை என்னன்னு தெரியறதுக்கு முன்னாடியே வாழ்க்கையே முடிஞ்சிரும் போல இருக்கு. எதுக்காக வாழறோம்னு தெரியாமலேயே ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம். ஏதோ ஒரு சுழற்சியில் அகப்பட்டுகிட்டு, எதுக்குன்னு தெரியாமலேயே பல செயல்களைச் செய்யறோம். நம்ம இலக்கு என்ன என்கிறதைப் பற்றி சிந்திக்கக் கூட நேரம் இருக்கறதில்லை. அப்படியே இலக்கு என்னன்னு ஓரளவு தெரிஞ்சிருந்தாலும் அது இந்த சுழிக்காற்றின் வேகத்தில் கண்ணுக்குத் தெரியாமலேயே மறைஞ்சு, மறந்தே போயிடுது.

சமீபத்தில் நடந்த ஒரு இளம் உறவினரின் திடீர் மரணம் மனசுக்கு பெரிய பாதிப்பா இருந்தது; பலப்பல விஷயங்களையும் சிந்திக்க வெச்சது. முடிஞ்சா அதைப்பற்றி இன்னொரு நாள் பேசலாம். ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் இறந்தாலும், இருக்கிறவங்கல்லாம் நாம மட்டும் என்னவோ சாஸ்வதம் மாதிரியே நினைச்சுக்கிட்டிருக்கோம். பாரதத்தில் தருமன் சொன்ன மாதிரி உலகத்திலேயே மிகப் பெரிய அதிசயம்தான், இது.  இந்த உலகத்துக்கு வந்த எத்தனையோ அரிய பெரிய மகான்கள் எல்லோரும் மறைஞ்சு போயிட்டாங்க. அப்படின்னா நாமெல்லாம் எந்த மூலைக்கு? எத்தனை நாளைக்கு? இதை நான் சொல்லலை, சுவாமி விவேகானந்தர் சொல்றார்.

இதை நினைவில் வச்சுக்கிட்டு, சண்டை சச்சரவில்லாம, போட்டி, பொறாமை இல்லாம, கோப தாபம் இல்லாம, முடிஞ்ச வரை அன்பை மட்டுமே தந்தபடி, வந்த வேலையை மட்டும் கவனிப்போம்.

அப்பப்ப நிதானிச்சு, வாழ்க்கையில் எது முக்கியம் என்பதையும், இலக்கை நோக்கித்தான் போறோமா என்பதையும் நிச்சயப்படுத்திக்கிட்டு, பிறகு மறுபடி ஓட்டத்தை தொடருவதும் அவசியம். அதோட கூடவே கண்டிப்பா, மறக்காம, Take the time to smell the roses!

இப்போதைக்கு ‘நினைவின் விளிம்பில்…’ இருந்து உங்களுக்கு (எனக்கும்!) கொஞ்சம் ஓய்வு! இன்னும் கொஞ்ச நாளைக்கு கணினி நேரம் கிடைப்பது அரிது என்பதால் தற்காலிக விடுமுறை. இறை விருப்பம் இருந்தால் நவராத்திரி சமயத்தில் மீண்டும் சந்திக்கலாம்!

அது வரைக்கும்… go enjoy the roses! :)

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Tuesday, September 18, 2012

கணபதி தாள்கள் போற்றி!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!
நம்பிக்கை வைத்தோரைத் தும்பிக்கையான் காப்பான்.




கற்பகக் கணபதி பாடலை அற்புதமாகப் பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றிகள் பல! நீங்களும் கேட்டு, பாடி, விக்ன விநாயகனின் அருளைப் பெறுங்கள்!


பெரும்பானை வயிற்றுக்குள் பேருலகை வைத்திருக்கும்
பெருமகனே போற்றி போற்றி!
வரு வினையைத் தடுக்கின்ற வந்த வினை தீர்க்கின்ற
வல்லபனே போற்றி போற்றி!

சிவனாரின் மகனாகிச் சேந்தனுடன் சேர்ந்துலகைக்
காப்பவனே போற்றி போற்றி!
சிந்தையிலே வைத்தவர்க்கு சிந்திக்கா தருள் புரியும்
செல்வனே போற்றி போற்றி!

சுழி போட்டுத் தொடங்கி விட்டால் தடையேதும் வாராமல்
செயல்முடிப்பாய் போற்றி போற்றி!
வழி கேட்டு உன்னடிகள் பணிந்து விட்டால் வழித்துணையாய்
வந்திடுவாய் போற்றி போற்றி!

மழுவேந்தி மாந்தர் தமைக் காக்கின்ற மூஞ்சூறு
வாகனனே போற்றி போற்றி!
பழுவெல்லாம் தந்து விட்டால் பரிந்தெம்மைக் காக்கின்ற
புண்ணியனே போற்றி போற்றி!

அகத்தியருக் கருள்செய்த அத்திமுக நாயகனே
ஆனைமுகா போற்றி போற்றி!
அருகம்புல் பூசையிலும் அகம்மகிழ்ந்து அருள்செய்யும்
எளியவனே போற்றி போற்றி!

வியாசருக் கருளிடவே ஒருதந்தம் உடைத்தவனே
உத்தமனே போற்றி போற்றி!
மாசற்ற மன்னவனே மஞ்சளிலும் இருப்பவனே
மூத்தவனே போற்றி போற்றி!

கந்தனுக் குதவிடவே களிறாக வந்தவனே
கற்பகமே போற்றி போற்றி!
சங்கரனின் புத்திரனே சங்கடங்கள் களைபவனே
சுந்தரனே போற்றி போற்றி!

நம்பிக்கு அருள் செய்த தும்பிக்கை நாதனே
ஐங்கரனே போற்றி போற்றி!
நம்பிக்கை வைத்துன்னைப் பணிகின்றோம் தூயவனே
திருவடிகள் போற்றி போற்றி!

--கவிநயா

நன்றி: வல்லமை

Sunday, September 2, 2012

பூஞ்சிரிப்பூ!




 
சின்னச் சின்ன ரோஜாப்பூ!
வண்ண வண்ண ரோஜாப்பூ!
முள்ளின் நடுவே இருந்தாலும்
மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூ!

கொடியில் பாரு முல்லைப்பூ!
கொத்துக் கொத்தாய் முல்லைப்பூ!
கொஞ்ச நேரம் இருந்தாலும்
கொஞ்சிச் சிரிக்கும் முல்லைப்பூ!

குண்டு குண்டு மல்லிப்பூ!
செண்டு போல மல்லிப்பூ!
மனங்கள் மகிழ மலர்ந்தேதான்
மணம் பரப்பும் மல்லிப்பூ!

குளத்தில் பாரு தாமரைப்பூ!
குனிந்து பாரு தாமரைப்பூ!
சேற்றின் நடுவே இருந்தாலும்
சிரித்து மகிழும் தாமரைப்பூ!

பூக்கள் போல நீ இரு!
பூஞ்சிரிப்பில் மலர்ந்திடு!
சங்கடங்கள் மறந்திடு!
சந்தோஷமே பரப்பிடு!


--கவிநயா

நன்றி: வல்லமை

Sunday, August 26, 2012

மின்னஞ்சலெல்லாம் பொன்னஞ்சலல்ல!

                                         
நாம் எல்லோருமே உணர்ச்சிகளுக்கு அடிமைதான். சந்தோஷமோ, கவலையோ, கோபமோ, சில பேரை உடனடியா பெரிய அளவில் தாக்கும். சிலர் வெளிப்பார்வைக்கு நிதானமா தெரிஞ்சாலும், உள்ளுக்குள்ள அதிகமா பாதிக்கபடறவங்களா இருப்பாங்க. அல்லது என்னை மாதிரின்னா ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப மனசுக்குள்ள ஓட்டிப் பாத்து துன்பத்தை தக்க வச்சுக்கறவங்களா இருப்பாங்க.

சில சமயம் நினைச்சுப்பேன், சினிமாலேல்லாம் ஒரே நினைப்பை, அல்லது ஒரே flash back ஐ திரும்பத் திரும்பக் காண்பிச்சா நமக்கு எப்படி எரிச்சல் வரும்? ஆனா நாம அதைத்தானே தினம் தினம் பண்றோம் அப்படின்னு!

காலம் காலமா நமக்கு தெரிஞ்ச விஷயத்தைப் பற்றிதான் பேசப் போறோம் இன்றைக்கு.  அதாவது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது. கொஞ்சம் தள்ளிப் போடணும். சொல்லும் போது சுலபமாதானே இருக்கு. ஆனா செயல்படுத்தறது ரொம்பவே கடினம்.

குறிப்பா கோபமா இருக்கும் போது நிச்சயம் எதுவுமே செய்யக் கூடாது, சொல்லவும் கூடாது. ஒருத்தர் மேல எக்கச்சக்கமா கோபமாவோ, வருத்தமாவோ இருக்கும் போது, அந்த நபருக்கு நாம மின்னஞ்சலோ, செய்தியோ அனுப்பவே கூடாது. அந்தச் சமயத்தில் நாம சொல்ற வார்த்தைகள் பின்னாடி நம்மையே வருத்தப்பட வைக்கிற சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த மாதிரி செய்துட்டு, என் மேல் தவறு இல்லாத சமயங்களில் கூட, என் இயல்பினால் நானே போய் அவர்களிடம் மன்னிப்பு கேட்ட அனுபவங்கள் எனக்கு இருக்கு. அவங்க என் மனதை ஏதோ ஒரு காரணத்தால் புண்படுத்தியதாலதான் கோபமே வந்திருக்கு. அது நியாயமாகவே இருந்தாலும், அந்தக் கோபத்தில் நான் ஏதோ சொல்லப் போய் அது திரும்ப அவங்க மனதைப் புண்படுத்தியிருக்கும் இல்லையா? இதுக்கு முதலிலேயே ஒழுங்கா நிதானிச்சிருக்கலாமேன்னு பிறகு தோணியிருக்கு.  பொதுவாகவே, நம்மை யாராச்சும் ‘சுருக்’குன்னு ஏதாச்சும் சொல்லிட்டா, உடனடியா அந்த ‘சுருக்’கை நாம திருப்பிக் கொடுத்துடணும்னு தோணும்! இந்தப் பழக்கத்தைக் கஷ்டப்பட்டுதான் மாத்திக்கணும்.

திரு. சுகிசிவம் சொல்லுவார் – அளவுக்கதிகமான கோபம் வந்தா, உடனே நம் position-ஐ மாத்திக்கணுமாம். அதாவது, நின்னுக்கிட்டிருக்கும் போது கோவம் வந்தா, உட்கார்ந்துடணுமாம். உட்கார்ந்திருக்கும் போது வந்தா, படுத்துடணுமாம்.  ஏன்? நம் உடலோட நிலைக்குத் தகுந்த மாதிரி நம் சுவாசத்தின் தன்மை மாறும். சுவாசம் நிதானப் பட்டுச்சுன்னா, நம்ம உணர்ச்சியும் மாறும்; நிதானப்படும். அதனாலதான், கோவம் வந்தா மூச்சை இழுத்து விடுங்க, மெதுவா 1,2,3 எண்ணுங்க, இப்படில்லாம் சொல்றாங்க. ஆனா அதெல்லாம் விட, திரு. சுகிசிவம் அவர்கள் சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது.  (அதுக்குன்னு அலுவலகத்தில் மீட்டிங்கில் இருக்கும்போது கோவம் வந்தா உடனே படுத்துக்காதீங்க! அப்புறம் வேலையை விட்டு தூக்கிட்டாங்கன்னா, நான் பொறுப்பில்லை! ஹி…ஹி… :))

பொதுவாகவே எல்லோரும், குறிப்பா பெண்களும், அதிலும் குறிப்பா பருவ வயது பெண்களும் மின்னஞ்சல் விஷயத்தில் கவனமா இருக்கணும். நாம தனியான ஒரு நபருக்குதானே எழுதறோம்னு நினைச்சிருப்போம், ஆனா ஒரு முறை அது போயிடுச்சுன்னா, அப்புறம் அது நம்ம கட்டுப்பாட்டில் இல்லை; அதை ரிசீவ் பண்ணறவங்க, அதை என்ன வேணும்னாலும் செய்யலாம். யாருக்கு வேணும்னாலும் அனுப்பலாம்னு புரிஞ்சுக்கணும். முன்னயாவது forward பண்ணி வர்ற மின்னஞ்சலில் உள்ள செய்தியை மாற்ற முடியாம இருந்தது. ஆனா இப்பல்லாம் அப்படி வர்ற மின்னஞ்சலில் செய்தியை மட்டும் இல்லாம, எதை வேணுமானாலும் மாற்றலாம்!

நாம பலரிடமும் வெள்ளந்தியா பேசறோம், எழுதறோம். ஒரே ஒருத்தரிடம் மட்டும்தான் நாம கொஞ்சமே கொஞ்சம் நம்ம சொந்த விஷயத்தை பகிர்ந்துக்கறோம்னு நினைப்போம், ஆனா அது பிறகு யாரால எப்படியெப்படி பயன்படுத்தப் படும்னு நமக்கு தெரியாது.  சினிமாலேல்லாம் நிறைய பாத்திருக்கோமே, பழைய காதலன் காதல் கடிதங்களை வச்சு ப்ளாக் மெயில் பண்றதை!

ஒரு நாள், நான் ஒரு தோழிக்கு அனுப்ப நினைச்சு டைப் பண்ணின text message -ஐ இன்னொருத்தருக்கு அனுப்பிட்டேன்!  கண்ணாடி போடாம, அவசரமா அனுப்பினதால, அதே மாதிரி இருந்த இன்னொருத்தர் பெயருக்கு அனுப்பிட்டேன். நல்ல காலமா அது எதுவும் சொந்த விஷயமா இருக்கலை, பொதுவான ஒரு விஷயமா போச்சு.

கடிதம்னாலும், மின்னஞ்சல்னாலும், நாம எழுதற விஷயத்தை கவனமா எழுதணும். சில சமயம் நாம நல்ல நோக்கத்தோடயே எழுதினாலும், அவசரத்தில் எழுதிட்டோம்னு வைங்க, படிக்கிறவங்களுக்கு ரொம்ப rude-ஆ எழுதின மாதிரி இருக்கும். அப்புறம் அவங்க கோவப்பட, நாம சமாதானம் செய்ய, மறுபடி அதே வட்டம். பேசும்போதுன்னா, குரலை வச்சு, நேரிலன்னா, முகபாவத்தை வச்சு, நாம நல்லா சொல்றமா இல்லையான்னு தெரியும். ஆனா எழுத்தில் என்ன நம்ம முகமா தெரியுது? அதனால கொஞ்சம் நேரம் அதிகமானாலும் கூடுமானவரை சாதாரணத்தை விட கொஞ்சூண்டு அதிக மரியாதையோடயும், அதிக அன்போடயும் எழுதறது நல்லது.

குழும மடல்கள் வரும்போது, தனிப்பட்ட நபருக்கு மட்டும் பதில் எழுத நினைச்சு reply தட்டினா, குழும முகவரிதான் அதில் வந்து உட்கார்ந்திருக்கும். அதையும் கவனமா பார்த்துக்கணும். அந்த சமயத்தில் reply தட்டாம forward தட்டி, முகவரியை நாமே தட்டச்சி, பதில் எழுதினா இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு.

இப்பல்லாம் மின்னஞ்சல்ல முகவரி டைப் பண்ணும்போதே ‘auto suggestion’ என்கிற பெயரில் நாம் தொடர்பு வரிசையில் வச்சிருக்க மின்னஞ்சல்களில் அதே மாதிரி ஆரம்பிக்கிற பெயர்களெல்லாம் வரிசையா வருது. அவசரப்பட்டு “return” –ஐத் தட்டிட்டா போச்சு! நாம யாருக்கோ அனுப்ப வேண்டிய மெயில் வேற யாருக்கோ போயிடும்! அது ரொம்ப sensitive ஆன சொந்த விஷயமா போயிடுச்சுன்னா என்ன பண்றது! தலை கீழா நின்னாலும் திரும்ப வருமா?

அதனால, உணர்ச்சி வசப்பட்டாலும் சரி, அல்லது ஒரு அந்தரங்கமான சொந்த விஷயத்தை யாரோடயாவது மின்னஞ்சல் மூலமா பகிர்ந்துக்க நினைச்சாலும் சரி, அல்லது ஒருத்தரைப் பற்றி புகார் பண்ணி (!) இன்னொருத்தருக்கு எழுதறதா இருந்தாலும் சரி, ஒரு முறைக்கு பல முறை யோசிச்சிட்டு செய்ங்க. முகவரியையும் ஒரு முறைக்கு பல முறை சரி பாருங்க. சில விஷயங்களை மின்னஞ்சலில் எழுதறதை விட, தொலைபேசியிலேயோ, நேரிலேயோ பேசிடறது நல்லது.

இந்த வம்பில் மாட்டிக்காம இருக்க ஒரே சுலபமான வழி, நாம எழுதற மடல்களெல்லாம் யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காம இருக்கறதுதான். (நம்மளையும் தான்! :)) அப்பதான் அது தவறான  ஆளுக்கே போயிட்டாலும், எந்த பிரச்சனையும் இருக்காது.

Never decide anything without stepping back, never speak a word without stepping back, never throw yourself into action without stepping back.”  அப்படின்னு அரவிந்த அன்னை சொல்றதை மனசில் வச்சுக்கறது நல்லது.

இனிமேலாவது இந்த விஷயத்தில் எல்லோருமே இன்னும் கொஞ்சம் கவனமா இருப்போம்! என்ன சொல்றீங்க!

எல்லோரும் நல்லாருக்கணும்!   

அன்புடன்
கவிநயா.

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://esellermedia.com/2012/07/03/6-tips-punchy-email-campaign/