Monday, June 21, 2021

முழுமுதற் பொருள்

 

விக்ன விநாயகா ஓம் ஓம் ஓம்
வேண்டுவன தருவாய், வினைகளெல்லாம் களைவாய்
(விக்ன)

முழுமுதற் பொருளே மூத்த கணபதியே
தொழுபவர்க் கருளும் துய்ய குணநிதியே
(விக்ன)

அருகம் புல்லுக்கும் அகம் மகிழ்பவனே
அரசமர நிழலில் அருளும் அரன் மகனே
மோதக ப்ரியனே முத்தமிழ் முதல்வனே
கோதில்லா குணத்தோனே குஞ்சர முகத்தோனே
(விக்ன)

 

--கவிநயா


Wednesday, January 13, 2021

பொங்கலோ பொங்கல்!

வணக்கம். எல்லோரும் நல்லாருக்கீங்களா?

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! கூடவே தாமதமான ஆங்கில புது வருட நல்வாழ்த்துகளும்!

உலகுக்கெல்லாம் உணவளிக்கும் உழவருக்கு நன்றி!
சுமக்காமல் தாயான பசுக்களுக்கு நன்றி!
நிலமெல்லாம் பண்படுத்தும் காளைகளுக்கு நன்றி!
கதிரொளியால் உயிரளிக்கும் கதிரவனுக்கு நன்றி!
ஐம்பூதங்களாகிக் காக்கும் இயற்கை அன்னைக்கு நன்றி!
சொன்னதெல்லாம் படைத்து நடத்தும் இறைவனுக்கும் நன்றி!!


எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!


அன்புடன்
கவிநயா