இன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி
விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப்
போனதும், எல்லாக் கணக்குமே ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஓடும் வாழ்வில்
நின்று நிதானித்து நல்லவைகளையும், நல்லவர்களையும் அவ்வப்போதாவது நினைந்து நன்றி
சொல்வது நல்லதல்லவா?
எங்கள் ஊரில் இப்போதுதான் “Thanksgiving Day” கொண்டாடி முடித்திருக்கிறோம். கிட்டத்தட்ட நம் ஊர் பொங்கல் போலத்தான்
இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக அறுவடைக்குப் பிறகான கொண்டாட்டமாக இருந்ததாம். இப்போது
குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்று கூடி எக்கச்சக்கமாக சமைத்து(குறிப்பாக வான்
கோழி), பகிர்ந்து, உண்டு, கொண்டாடும் நாளாகத் திகழ்கிறது.
மனக் கவலைகளில் இருந்து மீளவும், மனம் அமைதி பெறவும், எப்பொழுதும்
சந்தோஷமாக இருக்கவும், முக்கியமான வழிகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது நன்றி நவிலல் (being
grateful). நாம் நமக்குக் கிடைத்தவகளின் அருமை தெரிந்து, நன்றி உணர்வுடன்
அவற்றைப் போற்றி வைத்திருந்தால், நம்மை நல்ல வழியில் இட்டுச் செல்ல அதை விடச்
சிறந்த மருந்து இல்லையாம். ஒருவர் நன்றியுணர்வோடு இருக்கும் போது, அந்த சமயம் அவரிடத்தில்
வெறுப்பு, கோபம், வருத்தம், போன்ற எதிர்மறை உணர்வுகள் இருப்பது அசாத்தியம்.
ஒவ்வொரு நாளும், நமக்கு அமைந்த நல்ல விஷயங்களில் சிலவற்றைப்
பட்டியல் இட்டு நன்றி சொல்ல வேண்டும். இறைவனுக்கோ, இயற்கைக்கோ... அவரவர்
நம்பிக்கைக்குத் தகுந்தபடி.
இன்றைக்கு நீங்கள் செய்த இட்லி மல்லிகைப் பூப்போல மிருதுவாக
இருந்ததா? நன்றி சொல்லுங்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? நன்றி
சொல்லுங்கள். உங்கள் 3 வயதுக் குழந்தை அழகாகப் பேசுகிறாளா? நன்றி சொல்லுங்கள். உங்கள் தோட்டத்தில் ஒரு பூ அழகாகப் பூத்திருக்கிறதா?
நன்றி சொல்லுங்கள். தலைக்கு மேல் கூரை இருப்பதற்கும், உடுக்க உடையும், உண்ண
உணவும், பார்க்க வேலையும், அதற்கான உடல் நலமும் இருப்பதற்கும், இப்படி ஒவ்வொரு
விஷயத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இவை கூட இல்லாமல் இந்த
உலகில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இப்படி நன்றி சொல்லும் போது, நமக்குக்
கிடைத்தவற்றை நாம் பெரிதாகப் பாராட்டும் போது, நமக்குக் கிடைக்காதவை பற்றிய குறைகள்
தானாக மறைந்து விடும்.
நமக்குக் கிடைத்தவை பற்றி மட்டுமல்லாமல், நம் வாழ்வில் நம்
மீது அன்பும் அக்கறையும் கொண்டு, நம்மை வழி நடத்தும், நமக்கு எத்தனையோ வகைகளில்
சிறிதாகவும் பெரிதாகவும் உதவி செய்யும் அத்தனை பேரையும் நாம் நினைவில் கொள்வோம். ஒரு
சிறிய வாழ்த்து அட்டையோ, மின்னஞ்சலோ, அல்லது ஒரு கைபேசி அழைப்போ, ஏதாவது ஒன்றின்
மூலம் அவர்களுக்கு நம் நினைப்பைத் தெரியப்படுத்துவோம்.
“நினைவின் விளிம்பில்” நான் பகிர்பவற்றையும், மற்ற
வலைப்பூக்களில் பகிர்பவற்றையும் வாசித்து ஊக்கம் அளிக்கும் அனைத்து
நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!
அன்புடன்
கவிநயா
கவிநயா