வெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை
எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில்
நீருற்று போல தொடர்ந்து ஏதாவது தோன்றிக் கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை.
ஆனால் இன்று என்னவோ எழுத வேண்டுமென்று தோன்றியது. இன்னதைப் பற்றி என்று குறிப்பாக ஏதும்
இல்லை.
எண்ணங்கள் தளும்பாத நேரமே இல்லை.
சிலவற்றைப் பகிரலாம்.
சிலவற்றைப் பகிர இயலாது.
கரையைத் தொடாமல் உள்ளேயே மடிந்து
விடும் சில அலைகளைப் போல
சில எண்ணங்களும் தளும்பி விழாமல்
உள்ளேயே மறைந்து விடுகின்றன.
‘மடிந்து’ என்று சொல்லாமல், ‘மறைந்து’
என்று சொன்னதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால்,
எந்த எண்ணமும் மடிந்து விடுவதில்லை.
ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு உணர்வு உண்டு, ஒரு சக்தி உண்டு. நாம் எவ்வளவு திரும்பத்
திரும்ப நினைக்கிறோமோ, அதைப் பொறுத்தே அதன் சக்தி கூடவோ குறையவோ செய்கிறது. அதனாலேயே
பெரியோர்கள் நல்ல எண்ணங்களையே விதைத்து, நல்ல எண்ணங்களையே வளர்க்கச் சொன்னார்கள்.
இந்த நிமிடம் மனம் அமைதியாக இருக்கிறது.
“content” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல. ஆனால் “போதும்” என்ற நினைப்பு வந்து
விட்டால் அங்கு வளர்ச்சிக்கு இடம் இல்லை என்றும் சொல்வார்கள். அந்த எண்ணம்தான் இந்தப்
பதிவிற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
“போதும்” என்று இருக்கிற நிலையில்
இருப்பது நல்லதா, அல்லது “போறாது” என்ற வெறியுடன் வளர்ச்சிக்கான வழிகளை ஆலோசிப்பது
நல்லதா?
“போதும் என்ற மனமே பொன் செய்யும்
மருந்து”. வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த நிலையை அடைந்துதானே ஆக வேண்டும். ஓடி
ஆடி உழைக்கச் சக்தி இருக்கும் போதே இந்நிலை வருவது நல்லதா இல்லையா என்று தெரியவில்லை.
அப்படி வந்து விட்டால் அதற்கு “சோம்பல்” என்ற பொருள் ஏற்படுமா?
சமீபத்தில் வேலையிலிருந்து
Grace Hopper Celebration என்ற கூட்டத்திற்குப் (conference) போயிருந்தேன். க்ரேஸ்
ஹாப்பர் என்ற பெண்மணியை கௌரவப் படுத்தும் வகையில் அனிடா என்ற பெண்மணி, பெண்
தொழில் நுட்ப வல்லுநர்களுக்காகவே ஏற்படுத்திய இயக்கம். 3 நாட்கள் நடந்த அந்தக் கூட்டத்தில்,
18000 பெண் தொழில் நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொருவரிடமும் அளக்க இயலாத
திறமைகளும், உச்சியைத் தொட வேண்டும் என்ற உத்வேகமும் தெரிந்தது. அடிமட்டத்திலிருந்து
வந்து, வாழ்க்கையில் பலவிதமாக அடிபட்டு, உச்சத்தைத் தொட்ட பல பெண்மணிகளை அங்கு பார்க்க
முடிந்தது. அதில் சிலருடைய உரைகளைக் கேட்கவும் முடிந்தது.
என்னுடைய நிலையையும் ஆர்வத்தையும்
உத்வேகத்தையும் நான் பார்த்த பெண்மணிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை.
நான் யார்? தொழில் நுட்ப உலகில் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? வாழ்க்கையில் என்ன செய்து
கொண்டிருக்கிறேன்? என்னுடைய இலக்குதான் என்ன? இது போன்ற பல கேள்விகளை மீண்டும் என்னுள்
தூண்டி விட்டிருக்கிறது. விரைவில் விடை கிடைக்கிறதா என்று பார்க்கலாம்…
வாசித்ததற்கு நன்றி.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன்
கவிநயா