அனைவருக்கும் புதிய, இனிய, தமிழ் 'ஜய' வருடவாழ்த்துகள்!
கிழக்கு
வெளுத்ததடி! கீழ்வானம்
சிவந்ததடி!
புதுவருடம்
பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!
சித்திரம்
போலவே வண்ண வண்ணப் பூக்கள்
சிங்காரமாகவே பூத்திருக்க…
கத்தரி
வெயிலுக்குக் கட்டியம் கூறியே
சித்திரை மாசம் வந்ததடி…
வானில்
வலம் வந்த மேகக் கூட்டம் எல்லாம்
மாயாஜாலம் போலே மறைஞ்சதடி…
அமாவாசை
இரவில் பௌர்ணமி நிலவாய்
வாழ்வில் ஒளி வீச வந்ததடி…
கிழக்கு
வெளுத்ததடி! கீழ்வானம்
சிவந்ததடி!
புதுவருடம்
பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!
வாசலிலே
பல வண்ணக் கோலமிட்டு
விதவிதமாகவே அழகு செய்வோம்!
பலவிதச்
சுவையுள்ள வாழ்க்கையைப் போலவே
அறுசுவை உணவுகள் செய்திடுவோம்!
வெற்றியை
இலக்காய் கொண்டிடுவோம்! நாம்
முயற்சிப் படிகளைக் கட்டிடுவோம்!
வாழ்வில்
யாவருமே வளர்ந்து இன்பம் பெற
இறைவன் அடிகளைப் பணிந்திடுவோம்!
கிழக்கு
வெளுத்ததடி! சூரியன்
முளைத்ததடி!
புதுவருடம்
பிறந்ததடி! புதுவாழ்வு மலர்ந்ததடி!
--கவிநயா