Monday, March 3, 2014

கடவுள் எங்கே இருக்கிறார்?


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்திடுச்சு. கடவுள் கடவுள்னு எல்லோரும் சொல்றாங்களே… அவரைப் பத்தின சந்தேகம் தான். உடனே அவர் தன்னோட ஆஸ்தான பண்டிதரைக் கூப்பிட்டார். “எனக்கு உடனே இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சாகணும்”னார்:

கடவுள் இருக்கிறாரா, இருக்கிறார் என்றால் இந்த நிமிடம் எங்கே இருக்கிறார்?
அவர் எந்தத் திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்?
அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

ஆஸ்தான பண்டிதரோ அவருக்குத் தெரிஞ்ச ஆன்மீக விளக்கங்களைச் சொல்லிப் பார்த்தார், ஆனால் அது எதுவுமே ராஜாவுக்குத் திருப்தியா இல்லை. “ஒரு நாள் எடுத்துக்கோங்க, ஆனா பதிலோடதான் சபைக்கு வரணும்”னு சொல்லிட்டார், ராஜா.

ஆஸ்தான பண்டிதர் சோகத்தோட வீட்டுக்குப் போனார். அங்கே அவரோட குட்டிப் பேத்தி, “ஏன் தாத்தா வருத்தமா இருக்கீங்க?”ன்னு விசாரிச்சா. உடனே இவரும்,”ராஜா இப்படியெல்லாம் கேட்டாரும்மா, அவருக்கு எப்படி விளங்க வைக்கிறதுன்னு தெரியலை”ன்னு சொன்னார். “அச்சோ தாத்தா, இதுக்கா கவலைப் படறீங்க? நான் போய் ராஜாவுக்கு விளக்கம் சொல்லிட்டு வர்றேன், நீங்க கவலையே படாதீங்க”ன்னு ஆறுதல் சொன்னா.

மறு நாள் காலைல ஆஸ்தான பண்டிதர் சபைக்கு வரவே இல்லை. ராஜாவுக்கோ ஒரே கோவம். வரலைன்னா தகவலாவது சொல்லியிருக்கலாமேன்னு சத்தம் போட்டுக்கிட்டிருக்கப்போ, ஒரு சேவகன் வந்து “ஆஸ்தான பண்டிதரோட பேத்தின்னு சொல்லிக்கிட்டு ஒரு குட்டிப் பொண்ணு உங்களைப் பார்க்கணும்னு சொல்லுது” அப்படின்னான். ராஜாவும் உள்ளே அனுப்பச் சொன்னார்.

உள்ளெ வந்த பொண்ணு பிரமாதமா ராஜாவை வாழ்த்திட்டு, உங்க கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் வந்திருக்கேன்னு சொன்னா. “என்ன, உங்க தாத்தாவுக்கு பதில் தெரியாததால உன்னை அனுப்பி சமாளிக்கிறாரா?”ன்னு கிண்டல் பண்ணாரு ராஜா. “அப்படில்லாம் இல்லை, இந்த மாதிரி சாதாரணக் கேள்விக்குப் பதில் சொல்ல நானே போதும், பண்டிதரெல்லாம் எதுக்கு?” அப்படின்னா குழந்தை.

“உங்க முதல் கேள்வி என்ன?”

ராஜா: “கடவுள் எங்கே இருக்கிறார்? “

குட்டிப் பொண்ணு அங்கேயிருந்த  பால் கிண்ணத்தைத் தொறந்து காட்டி, அதில் இருக்கறது என்னன்னு ராஜாவைக் கேட்டா.

ராஜா: “இது என்ன விளையாட்டு? இது பால்”

“பால் மட்டுந்தானா?”

ராஜா: “தயிரு, மோரு, வெண்ணெய், நெய் எல்லாம் இருக்கு”

“ஆனா, இதுல பால் மட்டும்தானே கண்ணுக்குத் தெரியுது? மற்றதெல்லாம் எங்கே?”

ராஜா, கொஞ்சம் தயங்கி: “எல்லாம் பாலுக்கு உள்ளே இருக்கு”

“அப்படித்தான் கடவுளும் எல்லாவற்றிலும் நிறைந்து கலந்து இருக்கார்”

“….”

“அடுத்த கேள்வி?”

ராஜா: “கடவுள் எந்தத் திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்?”

குழந்தை அங்கேயிருந்த குத்து விளக்கின் சுடரைக் காட்டி, “இந்த விளக்கு எந்தத் திசையில் ஒளி வீசுது?” ன்னு கேட்டா.

ராஜா: “இது என்ன கேள்வி, விளக்கு எல்லாத் திசையிலும்தான் ஒளி வீசும்”

“அப்படித்தான் கடவுளும் எல்லாத் திசைகளையும் பார்த்துக்கிட்டிருக்கார்”

“….”

“மூன்றாவது கேள்வி?”

“கடவுள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?”

“எனக்கு ஒரே ஒரு உதவி வேணும்”

ராஜா: “எதுவா இருந்தாலும் செய்யறேன் தாயே”

“இன்னும் ஒரு நாழிகைக்கு நான் இந்த நாட்டை ஆளற ராணி ஆகணும்”

ராஜா, உடனே அவளை சிம்மாசனத்தில் உட்கார வெச்சு தலை வணங்கி நின்னாரு.

குட்டிப் பொண்ணு, “யாரங்கே. இந்தா ராஜாவைப் பிடிச்சி சிறையிலடையுங்கள்”னாளே பார்க்கணும். ராஜாவோட சேர்ந்து எல்லாரும் திகைச்சுப் போயிட்டாங்க.

அப்ப அவ சொன்னா, “கடவுள் இந்த நிமிஷம் இதைத் தான் பண்ணிக்கிட்டிருக்கார்; நம்ம எல்லாரையும் ஆட்டி வெச்சுக்கிட்டிருக்கார்” அப்படின்னு.


சமீபத்தில் தொ.காட்சியில் ஒரு பழைய ஆன்மீகப் படத்திலிருந்து  (திருவருட்செல்வர்னு நினைக்கிறேன்) சில காட்சிகளைப் பார்த்தேன். அதில் என்னைக் கவர்ந்த காட்சி இது.

இந்தக் காட்சிக்கான சுட்டி: https://www.youtube.com/watch?v=hJx2T0lNxHc


--கவிநயா

17 comments:

  1. அடடா...! இப்போது தான் பார்த்தீர்களா...?

    ReplyDelete
    Replies
    1. நிறைய வாட்டி பார்த்திருக்கேன், இப்பதான் பதிவிடணும்னு தோணுச்சு :) வருகைக்கு நன்றி தனபாலன்.

      Delete
  2. என் பொண்களுக்கும் பிடித்த காட்சி இந்த படத்தில் இதுதான். குட்டிபத்மினி அசத்தும் இந்த பகுதி முடிந்தவுடன் சி,டி யை ஆப் செய்துவிட்டு எழுந்து போய்விடுவார்கள். ஒருவேளை அவர்களை போன்ற ஒரு குட்டிப்பெண் அசத்துவதால் பிடித்திருக்கிறதோ என்னவோ? எனக்கும் ரொம்பவே பிடிக்கும். படம் ”திருவருட்செல்வர்” தான்.

    ReplyDelete
    Replies
    1. same pinch :) நன்றி தானைத் தலைவி.

      Delete
  3. முடிந்தால் யூடியூபில் இருந்து அந்த காட்சியை இணைக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. இணைச்சிட்டேன்...!

      Delete
  4. கேள்விகளும் அதற்கெற்ற பதில்களும் மிக அருமை

    ReplyDelete
  5. இன்று நான் படித்த பதிவுகளில் மிக சுவாரஸ்யமாக இருந்த நல்ல பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று. மிக அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி 'அவர்கள் உண்மைகள்'!

      Delete
  6. திருவருட்செல்வர் படம் தான்.. குட்டிபத்மினியின் அருமையான நடிப்பில் சோபிக்கும் காட்சி அது.. ஏ.பி.என்னின் வசனங்கள், நடிகர் திலகத்தின் பங்களிப்பு என எல்லாமுமாகச் சேர்ந்து அந்தக் காட்சியை சிறக்கச் செய்து விட்டது.. அதை அழகாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்...பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்! நன்றி பார்வதி!

      Delete
  7. பார்த்திருக்கிறேன்:). அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  8. Replies
    1. மீள் வருகைக்கு நன்றி தானைத் தலைவி :)

      Delete
  9. அருமையான காட்சி.....

    அதை பகிர்வாகத் தந்தது சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)