அனைவருக்கும் மஹாசிவராத்திரி வாழ்த்துகள்!
ஓம் நம சிவாய; சிவாய நம ஓம்.
அண்ணாமலை சிவனே
எமக் கருள்வாய் குருபரனே
உண்ணா முலையுடனே, இந்த
மண்ணாளும் அரனே!
பொன்னார் மேனிச்
சிவனே அரையில்
புலித்தோல் அணிந்தவனே, எங்கள்
கலிதீர்த் தருள்பவனே!
விண்ணவர் போற்ற
மண்ணவர் துதிக்க
கங்கையை அணிந்தவனே, எங்கள்
அன்னையின் மன்னவனே!
கண்ணா ரமுதே
களிதரும் தேனே
எழில் விழி உமை துணைவா
எங்கள் வழியிலும் துணையாய் வா!
பக்தருக் கருளும்
பரம தயாளா
பிறை மதி சூடியவா, எங்கள்
குறைகளைத் தீர்த்திட வா!
அன்பே சிவமாய்
உருக் கொண்டவனே
அருணாசல தேவா, எங்கள்
கருணாகரனே வா!
--கவிநயா