சுப்பு தாத்தாவின் இயக்கிய குறும் படத்தைக் கண்டு/கேட்டுக் களியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னான பொன்மணியே
பூவிழியே கண்ணுறங்கு
வானோடு வெண்ணிலவு
வட்டமிட்டு விளையாட
தேனூறுந் தமிழெடுத்து
தாலாட்டு நான் பாட
மீனாடும் விழியாளே
மெல்ல மெல்லக் கண்ணுறங்கு
வான் மீன்கள் வியந்திருக்க
வண்ண மலரே யுறங்கு
சூரியனும் உறங்குதடி
சொக்கத் தங்கமே யுறங்கு
சோலை மலர் உறங்குதடி
சொர்ணமே நீயுறங்கு
தாமரை மல ருறங்க
தங்க மலரே யுறங்கு
தத்தி வருந் தென்றல் வந்து
தாலாட்ட கண்ணுறங்கு
ஆடும் மயிலுறங்க
பாடுங்குயில் தானுறங்க
கூடுகளில் குருவியெல்லாம்
குடும்பத் தோடுறங்க
கானகத்து உயிர்களெல்லாம்
கண்ணயர்ந்து தானுறங்க
என்னகத்தை ஆள வந்த
இன்னுயிரே கண்ணுறங்கு
ஆதிசிவன் நாயகியோ
அற்புதமோ கற்பகமோ
பாதி சிவன் விட்டு எந்தன்
பக்கம் வந்த பொக்கிஷமோ
மாதா சக்தி இந்தப்
பேதையிடம் வந்தாளோ
நான் பாடுந் தமிழ் கேட்க
என் மடிக்கு வந்தாளோ
கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னான பொன்மணியே
பூவிழியே கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://vadakovaiouraan.blogspot.com/2013/08/blog-post_28.html
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://vadakovaiouraan.blogspot.com/2013/08/blog-post_28.html