Monday, July 15, 2013

கமண்டலோஹம்!


சுவாமி சிவானந்தரைப் பார்க்க எப்போதும் யாரேனும் வந்து கொண்டே இருப்பார்கள். ஒரு நாள் அவரைப் பார்க்க ஒரு துறவி வந்தார். அவரோடு ஒரு பெரும் சீடர்கள் கூட்டமே வந்தது. அடிக்கடி “சிவோஹம்…சிவோஹம்” என்று வாய் விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கையில் வெள்ளியினாலான ஒரு கமண்டலம் இருந்தது.

வழக்கப்படி பணிவன்புடன் அவரையும், அவருடன் வந்தவர்களையும் வரவேற்றார் சுவாமி சிவானந்தர். வழக்கம் போலவே, அந்தத் துறவியை தம் சீடர்களுக்காக ஏதேனும் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு இசைந்த துறவி, தன் கையில் இருந்த கமண்டலத்தை ஓர் ஓரமாக வைத்து விட்டு மேடையேறிப் பேசினார். பேசிக் கொண்டே இருந்தாலும் அவர் கண்கள் சில நிமிடங்களுக்கு ஒரு முறை வெள்ளிக் கமண்டலத்தைக் கவனிக்கத் தவறவில்லை. ஒரு வேளை அதன் பாதுகாப்பில் அவருக்குச் சந்தேகம் வந்து விட்டது போலும்.

பேசி முடிந்ததும், முதல் வேலையாக அந்தக் கமண்டலத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்! அப்போது அவர் முகத்தில் தோன்றிய நிம்மதி இருக்கிறெதே! பிறகு இன்னும் சிறிது நேரம் உரையாடி விட்டு, விடை பெற்றுக் கொண்டார். கிளம்பும் போது மீண்டும் ஒரு முறை ‘சிவோஹம்’ என்று பெருங்குரலில், அழுத்தமாகச் சொல்லிச் சென்றார்.

அவர் சென்ற பின்னர், சுவாமி சிவானந்தர் சிரித்துக் கொண்டே, “கமண்டலோஹம்!” என்றாராம்! :)

துறவிக்கே அவர் கமண்டலத்தின் மீது எவ்வளவு பற்று பாருங்கள்!


சன் டி.வி.யில் ‘ஆன்மீகக் கதைகள்’ என்ற தலைப்பில், திரு. சிவகுமார் அவர்கள் பேசி வருகிறார். எங்களுக்குக் காலை ஏழே முக்காலுக்கு வரும். அவ்வப்போது அலுவலகத்துக்குத் தாமதமாகக் கிளம்ப நேர்ந்தால் நேரத்தை வீணாக்காமல் (!), அதைப் பார்ப்பதுண்டு. அவர் சொன்ன குட்டிக் கதைதான் இது.

அவர் அன்றைக்குப் பேசிய பொருள்: “நாம் பொருட்களை மனிதர்கள் போலவும், மனிதர்களைப் பொருட்கள் போலவும் நடத்துகிறோம்”, என்பது.

அவர் சொன்னதைக் கேட்ட போது எனக்கு இன்னொரு வேடிக்கையான கதை(?) நினைவு வந்தது.

இரண்டு பெண்கள் ஒரு திருமணத்துக்குப் போனார்கள். அதில் ஒரு பெண் போகுமிடத்துக்கெல்லாம் இன்னொரு பெண் ஒரு நாற்காலியையும் கையோடு தூக்கிக் கொண்டே சென்றாள். அந்தப் பெண் உட்கார வேண்டுமென்றால், உடனே இவள் நாற்காலியைப் போட்டு, ஒரு துண்டால் நன்றாகத் துடைத்து, பிறகு உட்காரும்படி உபசரித்தாள். அவள் ஏதாவது குடிக்க வேண்டுமென்றால், அவள் மடியில் ஒரு துண்டை விரித்துத் தந்தாள். குடித்த பின் தம்ளரை உடனே வாங்கி வைத்தாள். வந்தது முதல் அவளையே கவனித்த வண்ணம் இருந்தாள்.

இதைப் பார்த்தவர்கள், “அடடா, என்ன மாதிரி உதவி செய்கிறாய், இந்தப் பெண்ணுக்கு? என்ன மாதிரி பார்த்துக் கொள்கிறாய்! எத்தனை அன்பு அவள் மேல்!”, என்று வியந்தார்களாம். அதற்கு அந்தப் பெண்ணோ, “அதெல்லாம் ஒன்றுமில்லை. அவள் கட்டியிருப்பது என்னுடைய பட்டுச் சேலை. அதை நான்தானே பாதுகாக்க வேண்டும்?” என்றாளாம்!

ஆக, நாம் நமக்குச் சொந்தமான ஜடப் பொருட்கள் மீது கூட அத்தனை அன்பு செலுத்துகிறோம். ஆனால் சக மனிதர்களிடம் பழகும்போது, ஒருவரைப் பார்த்து புன்னகை புரிவதானாலும், இவரிடம் நாம் நல்லபடியாக நடந்து கொண்டால் பின்னால் உபயோகப்படும் என்ற சுயநல நோக்கம் இருக்கத்தான் இருக்கிறது. பிறரிடம் பழகும் போது, உள்ளார்ந்த அன்புடன் பழக வேண்டும். நமக்கு உரிமையானவற்றைக்கூட ‘என்னுடையது’ என்ற எண்ணமில்லாமல், விலக்கி வைக்கக் கற்க  வேண்டும். அவற்றை நாம் இழக்க நேர்ந்தாலும் அது நம்மைப் பாதிக்கக் கூடாது. அதுவே பற்றில்லாத தன்மை என்பது. அந்த விலக்கி வைக்கும் தன்மையே, நம்மைப் பல துன்பங்களினின்றும் விலக்கி வைக்க வல்லது.

வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல், பற்றில்லாதவனைப் பற்றிக் கொண்டால், பற்றிக் கொண்டவை அனைத்தும் நம்மை விட்டுச் சென்று விடும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

(வழக்கம் போல எனக்கேதான் சொல்லிக் கொள்கிறேன். ஹி…ஹி…)

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா


படத்துக்கு நன்றி: http://greatfruitarians.blogspot.com/


Sunday, July 7, 2013

சின்னச் சின்ன ஆசை!



சிறகடித்துப் பறந்து வானை எட்டிப் பார்க்கலாமா?
வானில் ஏறி வட்ட நிலவைத் தொட்டுப் பார்க்கலாமா?
காற்றுத் தேரில் உலகமெங்கும் சுற்றிப் பார்க்கலாமா?
ஆற்று நீரில் நீந்திக் கடலைச் சேர்ந்து பார்க்கலாமா?

மீனைப் போல நீரில் நீந்தி ஆழம் பார்க்கலாமா?
மானைப் போலத் துள்ளித் துள்ளி ஓடிப் பார்க்கலாமா?
வானம் பாடி கானம் நாமும் பாடிப் பார்க்கலாமா?
வானும் மண்ணும் வாய் பிளக்க ஆடிப் பார்க்கலாமா?

மின்னலாகி இருளைக் கொஞ்சம் கீறிப் பார்க்கலாமா?
கன்னல் தமிழில் கொஞ்சும் கவிதை சொல்லிப் பார்க்கலாமா?
வண்ண மலரைக் கையில் ஏந்தி வாசம் பார்க்கலாமா?
எண்ணம் யாவும் அன்பைக் குழைத்து வாழ்ந்து பார்க்கலாமா?


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://pincel3d.deviantart.com/art/The-moon-and-the-birds-46703434