Monday, May 20, 2013

தாய்மை


(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது)


"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்?" தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை போல் மிகச் சாதாரணமாக வந்து விழும் கேள்வியைக் கேட்டவுடன் அவள் முகம் கோபத்தில் சிவக்கிறது.

தன் மக்களைக் கொன்ற தரும தேவனைக் கட்டிய கண்கள் வழியே காந்தாரி தேவி நோக்குகையில், அவள் கோபத்தினால் அவனுடைய கால் கட்டை விரல் வெந்து கருகி விட்டதாம். இப்போது மாலுவிற்கும் அந்த சக்தி இருந்திருந்தால், சந்தோஷின் முகத்திற்கும் அதே கதி ஏற்பட்டிருக்கும். அதற்கு அஞ்சியோ என்னவோ தன் கண்களைத் தழைத்துக் கொண்டு, பல்லைக் கடித்துக் கொண்டு, மௌனம் சாதிக்கிறாள்.

அதை உணர்ந்தது போல், "எத்தனை நாள் ஆறது, மாலு?", கொஞ்சம் கனிவுடன் வருகிறது அவன் கேள்வி இப்பொழுது. "45", அதற்கு மேலும் அந்த உரையாடலைத் தொடர விரும்பாதவளாய் அந்த இடத்தை விட்டு விலகுகிறாள்.

திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக நாள் தள்ளிப் போயிருக்கிறது. அம்மாவுக்கோ, மாமியாருக்கோ தெரிந்திருந்தால் வானுக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொண்டாடியிருப்பார்கள், இந்நேரம். சந்தோஷும் மாலுவும் இவ்வளவு சஞ்சலப் படுவதற்குக் காரணம், இந்தக் கர்ப்பம் அவர்களின் "ஐந்து வருடத் திட்டத்"தில் இல்லாததுதான்.

அவள் எம்.பி.ஏ. முடிக்க இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இப்போது குழந்தையைப் பெற்றுக் கொண்டு என்ன செய்வது? அவள் அம்மா எவ்வளவோ முறை சொல்லி விட்டார்: "பேசாம ஒரு புள்ளயப் பெத்து என் கையில குடுத்துட்டு நீ எவ்வளவு வேணுன்னாலும், படி. இதெல்லாம் நமக்கு வேணுங்கிற போது கிடைக்காதுடா. கிடைக்கிற போதே நம்மளா எடுத்துக்கிட்டாத்தான் உண்டு". ஆனால் இவளுக்கோ, குழந்தை என்று பெற்றுக் கொண்டால் அது தன்னிடம் தான் வளர வேண்டும் என்ற எண்ணம்.

பலவற்றையும் நினைத்துப் பார்க்கையில் மூளை குழம்பியதுதான் மிச்சம். சந்தோஷிடமிருந்தும் எதுவும் உதவி கிடைக்கிறாற்போல் தெரியவில்லை.

மறு நாள் தன் நெருங்கிய தோழி அனிதாவிடம் தன் பிரச்சினையைச் சொல்லிப் புலம்புகிறாள். "ஏய், அதெல்லாம் இருக்கட்டும், நீ முதல்ல இது கர்ப்பம் தானா என்னன்னு உறுதி பண்ணிக்கிட்டியா, இல்லயா?" இரண்டு குழந்தைகளைப் பெற்ற அனிதா கேட்கிறாள்.

"இன்னும் இல்ல. ஆனா எனக்கு இது வரை நாள் தள்ளினதே இல்லயே?" புரியாமல் கேட்கும் மாலுவைப் பார்த்துச் செல்லமாகத் தலையில் அடித்துக் கொள்கிறாள், அனிதா.

"மக்கு, மக்கு. அந்த ஒரு காரணத்தாலேயே அது கர்ப்பம்னு அர்த்தம் இல்ல. இன்னிக்கே டாக்டர்ட்ட போய்ச் செக் பண்ணிக்கோ".

மாலுவிற்கு என்னவோ எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும் அனுபவமுள்ள தோழியின் கட்டளையைச் சிரமேற் கொண்டு மருத்துவரைப் போய்ப் பார்த்து விட்டு வருகிறாள். ஒரு பக்கம் தான் அம்மாவாகும் கனவுகளில் தன்னை அறியாமலேயே அவள் உள்ளம் துள்ளுகிறது. இன்னொரு பக்கம் இன்னும் ஒரே ஒரு வருடம் மட்டும் கழிந்து விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நிம்மதியாக அம்மாவாகலாம் என்ற எண்ணமும் அடிக்கடி ஏற்படுகிறது.

அன்று மாலை அவள் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த தொலை பேசி அழைப்பு வருகிறது. "உங்க டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ்வா வந்திருக்குங்க, மாலதி. உங்களுக்கு வேற எந்தக் காரணத்தாலேயோதான் நாள் தள்ளிப் போயிருக்கு. இன்னும் இரண்டு நாள்ல உங்களுக்கு மாத விலக்கு வரலன்னா, மறுபடியும் என்னை வந்து பாருங்க", என்கிறார், டாக்டர்.

அவளுக்கு எதனாலோ அழுகை குமுறிக் கொண்டு வருகிறது.


-- கவிநயா



11 comments:

  1. வேறு எதோ பிரச்சனை இருக்கும் போல...

    ReplyDelete
    Replies
    1. பெண்களுக்கென்றே இருக்கிற மனப் போராட்டங்களில் இதுவும் ஒன்று. அத்துடன், ஒன்றை வேண்டாம் என்கும், அதுவே வேண்டும் என்கும் மனதின் விசித்திரத்தையும் சொல்ல வந்தேன். வருகைக்கு நன்றி தனபாலன்.

      Delete
  2. உணர்வுகளை உலுக்குகிற கதை. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. அதுதான் தாய்மை. மிக அருமையான கதை கவிநயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  4. வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்துக்கள்... அசத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறேன் :) நன்றி தனபாலன்.

      Delete
  5. முடிந்தபின்னும் அசைபோடும் விதத்தில் கதைகளை முடிப்பது ஒரு திறமை. பாராட்டுக்கள். மாலுவின் நிலை நிறைய அசை போட வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அட, உங்களை இங்கே பார்த்ததில் பரம சந்தோஷம் :) கற்றுகு குட்டிகளைப் பாராட்டி ஊக்குவிக்க பெரிய மனது வேண்டும். மிக்க நன்றி! :)

      Delete
  6. வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, அப்பாதுரை.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)