ஒரு துயரமோ, பிரச்சனையோ வரும்போது அதை இறைவனிடம் விட்டுடு, அவன் பார்த்துப்பான் அப்படின்னு பலரும் ஆறுதல் சொல்றதைக் கேட்டிருப்பீங்க. ஆனா அப்படின்னா என்ன? அதை எப்படிச் செய்யறது? அது தெரிஞ்சாதானே செய்ய முடியும்? பல பெரியவங்க சொல்றதையும்படிக்கிறதில், அது எப்படின்னு இப்பதான் ஓரளவு புரிய ஆரம்பிச்சிருக்கு.
நமக்கு ஒரு கணக்கு சரியா வரலை; எங்கேயோ உதைக்குது. அல்லது அலுவலக வேலையில் ஒரு விஷயம் எப்படி செய்யறதுன்னு தெரியலை. கேட்கவும் ஆளில்லை; நாமளேதான் கண்டு பிடிச்சாகணும். இந்த மாதிரி சமயத்தில் பொதுவா நாம செய்யறது என்ன? அந்த பிரச்சனையைப் பற்றியே விடாம நினைச்சுக்கிட்டே இருக்கிறது. இப்படிப் பண்ணினா சரி வருமா, அப்படிப் பண்ணினா சரி வருமான்னு மாத்தி மாத்தி யோசிச்சிக்கிட்டே இருக்கறது. அப்படிச் செய்யும்போது நமக்கு ஏற்கனவே வந்த யோசனைகள்தான் வந்துக்கிட்டே இருக்குமே தவிர, புதுசா ஒண்ணும் தோணாது. ஒரு கணக்கை ஒரே முறைல எத்தனை தரம் போட்டாலும், அதே விடைதானே வரும்! ஆனா அதுவே அந்த பிரச்சனைக்கு புத்தியில் இருந்து கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்க. மறு நாள் திடீர்னு வேற ஒரு வழியும், வேற ஒரு விடையும் வந்து நிக்கும்! எப்படி இந்தக் கோணத்திலிருந்து யோசிக்காம விட்டோம்னு தோணும். “யுரேகா” ஞாபகம் இருக்கா!
நமக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள், துன்பங்கள் வரும்போதும் அதே தவறைத்தான் செய்யறோம். அதை மனசுக்குள் போட்டு, புரட்டி எடுத்து, அந்த பிரச்சனைக்கே அலுப்பு தட்டற அளவு ஏதேதோ கோணங்களில் அதைப்பற்றி நினைக்கிறோம், கவலைப் படறோம். அந்த உணர்வுகள் ஏற்படுத்தற தாக்கத்தோடேயே, கோபத்தோடேயே, வருத்தத்தோடேயே, சம்பந்தப்பட்டவர்களிடம் நடந்துக்கறோம். ஆனா அது பிரச்சனையை சரி பண்ணாம, மேலும் எதிர் விளைவுகளைத்தான் தருது. புதை குழி மாதிரி நம்மை இன்னும் இன்னும் உள்ளே இழுத்துக்குது.
கார்லயோ, பைக்லயோ பிரச்சனை வந்தா என்ன செய்யறோம்? நல்ல மெகானிக் அப்படின்னு தெரிஞ்சவர்கிட்ட கொண்டு போய் குடுக்கறோம். அவர் நாளைக்கு வாங்க, அல்லது இரண்டு நாள் கழிச்சு வாங்க, பாத்து வைக்கிறேன், அப்படிம்பார். அதைக் கொடுத்துட்டு வந்திடுவோமா, அல்லது பக்கத்தில் நின்னுக்கிட்டு அதை அப்படிச் செய்யாதே, இதை இப்படிச் செய் அப்படின்னு நமக்கே தெரியாத விஷயத்தை அவருக்குச் சொல்லிக் கொடுப்போமா? அப்படில்லாம் செய்தா, நீயே பாத்துக்கய்யான்னு சொல்லிட்டு அவரு கோச்சுக்கிட்டுப் போயிடுவாரு!
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கும் இந்த உதாரணம் பொருந்தும். நம்ம உடலைக் கவனிக்கிற பொறுப்பை, மருத்துவரை நம்பிதானே கொடுக்கிறோம். நீ சரியா செய்ய மாட்டே, நகருன்னு சொல்லிட்டு நாமளே கத்தியைத் தூக்க முடியுமா?
அதாவது, இந்த உதாரணங்கள் மூலம் சொல்ல வர்றது என்னன்னா, வேலை தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட ஒரு பொறுப்பை ஒப்படைச்ச பிறகு, நாம அதைப் பற்றி நினைக்கிறதில்ல, தலையிடறதில்லை, கவலைப்படறதும் இல்லை. அவர் சரி பண்ணிடுவார்னு அவர் மேல நம்பிக்கை வெச்சு காத்திருக்கோம்.
அதே போலத்தான் இறைவனிடமும் நம்பிக்கை வைக்கணும். அவன்கிட்ட ஒரு பிரச்சனையை ஒப்படைச்சாச்சுன்னா, அதைப் பற்றி நினைக்கிறதையும், கவலைப் படறதையும் விட்டுடணும். அப்படிச் செய்யும் போது என்ன ஆகும்? மனசு அமைதி ஆகும். அமைதியான மனசில்தான் இறைவன் குடியிருப்பான். அவனே நமக்கு நல்ல வழியைக் காட்டுவான். அவன் காட்டற வழிப்படி, உணர்ச்சி வசப்படாம, அமைதியோட, நடு நிலைமையோட செய்யற காரியங்கள்தான் நன்மை தரும்.
இதே கருத்தை ரொம்ப எளிமையா சொல்ற ஒரு ஆங்கிலக் கவிதையை முன்ன ஒரு முறை Hallmark card –ஒண்ணுல படிச்சிருக்கேன். ஆனா அப்ப அது சரியா புரியல; கருத்து மட்டும் நினைவிருந்தது. எப்படி எப்படியோ கூகுளார்கிட்ட கேட்டு ஒரு வழியா முழுக் கவிதையையும் கண்டுபிடிச்சிட்டேன்!
Poem: Let Go and Let God!
As children bring their broken toys with tears for us to mend,
I brought my broken dreams to God because He was my friend.
But then, instead of leaving Him in peace to work alone,
I hung around and tried to help with ways that were my own.
At last, I snatched them back and cried, ”How can you be so slow?”
“My child,” He said, ”What could I do?
You never did let go.” ~Lauretta P. Burns
ரொம்ப அழகா, எளிமையா இந்த ஆங்கிலக் கவிதையில் சொல்லப்பட்டிருக்கிற விஷயம் என்ன தெரியுமா? சரணாகதி! அல்லது Total Surrender! ஆமாம்... அதேதான்! உங்களை, உங்க பிரச்சனைகளை இறைவனிடம் ஒப்படைச்சிடுங்க. ஆச்சா? அவ்வளவுதான். கவலையை விடுங்க.
எல்லோரும் நல்லாருக்கணும்.
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி:
http://imagineagirldaydreaming.blogspot.com/2013/09/let-go.html
பி.கு.: இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வலையுலகப் பக்கம் வர முடியாத சூழ்நிலை…‘அம்மன் பாட்டு’ வலைப்பூவில் மட்டும் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை பாடல்கள் இட விருப்பம் இருக்கு. பார்க்கலாம்… அவள் விருப்பம் எப்படியோ?
அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!