நிறைந்த
வெண்ணெய்த் தாழி ஒன்றை
நீலக்
கண்ணன் உடைத்தானோ
நீல
வானை அலங்கரிக்க
மேகம்
என்று அழைத்தானோ!
பிஞ்சுப்
பாதம் எங்கும் பதித்து
பஞ்சுப்
பொதியாய் அமைத்தானோ
புல்லாங்
குழலின் இசைக்குத் துணையாய்
மின்னல்
இடியைப் படைத்தானோ!
காதல்
கதிரவன் பார்வை கண்டு
நீயும்
நாணிச் சிவந்தனையோ
அழகாய்
வரைந்த ஓவியம் போலே
அற்புத
வர்ணம் கொண்டனையோ!
நிர்மலமான
மழலை நெஞ்சாய்
நீல
வானம் நிறைத்தனையோ
நீரைக்
கருவாய்ச் சுமந்து வந்து
நீள்நிலப்
பசியைத் தணித்தனையோ!
ஊடல்
கொண்ட தலைவி போலே
வதனம்
கறுத்து வாடினையோ
கோபக்
குமுறல் நீங்கும் வரையில்
கொட்டி
தீர்ந்து ஓய்ந்தனையோ!
தாயை
அணைக்கும் சேயைப் போலே
தரணியை
முத்தம் இட்டனையோ
புலவர்
பாடும் தமிழைப் போலே
பொங்கிப்
பெருகிப் பொழிந்தனையோ!
--
கவிநயா