Sunday, December 11, 2011

தேவி சரணம்


போன வாரம் சனிக்கிழமை அன்று ‘தேவி சரணம்’ என்கிற நடன நிகழ்ச்சி செய்தேன். ரெண்டு மூணு வருஷங்களாகவே அவளுக்காக ஒரு நடன நிகழ்ச்சி பண்ணனும்னு தோணிக்கிட்டே இருந்தது. பல சிரமங்களுக்கு இடையில் அவள் அருளால் நல்லபடியாக நடந்து முடிஞ்சிட்டது.

அன்னை மீதான பல வேறு பாடல்களுக்கு நடனம் ஆடினேன். எல்லாமே பிரபலமான பாடல்களாக இருந்ததால, நடனம் எப்படி இருந்தாலும், மக்கள் இரசிச்சாங்கன்னு தெரிஞ்சது :) குறிப்பாக ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’, ‘நீ இரங்காயெனில் புகலேது?’, ‘அயிகிரி நந்தினி’, ‘ஸ்ரீசக்ர இராஜசிம்ஹாசனேச்வரி’, இவற்றுக்கெல்லாம் ஆடினேன். என்னுடைய நடன ஆசிரியைக்கும் இந்த சமயத்தில் வணக்கத்துடன் நன்றி சொல்லிக்கிறேன் (அவங்க இதல்லாம் படிக்க மாட்டாங்கன்னாலும் :).

தேவி பாடல்களுக்கான நடனம் அவ்வளவா தெரியாது, தெரிஞ்சதும் ரொம்ப நாள் முன்னாடி கத்துக்கிட்டதுங்கிறதால மறந்துருச்சு. சில சமயம் மனசில் இருப்பதை பாடணும்னு தோணற மாதிரி, ஆடணும்னும் தோணும். என் பாட்டை நானே பாடி, நானே அபிநயம் பிடித்து ஆடுவதுண்டு. ஆனால், சில பாடல்களாவது ஒழுங்கா கத்துக்கணும், அப்படிச் செய்யற போது அவளை நினைக்கிற நேரமும் அதிகமாகும் என்கிற (சுயநல) நோக்கத்தோடதான் ஆரம்பிச்சேன்.

நிறைய பேருக்கு நான் ஏன் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி பண்றேன்னு புரியவே இல்லை. நான் ஏதோ புதுவிதமான நடன நிகழ்ச்சி செய்யணுங்கிறதுக்காக செய்யறதா நினைச்சாங்க. உண்மையில் இது திறமையின் வெளிப்பாட்டுக்காக இல்லை (இருந்தாதானே வெளிப்படுத்த! :) மன உணர்வின், அவளுக்கான அன்பின், வெளிப்பாட்டுக்காக என்பது ஒரு சிலருக்குத்தான் புரிஞ்சது.

வாழ்க்கையில எத்தனையோ விஷயங்கள் நடக்குது. பல சமயங்களில் ஏன் இப்படில்லாம் நடக்குதுன்னு தெரியறதில்லை. காரணமில்லாம துயரங்கள் வரும் போது, ‘இதுதான் விதி’ன்னோ, அல்லது ‘பூர்வ ஜென்ம பாவம்’னோ, அல்லது ‘பிராப்தம் அவ்வளவுதான்’னோ எழுதி வெச்சிடறோம். சில விஷயங்கள் காலம் கடந்து புரியும். ‘ஓ, அன்றைக்கு இப்படி நடந்ததுக்கு காரணம் என்னன்னு இப்பதானே தெரியுது?’, அப்படின்னு மனசுக்குள் ஒரு விளக்கு எரியும்.

என் வாழ்க்கையில் எனக்கு என்ன புரிஞ்சதோ இல்லையோ, ரெண்டு விஷயம் மட்டும் இப்போ புரிஞ்ச மாதிரி இருக்கு. நான் கவிதை எழுத ஆரம்பிச்சதன் காரணம், அவளைப் பாடணும் என்கிறதுக்காகவே என்பதும்; காலம் கடந்தாலும் நான் நடனம் கத்துக்கிட்டதுக்கு காரணம், அவளுக்காக ஆடணும் என்பதற்காகவே, என்பதும்தான்.

ரொம்ப வருஷமா எழுதிக்கிட்டிருந்தாலும், கவிதை என்பதை என் உணர்வுகளுக்கு வடிகாலாதான் இறைவன் கொடுத்திருக்கான்னு ரொம்ப நாள் நினைச்சிக்கிட்டிருந்தேன் – அவளுக்காக, அவளைப் பற்றி, அவளைப் போற்றி, எழுத ஆரம்பிக்கிற வரை. அதுக்கப்புறம் தான் அந்த விளக்கு எரிஞ்சது!

அதே போலத்தான் நடனமும். சின்ன வயசிலிருந்து உள்ளுக்குள்ள இருந்த ஆசை இங்கே வந்து நிறைவேறக் காரணம் என்னன்னு இப்போதான் புரியுது. இறைவனுக்கான ஏக்கத்தை அருமையாகவும், மனப்பூர்வமாகவும், வெளிப்படுத்த, பரதம் ஒரு மிகச் சிறந்த சாதனம். பரதமும், ஆன்மீகமும் கையோடு கைகோர்த்துச் செல்பவை. வர வர பரதம் குழு நடனமாகவும், fusion நடனமாகவும், மாறிக்கிட்டு வரதைப் பார்த்தா கொஞ்சம் கவலையாதான் இருக்கு. அதனோட ஆன்மீகத் தன்மை அப்படியே குறைஞ்சு, மறைஞ்சு போயிடுமோன்னு தோணுது.

எந்த ஒரு கலைஞனுக்குமே இறையருளினால்தான் அந்தக் கலை வாய்க்கிறது. அந்தக் கலையை இறைவனுக்கே காணிக்கையா தரும்போதுதான் அதன் நோக்கம் நிறைவடைவதைப் போல ஒரு உணர்வு. ஒரு புள்ளியில் ஆரம்பிச்ச வட்டம், எல்லா இடமும் சுத்தி வந்து மறுபடியும் அதே புள்ளியில் முழுமை பெறுவதைப் போல.

சின்னப் பிள்ளைங்கல்லாம் அப்பா, அம்மா, மற்ற பெரியவங்கல்லாம் விசேஷங்களுக்கு தர்ற பணத்தை சேர்த்து வைப்பாங்க. பிறகு யாருக்காச்சும் எதுக்காவது பரிசு தரணும்னா, அதில இருந்துதான் எடுத்து செலவழிப்பாங்க. இல்லன்னா அவங்ககிட்ட ஏது பணம்? அப்படிச் செய்தாலும் கூட, ஏதோ தானே பெரிசா செய்துட்ட மாதிரியான சந்தோஷமும் பெருமிதமும் ஏற்படும். ‘வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் பண்றதைப் போல’, அப்படின்னு ஒரு சொலவடை கூட இருக்கு. நாம வரும் போது எதைக் கொண்டு வந்தோம், நான் குடுக்கறேன்னு தாராளமா எடுத்துக் கொடுக்கிறதுக்கு? எல்லாமே அவன் தந்ததுதான். அவன் தந்ததை அவனுக்கே திருப்பித் தரோம்.

அந்த சின்னப் பிள்ளை போலத்தான் நானும். ஆக மொத்தம், நான் நடனம் கத்துக்கிட்ட காரணம் இப்போ நிறைவேறிட்ட மாதிரி இருக்கு. அவள் தந்த கலையை அவளுக்கே அர்ப்பணம் செய்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சியும், மனநிறைவும்.

பரிசு எப்படி இருந்தாலும், அதில் இருக்கிற பிரியம்தானே முக்கியம்?

அன்னையின் திருவடிகள் சரணம்.

எல்லோரும் நல்லாருக்கணும்.

அன்புடன்
கவிநயா

16 comments:

  1. உண்மை! உண்மை! மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். என் மகள் பாட்டு போட்டிகளில் கலந்து கொண்டால் நான் சொல்வது இது தான், "பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கடவுளை நினைக்க, உருகி பாட ஒரு வாய்ப்பு என்று எண்ணவேண்டும். வீட்டில் நீ பயிற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் அந்த வாய்ப்பு உனக்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது என்று எண்ணு."

    "தானே எழுதிய பாடல், தானே வளர்த்த செடியில் இருந்து பூ பறித்து தானே தொடுத்த மாலை இறைவனுக்கு மிகவும் பிடிக்கும் !" என்று சாணக்கிய நீதி சொல்லுவதாக ஒரு புத்தகத்தில் படித்தேன். ஆக, அன்னைக்கு உவப்பான வேலையை செய்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. // அவள் தந்த கலையை அவளுக்கே அர்ப்பணம் செய்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சியும், மனநிறைவும்.//

    ஆதி சங்கரர் அதையே தான் கடைசி ஸ்லோகமாக சொல்கிறாரே !!

    ப்ரதீப ஜ்வாலிபிர் திவஸகர நீராஜன விதிஹி
    சுதா ஸூதேஸ் சந்த்ரோபல ஜல்ல வைரக்ய ரசனா
    ஸ்வகீயைர்ரம்போபிஹி ஸலில நிதி ஸௌஹித்யகரணம்
    த்வதீயாபிர்வாக்பிஸ்தவ ஜனனி வாசாம் ஸ்துதிரியம்.


    அம்மா !! எந்த கவிதை புனைய எனக்கு கத்துத்தந்தாயோ அதையே அந்த ஆற்றலையே உனக்கு நான்
    நிவேதிக்கிறேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  3. ஆடும் பரி,வேல் அணி சேவல் என
    பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
    -ன்னு அருணகிரி சொல்லுவாரு!

    ஆனா கவிக்கா, extra oru bit சேத்துக்கிட்டாக:)
    பாடும் பணியே பணியாய் அருள்வாய்!
    ஆடும் பணியே பணியாய் அருள்வாய்!

    வாழ்த்துக்கள்-க்கா!
    (திறமை இருந்தும்) திறமையை வெளிப்படுத்தியதற்கு அல்ல!
    அன்பு இருந்து, அவள் மீது ஆசையாய் வெளிப்படுத்தியதற்காக!

    ReplyDelete
  4. கலக்குறிங்க அக்கா...வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  5. "அவள்தந்த கலையை அவளுக்கே அர்ப்பணம்"செய்வதாய்ச்சொன்னதைபபடிக்கையில் சங்கரரின் விநயம் பொதிந்த சௌந்தர்ய லஹரியின் இறுதி (100) பதம் நினைவுக்கு வருகிறது .

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கவிக்கா..... போட்டோ, விடியோ எல்லாம் இணைக்கலாமே? :)

    ReplyDelete
  7. வாங்க தானைத் தலைவி! ரொம்ப perfect-ஆ இருக்கீங்களே :) நான் ரொம்ப லேட்டா கத்துக்கிட்ட விஷயமெல்லாம் உங்களுக்கு already தெரிஞ்சிருக்கு. வாழ்த்துகள்!

    //"தானே எழுதிய பாடல், தானே வளர்த்த செடியில் இருந்து பூ பறித்து தானே தொடுத்த மாலை இறைவனுக்கு மிகவும் பிடிக்கும் !" என்று சாணக்கிய நீதி சொல்லுவதாக ஒரு புத்தகத்தில் படித்தேன். ஆக, அன்னைக்கு உவப்பான வேலையை செய்கிறீர்கள். பாராட்டுக்கள்.//

    இதைப் படிச்ச போது சந்தோஷமா இருந்தது, மிக்க நன்றி.

    ReplyDelete
  8. //ஆதி சங்கரர் அதையே தான் கடைசி ஸ்லோகமாக சொல்கிறாரே !!//

    //சங்கரரின் விநயம் பொதிந்த சௌந்தர்ய லஹரியின் இறுதி (100) பதம் நினைவுக்கு வருகிறது .//

    சுப்பு தாத்தா, லலிதாம்மா, இரண்டு பேரும் ஒரே மாதிரி சொல்லியிருக்கீங்க! உங்களை மாதிரி பெரியவங்கல்லாம் சொல்லிதான் இதைப் பற்றி படிச்சிருக்கேன். ஒரு வேளை இதைப் போல செய்திகள்தான் இந்த மாதிரி எண்ணத்துக்கே வித்திட்டதோ என்னவோ. அன்பும் பக்தியும் விநயமும் அவளே அருளணும்.

    ஆசிகளுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  9. கண்ணன் வருகை அதிசயமா இருக்கு :)

    //வாழ்த்துக்கள்-க்கா!
    அன்பு இருந்து, அவள் மீது ஆசையாய் வெளிப்படுத்தியதற்காக!//

    மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  10. //கலக்குறிங்க அக்கா...வாழ்த்துக்கள் ;-)//

    மிக்க நன்றி கோபி :)

    ReplyDelete
  11. //வாழ்த்துக்கள் கவிக்கா.....//

    நன்றி மௌலி.

    //போட்டோ, விடியோ எல்லாம் இணைக்கலாமே? :)//

    ஏன், இங்கே வர்ற ஒரு சிலரும் கூட திரும்பிப் பார்க்காம ஓடணும்னு ஆசையா இருக்கா, உங்களுக்கு? :)

    ReplyDelete
  12. மிக்க மகிழ்ச்சி அக்கா. யூட்யுப்ல உங்க நிகழ்ச்சியைப் பார்க்க முடியுமா?

    ReplyDelete
  13. //அந்த சின்னப் பிள்ளை போலத்தான் நானும். ஆக மொத்தம், நான் நடனம் கத்துக்கிட்ட காரணம் இப்போ நிறைவேறிட்ட மாதிரி இருக்கு. அவள் தந்த கலையை அவளுக்கே அர்ப்பணம் செய்ததில் மிகப் பெரிய மகிழ்ச்சியும், மனநிறைவும்.//

    சரியான பார்வை!

    ReplyDelete
  14. yenakku enna thanthirukkalne innamum puriyalaiye...!? athukullave ithanai varudangal veenagi kondirukindranave..!?


    Paadavo,aadavo,kavithai ezhuthavo theriyatha naan yeppadi avalai thuthippathu? yennakku idapatta katalaithan yenna..!?

    ungalukku yethavathu purigirathaa...!?

    Thanai Thalaivi.

    ReplyDelete
  15. வருகைக்கு மிக்க நன்றி குமரன், திவாஜி!

    ReplyDelete
  16. இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்களே, தானைத் தலைவி! உங்க கேள்வி பலவிதமான எண்ணங்களைக் கிளறி விட்டு விட்டது - அதுக்கு பதிலா ஒரு பதிவே போடலாம்கிற அளவு. ஒரே ஒரு இலையை உள்ளார்ந்த அன்புடன் படைத்தால்கூட, அதனையும் ஏற்றுக் கொள்வேன் என்றானே கீதை சொன்ன கண்ணன். பக்தி செய்ய எத்தனையோ வழிகள் இருக்கு; பாட்டும் நடனமும் மட்டுமே வழிகள் இல்லை!! விளக்கேற்றும் கைங்கர்யம் செய்தே முக்தி அடைந்த நாயன்மார் பற்றி படிச்சிருப்பீங்க. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நமக்குத் தெரிந்த, முடிந்த அளவில் செய்யும் ஆத்மார்த்தமான பக்தியே போதுமானது. பெரியவங்கல்லாம் இருக்கும்போது நான் இதுக்கு மேலே பேசக் கூடாது. அவங்களும் ஏதேனும் சொன்னா நாம எல்லாருமே கேட்டுக்கலாம்...

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)