
அன்பரைக் காத்திட அவனிக்கு வந்தது
அழகிய திருநாமம்!
ஆதவன் மரபினில் பூமிக்கு வந்திட்ட
ஆண்டவன் திருநாமம்!
இருள்தனை விரட்டிடும் ஒளியதை ஊட்டிடும்
இனியனின் திருநாமம்!
ஈசனும் ஓதிடும், இகபர சுகந்தரும்
ஈடில்லா திருநாமம்!
உண்மையின் வடிவத்தை இதயத்தில் நிறுத்திடும்
உத்தமன் திருநாமம்!
ஊழ்வினை அகற்றிடும், நாடிடும் நெஞ்சினில்
ஊன்றிடும் திருநாமம்!
என்றென்றும் பக்தர்க்கு உறுதுணை யாய்வரும்
எந்தையின் திருநாமம்!
ஏங்கிடும் உள்ளத்தை தாங்கிட வருவது
ஏகனின் திருநாமம்!
ஐம்புலன் அடக்கிய அனுமனும் உரைப்பது
ஐயனின் திருநாமம்!
ஒருமன தாகவே தினம்பாடி டுவோம்
ஒருவனின் திருநாமம்!
ஓதிடும் உள்ளத்தின் உள்நின்று ஒளிர்ந்திடும்
ஓவியத் திருநாமம்!
ஔவியம் தீர்த்திடும் அன்புடன் காத்திடும்
ஔடதத் திருநாமம்
அதுவே எங்கள் ஜானகி ராமனின்
அழகிய திருநாமம்!
ராமராம என அடியவர் ஜெபித்திடும்
அற்புதத் திருநாமம்!!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.dlshq.org/download/hindufestimg/hanuman.jpg
அடுத்த வாரம் முதல் விடுமுறையில் போறேன். கணினியைத் தொட வாய்ப்பு கிடைப்பது சந்தேகம். விடுமுறை எனக்கு, விடுதலை உங்களுக்கு! :) பிறகு பார்க்கலாம்...
எல்லோரும் நல்லா இருக்கணும்!