Thursday, May 6, 2010

ஒற்றைக் கொலுசும், ராஜகுமாரனும்

“டம டம டம டம டம…..”

“இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில், இளவரசி சுந்தரி அணிந்திருந்த கால் கொலுசுகளில் ஒன்று தவறிப் போய் விட்டது. அதனைக் கண்டு பிடித்துக் கொண்டு வருபவரையே இளவரசி தன்னுடைய மணாளனாக ஏற்றுக் கொள்ளுவார்….”

“டம டம டம டம டம…..”

இப்படி ஒரு அறிவிப்பு குடுத்தா எப்படி இருக்கும், அப்படின்னு சிந்தனை ஓடுது, சுந்தரிக்கு. சின்னப் புள்ளையில இருந்தே அவளுக்கு சிண்டரெல்லா கதைன்னா ரொம்பப் புடிக்கும். அதுதான் இப்படி கற்பனை தறிகெட்டு ஓடக் காரணம். இன்னொரு காரணமும் இருக்கு…

அவளோட கொலுசைக் காணும்!

அதுவும் எப்பேற்பட்ட கொலுசு? அவ அம்மா அவளுக்காக ஆசை ஆசையா குடுத்தது. குடுத்துட்டு அவளும் போய் வேற சேர்ந்துட்டா. இனிமே பார்க்கவே முடியாதவங்க குடுக்கிற பொருளுக்கெல்லாம் மதிப்பு அதிகம் தானே.

சிண்டரெல்லாவுக்கு மாதிரிதான் சுந்தரிக்கும் பொல்லாத சித்தி ஒருத்தி இருக்கா. கிட்டத்தட்ட இவ கதையும் அதே மாதிரித்தான். அதனால தான் தன்னையும் ஒரு ராஜகுமாரன் வந்து அலாக்கா தூக்கிட்டு போயிர மாட்டானான்னு உள்ளூர ஒரு ஏக்கம் இவளுக்கு, எப்பவும். இப்ப இருக்கிற நிலைமையில அவளே வேலைக்கு போயி, அவளே பணம் சேர்த்துதான் கல்யாணம் பண்ணிக்கணும் போல.

குருட்டு யோசனை அது பாட்டுக்கு ஓடிக்கிட்டிருந்தாலும், காலும் ஒரு எடத்திலயும் நிக்கல. கடலோரமா நடந்து நடந்து பார்வையால மணலை அரிச்சிக்கிட்டேதான் இருக்கா, கொலுசுக்காக.

ஹும்… அப்படியே பணம் சேர்த்தா மட்டும் என்ன, மாப்பிள்ளை கூட அவளேதான் பார்த்துக்கணும் போல. அதுதான் அங்கே பரிதாபம். அப்பாவால ஒண்ணும் முடியாது. படுத்த படுக்கையா ஆயிட்டார். சித்தியை மீறி ஒண்ணும் பண்ண முடியாது அவரால.

இன்னிக்கு என்னமோ மனசே சரியில்லை. அதனால ஆபீசுல இருந்து சீக்கிரம் கெளம்பி, கடற்கரைக்கு வந்தா, அது இப்ப தப்பாப் போச்சே. கொலுசு இல்லாம வீட்டுக்கு போறதை நினைச்சே பார்க்க முடியல, அவளால.

“ஹலோ…. ரொம்ப நேரமா என்னமோ தேடறீங்க போல. இதையா?”

கொரல் கேட்டு ‘டக்’குன்னு திரும்பறா. அங்கே இவ கற்பனையில் வர்ற ராஜகுமாரன் போலவே…

“அடச்சீ, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிறாப்ல இருக்கு. முழிச்சுக்கோடீ”, அப்படின்னு திட்டுது, மனசு.

நீட்டின அவன் கையில் இவளோட இன்னொரு கொலுசு. அவனுக்கு நிரூபிக்கணும்னு நெனச்சோ என்னமோ, கணுக்கால் அளவு சேலையை இலேசா ஒசத்தி, இன்னொரு கொலுசை காட்டறா. அல்லது இவளே சரி பாத்துக்கறாளோ?

“ஒங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலங்க. இந்த கொலுசு எனக்கு எவ்ளோ ஸ்பெஷல் தெரியுமா”, சொல்லிக்கிட்டே கொலுசை வாங்கிக்கறா.

“அப்படியா. எவ்ளோ ஸ்பெஷல்? சொல்லுங்களேன் தெரிஞ்சுக்கறேன்”, குறும்பா வரிசைப் பல் தெரிய சிரிக்கிறான், அவன்.

குனிஞ்சு கொலுசை மாட்டிக்கிட்டிருந்தவ, ஓரக் கண்ணால அவனோட சிரிப்பை ரசிக்கிறா.

“இவன்தான் என் ராஜகுமாரனா அம்மா?”, கொலுசுகிட்ட ரகசியமா கேக்கறா.

கொலுசும் சந்தோஷத்தில் ஜல்ஜல்க்குது…


--கவிநயா

22 comments:

  1. //“இவன்தான் என் ராஜகுமாரனா அம்மா?”, கொலுசுகிட்ட ரகசியமா கேக்கறா.//
    மிகவும் ரசித்த இடங்கள் இவை

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்கோ!

    ReplyDelete
  3. டம டம டம டம டம…..

    கவித்துவமான கதை கேட்க வாருங்க

    டம டம டம டம டம…..:)!

    //ஜல்ஜல்//

    முடிவால் மனசு ஜில்ஜில்!

    அருமை கவிநயா:)!

    ReplyDelete
  4. //இனிமே பார்க்கவே முடியாதவங்க குடுக்கிற பொருளுக்கெல்லாம் மதிப்பு அதிகம் தானே//

    Well said ... என்கிட்டயும் இப்படி ஒரு பொக்கிஷம் இருக்கு... அழகான வரிகள் கவிநயா. கவிதையான குட்டி கதை

    ReplyDelete
  5. //கொலுசுகிட்ட ரகசியமா கேக்கறா.//

    நல்லாயிருக்கு இது...

    ReplyDelete
  6. //மிகவும் ரசித்த இடங்கள் இவை//

    நன்றி எல்.கே :)

    ReplyDelete
  7. //நல்லாயிருக்குங்கோ!//

    நன்றி மௌலி :)

    ReplyDelete
  8. //கவித்துவமான கதை கேட்க வாருங்க//

    ச்வீட் :) உங்க பின்னூட்டமும் அப்படித்தான். நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  9. //Well said ... என்கிட்டயும் இப்படி ஒரு பொக்கிஷம் இருக்கு... அழகான வரிகள் கவிநயா. கவிதையான குட்டி கதை//

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அப்பாவி தங்கமணி.

    ReplyDelete
  10. //நல்லாயிருக்கு இது...//

    நன்றி ஸ்வர்ணரேக்கா :)

    ReplyDelete
  11. நல்லா ரசிக்க கூடியதாக எழுதிருக்கீங்க...

    அருமையாயிருக்கு...

    ReplyDelete
  12. //நல்லா ரசிக்க கூடியதாக எழுதிருக்கீங்க...

    அருமையாயிருக்கு...//

    வாருங்கள் தோழி. இதுதான் உங்க முதல் வருகைன்னு நினைக்கிறேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  13. //பொக்கிஷம்!//

    வாங்க அருணா! இந்த பக்கம் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :)

    ReplyDelete
  14. "கடலோரமா நடந்து நடந்து பார்வையால மணலை அரிச்சிக்கிட்டேதான் இருக்கா, கொலுசுக்காக".

    அருமையான வரிகள்.
    தமிழின் அழகே அழகு.
    மிகவும் ரசித்தேன் கவிநயா.
    எளிமையான கதை அதே சமயம் கவிதையாகவும் இருக்கு.
    நிறைய எழுதுங்கள் ............

    ReplyDelete
  15. //அருமையான வரிகள்.
    தமிழின் அழகே அழகு.
    மிகவும் ரசித்தேன் கவிநயா.
    எளிமையான கதை அதே சமயம் கவிதையாகவும் இருக்கு.
    நிறைய எழுதுங்கள் ............//

    வாங்க ஹேமலதா. ரசனைக்கு மிகுந்த நன்றிகள்.

    ReplyDelete
  16. “இவன்தான் என் ராஜகுமாரனா அம்மா?”, கொலுசுகிட்ட ரகசியமா கேக்கறா.

    கொலுசும் சந்தோஷத்தில் ஜல்ஜல்க்குது…

    -- பார்த்தீர்களா, அழகான கற்பனை என்பது அதுவும் தன்னை அழகுபடுத்திக் கொண்டு, பிறர் மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது! நிதர்சன உண்மை இல்லைதான்; இருந்தாலும் காசு பணத்தாலும் இந்த சந்தோஷத்தை வாங்க முடியாது என்பதும் உண்மைதான்.

    ReplyDelete
  17. //பார்த்தீர்களா, அழகான கற்பனை என்பது அதுவும் தன்னை அழகுபடுத்திக் கொண்டு, பிறர் மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது! நிதர்சன உண்மை இல்லைதான்; இருந்தாலும் காசு பணத்தாலும் இந்த சந்தோஷத்தை வாங்க முடியாது என்பதும் உண்மைதான்.//

    வாங்க ஜீவி ஐயா. உங்களுடைய கற்பனை, ரசனை, அவற்றை வெளிப்படுத்தும் உங்க எழுத்து, எல்லாமே அழகுதான் :) வருகைக்கு மிக நன்றி ஐயா.

    ReplyDelete
  18. இராஜகுமாரி வாழ்க வளமுடன்! :-)

    ReplyDelete
  19. //இராஜகுமாரி வாழ்க வளமுடன்! :-)//

    இராஜகுமாரியிடமிருந்து உங்களுக்கு நன்றி, குமரன் :)

    ReplyDelete
  20. எதேச்சையாக நுழைந்து இந்த கதையைப் படித்தேன். கடைசி வரி கதையை உயரத்திற்கு தூக்கிவிட்டது. நம்புங்கள், //அதுவும் எப்பேற்பட்ட கொலுசு? அவ அம்மா அவளுக்காக ஆசை ஆசையா குடுத்தது. குடுத்துட்டு அவளும் போய் வேற சேர்ந்துட்டா. இனிமே பார்க்கவே முடியாதவங்க குடுக்கிற பொருளுக்கெல்லாம் மதிப்பு அதிகம் தானே. // இந்த பாராவை எப்படியோ மிஸ் செய்து படித்ததால், என்னால் கடைசி வரியை ரொம்ப ரசிக்க முடிந்தது. அதை வாசகர்களின் கற்பனைக்கு விட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். - ஜகன்னாதன்

    ReplyDelete
  21. வாங்க ஜகன்னாதன். வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. இனி எதேச்சையா வராம, அடிக்கடி இந்த பக்கம் வாங்க :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)