அம்மன் பாட்டு
மதுரையம்பதி
மதுரை மாநகரம்
மாதவிப்பந்தல்
இப்போ இங்கேயும்... :)
அங்கயற் கண்ணியே அருமருந்தே
பங்கய வடிவே மீனாட்சி!
திங்களும் நாணிடும் மதிமுகத்தவளே
பொங்கிடும் கருணைக்கு நீ சாட்சி!
பச்சைக் கிளியிடம் பழகுபவள் - நம்
இச்சைகள் தீர்க்கும் தாயுமவள்!
பித்தனை மணந்த பிச்சியவள் - அந்த
சொக்கனிடம் மனம் சொக்கியவள்!
கடம்பவனத்தினில் வசிப்பவளே - கடும்
வினை களையும் வேரறுப்பவளே!
கொடிமலர் எழிலுடன் திகழ்பவளே - பூந்
திருவடி பணிந்திட மகிழ்பவளே!
வைரங்கள் முடிதனில் ஜொலித்திடவே
மாணிக்கம் சிலம்பினில் ஒலித்திடவே
'ஓம் ஓம் ஓம்' என்று ஜெபித்திடவே
உள்ளத்தில் உன்னொளி உதித்திடவே!
அம்மா உன்னைத் தேடிவந்தோம்
உன்னருள் வேண்டி ஓடிவந்தோம்
சரணம் நீயென அடிபணிந்தோம்
வரணும் நீயென வணங்கி நின்றோம்!
--கவிநயா
ஒரு அறிவிப்பு: இந்த வாரத்திற்கு பிறகு இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகப் பக்கம் வர்றது கஷ்டம். ஆனா அதுக்குன்னு ரொம்ப சந்தோஷப் படவேணாம். உங்களோட இந்த நிம்மதி தற்காலிகமானதுதான், அதைக் கெடுக்க மறுபடியும் வருவேன் என்று சொல்லிக் கொண்டு வணக்கம் கூறி விடை பெறுவது...
...நாந்தான்!