Monday, September 23, 2013

மூக்கடைப்புக்கு உடனடி நிவாரணம்!



இந்த வருஷம் அடிக்கடி ஜலதோஷம். அதுவும் எப்போதும் இல்லாத அளவு மூக்கடைப்பினால் ரொம்பவே சிரமப்பட்டேன். படுத்தாலும், உட்கார்ந்தாலும், நின்னாலும், எந்த position-ல இருந்தாலும் சுத்தமா மூச்சு விட முடியலை! நீராவி புடிச்சு, விரளி மஞ்சளை சுட்டு அதன் புகையை முகர்ந்து, இப்படில்லாம் ஏதேதோ செய்து பார்த்தேன். ஒண்ணும் வேலை செய்யலை. இராத்திரி பூரா தூங்காம நடை பழகிக்கிட்டே இருந்தேன்னா பார்த்துக்கோங்க. ஆனா திடீர்னு தற்செயலா ஒரு position-ல ‘டக்’குன்னு மூக்கடைப்பு விட்டுப் போயிடுச்சு. அதைப் பற்றி சொல்றதுக்குதான் இந்தப் பதிவு.

மல்லாந்து படுத்துக்கோங்க. கழுத்துக்குக் கீழே உயரமான தலையணையை வெச்சு, கழுத்தை வளைச்சு பின்னாடி பார்க்கிறா மாதிரி படுத்துக்கணும். அதாவது, சாதாரணமா அண்ணாந்து, இன்னும் கொஞ்சம் கழுத்தை வளைச்சு தலைகீழா பின்னாடி பார்த்தா எப்படி இருக்கும்? அதே மாதிரி படுத்துக்கிட்டு செய்யணும். அவ்வளவுதான். இப்படி ஒரு சில விநாடிகள் இருந்தாலே சுவாசக் குழாய் உடனே சுத்தமாகிடுது!  (உட்கார்ந்துகிட்டும் செய்யலாம்னு நினைக்கிறேன். இன்னும் முயற்சிக்கலை).

கிட்டத்தட்ட  மத்ஸ்யாசனம் மாதிரி... (கழுத்து position மட்டும்). ஒரு வேளை யோகாசனங்களை ஒழுங்கா செய்துகிட்டு வந்திருந்தா இந்த தொந்தரவே வந்திருக்காது போல.

இதைக் கண்டு பிடிச்சப்போ எனக்கு அப்படி ஒரு relief-ஆ இருந்தது! இப்போ நாலஞ்சு நாளா இதேதான் செய்யறேன். இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமோ என்னவோ? ஆனா எனக்குத் தெரிஞ்சிருக்கலை…

கழுத்தை ரொம்ப strain பண்ணிக்க வேண்டாம். ஆசனமாகவே செய்யணும்னா கவனம் தேவை. குறிப்பா அந்த position-ல இருந்து வெளில வரும்போது, முதல்ல தலையை மேலே தூக்கிட்டு, பிறகுதான் முழு உடம்பையும் கீழே கொண்டு வரணும். இல்லைன்னா கழுத்து எலும்பு பாதிக்கப்படும்.


உங்களுக்கும் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் பகிர்ந்தது…

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.buzzle.com/img/articleImages/544043-47225-5.jpg


Sunday, September 15, 2013

காணாமலே வந்த காதல்!

முதன் முதலாய் என் உள்ளங் கவர்ந்தவனை நேரில் பார்க்கப் போகிறேன். நெஞ்சம் படபடவென்று துடிக்கிறது. அடி வயிற்றில் பட்டாம்பூச்சி படபடக்கிறது. பகலென்றும் பாராமல், இரவென்றும் பாராமல் கண்களைக் கனவுகள் வந்து கவ்விக் கொள்கின்றன. யாரோ என்னவோ செய்கிறார்கள், யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று மட்டும்தான் தெரிகிறது. என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், என்று ஒன்றும் விளங்கவில்லை. அவனைக் காதலிக்க ஆரம்பித்தது முதலே இப்படித்தான். என்னைப் பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கிறான்.

அவனைக் கண்ணால் காணாமலேயே எப்படி இவ்வளவு காதல் வயப்பட்டேன் என்பது எனக்கே புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அவனை மனதில் எண்ணி எண்ணியே என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டான். இப்போது என் மனமே அவனென்று ஆகி விட்டது. என் தோழிகள் வந்து என்னைத் தொட்டு ஏதோ சொல்கிறார்கள். பிறகு வெள்ளிக் காசுகளை அள்ளி வீசினாற் போல் கலகலவென்று சிரிக்கிறார்கள். எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை போல் நான் விழிப்பதைப் பார்த்து, சிரிப்பு சப்தம் இன்னும்தான் அதிகமாகிறது!

“பாரேன் இவளை… ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் விழிப்பதை!”

“ஆமாம்… ஒன்றுமே தெரியாதுதான் அவளுக்கு. அவனைத் தவிர!”

“அதெப்படி. நாமெல்லாம் சிறு வயது முதல் இவள் தோழிகள். நம்மிடம் எப்போதாவது இவள் இந்த அளவு அன்பு செலுத்தியதுண்டா?”

“நீயும் காதல் வயப்பட்டிருந்தால் இப்படி ஒரு கேள்வியே கேட்டிருக்க மாட்டாய்!”

“ம்… அப்படி என்னதான் இருக்கிறதோ, இந்தக் காதலில்…” அழகு காட்டி உதட்டை வலிக்கிறாள், அவள்.

“அது மட்டுமில்லையடி. அவனோ எங்கேயோ இருக்கிறான். நாமெல்லாம் எப்போதும் இவள் கூடவே இருக்கிறோம். அதனால்தான் இவள் நம்மைச் சட்டை செய்வதே இல்லை. என்ன இருந்தாலும் தொலைவில் இருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பு அதிகம்!”

“ம்… அவன் வந்த பிறகு இவள் அவனுடன் போய் விடப் போகிறாள். நாமெல்லாம் சேர்ந்து இருக்க இனி எப்போது வாய்ப்பு கிடைக்குமோ? அது வரையாவது இவள் நம்முடன் சிறிது பேசி, விளையாடி, மகிழ்ந்திருக்கலாமல்லவா?”


இவர்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டேயிருக்க, அவை என் செவிகளில் விழுந்தாலும், என் மனதில் பதியவில்லை.

“அவன் எப்படி இருப்பான்? நான் கற்பனையில் கண்டது போலவே இருப்பானா? என்னைக் கண்டதும் என்ன நினைப்பான்? என்னைப் பிடிக்குமோ பிடிக்காதோ அவனுக்கு? நான் அனுப்பிய செய்தி அவனுக்குக் கிடைத்திருக்குமா? காணாமலேயே காதலா என்று அவன் நினைத்து விட்டால் என்ன செய்வது?  அப்படியே நினைக்கவில்லையென்றாலும், என் கடிதத்தை அவன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளா விட்டால் என் கதி என்னவாகும்?”

“ஏனடி இப்படியெல்லாம் கவலைப்படுகிறாய்? அவன் கட்டாயம் வருவான். உன்னை அப்படியே அள்ளிக் கட்டித் தூக்கிக் கொண்டு போய் விடுவான், பாரேன்!”

அப்போதுதான் உணர்கிறேன், என் மனதிற்குள் நினைப்பதாக நான் நினைத்த அனைத்தையும் வாய் விட்டுப் பேசியிருக்கிறேன் என்று! எல்லாம் இந்தக் கள்வனால் வந்தது. மனதிற்குள் அவனிடம் பொய்க் கோபம் காட்டுகிறேன். இந்தக் கள்ளிகளிடம் நானே இப்படி மாட்டிக் கொண்டேனே… வெட்கத்தால் என் முகமும் கன்னங்களும் சிவந்து சூடாவது எனக்கே தெரிகிறது.

“ஐய... வெட்கத்தைப் பார்! எங்களுக்குத்தான் உன் வண்டவாளமெல்லாம் ஏற்கனவே தெரியுமே!”, செல்லமாக என் கன்னத்தைக் கிள்ளுகிறாள் ஒருத்தி.

“கவலைப்படாதே ருக்மிணி. இந்நேரம் அந்த புரோஹிதர் உன் கடிதத்தை உன் கண்ணனிடம் சேர்த்திருப்பார்… “

“ஆமாம், அந்தக் கடிதத்தில் அப்படி என்னதான் எழுதியிருந்தாய், சொல்லேன்!” என் மனநிலையை மாற்றுவதற்கென்றோ என்னவோ என் தோழி ஒருத்தி கேட்கிறாள்.

“ம்… அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லையடி. நான் என்ன என் மனதில் உள்ள காதலை எல்லாம் கொட்டிப் பக்கம் பக்கமாக எழுதுகிற மனநிலையிலா இருந்தேன்?”

அந்தக் கடிதம் என் மனக் கண்ணில் ஓடுகிறது…

“கிருஷ்ணா, நீயே என் உயிர். உன்னைப் பற்றிக் கேள்வியுற்றது முதல், உன் மீது காதல் கொண்டு, உன்னையே என் மணாளனாக வரித்து விட்டேன். ஆனால் இங்கு எனக்கு வேறு திருமண ஏற்பாடு நடக்கிறது. மணமகளான நான், திருமணத்திற்கு முதல் நாள் குல வழக்கப்படி கௌரி பூஜைக்கு ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். நான் கடிதம் அனுப்பியிருக்கும் என் நம்பிக்கைக்குரிய புரோஹிதருடன் உடனே புறப்பட்டு அங்கு வந்து என்னைக் காப்பாற்று.”

எந்தப் பெண்ணின் முதல் காதல் கடிதமேனும் இப்படி இருக்குமா, என்று எண்ணம் ஓடுகிறது.

நாளைக்குத்தான் கௌரி பூஜை.

அவன் வருவானா?


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.indianetzone.com/photos_gallery/42/Rukmini-harana.jpg
 
பி.கு: இது சில நாட்களுக்கு முன்பு கண்ணன் பாட்டில் வெளி வந்த பதிவு.
 

Sunday, September 8, 2013

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!

ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்சரத்னத்தை முன்பு ஒரு முறை எம்.எஸ். அம்மாவின் பாடலோடு பதிவு செய்திருந்தேன். அப்போது, இதனைப் பொருளோடு எழுதினால் உதவியாக இருக்குமே என்று அறிவன் குறிப்பிட்டிருந்தார். இப்போதுதான் அதற்கு விநாயகர் மனம் வைத்திருக்கிறார்.

தமிழில் அதே மெட்டில் பாடலாகவே எழுத முயற்சித்திருக்கிறேன். குற்றம் குறைகள் இருந்தால் பிள்ளையாரும் அவர் பிள்ளைகளும் (நீங்கதாங்க!) மன்னித்தருள வேண்டும்.

வட மொழி வரி ஒவ்வொன்றுக்கும் இரண்டு தமிழ் வரிகளாக வந்திருக்கிறது. நீங்களும் பாடிப் பாருங்களேன்!


ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்


முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்


மோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே!
முக்தியினை பக்தருக்கு அருளும் டுண்டி ராஜனே!
பிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே!
போற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே!
தன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா!
தாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா!
பக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!
நதேதராதிபீகரம் நவோதிதார்க்கபாஸ்வரம்
நமத்ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்


உன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்!
உதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்!
தேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்!
ஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்!
உம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே!
யானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே!
தேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா!
தெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா!


ஸமஸ்தலோகசங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்


அகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி!
அசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி!
பானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி!
யானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி!
பிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி!
பிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி!
பக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி!
பணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி!


அகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸ¤ராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷணம் தநஞ்சயாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜேபுராண வாரணம்


ஏழை பங் காளனாகி காக்கும் ஏக தந்தனே!
அநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே!
திரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே!
தானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே!
காலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே!
விஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே!
முதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே!
மாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே!

நிதாந்தகாந்ததந்தகாந்தம் அந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீந மந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்

வெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே!
இடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே!
கற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா!
துக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா!
தவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்
நிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா!
ஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே
ஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே!


மஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸ¤ஸாஹிதீம் ஸ¤புத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதிஸோசிராத்

காலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே
கருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே
மஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே
மந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே
பிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே!
பிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே!
ஆனைமுகன் அருளினாலே கல்வி செல்வம் கவித்துவம்
ஆரோக்யம் ஆயுள் என்று நன்மை அனைத்தும் சேருமே!



--கவிநயா 

விக்ன விநாயகனின் திருவடிகள் சரணம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.


பொருள் உதவிக்கு நன்றி: http://visvacomplex.com/ganesa_pancharathnam.html


Sunday, September 1, 2013

கண்ணா ஓடி வா!

குட்டிக் கிருஷ்ணன் பிறந்த நாள் hang over இன்னும் போகலை!


கண்ணன் - என் குழந்தை
 
கறந்து வெச்ச பாலு தாரேன்
கடைஞ் செடுத்த வெண்ணெ தாரேன்
கலந்து வெச்ச மோரு தாரேன்
கண்ணா ஓடி வா!
குளுகுளுன்னு தயிருந் தாரேன்
கண்ணா ஓடி வா!

பட்டுப் போல பாதம் வெச்சு
சிட்டுப் போல சிரிச்சுக் கிட்டு
தத்தித் தளர் நடை நடந்து
கண்ணா ஓடி வா!
தண்டை காலில் குலுங்கக் குலுங்க
கண்ணா ஓடி வா!

திராட்சக் கண்ணு மினுமினுங்க
கன்னக் குழி எனை விழுங்க
கனி வாயில் தே னொழுக
கண்ணா ஓடி வா!
கட்டி முத்தம் தாரேன் செல்லக்
கண்ணா ஓடி வா!

கால் வெரல சூப்ப வேணாம்
ஆல எலையில் படுக்க வேணாம்
அம்மா மடியில் படுத்துக்கலாம்
கண்ணா ஓடி வா!
ஆரிரரோ கேட்டு றங்க
கண்ணா ஓடி வா!


-கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.stephen-knapp.com/733KrsnaYasoda.jpg