Sunday, April 28, 2013

கத்தரிக்காயின் நடனம்


 வீட்டில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பானையில் அரிசி, பருப்பு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, இன்னும் காய்கறிகளெல்லாம் தண்ணீரில் கிடக்கின்றன. அடுப்பை மூட்டியதும் பானையில் சூடேறத் தொடங்குகிறது. தண்ணீர் கொதிக்கிறது. அரிசி, பருப்பு, காய்கறிகளெல்லாம் கொதிக்கும் தண்ணீரில் துள்ளிக் குதிக்கின்றன. அவற்றுக்கெல்லாம் ஒரே சந்தோஷம். “நான் எப்படி நடனமாடுகிறேன் பாரேன்”, என்று மீண்டும் மீண்டும் துள்ளுகின்றன. வீட்டுப் பிள்ளைகளெல்லாம் அதிசயமாய் அவற்றை வேடிக்கை பார்க்கின்றார்கள். “அட, ஆமாம்…. என்ன அருமையான நடனம்!”, என்று. அம்மா வந்து அடுப்பை அணைத்து பானையை இறக்கி வைத்ததும், ஆட்டமெல்லாம் நின்று விடுகிறது.

குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்கிறார், நமக்கும் கத்தரிக்காய்க்கும் வித்தியாசம் இல்லையாம். ஏன் அப்படி?

ஒரு காரியம் செய்து அது நன்றாக அமைந்து விட்டால், நாம் மிகவும் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். நாம் பெரிதாக சாதித்து விட்டதாக கர்வம் கூட வந்து விடுகிறது, சில சமயம். எவ்வளவு அழகாக ஆடுகிறேன் பார் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் கத்தரிக்காயைப் போல. கத்தரிக்காயின் நடனத்திற்குக் காரணம் என்ன? தண்ணீர் கொதிப்பது. தண்ணீர் கொதிப்பதற்குக் காரணம், அதன் அடியில் எரியும் நெருப்பு. இதை அறியாமல் பெருமைப்பட்டுக் கொள்ளும் கத்தரிக்காயைப் போலத்தான் மனிதர்களும்.

இறைவனின் அருள் என்ற நெருப்பில்லாமல் எதுவும் நடவாது. ஒரு இலை அசைவதற்குக் கூட அவனருள் வேண்டும். அவன் நினைத்தால் இந்த உலகை எது வேண்டுமானாலும் செய்யலாம். நிறுத்தலாம். அசைக்கலாம். ஆக்கலாம். அழிக்கலாம். அவனன்றி ஓரணுவும் அசையாது. நாம் செய்யும் காரியங்களுக்குப் பின்னால் இறைவனின் அருள் வேலை செய்கிறது. இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த எளிய கதை மூலம் உணர்த்துகிறார்.

”நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம் என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?இந்த பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மிடம் ஒரு சுவாசம்கூட இருக்கமுடியுமா. ஒருநாள், இதனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத் தனம்தான் என்று தெரியும். எத்தனைக்கெத்தனை இந்த அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் நமக்குக் கிடைக்கும். “ என்கிறார் ஸ்ரீ மஹா பெரியவர். (‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம்).

அவனருளாலே அவன் தாள் வணங்கி…

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.colourbox.com/vector/cheerful-cartoon-eggplant-raising-his-hands-vector-3451338


Sunday, April 21, 2013

குட்டிச் சுட்டீஸ்


ஞாயிற்றுக் கிழமைகளில் சன் டி.வி.யில் வருகிற குட்டிப் பிள்ளைகள் நிகழ்ச்சி. அந்த நேரம் வீட்டில் இருந்தால், பார்ப்பதுண்டு. குட்டிப் பிள்ளைகள், அதுவும் மழலை மாறாமல் இருக்கையில் அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டால், “குழலும் யாழும் இனிதென்று சொன்னவருக்கு அப்படிச் சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ?” என்று கேட்கத் தோன்றுமல்லவா?

நிகழ்ச்சி, ரசிக்கும்படியே இருந்தது, போன முறை பார்க்கும் வரையில்…


போன வாரம் வந்த குழந்தைகளில் ஒரு குழந்தை… மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 வயது இருக்கும். அந்தக் குட்டிப் பிள்ளை சொல்கிறது, “அப்பா ‘சரக்கு’ குடிப்பார்”, என்று! அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது? வீட்டில் பெரியவர்கள் பேசுவதையும் செய்வதையும் கவனித்துத் தானே இந்தப் பிள்ளைகள் இவ்வளவும் கற்றுக் கொள்கிறார்கள்?

கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தைக் குழந்தை உள்ளம் என்று சொல்கிறோம், ஆனால் இப்போது அந்தக் குழந்தை உள்ளம் குழந்தைகளிடமே கூட இல்லாமல் விரைவில் காணாமல் போய் விடுகிற அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

சரி, இது கூட அந்தக் குழந்தை தெரியாமல் ஏதோ சொல்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அடுத்து வந்ததுதான் எனக்கு கிட்டத்தட்ட மாரடைப்பையே கொடுத்து விட்டது!

அதாவது, நிகழ்ச்சி முடியும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகள் கொடுப்பார்கள். இந்த முறை நிகழ்ச்சி முடியும் போது, “நிகழ்ச்சியை முடித்துக் கொள்வோமா?” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போன பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே?” என்று கேட்டது.  அவரும் விளையாட்டாக, “இன்றைக்குப் பரிசெல்லாம் கிடையாது பாப்பா. எல்லோரும் அப்படியே அவங்கவங்க வீட்டுக்குப் போக வேண்டியதுதான்”, என்றார்.

அதற்கு அந்தக் குழந்தை என்ன சொன்னது தெரியுமா?

“பரிசு கொடுக்கலைன்னா தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்!”

அட, உண்மையாகத்தான் சொல்கிறேன்! சத்தியமாக நான் கதை கட்டவில்லை! இந்த அளவிற்கெல்லாம் எனக்குக் கற்பனை வளமும் இல்லை!

நிகழ்ச்சியாளரும் அசந்து போய் விட்டார் என்று நினைக்கிறேன். “பரிசு கொடுக்கலைன்னா என்ன செய்வே?” மறுபடியும் கேட்டார்.

“தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்!”

“அப்பவும் கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே?”

“உங்களை மரத்துல தலை கீழா கட்டித் தொங்க விடச் சொல்லுவேன்”

அவர் இன்னும் அசந்து விட்டார்.

“நீ இப்படில்லாம் பேசினதாலயே உனக்குப் பரிசு கிடையாது”, என்று சொல்லி விட்டார்!

அது வரையில் கொஞ்சம் பரவாயில்லை.

பிறகு அந்தக் குழந்தை அவரை அருகில் வரச் சொல்லி, காதோடு, “ஏன் பரிசு தர மாட்டீங்க?” என்று கேட்டது.

அவரும், “நீ அரிவாளைத் தூக்கச் சொல்வேன்னு சொன்னேல்ல? அதுக்குதான்”, என்றார்.

“சரி நான் அப்படிச் சொல்ல மாட்டேன், பரிசு குடுங்க”, என்றது குழந்தை.

பிறகுதான் அவர் பரிசு கொடுத்தார்.

“உங்கள் குழந்தைகள் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்”, என்ற எச்சரிக்கையோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் மனதில் ஏறிய சுமை என்னவோ இன்னும் அப்படியேதான் இருக்கிறது :(




நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=9095&id1=6 (படத்தில் இருப்பது வேறு நிகழ்ச்சி)

Monday, April 8, 2013

ரகசியமாய்...



மூடி மூடி வைத்தாலும்,

மல்லிகைப் பூவின் இருப்பை
அதன் வாசனை காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

பனிக் கட்டியின் இருப்பை
பாத்திரம் காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

கதிரவனின் இருப்பை
அவன் கதிரொளி காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

என் மனதில் உன் இருப்பை...

திடீர் பகற் கனவுகளும்,
ரகசியப் புன்னகைகளும்,
கன்னத்தின் கனிச் சிவப்பும்,

காட்டிக் கொடுத்து விடுகின்றன!


--கவிநயா


நன்றி: வல்லமை
படத்திற்கு நன்றி: http://www.panithulishankar.com/2010/07/blog-post_19.html