Sunday, July 15, 2012

கோவிலுக்கு ஏன் போகணும்?


வீட்ல பூஜை அறை இருக்கு, சாமி இருக்கு, வீட்டில் உட்கார்ந்து பூஜை செஞ்சு, சாமி கும்பிட்டா பத்தாதா? எதுக்கு கஷ்டப்பட்டு நடந்து, அல்லது பிரயாணம் பண்ணி, கோவிலுக்கு போகணும்? அதுவும் இப்பல்லாம் கோவில்கள்லயும் கூட்டம் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு! தள்ளு முள்ளுல போயி, இடிச்சுக்கிட்டு சாமி கும்பிடறதுக்கு பதில், அக்கடான்னு வீட்ல விளக்கேத்தி அமைதியா கும்பிட்டுட்டுப் போகலாம்… இந்த மாதிரி அங்கலாய்ப்புகளை நீங்களும் கேட்டிருப்பீங்கதானே…

நானும் அப்படித்தான் நினைப்பேன், முன்னல்லாம். இறைவன் எல்லா இடத்திலும் இருக்கான்னுதானே சொல்றாங்க, அப்படி இருக்கறப்ப, எங்கே வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் கும்பிடலாமே. கோவிலுக்குத்தான் போய்த்தான் கும்பிடணுமா என்ன? இப்படில்லாம் நானும் பேசி இருக்கேன். ஆனா, இறைவன் எல்லா இடத்திலும் இருக்கான்னு நிஜமாகவே நம்பி, அவனை எந்நேரமும் மனசில் வச்சு, அதற்குத் தகுந்தாற் போல ஒவ்வொரு நிமிஷமும் வாழறவங்க மட்டும்தான் அப்படிப் பேச முடியும். சுருக்கமா சொன்னா, தூய்மையான துறவிகளுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கு.

சாதாரண மனுஷங்களுக்கு, நல்ல விஷயங்களைப் பற்றி அப்பப்ப ஒரு நினைவூட்டல் தேவையா இருக்கு. இறைவனைப் பற்றியும்தான்! அவனைப் பற்றி நினைச்சுப் பார்க்க உதவியாத்தான்  கோவில்கள் கட்டினாங்க. கோபுரங்களை உய…..ரமா கட்டறதுக்கும் அதுதான் காரணம். நாம எவ்வளவு தூ….ரத்தில் இருந்தாலும், புகைவண்டியில் போகும் போதோ, பேருந்தில் போகும் போதோ கூட கோபுரத்தைப் பார்த்தா, அந்த ஒரு நொடியாவது அவனை நினைச்சுக்கிறோமில்ல? கன்னத்தில் போட்டுக்கறோமில்ல? கோவில்களோட முக்கிய வேலை நம்முள் இருக்கிற ஆன்மீகத்தை  உணரச் செய்யறதும், வளரச் செய்யறதும்தான்! 

வீடு முழுக்க மின்சாரம் இருக்கத்தான் இருக்கு. ஆனா சுவிட்சைத் தட்டினாதானே விளக்கு எரியும்? ப்ளக் பாயிண்ட்ல சொருகினாதானே எந்த மின்சார பொருளும் வேலை செய்யும்? அதே போலத்தான் கோவில்களும். அதாவது, கோவில்களை ஒரு ‘concentrated energy source’ அப்படின்னு சொல்லலாம்.

சின்ன வயசில் முக்கால்வாசிப் பேர் இதைப் பண்ணி இருப்போம் – ஒரு குவி ஆடிக்குக் கீழ பேப்பரை வச்சு, சூரிய ஒளியை அதில் குவிச்சு, பேப்பரை எரிய வைக்கிறது. சூரிய ஒளி எல்லா இடத்திலும்தான் இருக்கு. அதுக்காக, பேப்பரை எங்கே வச்சாலும் எரிஞ்சிடுமா என்ன? அந்த சக்தியை ஒருமுகமாக்கி பயன்படுத்தும் போதுதான், அதனோட ஆற்றல் அதிகமா இருக்கு. அதே போலத்தான் கோவில்களும், அவற்றில் இருக்கிற தெய்வங்களும். அவை, ஒருமுகப் படுத்தப்பட்ட சக்தி.

‘Vibrations’ என்கிற சொல்லை எல்லோருமே இப்ப சர்வ சாதாரணமா பயன்படுத்தறோம். Vibrations அல்லது அதிர்வலைகள் என்பது இந்த அண்ட வெளியெங்கும் நிறைஞ்சிருக்கு; காற்றோடு கலந்திருக்கு. அவற்றில் நல்லவையும் இருக்கு; கெட்டவையும் இருக்கு. இதெல்லாம் அந்தக் காலத்தில் நம்ம ரிஷிகள் உணர்ந்து சொன்னதுதான். ஆனா இதையெல்லாம்  இப்பத்தான்  புதுசா கண்டு பிடிச்ச மாதிரி rediscover பண்ணிக்கிட்டே இருக்கோம். அதுவும், இதெல்லாம் வெளி ஆளுங்க வாயிலிருந்து  வரும் போதுதான் நம்ம கவனத்தை அதிகமா கவருது. நம் சொந்த இந்திய மண்ணின்  ஆன்மீக பலத்தை நாம புரிஞ்சிக்கலை என்பது மட்டுமில்ல, நாம அதை மதிக்கிறது கூட இல்லை என்பது தான் ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம் :(

இப்ப இந்த அதிர்வலைகள் விஷயமும் அப்படித்தான். நம்முடைய ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும், எல்லாமே அதற்குண்டான அதிர்வலைகளைத் தோற்றுவிக்கிறதா சொல்றாங்க. அதனாலதான், அந்த மூணுமே எப்போதும் நல்லதாவே இருக்கணும்னு நம்ம பெரியவங்க வலியுறுத்தி வச்சிருக்காங்க. கூட்டுப் பிரார்த்தனை, உலக க்ஷேமத்துக்காக யாகங்கள் வளர்ப்பது, இதெல்லாம் நல்ல அதிர்வலைகளைத் தோற்றுவித்து நல்லது செய்யும். அதனாலதான் இதெல்லாம் செய்யறோம்.

தியானம் பண்றது கூட அப்படித்தான். தியானம் பண்றதுக்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதே இடத்தில் தினமும் செய்யறது நல்லதுன்னு சொல்வாங்க. அதுக்கும் இதே காரணம்தான். தியானம் செய்யச் செய்ய, நாம ஏற்படுத்தும் அதிர்வலைகள் அந்த இடத்தில் நிறையுமாம். போகப் போக, நாம அதே இடத்தில் தியானம் செய்யச் செய்ய, நாம் சீக்கிரமே தியான நிலைக்குப் போகவும் அதே  அதிர்வலைகள் உதவுமாம். இது ஓஷோ அவர்கள் சொல்வது.

கோவில்களில் பார்த்தீங்கன்னா, எப்பவும் மங்களகரமான மந்திரங்கள், வாத்தியங்கள், பாடல்கள், நல்ல விஷயங்கள், இதெல்லாம் தான் நடந்துகிட்டே இருக்கும். அதனால கோவிலில் உள்ள ‘நல்ல’ அதிர்வலைகள் மிக மிக அதிகம். மனசு குழப்பமா இருந்தாலோ, கஷ்டமா இருந்தாலோ எதுக்கு கோவிலைத் தேடிப் போறோம்? அங்கே போனா நமக்கு ஒரு மன அமைதி கிடைக்குது என்பது நம் உள்ளுணர்வுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கிறதாலதான். அதனாலதான் தினமும் கோவிலுக்குப் போறது நல்லதுன்னும் சொல்லி வெச்சாங்க.

சில பழங்காலக் கோவில்களில் எக்கச்சக்கமா கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். திருப்பதி, பழனி, மாதிரி கோவில்களில் எப்பவுமே, சாதாரண நாட்களில் கூட கூட்டம் அலை மோதறதுக்கு என்ன காரணம்? காலம் காலமாக அங்கே நடக்கிற பூஜைகளாலும், ஓதுகிற மந்திரங்களாலும், அந்த கோவில்களோட புனிதத் தன்மை மிக அதிகமாக இருக்கு. அதனால, அந்தக் கோவில்களோட ஆகர்ஷண சக்தியும் அதிகமா இருக்கு.

அதனால, இனி சமயம் கிடைக்கிற போதெல்லாம் கோவில்களுக்கு போகலாம். விசேஷ நாட்களில்தான் கூட்டம் அதிகமா இருக்கும், அதனால கூட்டத்தில் போக முடியலைன்னா, நாம  மற்ற நாட்களில் போகலாம். முடிஞ்ச வரைக்கும் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கலாம்; இனிமையான வார்த்தைகளை மட்டுமே பேசலாம்; பிறருக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காத செயல்களை மட்டுமே செய்யலாம்…சரிதானே? :)

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

பி.கு. இதில் வருகிற உதாரணங்களெல்லாம் சொந்தச் சரக்கில்லை, மகான்களும், பல பெரியவங்களும் சொன்னவைகளைப் படிக்கிற போது கிடைச்சதுதான். எங்கே, யார் சொன்னது அப்படிங்கிற விவரங்கள் நிற்காட்டாலும்… சில விஷயங்கள் மட்டும் அப்படியே மனசில் நின்னுடும் இல்லையா? அதனாலதான் பெயர்களைக் குறிப்பிடலை. அனைத்து மகான்களையும் மிகுந்த பணிவன்புடன் வணங்கிக் கொள்கிறேன்.

படத்துக்கு நன்றி: http://www.atmanpress.com/india-unveiled/photos.html
நன்றி: வல்லமை

11 comments:

 1. சில பழங்காலக் கோவில்களில் எக்கச்சக்கமா கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். திருப்பதி, பழனி, மாதிரி கோவில்களில் எப்பவுமே, சாதாரண நாட்களில் கூட கூட்டம் அலை மோதறதுக்கு என்ன காரணம்? காலம் காலமாக அங்கே நடக்கிற பூஜைகளாலும், ஓதுகிற மந்திரங்களாலும், அந்த கோவில்களோட புனிதத் தன்மை மிக அதிகமாக இருக்கு. அதனால, அந்தக் கோவில்களோட ஆகர்ஷண சக்தியும் அதிகமா இருக்கு.//

  மனம் கவர்ந்த பதிவு
  விளக்கிச் சென்ற விதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உண்மைதான். நல்ல அதிர்வலைகள் பற்றி மிக அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பகிர்வு கவிநயா.

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு!

  ReplyDelete
 4. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. உண்மைதான்.

  என்னைக் கேட்டா அமைதி தவழும் ஆலயத்தில்தான் அருளும் அன்பும் கிடைக்கும் என்று சொல்வேன்.

  பெரிய கோயில்களுக்கெல்லாம் போனா காசுதான் பேசுது. போடும் காசுக்கேத்த மரியாதைதான்.

  அதையெல்லாம் பாத்து மனசு நோகுறத விட,
  நெஞ்சகமே கோயில்
  நினைவே சுகந்தம்
  அன்பே மஞ்சனநீர்
  பூசை கொள்ள வாராய் பராபரமேன்னு இருக்குறதும் நல்லதுதான்.

  ReplyDelete
 5. miga alagaana pathivu.miga elimaiyaaga eluthi ellorukkum puriyumbadi solli irukkireergal.
  Natarajan.

  ReplyDelete
 6. வந்து, வாசித்து, பின்னூட்டி, கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி!

  ReplyDelete
 7. அருமையான பகிர்வு அக்கா ;))

  ReplyDelete
 8. மனம் கவர்ந்த பதிவு
  விளக்கிச் சென்ற விதம் அருமை உங்கள் பதிவை எடுத்து இன்று நாங்கள் ஒரு இந்து இளையர் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து உள்ளோம் .அதில் உங்கள் பதிவை முதல் விடயமாக பேசினோம் .இன்னும் எங்களுக்கு உங்கள் பதிவு தேவை படுகிறது உங்கள் உதவியும் தேவை படுகிறது .நாங்கள் இலங்கையில்
  ஹட்டன் என்னும் இடத்தில உள்ள இளைஞர்கள் எங்கள் மதம் இலங்கையில் அழிந்து கொண்டு உள்ளது அதை தடுத்து நிறுத்த உங்களின் உதவிகள் தேவை படுகிறது

  நன்றி

  உதயன்
  ஹட்டன்
  ஸ்ரீலங்கா

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் உதயன். நல்ல நோக்கத்துடனான உங்கள் முயற்சி வெற்றி பெற ஆண்டவன் அருள்வான். வருகைக்கு மிக்க நன்றி.

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)