Sunday, July 1, 2012

அஞ்சலி… அஞ்சலி… கீதாஞ்சலி!

புத்தகங்கள் பற்றி ஒண்ணு சொல்வாங்க. அதாவது, படிக்கிறோமோ இல்லையோ, நல்ல புத்தகத்தைப் பார்த்தா, வாங்கி வச்சுக்கணுமாம். (லேனா தமிழ்வாணன் அவர்கள் சொன்னதுன்னு நினைக்கிறேன்). ஏன்? நாம அதை உடனே படிக்கலைன்னாலும், சில காலம் கழிச்சு படிக்கக்கூடிய ஆர்வமும், உணர்வும் வரலாம். ஆனா அப்படி வர்ற சமயத்தில் அந்தப் புத்தகம் கிடைக்கணுமே? அதுக்குத்தான்.
 
மேலே சொன்னதை சொந்த அனுபவமாக உணர்ந்தேன், தாகூர் அவர்களின் ‘கீதாஞ்சலி’ புத்தகத்தின் மூலம். ரொம்ப நாளா, வருஷமா என்கிட்ட அந்தப் புத்தகம் இருக்கு. எல்லோரும் உயர்வா பேசறாங்களே, அதில் என்னதான் இருக்குன்னு பார்க்கணும்கிற ஆர்வம். இறைவனைத் தேடி, இறைவனுக்காக ஏங்குவதாக அமைந்த அந்த கீதாஞ்சலி கவிதைகளைப் படிச்ச போது எனக்கு ஒண்ணும் புரியலை. அதனால ரொம்ப நாளா ஓய்வெடுத்துக்கிட்டிருந்தது அந்தப் புத்தகம். சமீபத்தில்தான் தண்ணி தெளிச்சு விழிக்க வெச்சிருக்கேன்.


கவிதையோ, கதையோ, கட்டுரையோ, சிலரோட எழுத்து மட்டும் நமக்குப் பிடிப்பது ஏன்? ஆங்கிலத்தில், ‘strikes a chord in our heart’ அப்படிம்பாங்க. அந்த சிலரோட எழுத்தில் இருக்கிற ஏதோ ஒண்ணு, ஒரு நிகழ்வு, அல்லது ஒரு கருத்து, அல்லது ஒரு எண்ண ஓட்டம்,  இதில் ஏதாவது ஒண்ணு நம்ம அலைவரிசையோட இயல்பா ஒத்துப் போகும். உடனே நமக்கு அது ரொம்பப் பிடிச்சிரும்.

சமீபத்தில் கீதாஞ்சலி புத்தகத்தை மறுபடி எடுத்துப் புரட்டிப் பார்த்த போது ஏதோ புரியற மாதிரி இருந்தது. குறிப்பா ‘Flower’ என்கிற கவிதையை மனசுக்கு நெருக்கமா உணர்ந்தேன். உடனே அதைத் தமிழில் எழுதிப் பார்க்கணும்கிற விருப்பமும் ஏற்பட்டது. எழுதி, வல்லமையிலும் பிரசுரமானது. ஆனால் அதில் ஒரு சின்ன பிரச்சினை.

இணையத்தில் இருந்து எடுத்த கவிதையில் ஒரு இடத்தில் ‘It’ என்பதற்கு பதில் ‘I’ என்பதாக இருந்தது. அதானால் என் மொழியாக்கத்திலும், என்னையே ஒரு மலராகப் பாவித்து எழுதியிருந்தேன். வாசித்த ஒருவர் சுட்டிக் காட்டிய பிறகு மறுபடி பார்த்தால் ‘It’ என்பதே சரின்னு தெரிஞ்சது. அதனால இங்கே அதற்குத் தகுந்தாற்போல மாற்றி எழுதி இருக்கேன்…உனக்கான மலர்

சின்னஞ் சிறு மலர் ஒன்று
இதழ்கள் விரித்துச் சிரிக்கிறது;
தாமதமின்றி உடனே நீ
பறித்துச் சூடிக் கொள்ளாயோ,
அது வாடி மண்ணில் வீழும் முன்னே?

உன் மாலை தன்னில் ஓர் மலராகும்
பேறு அதற்கிலை என்றாலும்
உன் விரல்களால் கொஞ்சம் தொட்டுப் பறித்து,
அந்த வலியைத் தந்தேனும்
அதற்குப் பெருமை சேர்த்திடுவாய்!
நாளிது ஓடி முடிந்திடும் முன்னே…
இம்மலருன்னைச் சேர்ந்திடும் காலம் கடந்திடும் முன்னே…

இந்த மலரின் நிறம் அப்படியொன்றும் ஆழமில்லை
இதன் மணமும் மனதை மயக்குவதாய் இல்லை
இருப்பினும்…
உன் சேவைக்கென இதை எடுத்துக் கொள்!
காலம் இருக்கையிலேயே பறித்துக் கொள்!


--கவிநயா

**

Original in English:

Flower
Rabindranath Tagore

Pluck this little flower and take it, delay not! I fear lest it
droop and drop into the dust.

It may not find a place in thy garland, but honour it with a touch of
pain from thy hand and pluck it. I fear lest the day end before I am
aware, and the time of offering go by.

Though its colour be not deep and its smell be faint, use this flower
in thy service and pluck it while there is time.

**


அன்புடன்
கவிநயா

8 comments:

 1. தங்கள் மொழியாக்கம் சிறப்புடைத்து.
  என்றோ படித்த‌
  இந்தி மொழிக்கவி
  மைதிலி சரண் குப்த அவர்களின்
  கவிதை வரிகள் என் நினைவுக்கு வந்தன.

  அந்தக் கவிதையை என்னால் இயன்ற அளவிற்கு மொழிபெய்ர்ப்பு
  செய்து இருக்கிறேன். மைதிலி சரண் குபத அவர்களும் டாகூர்
  வாழ்ந்த நாட்களில் இருந்து இந்திய சுதந்திரத்திற்கு போராடியவர்.

  "மண்ணில் விழுந்திருந்த மலரொன்று
  மனிதனைப் பார்த்தது.
  சொல்லியது.

  என்னை எடுப்பாய்,
  பின் தொடுப்பாய்,
  மாலையாகத்தொடுத்து அந்த
  மாதவன் கழுத்திலே போடுவாய்..

  இல்லை எனின் என்னை உன்
  இதயத்துள் இருப்பவளின்
  கூந்தலிலே சொருகி
  சொர்க்கமே நீயே
  சுந்தரி என்றும் சொல்வாய்.

  இரண்டுமே வேண்டாம். என்னை
  இங்கேயே விட்டுச்செல்.

  தாயகத்தின் விலங்ககறற = தம்
  தலைகளையுமே தியாகம் செய்ய‌
  ஓடுமந்த போராளி
  ஒரு நூறு கால் பட்டு
  இம்மண்ணோடு மண்ணாவேன்.
  உவகையுடன் அடங்கிப்போவேன்."

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 2. நான் உங்கள் கவிதையை அதன் மொழிபெயர்ப்பை படித்து அதற்கோர் பின்னுட்டமிட்டபின்புதானிந்த நினைவு வந்தது; அதற்காக மறுபடியும் ஒரு பின்னுட்ட இடைச்செருகலுக்க்காக வந்துள்:ளேன்.

  மைதிலிசரண் குப்தா அவர்கள் கவிதையின் மூன்றாம் அடி நினைவுக்கு வந்தது.

  அந்த மலர் முதல் இரு அடிகளிலே என்னை மாதவனுக்கு மாலையிடுவதிலோ அல்லது
  நின் மங்கைக்கு மலராக சேர்வதிலோ ஆசையில்லை எனச்சொன்னதோடு நிற்கவில்லை.

  அடுத்த வரியில் கவி என்ன சொல்கிறார்:

  வா ! தோட்டக்காரா ! வா
  வந்து எனைப் பறி.
  பறித்ததும் நிற்காதே ! என்னை
  எறி ! எங்கெலாம்
  என் தாய் மண்ணைக் காக்கத்
  தம் தலைதனையும் தியாகம் செய்யும‌
  தோழர் செல்வாரோ
  அவர்கள் செல்லும் வழியில்
  என்னை எறி !
  அவர்கள் மலர்பாதம் பட்டுப்பட்டு
  நான் புனிதமாவேன்.
  புண்ணியம் செய்தவன் ஆவேன்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 3. வாவ், சுப்பு தாத்தா! மிகவும் அருமையான, உணர்வுபூர்வமான கவிதை! ரொம்பப் பிடித்தது. குறிப்பாக மூன்றாம் அடி. மொழியாக்கம் செய்ததே தெரியாமல் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி தாத்தா :)

  ReplyDelete
 4. சிறப்பான மொழியாக்கம் கவிநயா.

  /உன் விரல்களால் கொஞ்சம் தொட்டுப் பறித்து,
  அந்த வலியைத் தந்தேனும்
  அதற்குப் பெருமை சேர்த்திடுவாய்!/

  அழகு.

  சுப்பு ரத்தினம் சாரின் மைதிலி சரண் குப்த அவர்களின்
  கவிதை மொழிபெயர்ப்பினையும் ரசித்தேன். அருமை சார்.

  ReplyDelete
 5. கவிநயா,

  அருமையான மொழியாக்கம்!சுப்பு ஐயாவுடைய மொழியாக்கம்

  போனஸ்!நன்றி இருவருக்கும்!!

  ReplyDelete
 6. நன்றி ராமலக்ஷ்மி, மற்றும் லலிதாம்மா! சுப்பு தாத்தாவின் சார்பிலும் நன்றி :)

  ReplyDelete
 7. தாகூர் எழுதினதுன்னா எனக்கு நம்ம தேசிய கீதம் தாங்க தெரியும். கீதாஞ்சலிலருந்து ஒரு கவிதயவாவது தெரிஞ்சுக்க வாய்ப்பு கொடுத்தீங்களே ரொம்ப நன்றி.

  ReplyDelete
 8. //தாகூர் எழுதினதுன்னா எனக்கு நம்ம தேசிய கீதம் தாங்க தெரியும். கீதாஞ்சலிலருந்து ஒரு கவிதயவாவது தெரிஞ்சுக்க வாய்ப்பு கொடுத்தீங்களே ரொம்ப நன்றி.//

  நானும் இப்பதான் படிக்கிறேன் தானைத் தலைவி :) வாசிச்சதுக்கு நன்றி!

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)