Sunday, June 10, 2012

முளை கட்டுவது எப்படி?


ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்பிடறதும் அதிகமா பரவிக்கிட்டிருக்கு. இரண்டும் ஒண்ணுக் கொண்ணு முரணா இருக்குல்ல? ம், சரி அதை விடுங்க. அதைப் பற்றி இன்னொரு நாள் பேசிக்கலாம்.

உடம்பை நோய் நொடி இல்லாம நல்லா வச்சுக்கணும்கிற அக்கறை வளர்ந்துகிட்டு வர்றது நல்ல விஷயம் தான். அதுக்கு முதல்ல நாம வீட்டில், ஆரோக்கியமான உணவு வகைகளை சமைச்சு சாப்பிடணும். அடிக்கடி வெளியில் சாப்பிடறது நல்லதில்லை. ஆரோக்கிய உணவுன்னாலே காய்கறிகள், பழங்கள், இவற்றை நிறைய சேர்த்துக்கணும்னு எல்லோருக்கும் தெரியும். அதோட முளை கட்டிய பயறு வகைகளையும் மனசில் வச்சுக்கலாம்.

முளை கட்டிய பயறில், அசைவத்துக்கு இணையான புரதச் சத்து இருக்காம். சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு இது ரொம்பவே அவசியம். முளை கட்டிய பயறு வகைகள் இப்ப கடைகளிலேயே வித விதமான அளவுகளில் கிடைக்குதுங்கிறது உண்மைதான். ஆனா, என்ன இருந்தாலும் நாமளே செய்து சாப்பிடறதில் இருக்கிற திருப்தியே தனிதானே?

முளை கட்டறது பெரிய வேலையாக்கும் நினைச்சு நானுமே முன்னெல்லாம் செய்யாம இருந்தேன். அதுக்கு மெல்லிசான வெள்ளைத் துணி வேணும்னு வேற சொல்வாங்க, ஆனா என்கிட்ட அது கைவசம் இல்லை. அந்தக் காரணத்துக்காகவே ரொம்ப நாள் செய்யாம இருந்தேன். பிறகுதான் வெள்ளைத் துணி கூட தேவையில்லைன்னு தெரிஞ்சது :)

(நானே) முளை கட்டிய பச்சைப் பயறு :)
முதல் முதலா முயற்சி செய்யறவங்க, பச்சைப் பயறில் செய்யலாம். அது ரொம்ப சுலபமா முளை விடும். முளை கட்டறதுக்கு, பயறும் , தண்ணியும், பாத்திரமும் இருந்தா போதும்! மெலிசான வெள்ளைத் துணி வேணும்ன்னா, இருந்தா பயன்படுத்திக்கலாம், இல்லைன்னா பரவாயில்லை.

பச்சைப் பயறை எடுத்துக் கழுவிட்டு, முதல் நாள் இரவு தண்ணில ஊறப் போட்டுருங்க. மறு நாள் நல்லா ஊறியிருக்கும். அப்ப அந்தத் தண்ணியை வடிச்சிட்டு, மெல்லிசு துணி இருந்தா அதுல கட்டி, அதே பாத்திரத்தில் போட்டு இறுக்கமா மூடி வச்சிருங்க. துணியோட ஈரம் காயாம அப்பப்ப, ஒரு மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம் லேசா தண்ணி தெளிச்சுக்கிட்டே இருக்கணும். மறு நாள் துணியை தொளைச்சுக்கிட்டு முளை விட்டிருக்கும் பாருங்க, பாத்தாலே அவ்ளோ சந்தோஷமா இருக்கும்! முதல் தரம் இந்த மாதிரி முளை விட்டு பார்த்த போது, எங்க வீட்டு நாய்க்குட்டி கிட்டக் கூட பெருமையா காட்டினேன்! :)

சரி, துணி இல்லாட்டினா என்ன பண்றது? அப்பவும், ஊற வெச்ச தண்ணீரை வடிச்ச பிறகு, சும்மா அதே பாத்திரத்தில் அப்படியே போட்டு, நல்லா மூடி வச்சிருங்க. மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம், பயறைக் கழுவி, தண்ணீரை வடிச்சுட்டு வைக்கணும்.  மறு நாள் பார்த்தீங்கன்னா, பயறு முளை விட்டு இரண்டு மடங்கா ஆயிரும்! படத்தில் இருக்கிற பயறு துணியில்லாம முளை கட்டினதுதான்.

பயறை காய விடாம ஈரப் பதத்தோட வைக்கணும் என்கிறதுதான் முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம். முளை விட்டவுடனே உபயோகிச்சா நல்லது. அன்னிக்கே பயன்படுத்த முடியலைன்னா, குளிர்பெட்டியில் வெச்சுடணும்; அதன் பிறகு ரெண்டு அல்லது மூணு நாள் வரை வெச்சுக்கலாம்.

பச்சைப் பயறைத் தவிர, வெந்தயம், வெள்ளைக் கொண்டைக் கடலை, நிலக் கடலை, காஞ்ச பட்டாணி, இதெல்லாமும் முளை கட்டலாம்.

அதெல்லாம் சரி… முளை கட்டின பயறை எப்படி சாப்பிடறது?

முளை கட்டின பச்சைப் பயறு காய்கறி கலவைக்கு (salad) ரொம்ப நல்லாருக்கும். பச்சையாகவே காய்கறிகளோட எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத் தூள் போட்டு சாப்பிடலாம். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை நிற குட மிளகாய், காரட், தக்காளி, முள்ளங்கி, வெள்ளரிக்காய், மாங்காய், தக்காளி, இதெல்லாம் சேர்க்கலாம். பார்க்கவே அவ்வளவு வண்ண மயமா அழகா இருக்கும். 'என்னைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பாரேன்! அப்படின்னு அழைப்பு விடுக்கும் :) பச்சையாக சாப்பிட பிடிக்காதவங்க, லேசா ஆவியில் அரை வேக்காடாக வேக வெச்சு சேர்த்துக்கலாம். 

பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, இதெல்லாம் சுண்டல் செய்யலாம். முளை கட்டின வெந்தயத்தை குழம்பு வைக்கலாம். ஏன், நாம சாதரணமா செய்யற பச்சைப் பயறு குழம்பு, சப்பாத்திக்கு செய்யற வெள்ளைக் கடலை மசாலா (channa masala), இதுக்கெல்லாம் கூட முளை கட்டி சேத்துக்கலாம்…

என்ன, பயறு ஊற வைக்க கிளம்பிட்டீங்களா? :)

எல்லோரும் ஆரோக்கியமா, சந்தோஷமா, இருக்கணும்!

அன்புடன்
கவிநயா

15 comments:

 1. நானும் ஆரம்பத்தில் இதற்கென பிரத்தியேகமா விற்கிற அடுக்கு டப்பாவெல்லாம் வாங்கி உபயோகித்தேன். அப்புறம் இந்த ஈஸி முறைதான். பாத்திரத்தில் நீரை வடித்து அப்படியே மூடி வைக்கிறது:)! 4 மணி நேரத்திற்கொரு முறை கழுவலாம் என்பது நல்ல குறிப்பு. இது கொண்டை கடலை போன்றனவற்றில் வரும் வழுவழுப்பைத் தவிர்க்க உதவுமென்று எண்ணுகிறேன்.

  நல்ல பகிர்வு!

  ReplyDelete
 2. ரெண்டு மூணு நாளா முளை கட்டுவதை பற்றி நினைத்து கொஞ்சம் பதிவுகளையும் தேடிக்கொண்டிருந்தேன்... கும்பிடப்போன தெய்வத்தை எதிரே பார்த்தது போல் இருக்கின்றது இந்த பதிவு... thanks for posting...

  ReplyDelete
 3. //நானும் ஆரம்பத்தில் இதற்கென பிரத்தியேகமா விற்கிற அடுக்கு டப்பாவெல்லாம் வாங்கி உபயோகித்தேன்.//

  ஓ. அதுக்குன்னு தனியா வேற இருக்கா? :)

  உங்களோட பகிர்தலுக்கும், வருகைக்கும் நன்றி ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 4. //ரெண்டு மூணு நாளா முளை கட்டுவதை பற்றி நினைத்து கொஞ்சம் பதிவுகளையும் தேடிக்கொண்டிருந்தேன்... கும்பிடப்போன தெய்வத்தை எதிரே பார்த்தது போல் இருக்கின்றது இந்த பதிவு... thanks for posting...//

  அட, அதுவும் அப்படியா! மிக்க மகிழ்ச்சியும், நன்றியும், ஸ்வர்ணரேக்கா! எப்படி வந்ததுன்னு அப்புறமா சொல்லுங்க :)

  ReplyDelete
 5. I have shared an award with you !, pls visit my site in your free time.

  Congrats ! (me the first) :))

  Regards.

  ReplyDelete
 6. துணி உபயோகிக்காம முளை கட்டுவது எப்படி என்று சொல்லிகொடுத்தமைக்கு நன்றி. செய்து பார்த்தேன் நன்றாக வந்தது,சுலபமாகவும் இருக்கிறது. இத்தனை நாட்களாக நான் துணியில் தான் முளை கட்டிகொண்டிருந்தேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது.

  ReplyDelete
 7. //துணி உபயோகிக்காம முளை கட்டுவது எப்படி என்று சொல்லிகொடுத்தமைக்கு நன்றி. செய்து பார்த்தேன் நன்றாக வந்தது,சுலபமாகவும் இருக்கிறது. இத்தனை நாட்களாக நான் துணியில் தான் முளை கட்டிகொண்டிருந்தேன். ரொம்ப கஷ்டமாக இருந்தது.//

  செய்து பார்த்துட்டு, கையோட வந்து சொன்ன சிரத்தைக்கு மிக்க நன்றி, தானைத் தலைவி :) இந்த மாதிரி சிலருக்காவது பயனுள்ளதாக அமைஞ்சாலும் சந்தோஷம்தான்.

  விருது கொடுத்த அன்பிற்கு மீண்டும் நன்றிகள் பல!

  ReplyDelete
 8. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete
 9. இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
  வாழ்த்துக்கள்!
  ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
  திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
  பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
  படைப்புகள் யாவும்.
  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி திரு.வேலு.

   Delete
 10. வேர்க் கடலையை முளை கட்டுவதது எப்படி?

  ReplyDelete
 11. மிக்க நன்றி

  ReplyDelete
 12. இதே முறையில் கோதுமை செய்ய முடியுமா

  ReplyDelete
 13. மிக்க நன்றி தோழர்

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)