Monday, November 21, 2011

சக்தி




மழை பெய்து கொண்டிருக்கிறது...

புதுமணப் பெண்ணின் நாணத்துடன்
மிருதுவாய்ப் பாதம் பதிக்கும் நீர்த் துளிகள் -

கை விலகாமல் வரைந்த நேர் கோடாய்...
சப்தமில்லாமல் முத்தம் திருடும் காதலராய்...
யாருடைய கவனத்தையும் கவராமல் ரகசியமாய்...

நீரோடு நீர் சேர
நுரை ததும்பக் குதூகலிக்கும்
ஓடைகள்...

பொங்கிப் பெருகி
புவி தழுவும் ஆசையுடன்
புது வெள்ளம்...

கருவம் வளர
தலை உயர்த்தி ஆர்ப்பரிக்கும்
கடலலைகள்...

ஈரந் துவட்ட
நேர மின்றி நீர் அருந்தும்
பூமி மாதா...

அனைத்துக்கும் காரணமான மழை
இன்னும் பெய்து கொண்டே இருக்கிறது...
அமைதியாக...


--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்.

முன்னொரு காலத்தில் 'திண்ணை'யில் பிரசுரமானது.

3 கருத்துகள்:

ராமலக்ஷ்மி said...

கவி மழை. மனதுக்கு இதம்.

Thanai thalaivi said...

நல்ல அழகான கவிதை ! வாழ்த்துக்கள் !

கவிநயா said...

வாங்க ராமலக்ஷ்மி, தானை தலைவி! மிக்க நன்றி.