Sunday, September 21, 2008

தகுதி


வீறிட்டு அழுத குழந்தையின் குரல் கேட்டு தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தாள், கவிதா. மூன்று வயதிருக்கும். கண்ணீர் வழிய, சுற்றும் முற்றும் பார்த்தபடி அழுது கொண்டிருந்தது. கூட வந்த அம்மாவையோ, அப்பாவையோ தேடுகிறது போலும். குழந்தைகள் அழுதால் அவளால் தாங்கவே முடியாது. ஓடிச் சென்று அந்தக் குழந்தையை வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது, அவளுக்கு. சின்னக் குழந்தையை அழ விட்டு மறைந்து விட்ட, முகம் தெரியாத அதன் பெற்றோரை மனதுக்குள் திட்டி முடிக்கும் முன், இரண்டடி தள்ளி குழந்தைகள் துணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த நிறை மாத கர்ப்பிணி ஒருத்தி, "என்னம்மா கண்ணா. அம்மா இங்கதான் இருக்கேன் பாரு", என்று சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றாள். சற்றே நிம்மதியுடன், மறுபடியும் தான் பார்த்துக் கொண்டிருந்த சட்டையை நோக்கி கவனத்தைத் திருப்பினாள். அவள் தோழி சாந்திக்கு, இரண்டு நாள் முன்னால்தான் மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்திருந்தது. முதல் இரண்டும் பையன்கள். பெண்ணுக்கு மிகவும் ஆசைப்பட்ட கணவனும் மனைவியும், அவர்கள் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று விட்டார்கள். அவள் கை தன்னிச்சையாகத் தன் வயிற்றுக்குச் சென்றது. ஐந்து வாரங்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளாக இப்போதே எண்ண ஆரம்பித்து விட்டாள். இன்னும் இரண்டு நாளில் குழந்தைக்குப் பெயரும் வைத்து விடுவாள். கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது, "இம் முறையேனும்..." என்ற நம்பிக்கையில்.

திருமணமாகி பத்து வருடங்கள் ஆகி விட்டன. அவள் மாமியார் சொல்வது போல அவள் வயிற்றில் இன்னும் ஒரு புழு, பூச்சியும் உண்டாகவில்லை. நான்கு வருடங்கள் வரை ஒரு கவலையும் இல்லை. ஐந்து வருடங்கள் ஆன பின், "என்னம்மா, அனுபவிச்சது பத்தாதா? எப்ப எனக்கு ஒரு பேரனைப் பெத்துத் தரப் போற?" என்று அம்மாவும், அப்பாவுமே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆறு வருடங்களுக்குப் பிறகு அவளுக்கே கவலை வந்து விட்டது. எத்தனை நாளுக்குத்தான் மற்றவர் குழந்தைகளையே கொஞ்சிக் கொண்டிருக்க முடியும்? அவள் கணவன் ராமும், அவளும் மருத்துவர்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். சின்னச் சின்னதாக ட்ரீட்மெண்ட் ஆரம்பித்தது. இது வரை எந்தப் பலனும் இல்லை. குழந்தைகளுடன் யாரைப் பார்த்தாலும் பொறாமையாக இருந்தது. கர்ப்பிணிப் பெண்களைப் பார்த்தால் ஏக்கமாக இருந்தது. இரண்டு நாள் தள்ளிப் போனாலும் சந்தோஷமாகி, கனவுகளை வளர்த்துக் கொள்வது வழக்கமாகிப் போனது. அதே போல நம்பிக்கை சிதைந்த பின், ஏங்கி அழுவதும் வாடிக்கையானது. பொது இடங்களுக்கோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ போவதைத் தவிர்க்க ஆரம்பித்தாள். ராமுக்கு அவள் போக்கு கவலையை அளித்தது. அதனால்தான், சாந்திக்குக் குழந்தை பிறந்த செய்தி வந்த பின் அவளை வற்புறுத்தி வெளியே அழைத்து வந்திருக்கிறான்.

மறு நாள் இருவரும் சாந்தியையும் அவள் குழந்தையையும் பார்க்கச் சென்றார்கள். ரோஜாக் குவியல் போல் இருந்த குழந்தையைக் கைகளில் ஏந்தியதும், பரவசமாக உணர்ந்தாள், கவிதா. ஆனால் அந்தக் குவியல் தனதில்லை என்ற எண்ணம் வந்ததும் சோகம் கனமாக மனசை அழுத்தியது. கிளம்ப வேண்டும் என்று கணவனிடம் சைகையில் உணர்த்தினாள்.

போகும் வழியில் கடற்கரையில் காரை நிறுத்தினான், ராம். அதே மன நிலையுடன் வீட்டுக்குச் செல்ல இருவருக்குமே இஷ்டமில்லை. மணற் பரப்பை நோக்கி இருவரும் மெதுவாக நடந்தார்கள்.

"ராம்"

"ம்"

"அந்தக் குழந்தையைப் பாத்தீங்களா, எவ்வளவு அழகு!"

"....."

"நமக்கு அந்தப் பாக்கியமே இல்லாமப் போயிடுமோன்னு பயம்மா இருக்கு, ராம்"

"இல்லன்னா என்ன? எனக்கு நீ குழந்தை; உனக்கு நான் குழந்தை", பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகவும் சொன்னான், ராம்.

"என்னால அப்படி ஈஸியா எடுத்துக்க முடியலயே", குரல் தடுமாறியது, கவிதாவுக்கு.

ஆதரவுடன், அவள் கையை எடுத்துத் தன் கையில் கோர்த்துக் கொண்டான், ராம். மெரீனா "ஜே, ஜே", என்று இருந்தது. கஷ்டப்பட்டு ஒரு இடம் தேடி இருவரும் அமர்ந்து கொண்டனர்.

"கவி, நமக்கு அப்படி என்ன வயசாயிடுச்சு? 40 வயசுல குழந்தை பெத்துக்கிட்டவங்கல்லாம் இருக்காங்க."

கவிதாவுக்கு 32 வயது. ராம் அவளை விட இரண்டு வயது பெரியவன்.

"என்னால அவ்வளவு நாள் காத்திருக்க முடியும்னு தோணல"

ராம் அவளைத் தோளுடன் அணைத்துக் கொண்டான். "அப்படியே இல்லன்னாலும், எவ்வளவோ அனாதைக் குழந்தைங்க ஆதரவில்லாம இருக்காங்களே, அவங்களத் தத்தெடுத்துக்கலாமே. அதப் பத்தி யோசிச்சயா?"

"ராம், எனக்கு என்ன தோணுது, தெரியுமா? எனக்கு நல்ல அம்மாவா இருக்கிற தகுதி இல்லயோன்னு தோணுது. அதனாலதான் கடவுள் எனக்கு அம்மாவாகிற பாக்கியத்தைக் குடுக்கலயோ, என்னவோ?"

"கவி, என்ன சின்னக் குழந்தை மாதிரிப் பேசற? இந்த மாதிரியான நெனப்பெல்லாம் உனக்கு எங்கேருந்து வருது? அப்படிப் பாத்தா, இந்த உலகத்துல குழந்தை பெத்துக்கிற பெண்களெல்லாம் அம்மாவாக ரொம்பத் தகுதியானவங்கன்னு எப்படிச் சொல்ல முடியும்? டீனேஜ்ல தெரியாத்தனமா தப்பு செஞ்சுட்டு புள்ள பெத்துக்கிறவங்கள்ல இருந்து, பொண்ணாப் பொறந்துடுச்சேன்னு அதக் கொலையே பண்றவங்க வரைக்கும் இந்த உலகத்துல பல விதமான அம்மாக்கள் இருக்காங்கன்னு தெரிஞ்சுமா இப்படிப் பேசற?"

அவன் சொல்வதிலிருந்த நியாயம் உறைத்தது, கவிதாவிற்கு.

"அதோட உன்ன ஒரு முறை பார்த்தவங்க கூடச் சொல்ல மாட்டாங்க, உனக்குப் போய் அம்மாவாகிற தகுதி இல்லன்னு"

"அதுக்கில்லை, ராம். நான் முந்தி எங்கயோ படிச்சிருக்கேன். இன்பமோ, துன்பமோ, எந்த விஷயமா இருந்தாலும் இறைவன் நம்மால சமாளிக்க முடியற அளவுதான் கொடுப்பாருன்னு. அதப் பத்தி யோசிச்சப்போதான் எனக்கு இந்த மாதிரி தோணுச்சு"

"கவி, கண்டதையும் நெனச்சு மனசக் குழப்பிட்டிருக்க. அந்தக் கருத்துப்படியே பார்த்தாலும், நீ அதுக்கு அர்த்தம் செய்துகிட்ட முறை தப்பு"

"வேற என்ன அர்த்தம் இருக்க முடியும், அதுக்கு?"

"எல்லாப் பெற்றோர்களுக்கும், தங்கள் சொந்தக் குழந்தைங்க மேல அன்பு செலுத்தறது ரொம்ப சுலபம். அதுவே யாரோ பெத்த குழந்தைங்க மேல வருமா? ஆனா உன்கிட்ட அந்த அளவு அன்பு இருக்கு, கவி. இந்த உலகத்துக்கு தர்றதுக்கு உன்கிட்ட அன்பு, பண்பு, பாசம், நேசம், அறிவுன்னு எவ்வளவோ இருக்கு. எல்லாத்துக்கும் மேலா, உன் குழந்தைங்கிற சின்ன வட்டத்தை விட்டுட்டு எல்லாக் குழந்தையும் உன்னுடையதா நெனக்கிற பெரிய மனசும், தகுதியும் உனக்கு இருக்குன்னு நான் மனப்பூர்வமா நம்பறேன். அதனால கூட கடவுள் உனக்குன்னு ஒரு குழந்தையைக் கொடுக்காம இருக்காரோன்னு சொல்லலாம், இல்லயா?"

இனிமையான சங்கீதம் போல் கணவன் பேசுவதைக் கேட்டபடி, அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்ட கவிதாவின் மனசு, இப்போது தெளிவாய் இருந்தது.

-- கவிநயா

இந்தக் கதை முன்பு 'திசைகளி'ல் வெளியானது.
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/wtlphotos/2357618089/sizes/m
/

22 comments:

 1. /"எல்லாப் பெற்றோர்களுக்கும், தங்கள் சொந்தக் குழந்தைங்க மேல அன்பு செலுத்தறது ரொம்ப சுலபம். அதுவே யாரோ பெத்த குழந்தைங்க மேல வருமா? ஆனா உன்கிட்ட அந்த அளவு அன்பு இருக்கு, கவி. இந்த உலகத்துக்கு தர்றதுக்கு உன்கிட்ட அன்பு, பண்பு, பாசம், நேசம், அறிவுன்னு எவ்வளவோ இருக்கு. எல்லாத்துக்கும் மேலா, உன் குழந்தைங்கிற சின்ன வட்டத்தை விட்டுட்டு எல்லாக் குழந்தையும் உன்னுடையதா நெனக்கிற பெரிய மனசும், தகுதியும் உனக்கு இருக்குன்னு நான் மனப்பூர்வமா நம்பறேன். அதனால கூட கடவுள் உனக்குன்னு ஒரு குழந்தையைக் கொடுக்காம இருக்காரோன்னு சொல்லலாம், இல்லயா?"/

  அருமை

  நல்ல கதை

  ReplyDelete
 2. மனதுக்கு இதமான கதை. கவிதாவின் தாய்மைக்கான ஏக்கத்தை பதிவு செய்த விதம் அருமை. ராமின் ஆறுதல் வார்த்தைகள் யதார்த்தம் கலந்த உண்மை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. //எல்லாத்துக்கும் மேலா, உன் குழந்தைங்கிற சின்ன வட்டத்தை விட்டுட்டு எல்லாக் குழந்தையும் உன்னுடையதா நெனக்கிற பெரிய மனசும், தகுதியும் உனக்கு இருக்குன்னு நான் மனப்பூர்வமா நம்பறேன்.//

  எத்தனை மென்மையாக மனைவியின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டார் ராம். அருமையான கதை கவிநயா. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. அன்பின் கவிநயா,

  அழகான கதை. இதுபோலத் தான் எத்தனையோ தம்பதிகள் வருந்திக் கொண்டிருக்கின்றனர். என்னதான் ஆணில் குறையிருப்பினும் அத்தனை பழிப்பட்டங்களும் பெண்ணையே வந்துசேரும்.

  //இந்த உலகத்துல குழந்தை பெத்துக்கிற பெண்களெல்லாம் அம்மாவாக ரொம்பத் தகுதியானவங்கன்னு எப்படிச் சொல்ல முடியும்? டீனேஜ்ல தெரியாத்தனமா தப்பு செஞ்சுட்டு புள்ள பெத்துக்கிறவங்கள்ல இருந்து, பொண்ணாப் பொறந்துடுச்சேன்னு அதக் கொலையே பண்றவங்க வரைக்கும் இந்த உலகத்துல பல விதமான அம்மாக்கள் இருக்காங்க//

  இந்த வரிகள் யதார்த்தமான சுடும் உண்மை. நானும் இது போலச் சம்பவங்களைக் கேள்விப்படும்போது யோசிப்பேன். குழந்தை இல்லாத யாருக்காவது இதைக் கொடுத்திருக்கக் கூடாதா என்று.

  தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.

  ReplyDelete
 5. //அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்ட கவிதாவின் மனசு, இப்போது தெளிவாய் இருந்தது.//

  நல்ல உள்ளங்கள் வருத்தப்படலாகாது;
  அப்படி வருத்தப்பட நேரிடுகையில் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது.
  'அவன் .... இருந்தது'--- இந்த வரிகளைப் படித்ததும் தான்
  'அம்மாடி' என்றிருந்தது.

  ReplyDelete
 6. ரொம்ப நல்லாயிருக்குங்க கதை. அதிலும் ராம் சொல்லிய கருத்துக்கள் சிந்திக்கத்தக்கது.

  அடிக்கடி கதை எழுதுங்க. :)

  ReplyDelete
 7. வாங்க திகழ்மிளிர். மிக்க நன்றி.

  ReplyDelete
 8. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 9. நன்றி ராமலக்ஷ்மி. நீங்கள் சொன்னபடி இதே கரு கொண்ட உங்கள் கதையையும் விரைவில் படிக்க ஆவல்.

  ReplyDelete
 10. உண்மைதான் ரிஷான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 11. :) நல்லது ஜீவி ஐயா :) வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 12. //அடிக்கடி கதை எழுதுங்க//

  இதுல எதும் உ.கு. இல்லையே? :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மௌலி.

  ReplyDelete
 13. //இதுல எதும் உ.கு. இல்லையே? :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மௌலி.//

  அச்சோ! அந்த குத்துக்கள் எல்லாம் எனக்குத் தெரியாதே!... :)

  ReplyDelete
 14. வாவ்.. அழகா எழுதி இருக்கீங்க.. மிக அழகா எழுதி இருக்கீங்க.. :))


  தொடர்ந்து எழுதுங்க..
  :)

  ReplyDelete
 15. // உன் குழந்தைங்கிற சின்ன வட்டத்தை விட்டுட்டு எல்லாக் குழந்தையும் உன்னுடையதா நெனக்கிற பெரிய மனசும், தகுதியும் உனக்கு இருக்குன்னு நான் மனப்பூர்வமா நம்பறேன்.//

  பின்னீட்டீங்க..

  ReplyDelete
 16. ஒவ்வொரு வார்த்தையும், வரிகளும் மிக யதார்த்தம்.. மிக இயல்பு..

  ReplyDelete
 17. //அச்சோ! அந்த குத்துக்கள் எல்லாம் எனக்குத் தெரியாதே!... :)//

  நம்பிட்டேன் :)

  ReplyDelete
 18. வாங்க சரவணகுமார். உங்களுடைய உற்சாகமான மனமார்ந்த பாராட்டுகள் கண்டு மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :)

  ReplyDelete
 19. வணக்கம் கவிநயா!
  மிகப் பெரிய விஷயத்தை
  மிக எளிமையாகப்புரியவைத்திருக்கிறீர்கள்!

  சிறப்பான கதை!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. வாங்க சுரேகா. முதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. சில கருத்துகளைத் தகுந்த நேரத்தில் சொன்னால் மிக ஆறுதலாக இருக்கும் என்பது மிகவும் உண்மை.

  ReplyDelete
 22. உண்மைதான் குமரா. மிக்க நன்றி.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)