Wednesday, May 14, 2008

ரெண்டாந்தாரம் கட்டப் போறோம்... வந்து வாழ்த்துங்க!

வாங்க, வாங்க. நீங்க கண்டிப்பா வருவீகன்னு தெரியுமுங்க. இப்பிடி வந்து இருங்க. இந்த ஏழயோட அழப்ப மதிச்சு நீங்கல்லாம் வந்ததே ரொம்ப சந்தோசமுங்க.

வேற ஒண்ணுமில்லீங்க; நம்ம முருகஞ்சாமி இருக்காகல்ல? அவுகளுக்குதேன் நம்ம வள்ளியம்மையை ரெண்டாந்தாரமாக் கட்டலாமுன்னு இருக்கமுங்க. இங்ஙனதேன் - நம்ம ரிச்மண்டுல. வார ஞாயித்துக் கெழமைதேன். அட, இன்னைக்கே வந்துட்டமேன்னு நெனக்கிறீக போல. பரவாயில்லீங்க. ரெண்டு நா இருந்துட்டுதேன் போறது...

வந்தது வந்தீக. வந்ததுக்கு அன்பளிப்பா இந்தப் பாட்டைப் படிச்சுப் போட்டுப் போங்க... (முடிஞ்சா) எப்பிடி இருக்குன்னு சொல்லிட்டுப் போனீகன்னா சந்தோசப்படுவனுங்க.

***

வேற ஒண்ணுமில்ல; எல்லாரும் விதவிதமா தலைப்பு வைக்கிறதப் பாத்து நமக்கும் ஆசை வந்துடுச்சு :) எங்க ஊர்ல முருகன் வள்ளி தெய்வானையோட உற்சவ மூர்த்தியாதான் இருக்காரு. புதுசா கட்டப் போற கோவில்ல, முருகன் சந்நிதி வைக்கணும்னு ரொம்ப முயற்சி செய்துக்கிட்டிருக்கோம். அதை மனசில் வச்சு, வள்ளி கல்யாணத்தப்ப பாடறதுக்காக நான் எழுதின பாடல்தான் இது. எங்க ஊர் இசையமைப்பாளர்கள் இசையமைச்சு, எங்க ஊர்ப் பாடகிகளே பாடப் போறாங்க. முடிஞ்சா நீங்களும் வந்து பாருங்க; கேளுங்க; வாழ்த்துங்க! கல்யாணச் சாப்பாடும் கண்டிப்பா உண்டுங்க!

***

வர வேண்டும் முருகா!

கந்தா கடம்பா கார்த்திகை பாலா
செந்தில் நாதா சிங்கார வேலா
மலைமகள் பார்வதி மனம்மகிழ் புதல்வா
குறவள்ளி காதலில் குழைந்திட்ட குமரா (1)

தேவர்கள் மனம்குளிர தெய்வயானை தன்னை
மாயவன் மருகனே மணம்புரிந்து கொண்டாய்
திருப்பரங் குன்றத்தில் திருக்கரம் பிடித்தாய்
திக்கெட்டும் போற்றிட பக்கத்தில் இருந்தாய் (2)

அலைவாயின் கரையோரம் அருள்செய்ய வந்தாய்
வினையாவும் தீர்த்தருள வேல்கொண்டு நின்றாய்
சூரபன் மாதியரை சம்ஹாரம் செய்தாய்
திருச்செந் தூரினிலே திருக்காட்சி தந்தாய் (3)

ஆனைமுக அண்ணனிடம் தான்கோபம் கொண்டாய்
அருள்ஞானப் பழமாகி பழநியிலே நின்றாய்
ஆவினன் குடியினிலே வேடர்குல மகளுடன்
அடியவர்க்கு அருளிடத் திருவுளம் கொண்டாய் (4)

பிரம்மாவின் செருக்கடக்கி வெஞ்சிறையில் அடைத்தாய்
ப்ரணவத்தின் பொருளதனைச் சிவனுக்குச் சொன்னாய்
அருணகிரி நாதர்க்கு அரும்பேற்றை அளித்தாய்
சுவாமிமலை நாதனே சிந்தையில் நிறைந்தாய் (5)

தணிகைமலை மீதினில்சி னம்தணிய அமர்ந்தாய்
விராலிமலை மீதினில்வ சிஷ்டர்க்கு அருள்செய்தாய்
குன்றுதோ றும்நின்று குறைதீர்க்க மனம்வைத்தாய்
நன்றுசெய்யும் நல்லோர் நினைவினில் நிலைத்திட்டாய் (6)

கருநாவல் பழம்கொண்டு கதையொன்று செய்தாய்
தமிழ்ப் பாட்டி ஔவைக்குத் தமிழ்கற்றுத் தந்தாய்
சிலம்பாறு சிரித்தோடும் சோலைமலை மீதினில்
சிங்கார வேலனே சிலையாகி நின்றாய் (7)

முப்புரம் எரித்திட்ட முக்கண்ணன் மைந்தா
செப்பினோம் உந்தன்புகழ் செந்தமிழ்ச் செல்வா
பாடினோம் உன்பெருமை பார்வதியின் பாலா
நாடினோம் உன்னடிகள் நலம்தருவாய் வேலா (8)

ஆறுபடை வீட்டிலே அருள்செய்யும் முருகா
மலைதோறும் வீற்றிருக்கும் மாலவனின் மருகா
குன்றில்லை யென்றாலும் ரிச்மண் டிலும்வந்து
குடியிருக்க வேண்டுகிறோம் குறவள்ளி நாதா (9)

***

--கவிநயா

13 comments:

  1. //குன்றில்லை யென்றாலும் ரிச்மண் டிலும்வந்து
    குடியிருக்க வேண்டுகிறோம்//

    குன்று இல்லையா?
    அதான் அகம் என்னும் குன்று இருக்கே! அதில் இல்லாத மரங்களா? காடா? விலங்குகளா? எரிமலைகளா? :-)

    அகமென்னும் குன்றேறி அருள் செய்ய வா வா!
    முகமென்னும் ஒளிகாட்டி முருகாநீ வா வா!

    ReplyDelete
  2. பாடல் நல்லா வந்திருக்கு கவிநயா! வாழ்த்துக்கள்! அப்படியே விழாவில் பாடும் பாட்டைப் படம் பிடிச்சி இன்னொரு பதிவு போட்டுருங்க!

    //புதுசா கட்டப் போற கோவில்ல, முருகன் சந்நிதி வைக்கணும்னு ரொம்ப முயற்சி செய்துக்கிட்டிருக்கோம்//

    முயற்சி திருவினையாக்க திருமால் மருகன் திருவருள் செய்வான்!
    மனம் கனிந்த வாழ்த்துக்கள்!

    வள்ளித் திருமணம் சீரோடும் சிறப்போடும் அன்பர் மனம் மகிழ இனிதே நடைபெறட்டும்!

    ReplyDelete
  3. வாங்க, வாங்க ரவி! எதிர்பார்க்கவே இல்லை :)

    //அதான் அகம் என்னும் குன்று இருக்கே! அதில் இல்லாத மரங்களா? காடா? விலங்குகளா? எரிமலைகளா? :-)//

    அழகா சொன்னீங்க. உண்மைதான்.

    //பாடல் நல்லா வந்திருக்கு கவிநயா//

    ஆகா. வசிஷ்டர் வாயால பிரும்மரிஷி பட்டம் வாங்கின மாதிரி உச்சி குளிர்ந்து போச்சு :)

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள், இ.எ.சி!

    ReplyDelete
  4. வசிஷ்டர் வந்துட்டுப் போனா விஸ்வாமித்ரரும் வரணுமே. வந்துட்டேன். :-)

    பாட்டு ரொம்ப எளிமையா நல்லா இருக்கு கவிநயா அக்கா.

    வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் வந்துட்டு போனா பரவாயில்லை. துர்வாசர் ஒருத்தர் இருக்காரு. ஜிரான்னு நிறைய பேரும் இராகவன்னு சிலரும் அவரைக் கூப்பிடுவோம். அவர் வந்தாருன்னா மூத்தவள் வள்ளியை இளையவள் ஆக்கிட்டீங்களேன்னு கோவிச்சுக்கப் போறாரு. :-)

    ReplyDelete
  5. வாங்க விஸ்வாமித்திரரே :) அச்சச்சோ, இத்தனை நாளும் நான் வள்ளிதான் இளையவள்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். தப்பா :( துர்வாசருக்கு கோவம் வரதுக்கு முந்தி நான் எஸ்கேப்!

    ReplyDelete
  6. வள்ளிக் கணவனும் வந்து குடியிருக்க

    அள்ளித் தரத்தான் அருள் வேண்டிட

    அறுபடை வீடெடுத்து தமிழ்க்கவி பாடிட

    அருள்வான் வேலனும் ரிச்மண்ட் தனில்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தலைப்ப பாத்துட்டு ஊர்ல நம்ப சம்சாரம் சௌக்கியமான்ற ஜோக்தான் ஞாபகம் வந்தது. அருமையான பாடல்...
    ஒலிவடிவம் நன்றாக வர வாழ்த்துக்கள்.

    சமீபத்தில் உங்கள் பாடலை தமிழ்சங்க விழாவில் பெண்மணிகள் கோரஸாக பாடி கலக்கியதுமாதிரு இதுவும் வரும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  8. அழகுத் தமிழில் அருமையாய் வாழ்த்திட்ட அன்பு ஜீவாவிற்கு மனம் கனிந்த நன்றிகள்!

    ReplyDelete
  9. வாங்க நாகு! இந்தப் பக்கம் வர உங்களுக்கு நேரம் கிடைச்சிருச்சே :)

    இந்த முறை கோரஸ் இல்லை. ரெண்டே ரெண்டு (அருமையான) பாடகியர்தான். அதனால நிச்சயமா நல்லாருக்கும் :)

    ReplyDelete
  10. அற்புதமான பாடல் கவிநயா. நல்லா ஓசையுடன் வந்திருக்கு. விழாவில் மக்கள் பாடி கலக்க இப்பவே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்ல பாட்டு.. முருகன் குன்றில்லாத ஊரில் ஏற்கனவே குடியிருக்கிறார். ஆமாம், சுவாமிமலையில்.

    - ரவி

    ReplyDelete
  12. வாழ்த்துக்கு நன்றி, சதங்கா!

    வருகைக்கும் தகவலுக்கும் நன்றி, ரவி!

    ReplyDelete
  13. 'கவிநய'த்துடன் அமைந்திருக்கும் எளிய, இனிமையான பாடல்.

    முருகனின் ஆறுபடை வீடுகளையும் வரிசையாகச் சொல்லிச் சிறப்பித்திருக்கிறீர்கள்.

    பாடல் நன்றாகவே வரும் என வாழ்த்துகிறேன்.

    இசை வடிவத்தையும் இங்கு போடுவீர்கள்தானே?

    முருகனருள் முன்னிற்கும்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)