Sunday, October 8, 2017

நினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்

வெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்து ஏதாவது தோன்றிக் கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஆனால் இன்று என்னவோ எழுத வேண்டுமென்று தோன்றியது. இன்னதைப் பற்றி என்று குறிப்பாக ஏதும் இல்லை.

எண்ணங்கள் தளும்பாத நேரமே இல்லை.
சிலவற்றைப் பகிரலாம்.
சிலவற்றைப் பகிர இயலாது.
கரையைத் தொடாமல் உள்ளேயே மடிந்து விடும் சில அலைகளைப் போல
சில எண்ணங்களும் தளும்பி விழாமல் உள்ளேயே மறைந்து விடுகின்றன.

‘மடிந்து’ என்று சொல்லாமல், ‘மறைந்து’ என்று சொன்னதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால்,
எந்த எண்ணமும் மடிந்து விடுவதில்லை. ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு உணர்வு உண்டு, ஒரு சக்தி உண்டு. நாம் எவ்வளவு திரும்பத் திரும்ப நினைக்கிறோமோ, அதைப் பொறுத்தே அதன் சக்தி கூடவோ குறையவோ செய்கிறது. அதனாலேயே பெரியோர்கள் நல்ல எண்ணங்களையே விதைத்து, நல்ல எண்ணங்களையே வளர்க்கச் சொன்னார்கள்.

இந்த நிமிடம் மனம் அமைதியாக இருக்கிறது. “content” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல. ஆனால் “போதும்” என்ற நினைப்பு வந்து விட்டால் அங்கு வளர்ச்சிக்கு இடம் இல்லை என்றும் சொல்வார்கள். அந்த எண்ணம்தான் இந்தப் பதிவிற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

“போதும்” என்று இருக்கிற நிலையில் இருப்பது நல்லதா, அல்லது “போறாது” என்ற வெறியுடன் வளர்ச்சிக்கான வழிகளை ஆலோசிப்பது நல்லதா?

“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”. வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த நிலையை அடைந்துதானே ஆக வேண்டும். ஓடி ஆடி உழைக்கச் சக்தி இருக்கும் போதே இந்நிலை வருவது நல்லதா இல்லையா என்று தெரியவில்லை. அப்படி வந்து விட்டால் அதற்கு “சோம்பல்” என்ற பொருள் ஏற்படுமா?

சமீபத்தில் வேலையிலிருந்து Grace Hopper Celebration என்ற கூட்டத்திற்குப் (conference) போயிருந்தேன். க்ரேஸ் ஹாப்பர் என்ற பெண்மணியை கௌரவப் படுத்தும் வகையில் அனிடா என்ற பெண்மணி, பெண் தொழில் நுட்ப வல்லுநர்களுக்காகவே ஏற்படுத்திய இயக்கம். 3 நாட்கள் நடந்த அந்தக் கூட்டத்தில், 18000 பெண் தொழில் நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொருவரிடமும் அளக்க இயலாத திறமைகளும், உச்சியைத் தொட வேண்டும் என்ற உத்வேகமும் தெரிந்தது. அடிமட்டத்திலிருந்து வந்து, வாழ்க்கையில் பலவிதமாக அடிபட்டு, உச்சத்தைத் தொட்ட பல பெண்மணிகளை அங்கு பார்க்க முடிந்தது. அதில் சிலருடைய உரைகளைக் கேட்கவும் முடிந்தது.

என்னுடைய நிலையையும் ஆர்வத்தையும் உத்வேகத்தையும் நான் பார்த்த பெண்மணிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. நான் யார்? தொழில் நுட்ப உலகில் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்னுடைய இலக்குதான் என்ன? இது போன்ற பல கேள்விகளை மீண்டும் என்னுள் தூண்டி விட்டிருக்கிறது. விரைவில் விடை கிடைக்கிறதா என்று பார்க்கலாம்…

வாசித்ததற்கு நன்றி.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா

Thursday, September 21, 2017

நவராத்திரி, நல்ராத்திரி!

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! தேவியின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!

நவராத்திரித் திருநாள்
நலங்களெல்லாம் தரும் நாள்
(நவ)

தேவியர்கள் மூவரும் நம்
இல்லம் தேடி வரும் நாள்
(நவ)

துர்க்கையவள் வந்திடுவாள் அன்பு மீறவே, நம்
பக்கத்துணை யிருந்திடுவாள் துன்பந் தீரவே
சூலம் கொண்டு வந்த போதும் சூல்கொண்ட தாய்போல், நம்மைக்
காலமெல்லாம் காத்திடுவாள் கனிவுடன் சேய்போல்
(நவ)

அலைகடலில் தோன்றியவள் அலைமகளானாள், அந்த
அழகனின் திருமார்பிலுறை திருமகளானாள்
எட்டு வகைச் செல்வத்துக்கும் அதிபதியானாள், நமக்கு
அஷ்டலக்ஷ்மியாகி அவற்றை அருள்பவளானாள்
(நவ)

நாமகளும் வந்திடுவாள் நான்மறை போற்ற, நமக்கு
நன்மையெல்லாம் தந்திடுவாள் நானிலம் வாழ்த்த
ஆயகலை அத்தனையும் அள்ளித் தருவாள், நம்
மாயையினை அகற்றி உண்மை ஞானம் நல்குவாள்
(நவ)


--கவிநயா

 

Sunday, October 9, 2016

ஞான வடிவினள்


வெள்ளைக் கமலத்திலே வீற்றிருப்பாள்
வெள்ளை உள்ளத் தாமரையில் குடியிருப்பாள்
(வெள்ளை)

நாமகள் என்னும் பெயர் கொண்டவளாம்
நான்முகன் நாவினிலே நின்றவளாம்
(வெள்ளை)

வீணை அவள் கரங்களிலே தவழ்ந்திருக்கும்
மானனைய கருவிழிகள் மருண்டிருக்கும்
தேனனைய இதழில் நகை மலர்ந்திருக்கும்
ஞானம் அவள் வடிவினிலே ஒளிர்ந்திருக்கும்
(வெள்ளை)


--கவிநயா 


 அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!


Sunday, September 4, 2016

முக்கண்ணன் முதல் மகன் முன்னின்று காக்கட்டும்!


அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தித் திரு நாள் நல்வாழ்த்துகள்!
சுப்பு தாத்தாவின் உற்சாகாமான இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!

ஆனை முக நாயகனே! ஆதிசக்தி பாலகனே!
ஐந்து கரம் கொண்டவனே! ஆறுமுகன் சோதரனே!
பெற்றோரே உலகமென்று சுற்றி வந்தவனே!
சிற்றம்பலத்தானின் செல்வப் புதல்வனே!

ஒற் றைத் தந்தமுடன் ஒப்பின்றித் திகழ்பவனே!
பற் றிக் கொண்டு விட்டால் பட்சமுடன் காப்பவனே!
சுழி போட்டுத் தொடங்கி விட்டால் வழி காட்டி உதவிடுவாய்!
பழி யேதும் வாராமல் விழியிமை போல் காத்திடுவாய்!

அருகம் புல் மாலைக்கும் அன்புக்கும் வசப்படுவாய்!
கரிமுகத்து நாயகனே இருவினையை அழித்திடுவாய்!
மூஞ்சூறு வாகனத்தில் முந்தி வந்து அருளிடுவாய்!
மோதகத்தை விரும்பிடுவாய், மோகத்தை விரட்டிடுவாய்!

ஆனைமுகம் கண்டால் அல்ல லெல்லாம் ஓடிவிடும்!
பானை வயிறோனால் பட்ட துன்பம் மாறிவிடும்!
அஞ்சற்க என்று சொல்லி அபயம் தந்து விடும்!
நம்பிக்கை கொண்டோரைத் தும்பிக்கை காத்து விடும்!


--கவிநயா

 

Monday, August 29, 2016

“பொருள்” உதவி!

வணக்கம்! நலந்தானே? உங்களை ஒரு உதவி கேட்கலாமென்று வந்தேன்.

பரத நாட்டியத்தில் நாங்கள் ஆடுகின்ற பாடல்களில் ஒன்றான முருகன் கவுத்துவத்தில், இந்த வரி வருகிறது:

“கடல் கிழிய, மலை முறிய, வரும் முருகன்...”

அடியவர்களுக்கு அருள் புரிய அவ்வளவு வேகமாக வருகிறானா? அல்லது இதன் பின்னே கதை ஏதும் இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால்,

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!”

என்று தொடங்கும் பாரதியின் பாடல் ஒன்றில்

“வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை
உடல் வெம்பி மறுகிக் கருகி புகைய வெருட்டினாய்”

என்று வருகிறது.

“மலை முறிய” என்றால் தாரகாசுரன் கிரௌஞ்ச மலையாக மாறிய போது அந்த மலையைப் பிளந்த கதை என்று வைத்துக் கொள்ளலாம்… ஆனால் கடலைக் கிழித்தது?

தெரிந்தால் சொல்லுங்களேன்!

அன்புடன்
கவிநயா