ஸ்ரீ வரலக்ஷ்மி நோன்பு வாழ்த்துகள்!
செந்தாமரைப் பூவில் செஞ்சூரியன் போல
சிரிக்கின்ற ஸ்ரீதேவியே!
கண் தாமரை கொண்டு கார்மேக மேனியனைக்
கவர்கின்ற ஸ்ரீகாந்தையே!
பாருலகம் காக்கின்ற பாற்கடல் மாதவனின்
மார்புறையும் ஸ்ரீபத்மையே!
ஓர்நெல்லிக் கனிக்காகப் பொற்கனிகளைப் பொழிந்த
கருணைமிகு ஸ்ரீகமலையே!
ஒட்டிய தலை ஓட்டில் பிச்சையிட்டு சிவனைக்
காத்திட்ட ஸ்ரீபுத்தயே!
கட்டிய மன்னவனைக் கணமும் அகலாமலே
களிக்கின்ற ஸ்ரீசித்தயே!
ஓரெட்டு வடிவங்கள் கொண்டிந்த உலகிற்கு
ஒளியூட்டும் ஸ்ரீஸத்யையே!
ஈரெட்டு செல்வங்கள் ஈந்திடும் தேவியே
எமைக் காக்கும் ஸ்ரீலக்ஷ்மியே!
--கவிநயா
(ஒரு நாள் தாமதம். ஆனா அவ ஒண்ணும் சொல்ல மாட்டான்னு நம்பிக்கை)
உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Saturday, August 29, 2015
Saturday, August 15, 2015
எங்கள் சிற்றில் சிதையேலே!
விளையாடப் போன குழந்தையை எதிர்பார்த்துக்
காத்திருக்கிறார், தந்தை. “என்ன ஆயிற்று, இன்றைக்கு, இன்னும் காணோமே இந்தப் பெண்ணை”,
என்று எண்ணமிட்டபடி வாசலுக்கு வந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை எல்லாத் திசைகளிலும்
பார்க்கிறார்.
அதோ! என்ன இது, கண்ணைக் கசக்கிக்
கொண்டே வருகிறாற் போல் இருக்கிறது. அழுகிறாளா என்ன?
அவள் வாசலுக்கு வரும் முன் தானே
விரைவாக அடியெடுத்து மகளிடம் செல்கிறார்.
“என்னம்மா கோதை? என்ன ஆயிற்று?”
மகளை வாரிக் கைகளில் எடுத்து, அவள் கண்ணீரைத் துடைக்கிறார்.
“ம்…ம்..”, விசும்பிக் கொண்டே
தந்தையில் தோளில் தலை சாய்த்துக் கொள்கிறாள், கோதை.
வீட்டிற்கு வந்து கை, கால், முகம்
அலம்பி, குடிக்கத் தண்ணீர் கொடுத்து, மகளை ஆசுவாசப் படுத்துகிறார்.
“அப்பா… அப்பா… இன்றைக்கு என்ன
ஆயிற்று தெரியுமா?”
“என்னம்மா ஆயிற்று? அதைத்தானே
நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்”
“அப்பா, இன்றைக்கு நானும் என்
தோழிகளும் மணலில் சிற்றில் கட்டி விளையாடினோம்… சரியாக அந்த நேரம் பார்த்து கண்ணன்
வந்து விட்டனப்பா! வந்ததும் இல்லாமல் எங்கள் சிற்றிலை எல்லாம் கலைக்கத் தொடங்கி விட்டான்”
ஆயர்பாடிக் கண்ணன் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு
வந்தானா? பெரியாழ்வாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை…
“ம்… அப்படியா? அதனால்தான் அழுது
கொண்டே வந்தாயா?”
“ஆமாம் அப்பா. அவனிடம் எப்படியெல்லாம்
கெஞ்சினோம் தெரியுமா?”
“………….”
“சிற்றில் கட்டுவது அப்படி ஒன்றும்
சாதாரணமான வேலை இல்லை அப்பா.
ஆற்று மணலை அள்ளி வந்து கைகளாலேயே
சலித்துச் சலித்து மிக மென்மையாக ஆக்கினோம். பிறகு தண்ணீர் தெளித்துப் பதமாக்கி, ஒவ்வொரு
பகுதியையும் பார்த்துப் பார்த்து, முதுகு நோக, எவ்வளவு பொறுமையாகக் கட்டினோம் தெரியுமா
அப்பா?
ஆனால் அங்கே கண்ணன் வந்து விட்டான்.
வந்தவன் தன் அழகுக் கண்களால் எங்கள் சிற்றில்களை ஒரு முறையேனும் பார்த்துப் பாராட்டுவான்
என்று நினைத்தேன். அவன் என்னடாவென்றால் சிற்றில்களைக் கலைக்கத் தொடங்கி விட்டான்! இது
நியாயமா அப்பா?”
“ஆம் அம்மா… சின்னஞ்சிறுமிகள்
கட்டிய சிற்றில்களைக் கலைக்க அவனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?”
“ ‘ஆதிமூலமே’ என்று அலறிய யானைக்காக
பறந்தோடி வந்தவன் அல்லவா அப்பா? ஆனால் ஏன் இந்தச் சிறுமிகளிடம் மட்டும் அவனுக்கு அன்பு
இல்லை?”
“அன்பே வடிவானவன் அம்மா, அவன்.
ஆனாலும் இந்தக் குறும்பு விளையாட்டுகள் எல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களைச்
சிணுங்க வைத்து வேடிக்கை பார்க்கத்தான் அப்படிச் செய்திருப்பான்!”
“உண்மைதான் அப்பா. ஆனால் ஒன்று.
அவன் என்னதான் இதைப் போல அநியாயம் செய்தாலும் ஏனோ அவனிடம் மட்டும் கோபமே வர மாட்டேனென்கிறது.
அவன் என்ன செய்தாலும் அதில் ஏதோ மாயம் இருக்கிறதப்பா… அது நம்மை அப்படியே மதி மயங்கச்
செய்து விடுகிறது; மந்திரம் போலக் கட்டிப் போட்டு விடுகிறது!
அதனால் அவன் செய்கையால் வருத்தம்
ஏற்பட்டாலும் அவனைத் திட்டவே மனம் வரவில்லை அப்பா. எப்பேர்ப்பட்ட கள்வன் அவன்!” கண்ணன்
மேல் கொண்ட அன்பைப் போலவே கோதையின் கண்களும் அகன்று விரிகின்றன.
“ம்… அப்புறம் என்னம்மா செய்தான்
கண்ணன்?”
“சிற்றில்களைக் கலைத்ததோடல்லாமல்
எங்களையும் எட்டிப் பிடிக்க வந்தான் அப்பா. நாங்கள் அவன் கைக்கு அகப்படாமல் ஓடினோம்.
உடனே அவன், என்னிடமிருந்தா தப்பி ஓடுகிறீர்கள், நான் யாரென்று தெரியுமா என்று கூறி,
சங்கு சக்ரதாரியாக நின்றான் அப்பா!”
“என்ன!”, திகைத்து நிற்கிறார்
பெரியாழ்வார்!
“யாருக்கும் எளிதில் கிடைக்காத
அவன் தரிசனம் எங்களுக்குக் கிடைத்தது. ஆனாலும் நாங்கள் எங்கள் பிடிவாதத்தை விட்டுக்
கொடுக்கவில்லை. “நீ சங்குசக்ரதாரியாகவே இரு. ஆனால் எங்கள் மனம் இப்போது வருத்தத்தில்
இருக்கிறது. மனம் வருத்தத்தில் இருக்கையில் கருப்பஞ்சாறும் கசக்கும். நீ எங்களை இப்போது
என்ன சமாதானம் செய்தாலும் அது செல்லாது என்று சொல்லி விட்டோம் அப்பா”
“அப்படியா சொன்னீர்கள்?!”
“தெருவில் நின்று விளையாடினால்
அவன் தொந்தரவு செய்கிறான் என்று நாங்கள் எல்லோரும் அருகிலிருந்த என் தோழி ஒருத்தியின்
வீட்டினுள் புகுந்து, முற்றத்தில் ஒளிந்து கொண்டோம்.”
“கண்ணனிடமிருந்து ஒளிந்து கொள்வது
இயலாத காரியம் அம்மா!”
“சரியாகச் சொன்னீர்கள் அப்பா!
நாங்கள் அங்கிருக்கிறோம் என்பது அவனுக்கு எப்படித்தான் தெரிந்ததோ அவனுக்கு! அங்கும்
வந்து விட்டான்! வந்ததோடு அல்லாமல் அவனுடைய அந்த அழகிய பூவை வண்ணம் விகசிக்க, செவ்விதழ்கள்
கனிந்து நெளிய, மயிற்பீலி அசைந்தாட, கண்களில் குறும்பு கூத்தாட, எங்களை நோக்கி அப்படியொரு
பேரெழிலான புன் முறுவல் செய்தான். நாங்கள் அதைப் பார்த்து அப்படியே மயங்கி விட்டோம்!
அவன் முறுவலின் எழிலைக் கண்ட கண்களுக்கு வேறென்ன வேண்டும் அப்பா?” சொல்லும் போதே கோதையின்
கண்கள் செருகி கனவு நிலைக்குப் போகின்றன.
“ம்…அப்புறம்?” அவள் சொல்லச்
சொல்ல பெரியாழ்வாரின் கண்களின் முன்னேயும் காட்சிகள் விரிகின்றன. கண்ணனின் கனிமுகம்
தெரிகிறது.
“ஆனால் அவன் அப்படியே எங்களை
அணைக்க வந்த போது சட்டெனெ விலகி ஓடி வந்து விட்டோம். அக்கம் பக்கம் பார்த்தால் என்ன
சொல்வார்கள் அப்பா? இந்தக் கண்ணனுக்கு ஒன்றுமே தெரியவில்லை!”, அதிருப்தியுடன் உதட்டைச்
சுழிக்கிறாள் கோதை.
“சரிதானம்மா… அப்படியானால் இனி
சிற்றில் கட்டி விளையாடாதீர்கள். வேறு விளையாட்டு ஏதேனும் விளையாடுங்கள்”
“என்னப்பா அப்படிச் சொல்லி விட்டீர்கள்?
என் கண்ணன் வருவானென்றால், அவன் திருவடிகளால் கலைப்பானென்றால், அதற்காகவே எத்தனை சிற்றில்கள்
வேண்டுமானாலும் கட்டிக் கொண்டே இருப்பேனே!”
“எதிர்பார்த்ததுதான்”, என்பது
போல தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறார் பெரியாழ்வார்.
ஆடிப் பூர நாயகி ஆண்டாளின் திருவடிகளே
சரணம்!
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன்
கவிநயா
பி.கு.: நாச்சியார் திருமொழியில் இரண்டாம் திருமொழி பாடல்களை வைத்து எழுதியது.
Monday, August 3, 2015
நெகிழ வைத்த வாழ்த்து
ஒவ்வொரு வருஷமும் பிறந்த நாள்
வந்தாலே பயமா இருக்கு இப்பல்லாம்! வயசு ஏறிக்கிட்டே போகுதில்ல, அதான். ஒரே ஒரு சின்ன ஆறுதல்
என்னன்னா... எல்லாருக்குமே அப்படித்தானே? ஹி…ஹி…
இந்த வருடமும் என்னோட குடும்பத்தினர்
மட்டுமல்லாம, எதிர்பாராத விதமா சில மாணவிகளிடமிருந்து, சில தோழிகளிடமிருந்து, இப்படியெல்லாம்
வாழ்த்துகள் கிடைச்சது. (எதிர்பாராம கிடைச்சா சந்தோஷம். எதிர்பாராமா இருக்கறதால கிடைக்கலன்னா
வருத்தமும் இல்லை! அதான் நம்ம பாலிஸி)
என்னோட அன்பான நாத்தனார் சொன்னதுதான்
எனக்கு ரொம்பப் பிடிச்சது. “அண்ணி உங்களுக்கு அத்தனை (சொல்ல மாட்டேனே!) வயசு இல்லை…
உங்களுக்கு 18 வயசுதான் + அத்தனை வருஷ அனுபவம்”, அப்படின்னு! இது எப்படி இருக்கு!
எல்லாத்துக்கும் சிகரம் வெச்ச
மாதிரி ஒரு வாழ்த்து லலிதாம்மாகிட்ட இருந்து, “அம்மன் பாட்டு” தளத்தில்:
எதிர்பார்க்கவே இல்லை. அழுகையா வந்திருச்சு…
கவிநயத்தேனூறுந் தமிழ்ப்பாமலர் தூவி
சிவையே!செவ்வாய்தோறும் உனைப் பாடி உருகும்
ஆணிப்பொன்மகள் பிறந்த நன்னாளாம் இன்று
ஆடிபெருக்காய் நீ அருள்பெருக்கு அவள்மேல் !
கோடிகோடிச் செவ்வாய்கள் அவள் பார்க்க வேண்டும் !
பாடலால் பக்தரைப் பரவசமாக்க வேண்டும் !
பொங்கும் நல்வளத்தோடு அவள் வாழ வேண்டும் !
எங்கிருப்பினும் அவளை நீ காக்க வேண்டும் !
அன்புமகள் கவிநயாவுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் !
சிவையே!செவ்வாய்தோறும் உனைப் பாடி உருகும்
ஆணிப்பொன்மகள் பிறந்த நன்னாளாம் இன்று
ஆடிபெருக்காய் நீ அருள்பெருக்கு அவள்மேல் !
கோடிகோடிச் செவ்வாய்கள் அவள் பார்க்க வேண்டும் !
பாடலால் பக்தரைப் பரவசமாக்க வேண்டும் !
பொங்கும் நல்வளத்தோடு அவள் வாழ வேண்டும் !
எங்கிருப்பினும் அவளை நீ காக்க வேண்டும் !
அன்புமகள் கவிநயாவுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் !
அன்பைப் பொழிகிற அனைவரையும் அன்னையின்
உருவாகவே காண்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நன்றாக இருக்க
வேண்டும்!
அன்புடன்
கவிநயா
Monday, July 27, 2015
வறுமையும் வசதியும்
ஒரு பணக்கார அப்பா இருந்தார்.
அவர் தன் மகனுக்கு எவ்வளவு வசதியான வாழ்க்கை அவனுக்கு வாய்த்திருக்கிறது என்றும், மக்கள்
எவ்வளவு ஏழைகளாக இருக்க முடியும் என்றும், கண்கூடாகக் காட்ட விரும்பினார்.
“வா, நாம ரெண்டு பேரும் கொஞ்சம்
வெளியே போய்ட்டு வரலாம்”, என்று அவனை அழைத்துக் கொண்டு ஒரு ஏழை விவசாயியிடம் போனார்.
இரண்டு பேரும் அந்த விவசாயியின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கினார்கள்.
ஊருக்குத் திரும்பும் வழியில்
அப்பா, மகனைக் கேட்டார்:
“நம்ம பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிற?
என்ன கத்துக்கிட்ட?”, அப்படின்னு.
மகன் சொன்னான்: “அப்பா, இந்தப்
பயணம் ரொம்ப பயனுள்ளதா இருந்தது. நான் நிறைய கத்துக்கிட்டேன்!”
மகன் சொன்னதைக் கேட்டு அப்பாவுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. அவர் நோக்கம் நிறைவேறி விட்டதே!
மகன் மேலும் சொன்னான்: “நம்ம வீட்டில் ஒரே ஒரு செல்ல நாய்க்குட்டி இருக்கு. அவங்க வீட்ல ஆடு, மாடு கோழி, எல்லாமே இருக்கு. நம்ம வீட்ல ஒரு சின்ன நீச்சல் குளம் இருக்கு. அவங்களுக்கு எங்கே முடியுதுன்னே தெரியாத அளவு பெரிய ஓடை இருக்கு. நம்ம வீட்டில் மின்சாரத்தால எரியற விளக்குகள் இருக்கு. அவங்களுக்கு வானமே கூரையா, கணக்கில்லாத நக்ஷத்திரங்களோட இருக்கு.
இதெல்லாம் பார்த்த பிறகுதான்
நாம எவ்வளவு ஏழைன்னு தெரிஞ்சுக்கிட்டேன் அப்பா. புரிய வெச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி!”
அப்படின்னானாம்.
அப்பா, கப்சிப்!
எல்லாமே பார்வையில் தானே இருக்கு?
எல்லோரும் நல்லாருக்கணும்!
அன்புடன்
கவிநயா
பி.கு. எங்கோ எப்போதோ ஆங்கிலத்தில்
படித்ததைத் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன்.
படத்துக்கு நன்றி: கூகுளார்
படத்துக்கு நன்றி: கூகுளார்
Monday, July 20, 2015
ஒற்றை வரி - 4
ஆத்மாராமுக்கு மனைவி தேவி மமதாவின் மீது கொள்ளை ஆசை. அவரை விட்டு ஒரு நாள் கூட பிரிந்திருக்கச் சம்மதித்ததில்லை. அதனாலேயே திருமணமான பின் பல வருடங்களுக்கு அவர் மனைவி தன் தாய் வீட்டிற்குக் கூடப் போகவில்லை.
ஒரு சமயம் ஆத்மாராம் ஏதோ வேலை
விஷயமாக வெளியூர் சென்றிருந்த போது தேவி மமதாவின் அன்னை உடல் நலம் குன்றியிருப்பதாகச் செய்தி வந்தது. அதன் காரணமாக
அவர் பிறந்த வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. வெளியூர் சென்று மனைவியைக் காணும் ஆவலுடன்
திரும்பி வந்த ஆத்மாராம், மனைவியைக் காணாமல் திகைத்தார்; பிறகு நடந்ததை அறிந்து கொண்டார். மனைவி இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை. உடனடியாக அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று விரும்பினார்.
அந்தச் சமயத்தில் இடியும் மின்னலுமாகப்
பெருத்த மழை பெய்து கொண்டிருந்தது. அவர் மாமனார் வீட்டிற்குப் போக, பல மைல்கள் கடந்து, பிறகு ஆற்றையும் கடந்து
செல்ல வேண்டும். நீண்ட தூரம் நடந்து வந்து விட்டார். ஆனால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எந்தப் படகுக்
காரனும் அவரைக் கூட்டிச் செல்ல மறுத்து விட்டான். அப்பேர்ப்பட்ட நிலையிலும் மனைவியைக்
காணும் ஆசையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதோ ஒரு கட்டையைப் பிடித்துக் கொண்டு
எப்படியெப்படியோ சிரமப்பட்டு, அந்த வெள்ளத்தைக் கடந்து வந்து விட்டார். அந்த வீட்டின் மாடியிலிருந்து கயிறு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. மனைவியை உடனடியாய் அவள் அறைக்குச் சென்று பார்த்து விடும் ஆசையில், அந்தக் கயிறைப் பிடித்துக் கொண்டு ஏறி விட்டார்.
எதிர்பாராமல் வந்து நின்ற கணவரைக்
கண்டதும் அவர் மனைவி மிகுந்த வியப்படைந்தாள். இப்படிப்பட்ட மழையிலும் வெள்ளத்திலும்
அவரால் எப்படி வர முடிந்தது என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் மாடியிலிருந்த தன் அறைக்கு எப்படி வந்தார்? “உன்னைக் காண வேண்டும்
என்ற ஆவலினால் பல இடர்களையும் எப்படியோ கடந்து வந்து விட்டேன். மாடியிலிருந்து ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பிடித்துத்தான் வந்தேன்”, என்று விளக்கினார் ஆத்மாராம்.
ஆனால் அப்படி எதுவும் கயிறு இல்லையே என்று சந்தேகித்த மனைவி, அங்கே சென்று பார்த்த போது, நீளமான கொடிய விஷமுள்ள நாகம் அங்கே இருந்தது! அதைக் கூடக் காண இயலாத அளவு அவர் கண்களையும் அறிவையும் ஆசை மறைத்திருந்தது.
ஆனால் அப்படி எதுவும் கயிறு இல்லையே என்று சந்தேகித்த மனைவி, அங்கே சென்று பார்த்த போது, நீளமான கொடிய விஷமுள்ள நாகம் அங்கே இருந்தது! அதைக் கூடக் காண இயலாத அளவு அவர் கண்களையும் அறிவையும் ஆசை மறைத்திருந்தது.
விவேகியான மமதா இவற்றையெல்லாம் கண்டு வேதனை அடைந்தாள். “விரைவில் மூப்படைந்து அழியப்
போகும் இந்த உடலின் மீது கண்மூடித்தனமாக இத்தனை ஆசை வைப்பதைக் காட்டிலும், இந்த விருப்பத்தையும், சிரத்தையையும் இறைவன் மீது செலுத்தினால் இந்தப் பிறவிக்
கடலினின்றும் விடுதலை கிட்டும்!”, என்றாள்.
அன்று மனைவி சொன்ன அந்த வார்த்தைகள்தான் ஆத்மாராமின் உலக வாழ்வை ஆன்மீக வாழ்வாக மாற்றியது. ஸ்ரீராமன் மீது அபரிமிதமான பக்தி கொண்டு பின்னாளில்
துளசி ராமாயணத்தை அருளிய ஸ்ரீதுளசிதாசர்தான் அவர்.
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: கூகுளார்
பி.கு. இதைப் போல 'ஒற்றை வரி'யில் வாழ்வே மாறிய மகான்கள் இன்னும் நிறைய இருக்ககூடும். எனக்குத் தெரிந்தவர்களைப் பற்றி மட்டும் இங்கே எழுதினேன். எத்தனையெத்தனை மகான்களோ அவர்கள் அனைவரின் திருவடிகளிலும் பணிந்து வணங்குகிறேன்.
பி.கு. இதைப் போல 'ஒற்றை வரி'யில் வாழ்வே மாறிய மகான்கள் இன்னும் நிறைய இருக்ககூடும். எனக்குத் தெரிந்தவர்களைப் பற்றி மட்டும் இங்கே எழுதினேன். எத்தனையெத்தனை மகான்களோ அவர்கள் அனைவரின் திருவடிகளிலும் பணிந்து வணங்குகிறேன்.
Subscribe to:
Posts (Atom)



