அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! தேவியின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!
நவராத்திரித் திருநாள்
நலங்களெல்லாம்
தரும் நாள்
(நவ)
தேவியர்கள் மூவரும்
நம்
இல்லம் தேடி வரும்
நாள்
(நவ)
துர்க்கையவள் வந்திடுவாள்
அன்பு மீறவே, நம்
பக்கத்துணை யிருந்திடுவாள்
துன்பந் தீரவே
சூலம் கொண்டு வந்த
போதும் சூல்கொண்ட தாய்போல், நம்மைக்
காலமெல்லாம் காத்திடுவாள்
கனிவுடன் சேய்போல்
(நவ)
அலைகடலில் தோன்றியவள்
அலைமகளானாள், அந்த
அழகனின் திருமார்பிலுறை
திருமகளானாள்
எட்டு வகைச் செல்வத்துக்கும்
அதிபதியானாள், நமக்கு
அஷ்டலக்ஷ்மியாகி
அவற்றை அருள்பவளானாள்
(நவ)
நாமகளும் வந்திடுவாள்
நான்மறை போற்ற, நமக்கு
நன்மையெல்லாம்
தந்திடுவாள் நானிலம் வாழ்த்த
ஆயகலை அத்தனையும்
அள்ளித் தருவாள், நம்
மாயையினை அகற்றி
உண்மை ஞானம் நல்குவாள்
(நவ)
--கவிநயா