Tuesday, December 31, 2013

அந்தப் பிள்ளை யாரு??

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
 

வந்த வினை தீர்த்து வைக்கும் பிள்ளை யாரு, இனி
வரும் வினையும் ஓட வைக்கும் பிள்ளை யாரு?
கந்தசாமிக் கண்ணனான பிள்ளை யாரு, நம்மைச்
சொந்தமெனக் காத்திருக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

ஆதிசிவ சக்தி யோட பிள்ளை யாரு, அழகு
ஆனை முகம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு?
பானை வயிற்றில் உலகம் வெச்ச பிள்ளை யாரு, நம்மைப்
பத்திரமாப் பாதுகாக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

மோதகத்தை விரும்பி உண்ணும் பிள்ளை யாரு, சின்ன
மூஞ்சூறில் பவனி வரும் பிள்ளை யாரு?
மஞ்சளிலும் மணத்திருக்கும் பிள்ளை யாரு, மன
மகிழ்ச்சியோடு அருள் செய்யும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

அருகம்புல் மாலை சூடும் பிள்ளை யாரு, நல்ல
அழகான தந்தமுள்ள பிள்ளை யாரு?
மாலுக்கு மருகனான பிள்ளை யாரு, வடி
வேலுக்கு அண்ணனான பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

அஞ்சுகரம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு, நமக்கு
வஞ்சமில்லா நெஞ்சந் தரும் பிள்ளை யாரு?
பிஞ்சுப் பிள்ளைக்கும் புடிச்ச பிள்ளை யாரு, நம்ம
நெஞ்ச மெல்லாம் நெறஞ்சிருக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

எதுவும் தொடங்கும் போது வணங்கும் பிள்ளை யாரு, எந்தத்
தடங்கலையும் விலக்கி வெக்கும் பிள்ளை யாரு?
அன்னை தந்தை தெய்வம் என்ற பிள்ளை யாரு, அவரைப்
பணிந்த பின்னே வேறு என்ன வேணும் கூறு!

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!


--கவிநயா

படத்திற்கு நன்றி...