நலம். நலமறிய ஆவல் :)
ஊரிலிருந்து வந்தவுடனே நடன பள்ளி ஆண்டு விழா வேலைகள் வந்திடுச்சு. உங்களையெல்லாம் பார்க்க இப்போதான் நேரம் கிடைச்சது.
அவள் அருளால் நல்லபடியாக வைத்தீஸ்வரன்
கோவில் பாத யாத்திரையை முடிச்சாச்சு. மதுரையில் தேர்த் திருவிழா பார்த்தாச்சு.
காரைக்குடி கொப்புடையாளையும், திருவொற்றியூர் வடிவுடையாளையும், முதல் முறையா
பார்த்தாச்சு. அம்மா வீட்ல நல்லா சாப்ட்டு சாப்ட்டு தூங்கி எழுந்தாச்சு. வேற வழியில்லாம,
பொழைக்கிற ஊருக்கு திரும்பியும் வந்தாச்சு!
ஊருக்கு போறப்பல்லாம் மயிலாப்பூர்லதான்
நிறைய வேலை இருக்கும். ஒவ்வொரு முறை போற போதும் கற்பகாம்பாளைப் பார்த்துடறது வழக்கம்.
இந்த தரம் 3 முறை பார்த்தேன், அவளை! இரண்டாவது முறை போகும் போது சில குழும நண்பர்களை
அங்கே சந்திக்கலாம்னு போனேன். ஆனா அன்றைக்கு பிரதோஷமாம். சரியான கூட்டம். யாரையும்
பார்க்கவோ போனில் பிடிக்கவோ கூட முடியல. சமர்த்தா வரிசையில் நின்னு சாமி கும்பிட்டேன்;
வரிசையில் நிற்கும் போதே பார்க்க வந்தவங்களை (தற்செயலாதான்) எதிர் வரிசையில் பார்த்து ஹலோ சொன்னதோட
சரி. அப்புறம் இருட்டிடுச்சு, தனியா ரொம்ப தூரம் போகணுமேன்னு கிளம்பிட்டேன். யாரோடயும்
பேச முடியல.
ஆனா அன்றைக்குக் காலையில் அப்பாவோட நம்ம சுப்பு தாத்தா வீட்டுக்கு போயிருந்தேன். அப்பாடி, எங்க வீட்டிலிருந்து
அவங்க வீட்டுக்கு போறதுக்குள்ள அரை நாள் ஓடிப் போச்சு! சுப்பு தாத்தாவையும், மீனாட்சி பாட்டியையும் பார்த்த பிறகு அந்த
சிரமமெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு ஆயிருச்சு. ஆரம்பத்தில் நான் போறதாவே இல்லை; நேரம் ரொம்ப சுருக்கமா இருந்ததால.... ஆனா அவரோட
தொலை பேசின போது, "தையல் நாயகிக்கு புடவை வாங்கி வச்சிருக்கேனே... வர முடியாதா, சரி பரவாயில்லை என்ன பண்றது?"அப்படின்னு சொன்னார். அதான் மனசு கேட்காம, உடனே கிளம்பிட்டேன்.
தாத்தாவும் பாட்டியும்
தங்களோட அன்பால எங்களை திக்கு முக்காட வச்சுட்டாங்க. வெண்பொங்கலும், இனிப்பும், காரமும்,
சுடச் சுட காபியும் குடுத்தாங்க. சுப்பு தாத்தா ஒரு குட்டி computer lab வச்சிருக்கார்!
தாத்தாவும் பாட்டியும் தங்களோட ‘ஓய்வு பெற்ற பின்’ வாழ்க்கை அனுபவங்களை வேடிக்கையாக
பகிர்ந்துகிட்டாங்க. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்த பிறகு, கிளம்பும் போது பூஜை அறைக்குக் கூட்டிட்டுப் போயி,
தையல்நாயகிக்கு வாங்கி வச்சிருந்த சிகப்புப்
புடவையை அழகா பூ, பழத்தோட தாம்பாளத்தில் வச்சு குடுத்தாங்க. கூடவே ஒரு சர்ப்ரைஸ்! எனக்கும்
ஒரு பச்சைப் புடவை கிடைச்சது! அவங்க சொன்னபடியே அவளுக்கு புடவை சாற்றின அன்றைக்கே நானும்
என் பச்சைப் புடவையை உடுத்திக்கிட்டேன். அன்புக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி தாத்தா,
பாட்டீ!
போன முறை கேயாரெஸ் சார்பில் புடவை
வாங்கிட்டு போனேன் அவளுக்கு. இந்த முறை சுப்பு தாத்தா சார்பில்!
கீதாம்மா, லலிதாம்மா, வல்லிம்மா, மௌலி, தக்குடு, இவங்களோடல்லாம் தொலை பேசினேன்.
அடுத்த நாள் புதுக்கோட்டைக்கு
பயணம். அன்றைக்கு இரவிலிருந்துதான் நடக்கணும்.
என் தங்கையும் நானும் சேர்ந்துதான்
பாத யாத்திரை போறதா இருந்தது. எங்க ரெண்டு பேருக்குமே இதுதான் கடைசி வருஷ வேண்டுதல். கெளம்பறதுக்கு
ஒரு வாரம் முன்னாடி, என் தங்கை என்னைக் கூப்பிட்டு, சில காரணங்களால் தன்னால் வர முடியாம போகலாம்
அப்படின்னு ஒரு பெரீய்ய்ய குண்டைத் தூக்கிப் போட்டுட்டா! டிக்கெட்லாம் எடுத்தாச்சு.
இனிமே என்ன பண்ண முடியும்? அவ வரலைன்னா நான் தன்னந்தனியாதான் நடக்கற மாதிரி இருக்கும்;
என் வேகத்துக்கு(!) யாரும் பொறுமையா என்னோட கூட வரமாட்டாங்க. அதோட மட்டுமில்லாம, அடுத்த
வருஷம் அவ நடந்தாலும், அவளும் தனியாதான் போகணும். ஆனா அவ என்னை விட ‘வாயுள்ள பிள்ளை’;
அதனால பரவாயில்லைன்னு வைங்க!
"என்னம்மா இது சோதனை?"ன்னு அவகிட்ட
போய் புகார் பண்ணினேன். “நீ என்னை நம்பி வர்றியா, இல்ல உன் தங்கச்சியை நம்பி வர்றியா?”ன்னு
அவ கேட்கிற மாதிரி இருந்தது. உடனே ‘கப்சிப்’னு ஆயிட்டேன். அதைப் பற்றி நினைக்கிறதையும்
கவலைப் படறதையும் விட்டுட்டேன், ஊருக்கு கிளம்பறதுக்கு
முதல் நாள் என் தங்கை மறுபடியும் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, தானும் வர முடியும்னு சொன்னா! என்ன இருந்தாலும் அவ க்ரேட்தான் இல்ல!
மறுபடியும் யாத்திரை பற்றி எழுதறதா இருந்தா, கல்லு குத்தக் குத்த, பாதம் வலிக்க வலிக்க, இருட்டில் தடவித் தடவி, மெது....வ்வ்வ்...வாதான் கூட்டிக்கிட்டு போவேன், பிறகு எல்லாரும் என்னைத் திட்டுவீங்க! அதனால ரெண்டு வரி ராமாயணம் மாதிரி சொல்லிட்டு முடிச்சுக்கறேன்: இந்த முறை பாத யாத்திரையின் போது ரோடெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ம்பவே மோசமா இருந்தது. பவர் கட் வேற. நாங்க இராத்திரி நேரத்தில் நடக்கறதால, அமாவாசை இருட்டில், பவர் கட்டின் போதெல்லாம் உட்காரவே முடியாம நடந்துகிட்டே இருக்க வேண்டியதா இருந்தது. அப்படியும் நிறையப் பேர் தூங்கி, ஓய்வெடுத்து, ஓய்வெடுத்துதான் நடந்தாங்க. நாங்க மட்டும் தூங்கவே இல்லை. அதிகபட்சம் அரைமணி நேரம் உட்காருவோம், அவ்வளவுதான். எப்படியோ அவள் அருளால் ரெண்டு பேருமே நல்லபடியா பிரார்த்தனையை நிறைவேற்றிட்டோம்.
போன முறை அம்மா
ஒரு இடத்தில் மயங்கி விழுந்து, நாங்க நடையத் தொடருவோமா இல்லையான்னு ஆயிருச்சில்ல, தஞ்சாவூருக்கு முன்னாடி திருக்காவனூர்பட்டி அப்படிங்கிற ஊர்ல? அங்கே எங்க உறவினர்கள்தான் அன்னதானம் செய்யறாங்க. எப்பவும் அங்கே சாப்பிடுவோம். போன வருஷமும் சாப்பிட்டோம். என் அம்மா அப்பாவும் வந்திருந்தாங்க. உறவினர்களை பார்த்தோம். அவங்கதான் ராத்திரி பதினொன்றரை மணிக்கு அம்மாவை உடனடியா மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டு போயி, சரியான சமயத்தில் பெரிய உதவி செய்தாங்க. ஆனா, அதே ஊர்ல, இந்த முறை நாங்க போன போது எங்க உறவினர்கள் யாரையுமே பார்க்கல! ஒரே ஒரு தெரிஞ்ச (எங்கேயோ பார்த்த மாதிரி) முகம்தான் இருந்தது. அவருக்கும் எங்களை அடையாளம் தெரியல. ஆனா இதே இடத்தில் போன வருஷம் அத்தனை பேர், சொல்லி வெச்ச மாதிரி இருந்து, அவங்களும் தஞ்சாவூர்க்காரங்களா இருந்து, அம்மாவுக்கு உடனடியான கவனிப்பு தேவையா இருந்த போது உதவினாங்க! நினைச்சுப் பார்த்த போது ஆச்சர்யமாவும் நெகிழ்ச்சியாவும் இருந்தது.
என்ன இருந்தாலும் அவ க்ரேட்தான் இல்ல! அவளைப் பற்றி இப்படி நிறைய சொல்லலாம்... இப்போதைக்கு இதோட நிறுத்திக்கிறேன் :)
எல்லாரும் நல்லாருக்கணும்!
அன்புடன்
கவிநயா