Tuesday, January 8, 2013

சொல்லின் செல்வன்

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்ட சிறப்புப் பதிவு.



இராமயணத்தில் ஸ்ரீ ராமனை நாராயணானாக உணர்ந்தவர்கள், அவனை ஆண்டவனாக அறிந்தவர்கள், ஒரு சிலரே. அவர்களில் ஒருவன் அனுமன்.  ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு, அனுமன் ஸ்ரீராமனைச் சந்திக்கும் படலத்தைப் பற்றி இங்கே பேசலாம். எத்தனையோ பெரியவர்கள் மிகவும் விசேஷமாக அனுபவித்துச் சொல்லும் கதை இது. என்றாலும், இந்தச் சிறிய அணிற்பிள்ளைக்கும் இப்படிப்பட்டதொரு ஆசை வந்து விட்டது. ஸ்ரீ ராமனும், அனுமனும் பொறுத்தருள வேண்டும். ஸ்ரீ ராமஜெயம்.

சுக்ரீவன், தன் அண்ணன் வாலிக்குப் பயந்து, அவன் வரமுடியாத இடமான ரிச்யமுக பர்வதத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான். வாலி அங்கே வர மாட்டான் என்ற நிம்மதியோடு தன்னுடைய சில மந்திரிகளோடும், பரிவாரத்தோடும் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தவனுக்கு அன்றைக்கு ஒரு சோதனை வருகிறது. இரண்டு வில்லாளிகள், இவர்கள் இருக்கும் மலை நோக்கி வந்து கொண்டிருப்பதை, தொலைவில் இருந்து பார்த்து விடுகிறான். உடனே பயம் பிடித்துக் கொள்கிறது. ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல, யாரைப் பார்த்தாலும் வாலியின் ஆட்களாகவே தெரிகிறது அவனுக்கு.

சுக்ரீவனின் நல்வினைப் பயன் இரண்டு விதங்களில் அருமையாக வேலை செய்கிறது. ஒன்று, தன்னிகரில்லா ஆஞ்சநேயன் அவனுக்கு மந்திரியாக அமைந்தது. இரண்டு, பரம்பொருளான ஸ்ரீ ராமன் அவனைத் தேடி வந்தது! நாம் தேடி, வேண்டி, விழைந்து, முயன்று, காணத் தவிக்கும் பரமானந்தமே அவனைத் தேடி வருகிறது என்றால், அவன் செய்த நல்லூழ்தான் என்னே!

செய்வதறியாத போதுகளில் செய்வது போல், அப்போதும் தன் மதி மந்திரியான அனுமனைத்தான் அழைக்கிறான். அவனிடம் தன் அச்சத்தைத் தெரிவித்து, தொலைவில் வந்து கொண்டிருக்கும் வில்லாளிகள் யாரென அறிந்து வரும்படி பணிக்கிறான்.

பாற்கடலைக் கடைந்த போது, முதலில் ஆலகால விஷம்தான் பொங்கி வருகிறது; அதைக் கண்ட அனைவரும் பீதியடைந்து கலங்குகையில், முக்கண்ணன் அங்கே வந்து, ‘அஞ்சற்க’ என்று சொல்லி, தானே அந்த விஷத்தை உண்டு அனைவரையும் காத்தருள்கிறார். அந்த சிவனைப் போலவே இங்கே கலங்கி நின்ற வானரர்களுக்கு, ‘அஞ்சற்க’ என்று அனுமன் அபயம் அளிக்கிறானாம். அனுமனும் சிவ பெருமானின் அம்சமாகவே கருதப்படுவதால் கம்பனின் உவமையும் அப்படியே இருக்கிறதாம்.

அபயம் அளித்த ஆஞ்சநேயன், “நான் போய் அவர்கள் யாரென்று அறிந்து வருகிறேன்”, என்று சொல்லி, ஒரு மாணவப் பிரம்மச்சாரியின் வடிவத்தை எடுத்துக் கொள்கிறான். (ஒரு வேளை அவர்கள் வாலி அனுப்பிய ஆட்களாகவே இருந்து விட்டால்?).

அவ்வுருவுடன் அவர்கள் இருக்கும் பக்கம் செல்கிற வாயு புத்திரன், அவர்கள் கண்களில் படாதபடி மறைந்து நின்று கொண்டு, அவர்களை உற்று நோக்குகிறான். இங்கேதான் அனுமன் body language –ஐப் படிப்பதில் எவ்வளவு தேர்ந்தவன் என்று அழகாகக் காட்டுகிறார் கம்ப நாட்டாழ்வார்.

“வில்லேந்தி இருந்தாலும் இவர்கள் இருவரும் தவ வேடமும் பூண்டிருக்கிறார்கள். இது முரண்பாடாக இருக்கிறதே.  நடந்து வந்த களைப்பையும் மீறி, புழுதி படிந்த தோற்றத்தையும் மீறி, அவர்களின் தேஜஸானது விழிகளைக் கூசச் செய்கிறது. அதனோடு கூட இவர்களிடத்தில் ஏதோ ஒரு பெருங் கோபமும், சோகமும் தெரிகிறது. ஏதோ ஒரு விலைமதிப்பில்லாத பொருளைத் தொலைத்து விட்டுத் தேடுவது போல அங்குமிங்கும் பார்த்தபடியே இருக்கிறார்கள்.  ஒரு வேளை இவர்கள் முத்தேவர்களோ? இருக்காது, இருவர் மட்டும் தானே இருக்கிறார்கள்? கொடிய மிருகங்கள் கூட இவர்களைக் கண்டதும் தன் கன்றுகளைக் கண்டது போல் மனம் நெகிழ்ந்து அன்பைப் பொழிகின்றன. மயில்கள் தங்கள் தோகைகளை விரித்து அவர்களுக்குக் குடை பிடிக்கின்றன. இவர்கள் நடந்து வரும் பாதையில் கிடக்கின்ற கற்களும் புற்களும் கூட இவர்கள் பாதங்களை அழுத்தாமல் மலர்களைப் போல் குழைந்து கொடுக்கின்றன. இவர்களைப் பார்த்தாலே மனித உருவில் வந்த பரம்பொருள் போலல்லவா இருக்கிறது.”

இப்படியாக பலவாறு எண்ணமிடும் புத்திமானான அனுமனுக்கு, இவர்கள் உயர் குணத்தோர் என்பதும், தருமத்திலும், நல்லொழுக்கத்திலும், கருணையிலும் தமக்கு நிகரில்லாதவர் என்பதும் புரிகிறது.  அவர்களைக் காணக் காணத் தன் என்பும் உருகும் அளவு அன்பு பெருக்கெடுப்பதை உணர்கிறான். முன் எப்போதோ விட்டுப் பிரிந்தோரை வெகு காலத்திற்குப் பின் பார்ப்பது போல் செயலற்று நிற்கின்றான். தன்னையறியாமலேயே தன் உள்ளத்தில் எல்லையில்லாமல் ஊறும் அன்பிற்குக் காரணம் அறியாது திகைக்கிறான்.

அனுமனின் அத்தகைய நிலையை, ஸ்ரீ ராமன்  யாரென அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் அன்பூற நிற்கின்ற நிலையை நினைத்தாலே நம் நெஞ்சம் நெகிழ்கின்றது. இறைவனை அறியும் முன்பு இருக்கக் கூடிய மனநிலையை ஸ்ரீ ராமகிருஷ்ணர் வர்ணிக்கையில் “கதிரவன் உதிக்கும் முன்பு கீழ்வானம் சிவந்து, அவனை வரவேற்கத் தயாராக இருப்பது போல் இருக்கும்” என்பார். அதைப் போன்ற மனநிலையில்தான் அனுமனும் இருந்தான் போலும்.

பிறகு அவர்களைப் பற்றி பயம் கொள்ளக் காரணம் இல்லையென்று நிச்சயித்து, அவர்கள் கண்களில் படும்படியாக முன்னால் வந்து, “உங்கள் வருகை துன்பம் இல்லாததாக இருக்கட்டும்”, என்று வாழ்த்துகிறான். பதிலாக இராமனும், “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று வினவுகிறான்.

“மேகங்கள் திரண்டிருப்பது போல அழகான நீல நிறத்தைக் கொண்டவனே! பெண்களுக்கு நஞ்சு போல இருப்பவனே! குளிர்ச்சி மிகுந்த பனியிலும் வாடாத தாமரை மலர் போல மலர்ந்திருக்கும் சிவந்த அழகிய விழிகளை உடையவனே! நான் வாயுதேவனுக்கு அஞ்சனையிடத்தில் பிறந்தேன். அனுமன் என்பது என் பெயராகும்” என்கிறான்.

அனுமன் பேசுவதிலிருந்தே அவனுக்கு ஸ்ரீ ராமனிடம் ஏற்பட்டு விட்ட ஈடுபாடு விளங்குகிறது. அதிலும் “நளிரிரும் பனிக்குத் தேம்பாக் கஞ்சமொத்த அலர்ந்த செய்ய கண்ண” என்ற தொடர் எனக்கு மிகவும் பிடித்தது. ‘குளிர்ச்சி மிகுந்த பனியிலும் வாடாத தாமரை மலர் போன்ற சிவந்த’ என்ற நேரடிப் பொருள் மட்டும் அல்லாமல் இன்னொரு பொருளையும் காண முடிகிறது. கண்ணீர் துலங்கும் கண்களை, பனித் துளி படிந்த மலருக்கும் ஒப்பிடலாம்.  அதாவது சீதா பிராட்டியைக் காணாமல் கண்கள் கலங்கிய வண்ணமே இருக்கிறான் ராமன். இடைவிடாது கலங்கும் காரணத்தால் அவனுடைய விழிகள் சிவந்திருக்கின்றன.  அப்படி இருந்த போதிலும் அவன் விழிகள் செந்தாமரை மலர்கள் போல விரிந்து அத்தனை அழகாகக் காட்சி தருகின்றன என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.

“இந்த மலையில் தங்கி வாழ்ந்து வருகின்ற சூரியனுக்கு மகனாகப் பிறந்த சுக்ரீவன் ஏவிய பணிகளைச் செய்பவன் நான். உங்கள் வருகையைப் பார்த்து மகிழ்ந்த சுகிரீவன், தாங்கள் யாரென்று பார்த்து வரும்படி என்னைப் பணித்தான்”, என்கிறான்.

அனுமன் இவ்வாறெல்லாம் பேசிக் கொண்டு வரும்போதே, அவன் யாரென்று தெரிந்து விடுகிறதாம், இராமனுக்கு. “இவனே சிறந்த குணங்கள், கல்வி, கல்வியால் வரும் அடக்கம், அறிவு, இவை அனைத்தின் வடிவமாவான்”, என்று தெரிந்து கொண்டு, தம்பிக்கும் அதனை எடுத்துரைக்கிறான். கல்வி இருக்கும் இடத்தில், அது உண்மையான கல்வியாக இருக்கும் பட்சத்தில் கூடவே பணிவும் இருக்கும் என்பதை இங்கே சொல்லாமல் சொல்கிறார், கம்பர்.

“தம்பீ, இவன் பேசிய பேச்சிலிருந்தும், பேசிய விதத்திலிருந்தும், இவன் அறியாத வேதங்களோ, கலைகளோ இல்லையெனும்படியான அறிவுத் தெளிவு தெரிகிறது பார்த்தாயா? இப்படி சொல்லின் செல்வனாக விளங்கும் இவன் நான்முகனோ, அல்லது சிவபெருமானேதானோ?” என்று வியக்கிறான், இராமன்.

அந்த அளவிற்கு அன்பும், பண்பும், அடக்கமும், மட்டுமின்றி, அனுமனின் பேச்சு தெளிவாகவும், இலக்கணப் பிழைகளோ, உச்சரிப்புப் பிழைகளோ அற்றும், அதிக சப்தமாக இல்லாமலும், மிக மெதுவாக இல்லாமலும், கேட்பதற்கு தெளிவாகவும் இனிமையாகவும் இருந்ததாம். அப்படிப் பேசக் கூடியவர்கள், அந்த அளவு கல்வியும் அறிவும் தெளிவும் பெற்றவர்கள் பிரமனுடைய அல்லது சிவனுடைய அம்சமாகவோதான் இருக்க வேண்டும், அவர்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என்று வியக்கின்றானாம் இராமன். இந்த இடத்தில் இராமன் தானே நாராயணன் என்று அவன் அறிந்திருப்பது போலக் காட்டி இருக்கிறார் கம்பர். தான் இங்கு இருக்கையில் மற்ற இருவரில் ஒருவனாகத் தானே இவன் இருக்கக் கூடும் என்று கேட்கிறான் போலும்.

மேலும், “இவன் உருவத்தைப் பார்த்து இவன் சாதாரணமானவன் என்று நினைத்து விடாதே. உலகத்துக்கே அச்சாணி போன்று இருக்கும் இவனுடைய திறமைகளை எல்லாம் நான் தெரிந்து கொண்டேன்; நீயும் கூடிய விரைவில் தெரிந்து கொள்வாய்”, என்கிறான்.

பிறகு அனுமனை நோக்கி, “உன் அரசன் சுக்ரீவன் எங்கே இருக்கிறான் என்று சொல். அவனைப் பார்க்கத்தான் நாங்களும் வந்திருக்கிறோம். எங்களை அவனிடம் அழைத்துச் செல்”, என்கிறான்.

இவ்வாறு இராமன் சொன்னதைக் கேட்டு அனுமனும், தங்களையும் சுக்ரீவனையும் காப்பதற்கெனவே வந்ததற்காக அவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களின் ஆற்றலைப் போற்றிப் புகழ்கிறான் . சுக்ரீவனின் வரலாற்றை விளம்புகிறான்… தான் ‘சொல்லின் செல்வன்’தான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறான். “நீங்கள் யார் என்று” என்று நேரடியாகக் கேட்காமல், “யாரென விளம்புகேன் நான் என் குலத்தலைவற்கு உம்மை”, அதாவது, “எங்கள் குலத் தலைவனாகிய சுக்ரீவனிடம் சென்று நீங்கள் யாரென்று சொல்வேன்?” என்று கேட்கிறான். இராமனின் ஆணைக்கிற்கிணங்க தம்பி இலக்குவன் தங்களுக்கு நேர்ந்தவற்றை எடுத்துச் சொல்லத் தொடங்குகிறான்…

இவ்விதமாக அனுமன் இராமனைச் சந்தித்த கணம் முதலாகவே அவர்கள் இருவருக்கும் இடையேயான பரஸ்பர அன்பு வெளிப்பட்டு விட்டது.

ஆஞ்சநேயனுக்கு ஸ்ரீராமன் மேல் இருந்த பிரேமையும், அன்பும், பக்தியும் போல் நமக்கும் ஏற்பட அஞ்சனா புத்திரன் அருளட்டும்.

ஸ்ரீ ராமஜெயம்.

அன்புடன்
கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://smilemakerkrishna.blogspot.com/2012/08/lord-rama-and-hanuman.html

பி.கு.: ஜனவரிக்கு இதுவே இறுதிப் பதிவு. ஊருக்குப் போகிறேன். கொஞ்ச நாட்களுக்கு உங்களுக்கு விடுமுறை (விடுதலை? :) அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் வாழ்த்துகள்!



17 comments:



  1. வேறு ஒரு கான்டெக்ஸ்டில் ராமாவதாரத்தைப் பற்றிச் சிந்திந்துக்கொண்டிருந்த எனக்கு, நீங்கள் வர்ணித்து இருக்கும்
    கம்பனின் பாடல், நல்லது ஒரு க்ளூவாக இருக்கிறது. இதுவும் அந்த ஹனுமனின் செயல்தானோ என்னவோ ?

    ராமன் மனிதனாகப் பிறந்து, மனிதனாகவே தன்னை தன்னைச் சுற்றி உள்ள அனைவருக்கும் காட்டி, மனிதருள்
    மாணிக்கமாக, தருமத்தின் தலைவனாக வாழ்வது எப்படி என்பதை வாழ்ந்து காண்பித்தான் என்பது நாம் எல்லோரும்
    கருதுவதே.

    ராமன் எந்த ஒரு சந்த்ர்ப்பத்திலும் தான் அந்த நாராயணனே என்று சொல்லவில்லை. யாருக்கும் தனது செய்கைகளால், கோடி காட்டவில்லை. ஆயினும் ராமனாகப் பிறந்த உடன், ராமனுக்கே தான் நாராயணன் தான் என்ற உணர்வு
    பிறந்தது முதல் பட்டாபிஷேகம் வரை, ஏன் அதற்குப் பின்னேயும் இருந்ததா என்பதை சில பௌராண்யகர்கள்
    விவாதிக்கிறார்கள்.

    நீங்கள் குறிப்பிட்ட இடம் கம்பனின் சொற்கள், சிந்தனைகள் படி, ராமனுக்குத் தான் நாராயணன் என்ற உள் உணர்வு
    இருந்தது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

    இது ஏன் முக்கியம் என்றால், இந்த புரிதல் நமக்கு உண்டாகும் பட்சத்தில், ராமாயணத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகளை
    ஒரு விதமான கான்ட்ரடிக்ஷன் இருப்பதாகத் தோன்றுவதை இல்லை எனச்சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

    சொல்லப்போனால், ராமனும் சீதையும் காட்டுக்குப் புறப்படுகையில், எல்லா வற்றையும் துறந்து மரவுறி தரித்தே
    செல்கிறார்கள். எல்லா ஆபரணங்களையும் துறந்தே செல்கிறார்கள். அப்படி இருக்கையில்,

    ஒன்றிரண்டு கேள்விகள் வருகின்றன.

    ராமன் தன்னிடம் அடையாளச்சின்னமாக ஒரு கணையாழியை தந்திருப்பதாகச் சொல்லி அதை அசோக வனத்தில்
    இருக்கும் சீதையிடம் தருகிறான் ஹனுமன். அந்தக் கணையாழியிலும் ராம என்ற எழுத்துக்கள் இருப்பதாக சீதை
    பார்க்கிறாள். இந்த கணையாழி எப்படி ராமனிடம் வந்தது ? அவர்தான் எல்லாவற்றையும் துறந்து தானே காட்டுக்கு
    கிளம்பினார் ?

    இது ஒரு ஐயமே. இன்னும் இது தீர்ந்த பாடில்லை. அது ஒரு புறமிருக்கட்டும்.
    இன்று ஹனுமன் ஜயந்தி. அவன் புகழ் பாடுவோம்.

    அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்ய தவ கிம் வத !!
    ராம தூத க்ருபா சிந்தோ மத் கார்யம் சாதக ப்ரபோ.



    யத்ர யத்ர ரகுனாத கீர்த்தனம்.
    தத்ர ஹனுமன் விராஜிதம்

    ஹனுமனைத் துதிப்போம்.

    சுப்பு தாத்தா.

    சென்னைக்கு வரும்பொழுது அவசியம் எங்கள் வீட்டுக்கு வரவும்.

    ReplyDelete
    Replies
    1. //வேறு ஒரு கான்டெக்ஸ்டில் ராமாவதாரத்தைப் பற்றிச் சிந்திந்துக்கொண்டிருந்த எனக்கு, நீங்கள் வர்ணித்து இருக்கும்
      கம்பனின் பாடல், நல்லது ஒரு க்ளூவாக இருக்கிறது. இதுவும் அந்த ஹனுமனின் செயல்தானோ என்னவோ ?//

      அப்படியா, ரொம்ப சந்தோஷம் தாத்தா :)

      //இது ஏன் முக்கியம் என்றால், இந்த புரிதல் நமக்கு உண்டாகும் பட்சத்தில், ராமாயணத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகளை
      ஒரு விதமான கான்ட்ரடிக்ஷன் இருப்பதாகத் தோன்றுவதை இல்லை எனச்சொல்ல வாய்ப்பு இருக்கிறது.//

      ஸ்ரீ ராமன் நாராயணன் என்று அவனுக்குத் தெரிகிறதோ இல்லையோ, நமக்குத் தெரிவதால், அவன் எது செய்தாலும் சரியே - என்னைப் பொறுத்த வரை :)

      நகைகள் பற்றி கீதாம்மா சொல்லியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்...

      //அது ஒரு புறமிருக்கட்டும்.
      இன்று ஹனுமன் ஜயந்தி. அவன் புகழ் பாடுவோம்.//

      இதுதான் சரி தாத்தா :) ஸ்ரீ ராமஜெயம்.

      Delete
  2. இந்தக் கணையாழி குறித்து ஏற்கெனவே நான் ஒரு பதிவு எழுதின நினைவு! கணையாழி குறித்த தகவல்கள் நினைவில் இருந்தாலும் பதிவைத் தேடி எடுத்தே போட்டு விடுகிறேனே மீள் பதிவாக! :)))))

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதாம்மா. இங்கே பின்னூட்டம் படிச்சு அங்கே வர்றதுக்குள்ள பதிவிட்டுட்டீங்களே! ரொம்ப வேகம் அம்மா நீங்க! வருகைக்கு நன்றி.

      Delete
  3. நல்வரவு கவிநயா, திருச்சிக்கும் வருவீங்க தானே! :))))

    ReplyDelete
    Replies
    1. திருச்சி விமான நிலையத்துக்கு மட்டும் வருகிற வாய்ப்பு இருக்கிறது அம்மா :)

      Delete
  4. ஓஹோ, மன்னிக்கணும், அது சூடாமணியின் கதை. ஆனாலும் சீதையும் ராமனும் சில முக்கிய ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கலாம். அல்லது சீதைக்கு அநசூயா கொடுத்ததில் இருந்திருக்கலாம். :)))) மேலும் பெண்கள் தங்கள் கைவளையல்கள், மூக்குத்தி, நெற்றியில் அணியும் ஆபரணம், கால்களின் மெட்டி, கொலுசு போன்றவற்றைக்கழட்டுவதில்லை. சுமங்கலிகளின் அடையாளம் இவை. அப்படியும் சீதையிடம் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. :))))) எதற்கும் சூடாமணியின் கதையை மீள் பதிவாய்ப் போடுகிறேனே! :))))

    மோதிரம் ஜனகர் கல்யாணத்தின் போது ராமனுக்குக் கொடுத்திருக்கலாம். இல்லையா?

    ReplyDelete
  5. அக்காவுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  6. அனுமன் ஜெயந்தி அன்று வாசிக்கக் கிடைத்த அருமையான பதிவு.

    இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  7. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. நல்ல கட்டுரை... அருமையான பகிர்வு....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சே.குமார்!

      Delete
  9. சொல்லின் செல்வர் உங்களோட எளிமையான நடையில் இன்னும் இனிமையாய் தெரிகிறார். ஊருக்கு போயிட்டு எப்ப வருவீங்க?..........

    ReplyDelete
    Replies
    1. வந்தாச்! தக்குடுவை இந்தப் பக்கம் வரவழைத்த சொல்லின் செல்வனுக்கு நன்றி! :)

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)