லக்ஷ்மியம்மா அந்த ரயில் பெட்டியில் ஏறிய போது யாருமே இருக்கவில்லை. அதற்காக அங்கு ஏற்கனவே குழந்தையுடன் இருந்த இளம்பெண்ணும், கால் நீட்டிப் படுத்துக் கிடந்த பாட்டியும் லக்ஷ்மியம்மாவுக்கு மனிதர்களாகத் தெரியவில்லை என்று அர்த்தமில்லை. நாம் கூட நெரிசலை எதிர்பார்த்து நுழையும் இடமொன்றில் கூட்டம் இல்லையென்றால், “அட, யாருமே இல்லையே” என்று நினைத்துக் கொள்வதில்லையா, அதே போலத்தான்.
பகல் வண்டி என்பதால் அப்படி இருந்தது போலும். இருக்கைக்கு அடியில் பெட்டி வைக்க இடம் இருக்கிறதா என்று குனிந்து பார்த்தார். ஒன்றுமே இல்லாமல் காலியாக இருந்தது. இருந்த இரண்டு பேரும் சுமையே இல்லாமல் வந்திருக்கிறார்கள் போலும் என்று எண்ணமிட்டபடி, கையில் இருந்த பெட்டியை அடியில் தள்ளி விட்டார். “ஸ்… அப்பாடா!”, ஆயாசத்தை வாய் விட்டு அறிவித்தபடி இளம் பெண் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். எதிர் இருக்கையில்தான் பாட்டி நீட்டிப் படுத்து விட்டாரே.
அந்தப் பெண் இவர் வந்ததைக் கூடக் கவனிக்காமல், சலனமே இல்லாமல் வெளியில் வெறித்தபடி இருந்தாள். தூங்கி விட்டிருந்த குழந்தையை பக்கத்தில் கிடத்தியிருந்தாள். ஒன்று அல்லது ஒன்றரை வயது இருக்கலாம். பெண் குழந்தை. கீழே எதுவும் விரிக்காமல் அப்படியே இருக்கை மீது கிடத்தியிருக்கிறாள்.
லக்ஷ்மியம்மாவும் அசதியுடன் இருக்கையில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டார். ரயில் கிளம்ப இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. முன்பு மாதிரி இப்போதெல்லாம் அலைய முடியவில்லை. வயதான உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.
மதுரையில் முதியோர் இல்லத்தை நடத்தும் தம்பதியர், மாதம் ஒரு முறை அங்கு வந்து வேண்டியதை கவனித்துச் செல்வார்கள். இந்த முறை அவர்கள் வர முடியாத காரணத்தால், மதுரையில் இல்லப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் லக்ஷ்மியம்மா, அவர்களைத் தேடி சென்னை வர வேண்டியதாகி விட்டது. சீக்கிரமே கொஞ்சம் இளைஞர்களாகப் பார்த்து உதவிக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அந்த நினைப்பு கூடவே இதழோரம் முறுவலையும் கொண்டு வந்தது. இளைஞர்கள் வீட்டிலிருக்கும் முதியோரைப் பார்த்துக் கொண்டாலே இதைப் போன்ற இல்லங்களுக்கு அவசியமே இருக்காதே. இதில் எந்த இளைஞன் இத்தனை பேரைப் பார்த்துக் கொள்ள முன் வருவான் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.
இலேசாக கண் அயர ஆரம்பித்தவர், குழந்தையின் சிணுங்கலில் விழித்துக் கொண்டார். அப்போதும் அந்தப் பெண் அசையாமல்தான் இருந்தாள். சிணுங்கலில் ஆரம்பித்த குழந்தை இப்போது வீறிட்டு அழ ஆரம்பித்தது. அந்தப் பெண் ஒரு வேளை காது கேளாதவளோ என்ற சந்தேகம் ஏற்பட்டது, லக்ஷ்மியம்மாவுக்கு. அந்தப் பெண்ணின் கையை இலேசாகத் தட்டிக் கூப்பிட்டார், “குழந்தை அழறாம்மா”.
திடுக்கிட்டுத் திரும்பிய அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்த கணம், இவரும் திடுக்கிட்டு விட்டார். முகம் வலது பக்கத்தில் நன்றாக சிவந்து வீங்கியிருந்தது. முகத்திலும், கழுத்திலும், அங்கங்கே நகம் பட்டது போல் கீறல்களும், சூடு பட்டது போல் தழும்புகளும், ரவிக்கை அனுமதித்த வரை தெரிந்தன.
குழந்தையை ‘விருட்’டென்று அள்ளி அணைத்துக் கொண்டாள். இதற்குள் ரயில் நகர ஆரம்பித்து, வேகம் எடுத்திருந்தது. குழந்தைக்கு வெளியில் பலவிதமாக வேடிக்கை காட்டியபடி, கையோடு இருந்த சிறு பையில் இருந்து பிஸ்கட்டும் தண்ணீரும் எடுத்துக் கொடுத்தாள். அதைச் சாப்பிட்டதும் கொஞ்சம் அமைதியானது குழந்தை.
அந்தப் பெண்ணைப் பார்க்கப் பார்க்க இரக்கம் பெருகியது லக்ஷ்மியம்மாவுக்கு. எத்தனையோ துன்பங்களை அனுபவித்தவள் என்று முகம் சொல்லியது. ஒரு வேளை அவற்றிலிருந்து தப்பிச் செல்கிறளவாய் இருக்க வேண்டும்; அதுதான் சுமையெதுவும் காணோம் என்று நினைத்துக் கொண்டார். அந்த எண்ணம் அவருக்கே ஒரு நிம்மதியைத் தந்தது. மீனாட்சி அம்மன் படத்துடன் இருந்த தன்னுடைய சாவிக் கொத்தை, குழந்தைக்கு விளையாடக் கொடுத்தார். அதுவும் சமர்த்தாக இருக்கையில் அமர்ந்து கொண்டு அதை வைத்துக் கொண்டு விளையாடியது. “உன் குழந்தை ரொம்ப சமர்த்தம்மா”, என்றார். அந்தப் பெண் மெதுவாக புன்னகைக்க முயன்றாள். முயற்சி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.
அப்போதுதான் எதிர் இருக்கையில் படுத்திருந்த பாட்டிக்கு வேகமாக மூச்சு இழுக்க ஆரம்பித்தது. மூச்சு திணறுகிறதோ? என்ன செய்வது? ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. லக்ஷ்மியம்மாவுக்கு பதட்டமாக இருந்தது. “அம்மா, அம்மா”, என்று சொல்லி பாட்டியை எழுப்ப முயன்றார். இதற்குள் அந்தப் பெண், “இருங்க அம்மா, ஒரு நிமிஷம். குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க”, என்று விட்டு, பதட்டப்படாமல் எதிர் இருக்கைக்கு சென்றாள். பாட்டியை மெதுவாக கைத்தாங்கலாக எழுப்பி நேராக உட்கார வைத்தாள். கையைப் பிடித்து நாடி பார்த்தாள். பாட்டி ஏதோ சொல்ல முயற்சிப்பது தெரிந்தது. அப்போதுதான் பாட்டியிடம் இருந்த மஞ்சள் பையை இருவரும் பார்த்தார்கள். அந்தப் பெண் அந்தப் பையைத் துழாவி, அதில் ஆஸ்துமாவுக்கு உதவும் இன்ஹேலரைக் கண்டு பிடித்து எடுத்தாள். அதைப் பயன்படுத்த பாட்டிக்கு உதவினாள். கொஞ்ச நேரத்தில் சுவாசம் சீரானது. லக்ஷ்மியம்மாவுக்கு அப்பாடா என்று இருந்தது. தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை பாட்டிக்குக் கொடுத்து குடிக்கச் சொன்னார்.
பாட்டி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டதும், “ரொம்ப நன்றி அம்மா”, என்று இருவருக்கும் பொதுவாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
“என்னம்மா ஆச்சு, ஏன் இந்த வயசில, இப்படி உடம்பு சரியில்லாம இருக்கும்போது தனியா பயணம் பண்றீங்க?” என்று கேட்டதுதான் தாமதம், பாட்டி தன் கதையைப் படபடவென்று பொரிந்து கொட்டி விட்டார். ஒரே மகன், கணவனில்லாத தனிமை, கொடுமைப் படுத்தும் மருமகள். இதையெல்லாம் இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் வந்தது வரட்டும் என்று சொல்லாமல் கிளம்பி விட்டிருக்கிறார். மதுரையில் யாரும் இல்லா விட்டாலும் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் ஏதோ ஒரு தூண்டுதலால் மதுரைக்குப் பயணம்.
இளம்பெண்ணும் லக்ஷ்மியம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். லக்ஷ்மியம்மா அந்தப் பாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டார். “கவலைப் படாதீங்கம்மா. மீனாட்சி உங்களை சரியான இடத்துக்குதான் கூட்டி வரா. என் பேர் லக்ஷ்மி. நான் மதுரையில ஒரு முதியோர் இல்லத்துக்கு தலைவியா இருக்கேன். நீங்க என்கூட வந்திருங்க. ஒண்ணும் பிரச்சனையில்லை. ஆனா, என்னதான் இருந்தாலும் நீங்க சொல்லாம வந்தது தவறு அம்மா. உங்க மகன் நிச்சயம் கவலையா இருப்பார். நீங்க மதுரை வந்ததும் அவருக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லிடுங்க. என்னம்மா?” என்றதும், கண்களில் நன்றி பொங்க, “அப்படியே ஆகட்டும் அம்மா”, என்றார்.
“உன்னைப் பற்றி சொல்லவே இல்லையே அம்மா?” என்று அந்த இளம்பெண்ணைக் கேட்கவும், இவர்கள் இருவரையும் அதுவரை கவனித்துக் கொண்டிருந்தவள், “என் பெயர் புவனா, அம்மா. குழந்தை பெயர் செல்வி. தமிழ்ச் செல்வி. நான் ஒரு அனாதை”, என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.
“என்னம்மா புவனா, இத்தனை அழகான சமர்த்துக் குழந்தையையும், எங்களையும் வச்சுக்கிட்டு இப்படி சொல்லலாமா?”
“அது சரி… உனக்கு எப்படி பாட்டிக்கு என்ன தேவைன்னு சரியா தெரிஞ்சது?” ஆச்சரியத்துடன் அவளுடைய அந்தச் செயலைப் பாராட்டும் குரலில் கேட்கவும், புவனா முகத்தில் இப்போது நிஜமான புன்னகை அரும்பியது.
“நான் ஒரு நர்சு அம்மா. செல்வி பிறக்கற வரை வேலையும் பார்த்திட்டிருந்தேன்”, என்றாள்.
“ரொம்ப சந்தோஷம் அம்மா. நல்ல காலம், நீ மட்டும் கூட இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்? நினைச்சாலே பயமா இருக்கு”
“எங்க இல்லத்துல கூட உன்னை மாதிரி சுறுசுறுப்பான, சமயோசிதமான ஆள் தேவையா இருக்கு….. நீ……. உன்னால…..” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்,
“நான் வரேம்மா!” ஆவலுடன் அவசரமாகச் சொல்லி விட்டாள், புவனா. பிறகு சிறிது வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள்.
திரும்பவும் உறங்கி விட்டிருந்த குழந்தையின் கையிலிருந்து சாவிக் கொத்து நழுவியது. அதனை எடுத்து லக்ஷ்மியம்மாவின் கையில் கொடுத்த புவனா, “நன்றி அம்மா”, என்றாள். மனம் போலவே குரலும் நெகிழ்ந்திருந்தது. அவள் கன்னத்தை அன்போடு இலேசாகத் தடவிய லக்ஷ்மியம்மா, “அதனால என்னம்மா?” என்றபடி, தன்னுடன் எப்போதும் கூடவே இருக்கும் மீனாட்சி அம்மையைப் பார்த்தார். அவளுடைய குறுஞ்சிரிப்பில்தான் எத்தனை அர்த்தங்கள்!
ரயில் சீராக ஓடிக் கொண்டிருந்தது.
--கவிநயா
பிரச்சனைகளுடன் கிளம்பிய மூவரின் ஒரு பயணத்திலான சந்திப்பு அந்த ஒரு புள்ளியிலிருந்து மறுபடி தொடங்குகிறது புதிய பயணத்தை அதுவும் ஒன்று சேர்ந்து புதிய நம்பிக்கையோடு.
ReplyDeleteமூவரின் கதையிலும் ஒளிந்திருக்கும் சோகங்கள்...ம்ம்ம் பெருமூச்சு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
நல்ல கதை கவிநயா. வாழ்த்துக்கள்.
//மூவரின் கதையிலும் ஒளிந்திருக்கும் சோகங்கள்...ம்ம்ம் பெருமூச்சு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
ReplyDeleteநல்ல கதை கவிநயா. வாழ்த்துக்கள்.//
ரீப்பிட்டே!!!... :-)
ஒரே பயணத்தில் மூன்று கதைகள் ;)
ReplyDeleteநன்றாக சொல்லியிருக்கிங்க அக்கா ;)
\\தன்னுடன் எப்போதும் கூடவே இருக்கும் மீனாட்சி அம்மையைப் பார்த்தார். அவளுடைய குறுஞ்சிரிப்பில்தான் எத்தனை அர்த்தங்கள்!\\
அப்போ மொத்தம் 4 பெண்கள்..நல்ல கூட்டாணி தான் ;)
அருமையான கதை கவிநயா....ஆனால் ராமலக்ஷ்மி சொன்னது போல பெருமூச்சை தவிர்க்க முடியலை. கதையின் நடை இயல்பா இருந்தது.
ReplyDelete//பிரச்சனைகளுடன் கிளம்பிய மூவரின் ஒரு பயணத்திலான சந்திப்பு அந்த ஒரு புள்ளியிலிருந்து மறுபடி தொடங்குகிறது புதிய பயணத்தை அதுவும் ஒன்று சேர்ந்து புதிய நம்பிக்கையோடு.//
ReplyDeleteநல்லா சொன்னீங்க. நன்றி ராமலக்ஷ்மி :)
//ரீப்பிட்டே!!!... :-)//
ReplyDeleteரிப்பீட்டுக்கும் வருகைக்கும் நன்றி மௌலி :)
//நன்றாக சொல்லியிருக்கிங்க அக்கா ;)//
ReplyDeleteஉங்க வருகை கண்டு மகிழ்ச்சி கோபி :) ரசனைக்கு நன்றி.
//அப்போ மொத்தம் 4 பெண்கள்..நல்ல கூட்டணி தான் ;)//
ஆமால்ல? :)
//அருமையான கதை கவிநயா....ஆனால் ராமலக்ஷ்மி சொன்னது போல பெருமூச்சை தவிர்க்க முடியலை. கதையின் நடை இயல்பா இருந்தது.//
ReplyDeleteவாங்க மீனா. ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் பார்க்கிறதில் மகிழ்ச்சி :)கதையை ரசித்தமைக்கு நன்றி. (மீனாட்சி இழுத்துட்டா போல :)
3 பெண்கள் வாழ்வின் நிலைகளைக் கோர்த்து அழகான சிறுகதையொன்றைத் தந்திருக்கிறீர்கள் சகோதரி..தொடருங்கள் !
ReplyDelete//லக்ஷ்மியம்மா அந்த ரயில் பெட்டியில் ஏறிய போது யாருமே இருக்கவில்லை. அதற்காக அங்கு ஏற்கனவே குழந்தையுடன் இருந்த இளம்பெண்ணும், கால் நீட்டிப் படுத்துக் கிடந்த பாட்டியும் லக்ஷ்மியம்மாவுக்கு மனிதர்களாகத் தெரியவில்லை என்று அர்த்தமில்லை. நாம் கூட நெரிசலை எதிர்பார்த்து நுழையும் இடமொன்றில் கூட்டம் இல்லையென்றால், "அட, யாருமே இல்லையே" என்று நினைத்துக் கொள்வதில்லையா, அதே போலத்தான்.//
ReplyDelete:-))
தொடக்கம் நன்றாக இயல்பாக இருக்கு அக்கா.
உலக நடப்பினை நன்றாகச் சொன்னீர்கள்.
//3 பெண்கள் வாழ்வின் நிலைகளைக் கோர்த்து அழகான சிறுகதையொன்றைத் தந்திருக்கிறீர்கள் சகோதரி..தொடருங்கள் !//
ReplyDeleteவாங்க ரிஷு. வருகைக்கு நன்றி. விகடனில் உங்க படைப்புகள் வெளி வந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! :)
//:-))
ReplyDeleteதொடக்கம் நன்றாக இயல்பாக இருக்கு அக்கா.
உலக நடப்பினை நன்றாகச் சொன்னீர்கள்.//
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி குமரா :)
நல்ல கருத்து நல்ல கதை.
ReplyDeleteஇளைஞர்கள் வீட்டிலிருக்கும் முதியோரைப் பார்த்துக் கொண்டாலே இதைப் போன்ற இல்லங்களுக்கு அவசியமே இருக்காதே
உண்மையான வார்த்தைகள். முதியோர் இல்லம் பற்றி எப்போதோ படித்த கவிதை.
"பால் குடித்த மிருகங்கள் எப்போதோ வந்து போகும் மனித மிருககாட்சிசாலை
நல்வரவு தி.ரா.ச ஐயா. முதல் முறையா வந்திருக்கீங்க.
ReplyDelete//பால் குடித்த மிருகங்கள் எப்போதோ வந்து போகும் மனித மிருககாட்சிசாலை//
'சுருக்'னு இருக்கு. நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு :)
உங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)
ரயிலைப் போலவே தொடர்கிறது கதையோடவே...மனசும்!
ReplyDeleteநல்வரவு அன்புமணி.
ReplyDelete//ரயிலைப் போலவே தொடர்கிறது கதையோடவே...மனசும்!//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இளைஞர்கள் வீட்டிலிருக்கும் முதியோரைப் பார்த்துக் கொண்டாலே இதைப் போன்ற இல்லங்களுக்கு அவசியமே இருக்காதே. இதில் எந்த இளைஞன் இத்தனை பேரைப் பார்த்துக் கொள்ள முன் வருவான் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.//
ReplyDeleteதவிர்க்க இயலா பிரச்சனைகள்..
//தவிர்க்க இயலா பிரச்சனைகள்..//
ReplyDeleteதவிர்க்க இயலும் என்றாலும், மனித இயல்பு விடுவதில்லை :(
வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி, இராஜராஜேஸ்வரி.