Monday, September 15, 2008

இந்த உலகில் எப்படி வாழ வேண்டும்?

பெரிய பெரிய செய்திகளையும் தத்துவங்களையும் மிக எளிமையான குட்டிக் கதைகள் மூலம் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கி விடுதல் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் தனிச் சிறப்பு. "Gospel of Sri Ramakrishna" புத்தகத்தினின்றும் அப்படிப்பட்ட சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன் இதனை எழுதுகிறேன். ஏற்கனவே குரங்குக்குட்டி பூனைக்குட்டி கதையைப் பார்த்திருக்கிறோம்... இப்போது இந்த உலகத்தில் வாழும் முறை பற்றி அவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்...


நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை முழுமையாகச் செய்ய வேண்டும்; அதே சமயம் இறைவனிடம் இதயத்தைப் பதிக்கவும் வேண்டும். அன்னை, தந்தை, மனைவி, மக்கள், என்று அனைவருடனும் வாழலாம். அவர்களிடம் அபரிமிதமான அன்பு செலுத்தும் அதே சமயம், அவர்கள் நமக்குரியவர்கள் அல்ல என்பதையும் உணர்வது அவசியம்.

ஒரு ஊரில் ஒரு பெரிய தனவந்தர் இருக்கிறார். அவர் குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டிருக்கிறாள். அவளும் அவர் குடும்பத்தையும் பிள்ளைகளையும் தன்னுடையவர்கள் போல மிகவும் அன்புடனும் கவனத்துடனும் கவனித்துக் கொள்கிறாள். அவர் இல்லத்தையும் தன்னுடையதாய் பாவித்து சுத்தம் செய்து அழகு படுத்தி, கவனித்துக் கொள்கிறாள். இத்தனையும் அவள் உண்மையான அன்புடன் செய்கின்ற போதிலும், அவள் தன் உள்மனதில் அந்த வீடும் குடும்பமும் பிள்ளைகளும் தனக்குச் சொந்தமில்லை என்று அறிந்திருக்கிறாள். அவள் உடல் இங்கே இருந்தாலும் அவளுடைய எண்ணங்கள் அவளுடைய சொந்த ஊரிலும் அவள் சொந்த பிள்ளைகளிடமுமே இருக்கின்றன.

அந்த பெண்மணியைப் போலத்தான் நாமும் இந்த உலகத்தில் வாழ வேண்டும். நாம் இங்கு வாழ்ந்தாலும், இங்கிருப்பவைகள் எதுவும் நமக்கு சொந்தமில்லை, அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்பதை உணர வேண்டும். அப்படி உணர்ந்து சுற்றி உள்ளவர்களிடம் பற்றில்லாத அன்பு மட்டுமே செலுத்தி, மனதை இறைவனிடம் செலுத்தி வாழ வேண்டும்.

***

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவடிகள் சரணம்.

12 comments:

 1. //உணர்ந்து சுற்றி உள்ளவர்களிடம் பற்றில்லாத அன்பு மட்டுமே செலுத்தி, மனதை இறைவனிடம் செலுத்தி வாழ வேண்டும்//

  உண்மை, ஆனா...இந்த எண்ணம் எப்போதும் மனதில் இருக்க, செயலில் இருக்க வேண்டுமே?. :)

  ReplyDelete
 2. வருக மௌலி.

  //இந்த எண்ணம் எப்போதும் மனதில் இருக்க, செயலில் இருக்க வேண்டுமே?. :)//

  நீங்களே இப்படிக் கேட்டால் நாங்கல்லாம் என்ன ஆகறது? :) முயற்சி திருவினையாக்கும். (சமீபத்துல கூட நீங்கதான் இதையும் எதற்கோ சொன்ன நினைவு :)

  ReplyDelete
 3. //உணர்ந்து சுற்றி உள்ளவர்களிடம் பற்றில்லாத அன்பு மட்டுமே செலுத்தி, மனதை இறைவனிடம் செலுத்தி வாழ வேண்டும்//


  அன்பை
  ஆருயிரிடமும்
  அகத்தை
  ஆண்டவனிடமும்
  அளித்து விட்டால்
  அகிலத்தில்
  அல்லல் உண்டோ
  அனைவருக்கும்


  என்கின்றீர்கள்


  அருமை

  ReplyDelete
 4. 'Attachment with detachement'. அதுதானே கவிநயா?

  //சுற்றி உள்ளவர்களிடம் பற்றில்லாத அன்பு மட்டுமே செலுத்தி, மனதை இறைவனிடம் செலுத்தி வாழ வேண்டும்.//

  அப்படித்தான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கையிலேயே பல சந்தர்ப்பங்கள் நாம் அப்படியில்லை என உணர்த்தியிருக்கின்றன. 'முயற்சி திருவினையாக்கும்' என்பதையே எனக்கான பதிலாகவும் எடுத்துக் கொள்கிறேன்.

  வாழ்த்துக்கள் அருமையான பதிவுக்கு!

  ReplyDelete
 5. ஆஹா, அழகா சொன்னீங்க திகழ்மிளிர். மிக்க நன்றி.

  ReplyDelete
 6. //அப்படித்தான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கையிலேயே பல சந்தர்ப்பங்கள் நாம் அப்படியில்லை என உணர்த்தியிருக்கின்றன.//

  உண்மைதான். ஆனா அந்த விழிப்புணர்வு வந்துட்டா மிச்சதெல்லாம் பின்னாடியே வந்துடும்னு நம்பலாம் :)

  கருத்துகளுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 7. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் தானே ஆங்கிலத்தில் gospel of ramakrishna? இதை அதில் படித்திருப்பதாக நினைக்கிறேன். நான் ராமகிருஷ்ண மடம் அடிக்கடி செல்வதுண்டு. நல்ல கதையை தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அமுத மொழிகள் நிஜமாகவே அமுத மொழிகள்.

  ReplyDelete
 8. //ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் தானே ஆங்கிலத்தில் gospel of ramakrishna? //

  அதேதான் ரமேஷ். நன்றி.

  ReplyDelete
 9. இந்தக் கதையைப் பல முறை சிந்தித்திருக்கிறேன் கவிநயா அக்கா. அந்த வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் பெண்மணி அந்த வீடும் பொருட்களும் தன்னுடையவை என்று எண்ணிக் கொள்ளத் தொடங்கினால் எப்படி இருக்கும்? அந்த வீட்டுக்கு உரிமையாளர்களும் மற்றவர்களும் அந்தப் பெண்மணியை என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள்? திருடி என்று தானே. அப்படித் தானே இறைவனுக்கு உரிமையான இந்த உலகையும் உயிர்களையும் உடைமைகளையும் நமது என்று எண்ணிக் கொள்வதும். அதன் படி எல்லோருமே திருடர்களாகத் தான் இருக்கிறோம். இதில் மிகப் பெரிய திருட்டு இறைவனுக்கே உரிமையான நம் உயிரையும் உடலையும் நமக்கு உரிமையானது என்று எண்ணிக்கொள்கிறோமே அது தான். இல்லையா?

  ReplyDelete
 10. வருக குமரா. நீங்க சொல்றது சரியாதான் இருக்கு, ஆனா கொஞ்சம் கடுமையாகவும் இருக்கே :) மாயைன்னே தெரியாம உழலுகிற நாமெல்லாம் தெரியாமலே செய்யற தவறுதான் அதுவும். பாவம்ல நாம? :) ஆனா ஒண்ணு - பற்றில்லாத அன்புன்னா என்னன்னே எனக்கு இந்தக் கதை படிச்சபிறகுதான் ஓரளவு புரிய ஆரம்பிச்சது :)

  எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி குமரா.

  ReplyDelete
 11. //நாம் இங்கு வாழ்ந்தாலும், இங்கிருப்பவைகள் எதுவும் நமக்கு சொந்தமில்லை//

  "காதறுந்த ஊசியும் கடைசிவரை வராது காண்" என்கிற உண்மை தான் எங்கு சுற்றித் திரிந்தாலும், எதைப் படித்தாலும் இறுதியில் தெரிகிற உண்மை. இதைப் புரிந்து கொண்டு வாழ்கின்ற காலத்தில் கிடைத்தவற்றை பகிர்ந்து வாழ் என்பது தான் இதிலிருந்து தெரிகின்ற உண்மை...
  பரமஹம்சரின் அமுத மொழிகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி, கவிநயா!

  ReplyDelete
 12. வருக ஜீவி ஐயா. நிலையில்லாமை பற்றி எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும், உறைப்பதே இல்லை. நேற்றுதான் விவேகானந்தர் சொன்னதாக படித்தேன் - "துன்பம் என்னும் மகுடம் தாங்கியே இன்பம் வருகிறது" என்று. இன்பம் என்று எதையோ தேடி அலையும் மனிதர்க்கு இது புரிவதே இல்லை.

  வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)