Tuesday, February 23, 2016

மாறும் மனம்

மாற்றம் ஒன்றே மாறாதது-ன்னு சொல்வாங்க. மனுஷங்களுக்கும், அவங்க மனசுக்குமே இது பொருந்தும்னு நானே உணர்ந்துகிட்டு வரேன். சரி, அதைப் பற்றி அப்புறம் பேசலாம்…

இப்பதான் ஊருக்கு போயிட்டு வந்தேன். நிஜமாவே ‘flying visit’ தான். ஆனா முடிஞ்ச வரை கோவில்களுக்குப் போனேன். எங்க அம்மா வீட்டு பக்கத்தில் இருக்கிற பிள்ளையார் கோவில், மாங்காடு காமாக்‌ஷி, வட பழனி முருகன், கற்பகாம்பாள் (கபாலீஸ்வரர் கோவில்) மதுரை மீனாக்‌ஷி, திருப்பரங்குன்றம், அம்மா வீட்டு பக்கத்தில் இருக்கிற ஆஞ்சநேயர் கோவில், அவ்ளோதான்.

வடபழனியில் முருகனுக்கு சந்தனக்காப்பு, வெள்ளிக் கவசம்.

மதுரையில் அம்மாவுக்குத் தங்கக் கவசம்.

மாங்காட்டிலும் கூட்டத்துக்கு முன்னாடியே போனதால ரொம்ப நேரம் பக்கத்தில் நின்னு தரிசனம்.

ஆஞ்சநேயருக்கு வடை மாலை, சிந்தூரக் காப்பு.


சரி, இப்ப மாற்றத்துக்கு வருவோமா.  முன்னல்லாம் எழுதாம இருக்க முடியாது. பிறகு மனசின் பக்குவத்துக்குத் தகுந்த மாதிரி, எழுதற விஷயம் மாறிக்கிட்டே இருந்தது. உணர்வு பூர்வமான கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பொது விஷயங்கள், பக்திப் பாடல்கள், இப்படி…இப்பல்லாம் எழுதறதுக்கோ, பகிர்ந்துக்கறதுக்கோ ஒண்ணுமே தோணறதில்லை. சொல்றதுக்கு என்ன இருக்கு அப்படின்னுதான் தோணுது. பேசாம இருக்கலாம் போல இருக்கு. அதுக்குன்னு வாழ்க்கை சலிப்பா இருக்குன்னோ, மன அழுத்தத்தில் (depressed) இருக்கேன்னோ பொருள் இல்லை. மௌனத்தில் ஒரு சுகம். அதைக் கலைக்க மனசு வரதில்லை. நிறைய யோசிக்காம இருக்கறதும் ஒரு விதத்தில் நல்லதுதானே…

எப்படியோ ப்ளாக் எழுதாம இருக்க காரணம் கண்டு பிடிக்கிறேன்னு தோணுதா? ஆனா உண்மையிலேயே மனநிலை இப்ப அப்படித்தான் இருக்கு. ஒரு வேளை சோம்பேறித்தனமாக் கூட இருக்கலாம். எனக்கே தெரியலை. எப்படியும் மாறிக்கிட்டே இருக்கற மனசுதானே… சீக்கிரமே இத்தை எழுது, அத்தைச் சொல்லுன்னு தொந்தரவு பண்ணினாலும் பண்ணும். அப்படி ஏதாச்சும் சொல்றப்ப மறுபடியும் வரேன்… உருப்படியா ஏதாச்சும் சொல்ல முடியும்ணு தோணினா அப்பவும் வருவேன்…

எல்லோரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா