Monday, December 29, 2014

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி...


ஏரார்ந்த கண்ணி - 4

பூதனை இறந்த செய்தி கேட்டான்
பூவைப் பூநிறக் கண்ணனின் மாமன்!
சகடாசுரனைச் சடுதியில் அழைத்தான்
சின்னக் கண்ணனைக் கொல்லப் பணித்தான்!

கோகுலம் நோக்கிச் சகடனும் விரைந்தான்
குழந்தைக் கிருஷ்ணனைத் தேடி அலைந்தான்!
சாய்ந்து நின்றதோர் வண்டியின் அடியில்
தொட்டிலில் துயின்ற குழந்தையைக் கண்டான்!

வண்டிச் சக்கரம் புகுந்தான் அரக்கன்
வண்ணக் கண்ணனைக் கொல்லத் துணிந்தான்!
அறியாக் குழந்தை போலே பரமன்
அழுதான் சின்னக் கைகால் உதைத்து!

சற்றே பிஞ்சுக் காலை நீட்டி
சகடந்தன்னை எட்டி உதைத்தான்!
சடசடவென்று முறிந்தது வண்டி
திருவடி பட்டுச் சகடனும் ஒழிந்தான்!

பூந்தளிர்ப் பாதமும் கொஞ்சம் வலித்ததோ!
தீங்குரலெடுத்து அழுதான் கண்ணன்!
ஓடி வந்தாள் அன்னை யசோதை!
சிதறிக் கிடந்த வண்டியைக் கண்டாள்!

விழி விரித்துப் பார்க்கப் பார்க்க…
இருள் விலகி ஒளி பரவ…
தேடி வந்த தெய்வமதை
ஆயர்குல இரத்தினத்தை
அள்ளி எடுத்துக் கையிலேந்தி,
அன்பு மீற அணைக்கின்றாள்!

--கவிநயா


படத்துக்கு நன்றி: மாதவிப் பந்தல்

5 comments:

  1. வணக்கம்
    அருமையான வரிகள் கண்ணன் பாட்டு அற்புதம் இரசித்தேன்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்!

      Delete
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார், இருமுறை வருகைக்கும்!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)