Sunday, November 30, 2014

பாவனாகம்யா

‘கம்யா’ என்றால் ‘அடையத் தக்கவள்’ என்பது பொருளாம். ஒரு ஊருக்குப் போகப் பல வழிகள் இருப்பது போல், அம்பிகையை அடைவதற்கும் பல வழிகள் உண்டு.

பாவனா கம்யா – பாவனையால் அடையத் தக்கவள்
பக்தி கம்யா – பக்தியால் அடையத் தக்கவள்
தியான கம்யா – தியானத்தால் அடையத் தக்கவள்
ஞான கம்யா – ஞானத்தால் அடையத் தக்கவள்


என்று அவளை அடையப் பல வழிகளை வரிசைப் படுத்துகிறது, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.

தியானத்தையும், ஞானத்தையும் காட்டிலும், என்னைப் போன்ற பாமரர்களுக்காகவே அம்மா, மற்ற இரண்டு வழிகளையும் தந்திருக்கிறாளோ என்று தோன்றும்… “ஆபால கோப விதிதா” அல்லவா, அவள்? எளியவர்களுக்கும், குழந்தை மனம் கொண்டவர்களுக்கும், இடையர்களுக்கும் கூட அடைவதற்கு எளியவளாய் இருப்பவள்… 


பக்தியும் பாவனையும் ஒன்றுக்கொன்று நிறைய தொடர்புடையவை. பக்தி அதிகரிக்க வேண்டுமானால் பாவனை அவசியம். பாவனை அதிகரிக்க வேண்டுமானால் பக்தி அவசியம். ஒன்றினால் மற்றொன்று மேலும் மேலும் வளரும், சிறப்புப் பெறும். இறைவனை நமக்கு ஏதோ ஒரு விதத்தில் உறவாகப் பாவிப்பதால், நமக்கும் அவனுக்குமான அன்பும் நெருக்கமும் அதிகமாகும்.

இறைவனை பல விதங்களில் பாவித்துக் கொள்ளலாம்…

சாந்த பாவம்:
உணர்வுகளுக்கும் இன்ப துன்பங்களுக்கும் வயப்படாமல், இறைவனையே நினைத்துக் கொண்டு அமைதியாக அன்பாக ஆனந்தமாக இருப்பது. மகாபாரதத்தின் பிதாமகர் பீஷ்மருடைய பக்தி சாந்த பாவத்தைச் சேர்ந்ததாம்.

சாந்த பாவம் என்பது அலட்டிக் கொள்ளாமல் (ரொம்ப ‘ஷோ’ காட்டாமல்), அமைதியாக பக்தி செய்வது.

பீமன், அர்ச்சுனன் செய்யும் சிவ பூஜை பற்றி ஒரு கதை சொல்வார்கள்:

அர்ச்சுனன் தினமும் முறைப்படி சிவபூஜை செய்பவன். அதனால் அவனுக்குத் தானே சிறந்த சிவபக்தன் என்ற எண்ணம் (கர்வம்) இருந்தது. ஒரு நாள் அவன் கைலாயத்திற்குச் செல்லும் போது வழியில் பல வித மலர்கள் மலை மலையாய்க் குவிந்திருந்ததைக் கண்டான். அதைப் பற்றி விசாரித்த போது, அவையெல்லாம் பீமன் சிவ பூஜை செய்த போது அர்ப்பணித்த மலர்கள் என்று அறிந்தான். ஆனால் அவனோ பீமன் பூஜையில் அமர்ந்து பார்த்ததே இல்லை. அப்படி இருக்க இது எப்படிச் சாத்தியம் என்று கிருஷ்ணனை விளக்கம் கேட்டான். கிருஷ்ணனும், பீமன் தன்னுடைய மானசீக பூஜையில், உலகில் பூக்கும் மலர்களையெல்லாம் சிவனுக்கு அர்ப்பணித்து விடுகிறான் என்று விளக்கமளித்தான்.

பீமனைப் போல மானசீகமாக, மனப்பூர்வமாக, வெளிப்பகட்டு இல்லாமல் ஈடுபாட்டுடன் செய்யும் பக்தியே சாந்த பக்தி எனலாம்.

தாஸ்ய பாவம்:
இறைவனை எஜமானனாகவும், தன்னை அவனுடைய வேலைக்காரனாக, தொண்டனாக, அல்லது அடிமையாக பாவித்துக் கொள்ளுதல். ஸ்ரீ ஆஞ்சநேயருடைய பக்தி அப்படிப்பட்டது. ஸ்ரீராமனின் அடிபணிந்து அவர் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அப்பரும் அப்படிப்பட்ட சிவபக்தியே கொண்டிருந்ததாகச் சொல்வார்கள்.

தன்னைப் புல்லினும் கீழாகப் பாவித்துக் கொண்டு, இறைவனையே எல்லாமாகக் கொண்டு அவனுக்கு பணிவிடை செய்வதே தாஸ்ய பாவம்.

அனுமனுக்கு இராமன் என்றால் கொள்ளைப் பிரியம். முதல் முதலாக சுக்ரீவனுக்காக இராம லக்ஷ்மணர்களைப் பற்றி விசாரிக்கச் செல்லும் போதே, ஸ்ரீராமனிடம் அவனுக்கு இனம் புரியாத அன்பும், ஈர்ப்பும் ஏற்பட்டு விடுகின்றன. அது முதல் ஸ்ரீராமனே அவனுக்கு எல்லாம், இராம நாமமே அவனுக்குத் துணை என்றாகி விடுகிறது. 

இராமனுக்குச் சேவை செய்வதே தன் வாழ்வென்று வாழ்ந்தவன் அனுமன். அந்த அன்பில், சேவையில், எந்த வித சுயநல நோக்கமும் இல்லை. சுக்ரீவனும், விபீஷணனும் இராமனுடன் இருந்து, அவனுக்கு உதவிய பின், அவரவர் இராஜ்யத்தைப் பரிசாகப் பெற்றார்கள். ஆனால் அனுமன் மட்டுமே இராமனின் அருகில் இடம் பெற்றான். கோவில்கள் தோறும் அவனே இராமனின் காலடியில் கைகூப்பிய வண்ணம் அமர்ந்திருக்கின்றான். அவனுடைய பக்தி கூட கற்புடையது. இராமனைப் போலவே கிருஷ்ணனும் மகாவிஷ்ணுவின் அவதாரமே என்றாலும், அனுமனுக்கு இராமனைத் தவிர எவருமே பொருட்டல்ல. கிருஷ்ணனைக் குறித்துப் பேச்சு வந்த போது, “யார் அந்த கிருஷ்ணன்?” என்று கேட்டவன். அந்த அளவிற்கு ஸ்ரீராமனின் மேல் சற்றும் சஞ்சலமில்லாத ஒருமித்த பக்தியும் அளவற்ற அன்பும் கொண்டவன் அனுமன். அவனது பாவனை தாஸ்ய பாவனை.

சாக்ய பாவம்:
இறைவனைத் தன் நண்பனாகப் பாவித்து, தனக்குச் சரிசமமாக நடத்துவது. அர்ஜுனனும், குசேலரும் ஸ்ரீகிருஷ்ணரின் நண்பர்களாகத் திகழ்ந்ததைப் போல. நால்வரில் ஒருவரான சுந்தரர், சிவபெருமானை நெருங்கிய தோழனாகப் பாவித்தவர். தனக்காகத் தன் மனைவியிடம் சிவபெருமானையே தூதாக அனுப்பியவர்!

பரவை நாச்சியாரை மணந்து கொண்ட பின், சிவத் தலங்களைத் தரிசிக்கச் செல்லும் காலத்தில், விதிப்படி சங்கிலி நாச்சியாரிடமும் பிரேமை கொண்டார், சுந்தரர். இதை அறிந்த பரவையார் சுந்தரரிடம் ஊடல் கொண்டு விட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்காக, இறைவனின் உதவியை நாடிய சுந்தரர், அவரைத் தன் பிரியத்துக்குரிய நண்பராக எண்ணியபடியால், அவரையே பரவையாரிடம் தனக்காகத் தூது செல்லும்படி உரிமையுடன் பணித்தார்! அதற்கிசைந்த பெருமானும், ஒரு முறை அல்ல, இரு முறைகள் திருவடிகள் தேயத் தூது சென்றதைச் சுந்தரரின் வரலாறு கூறும்! அப்பேர்ப்பட்ட அன்பு அவருடையது!

வாத்ஸல்ய பாவம்:
இறைவனைத் தன் குழந்தையாகப் பாவித்து அன்பு செலுத்துதல். குட்டிக் கிருஷ்ணனை ஏதும் அறியாத குழந்தையாகவே நினைத்து அன்பைப் பொழிந்த யசோதையின் பாவம் வாத்ஸல்யம்.

சின்னக் குட்டிக் கிருஷ்ணன் மண்ணை அள்ளி உண்ட போது மிகுந்த கோபம் கொண்டு, அவனை வாயைத் திறக்கச் செய்தாள், யசோதை. அவனுடைய சிறிய திருவாயில், அகிலமே அடங்கியிருப்பதைப் பார்த்து மதி மயங்கி நின்று விட்டாள். அவள் குட்டிக் கிருஷ்ணன் பூதகியைக் கொன்றதை அறிவாள்; கள்ளச் சகடம் உதைத்ததை அறிவாள்; காளிங்கன் மீது நர்த்தனம் புரிந்ததை அறிவாள்… இப்படி அவன் லீலைகள் அனைத்தையும் அறிந்திருந்தாலும், அவன் ஆவினம் மேய்க்கக் கிளம்பும் போது, இல்லாத கவலையெல்லாம் அவளைப் பிடித்துக் கொள்ளும். “என் குட்டிக் கிருஷ்ணனுக்கு ஒன்றுமே தெரியாது… அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்”, என்று பலராமனிடம் படித்துப் படித்துச் சொல்லி அனுப்புவாள்.

மாதுர்ய பாவம்:
இறைவனைத் தன் தலைவனாகப் பாவித்துக் காதலில் திளைத்திருப்பது. பாவங்களிலேயே இதுவே உயர்ந்தது என்பார்கள். ஏனென்றால் மற்ற பாவனைகளில் பக்தன், இறைவனிடமிருந்து சிறிதேனும் விலகியே இருக்கிறான்; இறைவன் வேறு, தான் வேறு என்ற பாகுபாடு இருக்கிறது. ஆனால் மாதுர்ய பாவத்தில்தான் இறைவனத் தன் சரிபாதியாகப் பாவித்து, இரண்டறக் கலந்து விடும் நிலை ஏற்படுகிறது.

இதைப் பற்றிப் பேசும் போது பரதத்தில் சொல்லப்படும் நவரசங்களில் ஒரு ரசமான சிருங்கார ரசம் பற்றி நினைவு வருகிறது. சிருங்கார ரசத்தை ரசங்களுக்கெல்லாம் அரசன் என்பார்கள். பரதக் கலையில் முழு மனதுடன் ஈடுபடுகையில் இறைவனுடன் ஒன்றி விடும் நிலையை அடையலாம் என்பார்கள். சிருங்கார ரசம் மனிதர்களுக்கிடையேயான காதலைச் சித்தரிப்பதல்ல; இறைவனிடம் ஏற்படும் மேலான அன்பைச் சித்தரிக்கவே ஏற்பட்டது. அதனாலேயே அதற்கு ராஜ ரசம் என்ற பெயரும் ஏற்பட்டது. மாதுர்ய பாவத்தை அனுபவிக்கவே சிருங்கார ரசம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.

மாதுர்ய பாவத்தினால் இறைவனை அடைந்தவர்கள் ஆண்டாள், மீரா, போன்றவர்கள். ஜெயதேவரின் சிருங்கார ரசம் ததும்பும் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மாணிக்கவாசகர் மாதுர்ய பாவத்தினால் இறைவனை அடைந்ததாகக் கூறுவார்கள்.

அபத்ய பாவம்:
பாவனைகள் பற்றி வாசிக்கும் போதெல்லாம், மேற்சொன்ன பாவனைகள் பற்றி மட்டுமே வாசித்திருக்கிறேன். அதனால், இறைவனைத் தாயாகவோ, தந்தையாகவோ கொள்வதற்கு எந்தப் பெயரும் இல்லையா, என்ற கேள்வி அடிமனசில் ஓடிக் கொண்டே இருந்தது. பாவனாகம்யா என்ற நாமத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகு, அவளருளால் ஒரு நாள் ஸ்ரீ பரமாச்சார்யார் சொன்னதைப் படிக்க நேர்ந்தது. “தெய்வத்தைப் பல பாவங்களில் வழிபடுவதில் நாம் குழந்தையாகவும் தெய்வம் தாயாகவோ, அல்லது தந்தையாகவோ இருப்பதற்கு 'அபத்ய'பாவம் என்று பேர். ஞானஸம்பந்தர் அப்படிப் பாடினவர்தான்.” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் எல்லா வித பாவனைகளாலும் இறைவனை அனுபவித்து அறிந்தவர். அவற்றில் எதனைப் பின்பற்றினாலும், இறைவனை அடையலாம் என்று காட்டியவர். அப்பேர்ப்பட்ட பாவனையால் எளிதாக அடையத்தக்கவள் அம்மா என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.அன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!
 
அன்புடன்
கவிநயா

4 comments:

 1. ரொம்ப ரொம்ப அற்புதமான பகிர்வு!..ஒவ்வொரு பாவனையையும் மிகக் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறீர்கள்!..அன்னையின் அருள், உங்கள் வழியாகப் பெருகி, எங்களையும் நனைத்தது!!!..மிக்க நன்றி!.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பார்வதி!

   Delete
 2. நல்ல பதிவிற்கு நன்றி. இந்த “பாவனா” என்ற நாமாவளிக்கு என் மனதில் ஒரு நீங்காத சம்பவம் இருக்கிறது. ஒரு முறை நவராத்திரியின் போது (அப்போது எனக்கு சுமார் இருபது வயதிருக்கும்) என் மாமாவீட்டிற்கு சென்றிருந்தேன். மாமாவீட்டின் மாடியில் ஒரு குடும்பம் குடியிருந்தது. அந்த மாமியிடம் என் மாமாவின் மனைவி என்னை அறிமுகம் செய்து வைத்தார். “நீ இங்கயும் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிக்கோம்மா” என்று அந்த மாமி என்னை அழைத்தார். நானும் சென்றேன். அவர் அருகில் சுமார் மூன்று வயது உடைய அவரது பேத்தியிருந்தாள். என்னிடம் அந்த மாமி,”உன் பெயர் என்னம்மா?” என்றார். நான் “பவானி” என்றேன். உடனே அந்த சின்ன பெண் “ஓ ! நீங்கள் பவானியா ! நான் உங்களுக்கு அடுத்தது பாவனா” என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு அப்போது லலிதா சகஸ்ரநாமம் தெரியாது. உடனே அந்த மாமி,”அவள் பெயர் பாவனா, உன் பெயர் பவானியில்லையா. லலிதா சகஸ்ரநாமத்தில் பவானி, பாவனா,கம்யா என்பதில் பவானிக்கு அடுத்தது பாவனா. அதைத்தான் அவள் சொல்கிறாள்” என்றார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சிறு குழந்தைக்கு எத்தனை ஞானம். எனக்கு அது இல்லையே என்று வெட்கி பின்னர் லலிதா சகஸ்ரநாமம் கற்றுக்கொண்டேன். என் மகள்களிடமும் பலமுறை இந்த சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறியுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நெஜம்மாவே அந்தக் குழந்தைக்கு 3 வயசுதானா? அந்தக் குழந்தை 3-வயசிலேயே ஞானப்பழமா இருந்திருக்கா. நீங்க இருபதிலாவது கத்துக்கிட்டீங்க. இதெல்லாம் இருக்குன்னே எனக்கு இப்போதான் தெரிய ஆரம்பிச்சிருக்கு :( அதனால நீங்க வெட்கப்பட ஒண்ணுமே இல்லை!

   மனசைத் தொடும் சம்பவத்தைப் பகிர்ந்துகிட்டதுக்கு மிகவும் நன்றி தானைத் தலைவி.

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)