Thursday, August 28, 2014

ஓம் கணநாதா கஜானனா!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்!




ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

அன்னை பார்வதி அகிலத்துக் கீந்த அழகுப் புதல்வா கஜானனா
எந்தை சிவனின் அன்புக் குகந்த அருமைப் புதல்வா கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

வேண்டும் வரங்களை வேண்டும் விதமாய்த் தந்தருள்பவனே கஜானனா
வேண்டி மிக வருந்தி அழைப்பவருக்கு விரைந்தருள்பவனே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

பாலும் தேனும் பாகும் பருப்பும் கலந்து வந்தோமே கஜானனா
பாகாய்க் கனியும் அன்பை அதிலே கலந்து தந்தோமே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

மோதகத்துள்ளே பூரணம் வைத்துச் செய்து வந்தோமே கஜானனா
மோகங்கள் களைந்தெமைப் பூரணமாக்க அருள்புரிவாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

அருகம்புல் கூட அற்புதம் என்று மகிழ்ந்து ஏற்பவனே கஜானனா
குறுகி உனைப் பணிந்து கும்பிட்டோமே கனிந்தருள்வாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

மூஷிகந்தன்னை வாகனமாக விரும்பி ஏற்றவனே கஜானனா
மூச்சுக் காற்றாலே உடலத்தைச் சுமக்க உதவி செய்பவனே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

கள்ளங் கபடமற்ற பிள்ளைகள் விரும்பும் கஜமுகத்தோனே கஜானனா
வெள்ளை உள்ளங்களை விரும்பி அதிலே குடிபுகுவாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா

கஜமுகங் கொண்டு கருணை பொழியும் கனிமுகத்தோனே கஜானனா
பஜனைகள் செய்துனைப் போற்றிப் பணிந்தோம் பரிவுகொள்வாயே கஜானனா

ஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா
ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா


--கவிநயா



Monday, August 25, 2014

போயே போச்சு!

வணக்கம். நல்லாருக்கீங்களா? வர வர அடிக்கடி பார்க்க (எழுத) முடியறதில்லை... இப்பவும் ஒங்களக் கொஞ்சம் வெரசாவாச்சும் பாத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்...

உடம்பு இருக்கே... அதுல இருக்கிற உறுப்புகளெல்லாம் "நான் இருக்கேன்", "நான் இருக்கேன்" அப்படின்னு அப்பப்ப... இல்லையில்லை... அடிக்கடி ஞாபகப்படுத்திக்கிட்டிருக்கு. காலம் போறதுக்குள்ள எல்லா வலியும் அனுபவிச்சாதான் அதுக்கு திருப்தியா இருக்கும் போல!



அந்த மாதிரி இப்ப சமீபத்துல என்னை வந்து சந்திச்ச வலி - இடுப்பு வலி. (back pain இல்லை; hip pain). எப்படி வந்துச்சுன்னு எனக்கே புரியலை. புதுசு... அங்கெல்லாம் கூட வலிக்கும்னு இப்பதான் தெரியும்! எப்பப் பார்த்தாலும் 'அங்க வலிக்குது', 'இங்க வலிக்குது'ன்னு யார்கிட்டயும் சொல்லவே கூடக் கூச்சமா இருக்கு. ஏன்னா, இப்பதான் 'back pain' வந்து போயி, வந்து போயி, வந்து போயி, ஒரு வழியா வழி அனுப்பி வச்சேன். உடனடியா இவங்க வந்து நிக்கிறாங்க! எப்படி இருக்கும்! எனக்கே எரிச்சலா இருந்தது. வீட்ல சொன்னா லக்ஷார்ச்சனைதான் நடக்கும். என்னடா பண்றதுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். நமக்கு உதவறதுக்குன்னுதான் ஒத்தர் எப்பவும் தயாரா இருக்காரே... அவரைத்தான் கேட்டேன். அதாங்க கூகுளாண்டவர்!

இந்த குறிப்பிட்ட விடீயோ எப்படியோ என் கண்ல பட்டது (என் அம்மாவோட அருள்தான்).  அவ்வளவு எளிமையான சுலபமான ஒரு விஷயத்தால உடனடியா மந்திரம் போட்டது மாதிரி இடுப்பு வலி போயே போச்சு! அதையும் free-யா you-tube-ல ஏற்றினவங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்.

உங்களுக்கும் இடுப்பு வலி இருந்தா உதவுமேன்னு சொல்றதுக்காக வந்தேன்...

https://www.youtube.com/watch?v=DAHWDr2XF2w

எல்லாரும் நல்லாருக்கணும்!

அன்புடன்
கவிநயா

Saturday, August 16, 2014

குக்கூ கனவு

அனைவருக்கும் குட்டிக் கிருஷ்ணனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!


சுப்புத் தாத்தாவின் குரலில், இசையில்... மிக்க நன்றி தாத்தா! கேட்டுக்கிட்டே வாசிங்க!



ஒற்றைக் குயிலொன்று ஒருமரத்தில் நின்று
குக்கூ கூவென்று கூவுதடி;
கண்ணன்கை வேய்ங்குழல் தானென்று மயங்கி
சின்னக் குயில்கூத் தாடுதடி!

புற்றுக்குள் ளிருந்து நாகமொன்று வந்து
சீறிப் படமெடுத் தாடுதடி;
சென்னியில் நர்த்தனம் செய்வான் கண்ணனென்று
கற்பனை அதற்கு ஓடுதடி!

கானமயில்களு திர்த்திட்ட தோகைகள்
காற்றினி லேறிவிரை யுதடி;
மாயக்கண்ணன் தன்னைச் சூடிக்கொள்வா னென்ற
எண்ணத்தி லேவிளை யாடுதடி!

வானமெங்கும் சின்னச் சின்னக் கருமேகம்
சூல்கொண்டு மெள்ளவே நாணுதடி;
நீலகண்ணன் தன்னைப் போர்த்திக் கொள்வானென்ற
நிச்சயத் துடனே தோணுதடி!

பட்டுப் பூச்சிகளும் இட்டமுடன் வந்து
பட்டுத் துகிலாக வேண்டுதடி;
இட்டமுடன் அந்தக் குட்டிக் கண்ணன்தம்மை
ஆடையாக்கிக் கொள்ள ஏங்குதடி!

மல்லிகை மந்தாரம் பாரிஜாத மெல்லாம்
மலர்ந்திதழ் விரித்துச் சிரிக்குதடி;
தங்கஎழில் கண்ணன் வண்ணமணி மார்பில்
தவழ்ந்திடக் கனவு காணுதடி!

--கவிநயா

முன்பு ஒரு முறை கண்ணன் பாட்டு தளத்தில் இட்டது...