Monday, June 30, 2014

உயர்த்தி

இன்றைக்கு புதுசா ஒரு தமிழ் சொல் கத்துக்கிட்டேன். “elevator” க்கு தமிழில் “உயர்த்தி”யாம்!

சமீபத்தில் எங்க அலுவலகத்தை ஒரு புது கட்டிடத்துக்கு மாத்தினாங்க. அந்தக் கட்டிடத்தில் 6 தளங்கள் இருக்கு. முதல் தளத்தில் உணவுக் கூடம் இருக்கு. மற்ற தளங்களில் வெவ்வேறு அலுவலகங்கள் இருக்கு. இங்கே இருக்கிற உயர்த்திகள் நவீன தொழில் நுட்பத்தில் இயங்கறது. எப்படின்னா… என்னால உணவுக் கூடம் இருக்கிற 1-வது தளத்துக்கும், என் அலுவலகம் இருக்கிற 3-வது தளத்துக்கும் மட்டும்தான் போக முடியும். மற்ற தளங்களுக்குப் போக முடியாது. அதே போல மற்ற தளங்களில் வேலை செய்யறவங்க, எங்க தளத்துக்கு வர முடியாது. அந்த மாதிரி உயர்த்திகளை அமைச்சிருக்காங்க. மொத்தம் 6 உயர்த்திகள் இருக்கு.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு அடையாள அட்டை  குடுத்துருவாங்க. அந்த அட்டையை scan பண்ணினா, (ஆங்கிலம் கலக்காம எழுதணும்னு ரொம்ப முயற்சி பண்ணினேன், ஆனா scan-க்கு தமிழில் என்ன தெரியலை!) நாம எந்தெந்தத் தளத்துக்குப் போக முடியுமோ, அதை மட்டும் காண்பிக்கும் – எனக்கு 1, 3. அதில் எது வேணுமோ அதை அமுக்கினா, 6 உயர்த்திகள்ல எந்த உயர்த்திக்குப் போகணும்னு (A,B,C,D,E,F) சொல்லும். அதில் ஏறினா மட்டும்தான் போக வேண்டிய இடத்துக்குப் போக முடியும். உயர்த்திக்குள்ள ஏறின பிறகு நம்மால ஏதும் செய்ய முடியாது. அதுவா நின்னாதான் உண்டு! நம் கட்டுப்பாடு இல்லாம அதுவா போறது முதல்ல ஒரு மாதிரி இருந்தது… ஆனா இப்ப பழகிடுச்சு.

அது சரி… அதுக்கென்ன இப்ப, அப்படின்னு நீங்க கேக்கறது எனக்குக் கேக்குது. அடையாள அட்டையை scan பண்ணினப்புறம், எந்த தளத்துக்குப் போகணும்னு தேர்ந்தெடுத்ததுக்கப்புறம், ஒரு நொடிதான் ஆகும், நாம் எந்த உயர்த்தியில் ஏறணும்னு அது சொல்றதுக்கு. ஆனா, அந்த ஒரு நொடிக்குள்ள கவனம் சிதறிடுது! ஒரு முறை அது என்ன சொல்லிச்சின்னே கவனிக்காம வேறெதிலேயோ ஏறப் போயிட்டேன். ஏறுறதுக்கு முன்னாடியே சுதாரிச்சிட்டேன். வேறெங்கேயோ போனாலும், அடையாள அட்டையைப் பயன்படுத்தி திரும்பி வந்துரலாம்னு வைங்க. ஆனா… அந்த சில நொடிகள் கூட கவனத்தை ஒருமுகப்படுத்தி வைக்க முடியலையேன்னு எனக்கே வெறுப்பா இருந்தது. ஆனா, என்னை மாதிரியே சில பேர் “Oh, I wasn’t paying attention”, அப்படின்னு சொல்லிட்டு திரும்ப scan பண்றதையும் பார்த்திருக்கேன். அதுல ஒரு சின்ன ஆறுதல். (அந்த ஒரு முறைக்கு அப்புறம் இப்ப கவனமா இருக்கேன்)

நம் வாழ்வில் நமக்கு எத்தனையோ உயர்த்திகள் கிடைச்சிருக்காங்க. அம்மா, அப்பாவில் தொடங்கி ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம முன் பின் பார்த்திராத ஆன்மீகப் பெரியவர்கள், குடுத்து வெச்சவங்களுக்கு அவங்களுக்கே அவங்களுக்குச் சொந்தமான ஆன்மீக குரு, இப்படி எத்தனை எத்தனையோ. அவங்க சொல்றதைக் கவனமா காதில் வாங்கிக்கிட்டு அதன்படி நடக்கறவங்க, வாழ்க்கையை நல்லபடியா வாழறாங்க. அவங்க ஏதோ சொல்லிட்டுப் போறாங்க, நாம பாட்டுக்குச் செய்யறதைச் செய்வோம்னு இருந்தா கஷ்டம்தான்.

சரியான உயர்த்தியில் ஏறுகிற வரைதான் நமக்குக் கொஞ்சம் வேலை. அதுக்குப் பிறகு அதை நாம கட்டுப்படுத்தவும் முடியாது, அதே சமயம் கவலைப்படவும் தேவையில்லை. அதுவே சரியா கொண்டு போய் சேர்த்திடும். நாமும் சரியான குருவை அடையற வரை நம்ம முயற்சியைப் போடணும். ஏன்னா சீடனாகிற தகுதி வந்த பிறகுதான் குரு அமைவாராம். அப்படிச் சரியான குருவை அடைஞ்சிட்டா, நம்ம சொந்தமா ஏதும் யோசிக்க வேண்டியதில்லை. அவர் சொல்வதைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்டுட்டாப் போதும், நாமும் தானாகவே நல்ல கதியை அடைந்து விடலாம்.

அதனால் உயர்த்திகள் சொல்றதைக் கவனிக்கணும், அதன்படி நடக்கணும். அதுதான் நமக்கு நல்லது!

(இந்தப் பதிவுக்கான தூற்றுதல் எல்லாம் எங்க அலுவலகத்து உயர்த்தியையே சேரும்!)

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன்
கவிநயா

9 comments:

  1. அந்த உயர்த்திக்கு தூற்றுதல் எல்லாம் இல்லீங்க. போற்றுதல் தான் நல்ல பதிவிற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தானைத் தலைவி!

      Delete
  2. ரொம்பவே அருமையான சிந்தனை!.. இனிமே உயர்த்தில ஏறும் போதெல்லாம் இதுவே நினைவுக்கு வரும்!.. பகிர்வுக்கு நன்றி கவிநயா!

    ReplyDelete
  3. // இன்றைக்கு புதுசா ஒரு தமிழ் சொல் கத்துக்கிட்டேன். “elevator” க்கு தமிழில் “உயர்த்தி”யாம்!///

    நீங்க மட்டுமல்ல அகில உலகமே உங்களால் இந்த சொல்ல கத்துக்கிட்டாங்க வளர்க தமிழ் தொண்டு

    ReplyDelete
    Replies
    1. நன்றி 'அவர்கள் உண்மைகள்'!

      Delete
  4. அழகான சிந்தனையை நயமாக உணர்த்தியதற்கு மிக்க நன்றி

    Swipe ஆ.. scanஆ....
    முதலாவது நாம் செய்வது இரண்டாவது இயந்திரம் செய்வது.
    அதாவது அட்டையை நாம் 'வருடிய' பின் அதை இயந்திரம் 'ஊடறிந்து' கொள்கிறது. ஆங்கிலத்திலே அதிக வித்தியாசம் இல்லை. :)

    ReplyDelete
    Replies
    1. ஆமால்ல? வருகைக்கும், சரியான தமிழ் சொற்களை எடுத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றி, கபீரன்பன் ஜி!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)