Tuesday, December 31, 2013

அந்தப் பிள்ளை யாரு??

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
 

வந்த வினை தீர்த்து வைக்கும் பிள்ளை யாரு, இனி
வரும் வினையும் ஓட வைக்கும் பிள்ளை யாரு?
கந்தசாமிக் கண்ணனான பிள்ளை யாரு, நம்மைச்
சொந்தமெனக் காத்திருக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

ஆதிசிவ சக்தி யோட பிள்ளை யாரு, அழகு
ஆனை முகம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு?
பானை வயிற்றில் உலகம் வெச்ச பிள்ளை யாரு, நம்மைப்
பத்திரமாப் பாதுகாக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

மோதகத்தை விரும்பி உண்ணும் பிள்ளை யாரு, சின்ன
மூஞ்சூறில் பவனி வரும் பிள்ளை யாரு?
மஞ்சளிலும் மணத்திருக்கும் பிள்ளை யாரு, மன
மகிழ்ச்சியோடு அருள் செய்யும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

அருகம்புல் மாலை சூடும் பிள்ளை யாரு, நல்ல
அழகான தந்தமுள்ள பிள்ளை யாரு?
மாலுக்கு மருகனான பிள்ளை யாரு, வடி
வேலுக்கு அண்ணனான பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

அஞ்சுகரம் கொண்டிருக்கும் பிள்ளை யாரு, நமக்கு
வஞ்சமில்லா நெஞ்சந் தரும் பிள்ளை யாரு?
பிஞ்சுப் பிள்ளைக்கும் புடிச்ச பிள்ளை யாரு, நம்ம
நெஞ்ச மெல்லாம் நெறஞ்சிருக்கும் பிள்ளை யாரு?

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!

எதுவும் தொடங்கும் போது வணங்கும் பிள்ளை யாரு, எந்தத்
தடங்கலையும் விலக்கி வெக்கும் பிள்ளை யாரு?
அன்னை தந்தை தெய்வம் என்ற பிள்ளை யாரு, அவரைப்
பணிந்த பின்னே வேறு என்ன வேணும் கூறு!

பிள்ளையாரு அவரே பிள்ளையாரு!
பிள்ளையாரு நம்ம பிள்ளையாரு!


--கவிநயா

படத்திற்கு நன்றி...
 
 

16 comments:

  1. அற்புதமான கவிதை
    தமிழுக்கும் உங்களைப் பிடித்திருக்கிறது
    இல்லையெனில் இத்தனை அழகான கவிதையென்பது
    சாத்தியமில்லை
    மனம் கவர்ந்த அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி!

      Delete
  2. மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!. கணநாதன் அருளால், இவ்வருடம், நம் அனைவருக்கும் மிகச் சிறப்பானதாக அமையப் பிரார்த்திக்கிறேன்.. நெடுநாட்களுக்குப் பிறகு பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி எனக்கு!!.. புத்தாண்டுப் பரிசு போன்று அற்புதமான கவிதையும் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  3. //அனைவருக்கும் மனம் கனிந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!//

    ரிப்பீட்டேய் !!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கைலாஷி!

      Delete
  4. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்!

      Delete
  5. அருமையான பாடல். விநாயகரைத் துதித்துப் புது வருடத்தைத் தொடங்குவோம். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சூப்பர் கவிதை ! உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. Replies
    1. மிக்க நன்றி திரு.நடராஜன்.

      Delete
  8. அற்புதமான பாடல்...
    பஜனைப் பாட்டில் பாட அருமையான பாடல்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சே.குமார். ஆமாம், எனக்கும் இதை பஜனையில் பாடும் விருப்பம் உண்டு. விநாயகர் அனுமதிக்க வேண்டும் :)

      Delete
  9. வணக்கம்

    கவிதை வடிவமைத்த விதம் அருமை வாழ்த்துக்கள்

    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. இவரைத்தானே சொன்னீங்க??? வந்து பார்த்துட்டேன். :)))) நம்ம நண்பரைப் பார்க்காமல் விடுவேனா?

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)