Monday, November 18, 2013

ஆதிசிவன் நாயகியோ அற்புதமோ கற்பகமோ?


சுப்பு தாத்தாவின் இயக்கிய குறும் படத்தைக் கண்டு/கேட்டுக் களியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னான பொன்மணியே
பூவிழியே கண்ணுறங்கு

வானோடு வெண்ணிலவு
வட்டமிட்டு விளையாட
தேனூறுந் தமிழெடுத்து
தாலாட்டு நான் பாட

மீனாடும் விழியாளே
மெல்ல மெல்லக் கண்ணுறங்கு
வான் மீன்கள் வியந்திருக்க
வண்ண மலரே யுறங்கு

சூரியனும் உறங்குதடி
சொக்கத் தங்கமே யுறங்கு
சோலை மலர் உறங்குதடி
சொர்ணமே நீயுறங்கு

தாமரை மல ருறங்க
தங்க மலரே யுறங்கு
தத்தி வருந் தென்றல் வந்து
தாலாட்ட  கண்ணுறங்கு

ஆடும் மயிலுறங்க
பாடுங்குயில் தானுறங்க
கூடுகளில் குருவியெல்லாம்
குடும்பத் தோடுறங்க

கானகத்து உயிர்களெல்லாம்
கண்ணயர்ந்து தானுறங்க
என்னகத்தை ஆள வந்த
இன்னுயிரே கண்ணுறங்கு

ஆதிசிவன் நாயகியோ
அற்புதமோ கற்பகமோ
பாதி சிவன் விட்டு எந்தன்
பக்கம் வந்த பொக்கிஷமோ

மாதா சக்தி இந்தப்
பேதையிடம் வந்தாளோ
நான் பாடுந் தமிழ் கேட்க
என் மடிக்கு வந்தாளோ

கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னான பொன்மணியே
பூவிழியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://vadakovaiouraan.blogspot.com/2013/08/blog-post_28.html

16 comments:

  1. அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். உங்களை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி!

      Delete
  2. ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு!!... அழகான தாலாட்டோடு ஆனந்தமாகத் துவங்கியதற்கு ரொம்ப நன்றி!!!!!....பாடல் அன்னைக்கே தாலாட்டுப் பாடும் பிள்ளைத் தமிழ் போல் தேனாகப் பொங்குகிறது...

    ////ஆதிசிவன் நாயகியோ
    அற்புதமோ கற்பகமோ
    பாதி சிவன் விட்டு எந்தன்
    பக்கம் வந்த பொக்கிஷமோ////


    அற்புதம்... பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடித்த வரிகளையே நீங்கள் சொல்லியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி பார்வதி!

      Delete
  3. Replies
    1. நன்றி தானைத் தலைவி! :)

      Delete
  4. அழகான தாலாட்டு...
    அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சுப்புத் தாத்தா பாட்டிக்கு என் நன்றி கலந்த வணக்கங்களும்
    உங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் தோழி !

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்பாளடியாள்!

      Delete
  6. Touching thalattu! Thanks very much, perfect for my lil one! :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, சந்தோஷமா இருக்கு :) நன்றி Mahi. குட்டிப் பாப்பாக்கு [hugs]!

      Delete
  7. நன்றிங்க...ஆக்ச்சுவலி, நீங்க ஆதிசக்திக்கு எழுதிய தாலாட்டை நான் "taken it for granted" ஆக பண்ணிட்டேன்..கமென்ட் போட்டதும்தான் உரைத்தது, உடனே பதில் போட நேரம் ஒத்துழைக்கலை, சாரி!

    அருமையான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஒண்ணும் தப்பா சொல்லலையே... மீள் வருகைக்கு நன்றி Mahi.

      Delete
  8. வணக்கம்

    சிறப்பாக உள்ளது தங்களின் வலைப்பூ பக்கம் வருவது முதல் முறை என்று நினைகிறேன் என் வருகை தொடரும்.. இனி வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மிக்க நன்றி ரூபன். சில நாட்களாக எதுவும் எழுத முடியாத நிலை. புது வருடம் எப்படி என்று பார்ப்போம்...

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)