Sunday, October 20, 2013

தொலைந்து போக ஆசை!

செல்லும் இடமெல்லாம் சேர்ந்தே கூட வரும்
தப்பிக்க நினைத்தாலும் காட்டிக் கொடுத்து விடும்
ஒருநொடியும் பிரியாமல் உயிர்த்தோழி போலிருக்கும் -
பொல்லாத கைபேசியை சொல்லாமலே விட்டு

விழிக்கின்ற நேரம்முதல் படுக்கின்ற நேரம்வரை
விதவிதமாய் கடமையெல்லாம் வரிசையிலே காத்திருக்கும்
கடிகார நேரமுடன் கைகோர்த்து தான்சுழலும் -
பொல்லாத வேலையெல்லாம் சொல்லாமலே விட்டு

அதைச்செய்தால் இதுவென்கும் இதைச்செய்தால் அதுவென்கும்
சொன்னாலும் சொல்லாமல் போனாலும் தவறென்கும்
இருந்தாலும் இல்லாமல் போனாலும் தவறென்கும் -
பொல்லாத உலகிதனை சொல்லாமலே விட்டு

பசி யென்கும் தாக மென்கும் தூக்க மென்கும்
பிறகு நோயென்கும் நொடியென்கும் வாதை யென்கும்
சொன்னபடி கேளாது தன்னிஷ்டம் போல் நடக்கும் -
பொல்லாத உடலிதனை சொல்லாமலே விட்டு

எங்கேதான் சென்றாலும் கூடவே தானும்வரும்
ஒரு நினைவில் இருக்கையிலே இன்னொன்றை செருகி விடும்
ஒரு கவலை குறைந்த தென்றால் மற்றொன்றை தேடித் தரும் -
பொல்லாத மனமிதனை சொல்லாமலே விட்டு

தொலைந்து போக ஆசை!


--கவிநயா

 படத்துக்கு நன்றி: http://www.behance.net/gallery/A-Quiet-Place/4490979


15 comments:

  1. அருமை... சொன்னவிதம் அருமை... பக்குவப்பட்டால் எல்லாம் சரியாகி விடும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. :) ஆமாம்... நன்றி தனபாலன்... இந்தக் கவிதை எழுதி கொஞ்ச நாளாயிற்று... மனநிலை மாறிக் கொண்டே இருக்கிறது...

      Delete
  2. தேடியதால் தொலைந்த மனம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகேந்திரன். வாசித்தமைக்கு நன்றி!

      Delete
  3. ஆழக் கடலில் அமிழ்தல் போலே, கவிதையின் பொருளாழத்தில் அமிழ்ந்து தொலைந்து தான் போனேன்!!.. அருமையான பகிர்வு!!.. மிக்க நன்றி..

    ReplyDelete
  4. தொலைந்தெல்லாம் போக முடியாது.பயிற்சியால் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். அதுவும் ஒரு அளவிற்கு தான். "பாதை வகுத்த பின்னே பயந்தென்ன லாபம். அதில்,பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்." என்று கண்ணதாசன் சொல்லி இருக்கார்.

    நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    தானைத்தலைவி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆசைப் பட்டால் மட்டும் போதுமா? தொலைந்தெல்லாம் போக முடியாது என்று நன்றாகத் தெரிந்து கொண்டு விட்டேன் :) நன்றி தானைத் தலைவி!

      Delete
  5. மிகவும் அருமையான ஆக்கம். வாழ்த்துகள்.

    /தொலைந்து போக ஆசை!/

    அது என்றும் தொலையாமலேயே இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா... ஆனால் தொலைந்து போகிற ஆசையைத் தொலைத்து விடச் சொல்வீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் எதிர்மறையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

      Delete
  6. கவிதை அருமை...
    தொலைந்து போக ஆசை கோபாலகிருஷ்ணன் ஐயா சொன்னது போல் என்றும் தொலையாமல் இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சே.குமார். ஐயாவும் நீங்களும் சொன்னது எதிர்மறையாக இருப்பதால் கொஞ்சம் புரியவில்லை...

      Delete
  7. "எங்கேதான் சென்றாலும் கூடவே தானும்வரும்
    ஒரு நினைவில் இருக்கையிலே இன்னொன்றை செருகி விடும்
    ஒரு கவலை குறைந்த தென்றால் மற்றொன்றை தேடித் தரும் -
    பொல்லாத மனமிதனை சொல்லாமலே விட்டு…"

    தொலைந்து போக ஆசை!"

    மனத்தின் ஆசையை அடக்கி ஆண்டால், உங்கள் தொலைந்து போகுமாசை தொலைந்து போய் விடுமன்றோ? :)

    அழகான கவிதை :)

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கென்ன, 'மனதின் ஆசையை அடக்கி ஆண்டால்' என்று சுலபமாகச் சொல்லி விட்டீர்கள்! ஆசை எதுவும் இல்லா விட்டால் கூட மனம் அலைந்து கொண்டேதான் இருக்கிறது...

      ரசித்தமைக்கு நன்றி சுந்தர்!


      Delete
  8. ellaam aval seyal!Avalidam vittuvittaal pothum.Naam Tholaya vendaam!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)