Sunday, September 1, 2013

கண்ணா ஓடி வா!

குட்டிக் கிருஷ்ணன் பிறந்த நாள் hang over இன்னும் போகலை!


கண்ணன் - என் குழந்தை
 
கறந்து வெச்ச பாலு தாரேன்
கடைஞ் செடுத்த வெண்ணெ தாரேன்
கலந்து வெச்ச மோரு தாரேன்
கண்ணா ஓடி வா!
குளுகுளுன்னு தயிருந் தாரேன்
கண்ணா ஓடி வா!

பட்டுப் போல பாதம் வெச்சு
சிட்டுப் போல சிரிச்சுக் கிட்டு
தத்தித் தளர் நடை நடந்து
கண்ணா ஓடி வா!
தண்டை காலில் குலுங்கக் குலுங்க
கண்ணா ஓடி வா!

திராட்சக் கண்ணு மினுமினுங்க
கன்னக் குழி எனை விழுங்க
கனி வாயில் தே னொழுக
கண்ணா ஓடி வா!
கட்டி முத்தம் தாரேன் செல்லக்
கண்ணா ஓடி வா!

கால் வெரல சூப்ப வேணாம்
ஆல எலையில் படுக்க வேணாம்
அம்மா மடியில் படுத்துக்கலாம்
கண்ணா ஓடி வா!
ஆரிரரோ கேட்டு றங்க
கண்ணா ஓடி வா!


-கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.stephen-knapp.com/733KrsnaYasoda.jpg
 

16 comments:

 1. குட்டிக் கிருஷ்ணன் பிறந்த நாள் hang over இன்னும் போகலை!

  என்றுமே போகாது..!

  அருமையான பாட்டு..பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. //என்றுமே போகாது..!//

   உண்மைதான் இராஜராஜேஸ்வரி அம்மா. மிக்க நன்றி!

   Delete
 2. "இதை படிக்கையிலெ கண்ணுக்குள்ளே
  புடிச்ச கண்ணன் ஒடிவந்தான்!
  கடிச்ச பழம் கிள்ளி தந்தான்!" -இதை
  கவிநயாவைத் தேடிச் சொல்ல
  நீலக்கண்ணா ஓடிவா!

  ReplyDelete
  Replies
  1. குட்டிக் கண்ணன் வந்து நீங்க சொன்னதைச் சொல்லிட்டான்!

   நன்றி சுந்தர்!

   Delete
 3. So sweet ! அழகான கவிதை. கண்ணனை கவர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தானைத் தலைவி!

   Delete
 4. Nice song with colloquial language! Feeling close the 'Kutti Kannan'! :)

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும், Mahi!

   Delete
 5. படிக்கப் படிக்க பேரானந்தமாக இருக்கிறது.

  ////திராட்சக் கண்ணு மினுமினுங்க
  கன்னக் குழி எனை விழுங்க
  கனி வாயில் தே னொழுக
  கண்ணா ஓடி வா!////

  என்ன அருமையான வரிகள்!.
  ////கால் வெரல சூப்ப வேணாம்
  ஆல எலையில் படுக்க வேணாம்
  அம்மா மடியில் படுத்துக்கலாம்
  கண்ணா ஓடி வா!///

  பக்தியின் ஆழம், தாங்கள் தந்த ஒவ்வொரு வரியிலும் பளிச்சிடுகிறது.சற்று முன்பு தான் ஒரு கன்னடப்பாட்டு கற்றுக் கொண்டேன். 'கண்ணா, மண்ணைத் தின்னாதே, வயிறு நோகும்!. வெண்ணை தரேன் தின்னு! என்று யசோதா கெஞ்சுகிறாள்('கந்தா பேடவோ, மண்ணு தின்ன பேடவோ'ன்னு முதல் வரி). டெலிபதி மாதிரி, அம்மா மடியில் படுத்துக்கலாம் என்று யசோதா சொல்கிறாள் இங்கே!.

  மேலும்,

  'எண்ணெய்க் குடத்தை உருட்டி
  இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி
  கண்ணை புரட்டி விழித்துக்
  கழகண்டு செய்யும் பிரானே
  உண்ணக் கனிகள் தருவன்,
  ஒலிகடல் ஓத நீர்போலே
  வண்ணம் அழகிய நம்பி,
  மஞ்சனம் ஆட நீ வாராய்!'
  என்ற பெரியாழ்வார் பாசுரத்தை நினைவுபடுத்தியது.

  தங்கள் கவிதைகள் படிப்பதே அலாதியான அனுபவம்!. அற்புதப் பகிர்வுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பிடிச்ச வரிகளையே எடுத்துக் காட்டியிருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி பார்வதி! பாசுரமெல்லாம் கூட நுனி விரல்ல வெச்சிருக்கீங்க. உங்களுக்குத் தெரியாத விஷயமே இல்லையோன்னு தோணுது! (எனக்கு பூஜ்யம்!). நீங்க சொன்ன பாட்டைக் கேட்கும்போது, "மாடு மேய்க்கும் கண்ணே. நீ போக வேண்டாம் சொன்னேன்" அப்படின்னு ஒரு பிரபல தமிழ் பாட்டு நினைவு வருது. பகிர்தலுக்கு மிக்க நன்றி!

   Delete
 6. தோழி... அருமையான கண்ணன் பாடல்!
  ஒரு குழந்தையைக் கையிவைத்து மெட்டுப்போட்டுப் பாடினால் எப்படி இருக்கும்...

  சொற்கள் சுழண்டோடிவந்து உங்களிடம் கைகட்டி நிற்கின்றதோ...:)
  அருமை மிக அருமை!

  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு மிக்க நன்றி இளமதி!

   Delete
 7. அழகான பாடல்:)! மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராமலக்ஷ்மி!

   Delete
 8. கால் வெரல சூப்ப வேணாம்
  ஆல எலையில் படுக்க வேணாம்
  அம்மா மடியில் படுத்துக்கலாம்
  கண்ணா ஓடி வா!
  ஆரிரரோ கேட்டு றங்க
  கண்ணா ஓடி வா!

  vvvaaaaa....v

  ReplyDelete
  Replies
  1. :) நன்றி லலிதாம்மா!

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)