Sunday, August 25, 2013

நடப்பதெல்லாம் நன்மைக்கே!


Expatguru அவர்கள் போன பதிவிற்கு எழுதிய பின்னூட்டம் இது. அவருக்கு எழுதத் தொடங்கிய பதில் ரொம்ப நீண்டு விட்டதால், இங்கே பதிவாகவே இடுகிறேன்…

//அருமையான கட்டுரை. நம் முன் வினை தீய செயல்களால் தான் இப்போது துக்கத்தை அனுபவிக்கிறோம் என்றே வைத்துக்கொள்வோம். எல்லாமே இறைவன் செயல் என்றும் கூறுகிறோம். அப்போது முதலில் அந்த தீய செயல்களை இறைவன் ஏன் செய்ய வைத்தான்? அது செய்ததனால் தானே இப்போது இப்படி அனுபவிக்கிறோம்.//

உங்கள் கேள்வி சிந்தனையைக் கிளறி விட்டு விட்டது. இதே கேள்வி எனக்குள்ளும் எழுந்ததுண்டு. “நான் எப்போதோ செய்திருக்ககூடிய தீவினைகளுக்கு அது என்னவென்றே கூடத் தெரியாத நிலையில், இப்போது தண்டனை அனுபவிப்பது என்ன நியாயம்?” என்று தோன்றியிருக்கிறது. பதில் தெரியாவிட்டாலும், உங்கள் கேள்வியால் ஏற்பட்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்…

//எல்லாமே இறைவன் செயல் என்றும் கூறுகிறோம். அப்போது முதலில் அந்த தீய செயல்களை இறைவன் ஏன் செய்ய வைத்தான்?//

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமும் சிலர் இதே கேள்வியைக் கேட்டார்கள். “அப்படியானால் நான் தீமை செய்தாலும் அதற்கு இறைவன் தானே பொறுப்பு?”, என்று. அதற்கு அவருடைய பதில்:  “உண்மையாகவே உன்னுள் இறைவன் இருக்கும் பட்சத்தில் நீ தீயவற்றை நினைக்கக்கூடக் கூசுவாய்”.

கள்ளங்கபடமற்ற தூய்மையான உள்ளத்தில்தான் இறைவன் குடியிருப்பான் என்பது அவர் அடிக்கடி சொல்வது. அப்பேற்பட்ட இதயத்தில் மாசுகளுக்கு இடமேது? தீய சிந்தனைகளுக்கு இடமேது? நம் உள்ளம் அப்படியில்லாத பட்சத்தில் நம் செயல்கள் அனைத்திற்கும் இறைவன் மேல் பழி போடுவது நியாயமில்லாத செயல்.

மற்றவர்களுக்கு நேரடியாகத் துன்பம் விளைவிப்பது மட்டுமே தீமை அல்ல. நம் மனதில் எழும் பொறாமை, வருத்தம், கோபம், இவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் வேறு ஒருவருக்கோ, அல்லது நமக்கேயோ கூட எதிர்மறையாக அமைகின்றன. ஒவ்வொரு எண்ணமும் நீரில் எறியப்பட்ட கல் போல பிரபஞ்ச வெளியில் எறியப்படுகிறது என்பார் சுவாமி சிவானந்தர். அதற்கென்று கண்டிப்பாக ஒரு விளைவு உண்டு. அதன் வீரியத்தைப் பொறுத்து விளைவுகளும் இருக்கும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. மனத்தூய்மையுடன் இருப்பதன் பெயரே அறம், மற்றதெல்லாம் வெறும் ஆரவாரம், என்கிறார் அவர்.

அதனால், ‘எல்லாமே இறைவன் செயல்’ என்பது சரிதான் என்றாலும், அது பளிங்கு போன்ற தூய  உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு வரியில் சொன்னால் அகங்காரம் இல்லாத மனமே மாசில்லாத மனம் என்று சொல்லலாம். குழந்தைகளின் மனம் அப்படிப்பட்டது.

அது மட்டுமல்ல, இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இறைவன், தானே எல்லாமே செய்வதில்லை, அவன் மனிதர்களுக்கு ‘free will’ என்று ஒன்றையும் கொடுத்திருக்கிறான் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன்படி, தான் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதைத் தானே தீர்மானிக்கும் உரிமை மனிதனுக்கு இருக்கிறது. அதனால் நாம் செய்யும் செயல்களுக்கு நாமேதான் பொறுப்பு, நம்மைத் தீவினைகளைச் செய்ய வைத்தவன் இறைவன் இல்லை என்றாகிறது.

இந்த உலகம் இயங்குவதே law of karma வின் அடிப்படையில்தான். அறிவியலின் படியும், ஒரு வினைக்கு நிச்சயம் எதிர் வினை என்றும் உண்டு என்பது உண்மைதானே?

‘நான்’ என்பது இருக்கும் வரை, நம் செயல்களுக்கு நாமேதான் பொறுப்பு. அகங்காரத்தை அழிக்கும் வழியாகத்தான், கீதையில் கண்ணன், சரணாகதி பற்றியும், செயல்களின் பலன்களைத் தனக்கே அர்ப்பணித்து விடும்படியும் சொல்கிறான்.

இவற்றை வைத்துப் பார்த்தால் ஓரளவு புரிகிறாற்போல் இருக்கிறது. மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, ஒரு பிறப்பிற்கே இந்த விதி பொருந்தித்தான் வருகிறது.

ஆக, நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்ன?

துன்பங்களும், அனுபவங்களும் நம்மை மேலும் மேலும் பண்படுத்தவே வருகின்றன. நம் இதயத்தைச் சுத்திகரித்து, மனிதப் பிறவியின் பயனைப் பெற்றுத் தருவதே அவற்றின் நோக்கம். அதுவே இறைவனின் நோக்கம்.

நடப்பதெல்லாம் நமக்கு எதிராக நடப்பது போலத் தோன்றும் சமயங்களிலும் அது நம்மை இந்தப் பயணத்திற்கு தயார்ப்படுத்தவே என்பது பின்னால் புரியும். (“வரமா, சாபமா?” என்ற இந்தப் பதிவையும் நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்). அதனால்தான் ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று சொல்லி வைத்தார்கள். யார் நன்மைக்கு? நம் நன்மைக்குத்தான்! எந்த ஒரு அனுபவத்தை எடுத்துக் கொண்டாலும், அது நம்மை இறைவனை நோக்கி ஒரு சிறு அடியாவது நகர்த்துவதற்கே என்பதே உண்மை.

(நல்லாக் குழப்பிட்டேனா? மன்னிச்சுக்கோங்க!)

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா

12 comments:

  1. போன பின்னூட்டத்தைப் பார்த்ததும் தான் நான் பொருத்தமான செய்தியொன்றைப் பகிர்ந்து கொள்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவ்வாறு சிந்தனையைத் தூண்டுகின்ற தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இந்தப் பதிவு என்னைப் பொறுத்தவரை குழப்பவில்லை. தெளிவாகவே இருக்கின்றது. சைவ சித்தாந்தப்படி, 'உயிர்கள் பிறவா நிலை அடைய வேண்டும் எனும் பேரருள் காரணமாக மாயை, கன்மம் என்னும் இரு மலங்களை இறைவனார் சேர்ப்பிக்கிறார். இந்தக் கன்மம் மூலகன்மம் எனப்படும். மூலகன்மத்தின் காரணமாக உயிர்கள் வினை செய்கின்றன. வினையின் பயனை இறைவர் தருகிறார். சிந்திக்கும் திறன் இல்லாத உயிரிகளிடத்தும் இது உண்டு' என்று கூறப்படுகின்றது. ஆக நம் வினைக்கு நாமே பொறுப்பு. நம் ஒவ்வொருவரைச் சுற்றிலும் சக்தி மையங்கள் சுழல்கின்றன. நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள், சொல், செயல் இவையனைத்தும் சக்தி மையத்தில் கலந்து பிரபஞ்ச வெளியில் மிதக்கின்றன. அவை நல்லனவாக அமைந்தால், சக்தி மையம் நல்ல விளைவுகளை நமக்குத் தருகின்றது.

    நாம் தவறேதும் செய்யாதபோது யாரேனும் நம்மைப் பகைத்தால், அவரை நினைத்து, தினம் (குறைந்த பட்சம்) இருபத்தைந்து முறை, 'வாழ்க வளமுடன்' என்று சொல்லி வருவதால், அவர் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இது கண்கூடான உண்மை. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. சைவ சித்தாந்தம் குறித்த பகிர்வுக்கு நன்றி பார்வதி! அதோடு, 'வாழ்க வளமுடன்' என்று ஒருவரை மனதார வாழ்த்துவதன் பலன் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. நானும் உணர்ந்திருக்கிறேன். மிகவும் நன்றி.

      Delete
  2. நடப்பதெல்லாம் நன்மைக்கே...

    நடப்பதெல்லாம் நம்மலாலே....! அறிய :

    http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html

    நன்றி....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்! உங்கள் பதிவையும் வாசித்தேன், பின்னூட்டவில்லை... :) பகிர்வுக்கு மிக்க நன்றி!

      Delete
  3. நல்ல பகிர்வு கவிநயா. /
    மற்றவர்களுக்கு நேரடியாகத் துன்பம் விளைவிப்பது மட்டுமே தீமை அல்ல./ உண்மை. அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி!

      Delete
  4. முன்வினை, தீயசெயல், வினை அனுபவித்தல் என்று வரிசையாக அடுக்கிக் கொண்டு வரும் பொழுது இதன் தொடர்ச்சியாகத்தான் இறைவன் மீதான பக்தியும் வருகிறது போலும். முன் சொன்ன தொடர்ச்சி இல்லையென்றால்
    அதற்குப் பின் வரும் பக்திக்கும் அவசியம் இல்லாது போகுமோ?.. அவை இல்லை என்றால் இது இல்லை என்பதாயின், இதன் இருப்பு அவை இருப்பதின் அடிப்படையிலா?..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜீவி ஐயா.

      //அவை இல்லை என்றால் இது இல்லை என்பதாயின், இதன் இருப்பு அவை இருப்பதின் அடிப்படையிலா?.. //

      பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட உதவும் பல மார்க்கங்களில் பக்தியும் ஒன்று என்று பெரியோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள் என்பது தவிர, இதன் இருப்பு அதன் அடிப்படையிலா என்ற கேள்விக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லையே...

      Delete
  5. நடப்பதெல்லாம் நன்மைக்கே....
    பகிர்வு அருமை.

    ReplyDelete
  6. நான் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் 'இனி..' தொடர்கதையில் இந்த விஷயத்தைத் தான் தொட்டு எழுதுவதாக இருக்கிறேன். இது பற்றி உங்கள் கருத்தையும் தெரிந்து கொள்ளலாமே என்பதற்காகத் தான் கேட்டேன். அங்கே வாருங்கள். இது பற்றியதான புரிதல்களைக் கலந்து கொள்ளலாம்.

    Expatguru இந்தப் பதிவைப் படித்திருப்பாரா, தெரியவில்லையே! பரவாயில்லை, அவரையும் அங்கே அழைத்து விடலாம். ஈடுபாடுள்ளவர்கள் சேர்ந்து விவாதிப்பதில் தான் தெளிவு பிறக்க வாய்ப்பிருக்கிறது.

    தங்கள் பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //நான் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் 'இனி..' தொடர்கதையில் இந்த விஷயத்தைத் தான் தொட்டு எழுதுவதாக இருக்கிறேன்//

      அப்படியா. வருகிறேன் ஜீவி ஐயா. மீள் வருகைக்கு நன்றி!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)