Monday, July 15, 2013

கமண்டலோஹம்!


சுவாமி சிவானந்தரைப் பார்க்க எப்போதும் யாரேனும் வந்து கொண்டே இருப்பார்கள். ஒரு நாள் அவரைப் பார்க்க ஒரு துறவி வந்தார். அவரோடு ஒரு பெரும் சீடர்கள் கூட்டமே வந்தது. அடிக்கடி “சிவோஹம்…சிவோஹம்” என்று வாய் விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் கையில் வெள்ளியினாலான ஒரு கமண்டலம் இருந்தது.

வழக்கப்படி பணிவன்புடன் அவரையும், அவருடன் வந்தவர்களையும் வரவேற்றார் சுவாமி சிவானந்தர். வழக்கம் போலவே, அந்தத் துறவியை தம் சீடர்களுக்காக ஏதேனும் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு இசைந்த துறவி, தன் கையில் இருந்த கமண்டலத்தை ஓர் ஓரமாக வைத்து விட்டு மேடையேறிப் பேசினார். பேசிக் கொண்டே இருந்தாலும் அவர் கண்கள் சில நிமிடங்களுக்கு ஒரு முறை வெள்ளிக் கமண்டலத்தைக் கவனிக்கத் தவறவில்லை. ஒரு வேளை அதன் பாதுகாப்பில் அவருக்குச் சந்தேகம் வந்து விட்டது போலும்.

பேசி முடிந்ததும், முதல் வேலையாக அந்தக் கமண்டலத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்! அப்போது அவர் முகத்தில் தோன்றிய நிம்மதி இருக்கிறெதே! பிறகு இன்னும் சிறிது நேரம் உரையாடி விட்டு, விடை பெற்றுக் கொண்டார். கிளம்பும் போது மீண்டும் ஒரு முறை ‘சிவோஹம்’ என்று பெருங்குரலில், அழுத்தமாகச் சொல்லிச் சென்றார்.

அவர் சென்ற பின்னர், சுவாமி சிவானந்தர் சிரித்துக் கொண்டே, “கமண்டலோஹம்!” என்றாராம்! :)

துறவிக்கே அவர் கமண்டலத்தின் மீது எவ்வளவு பற்று பாருங்கள்!


சன் டி.வி.யில் ‘ஆன்மீகக் கதைகள்’ என்ற தலைப்பில், திரு. சிவகுமார் அவர்கள் பேசி வருகிறார். எங்களுக்குக் காலை ஏழே முக்காலுக்கு வரும். அவ்வப்போது அலுவலகத்துக்குத் தாமதமாகக் கிளம்ப நேர்ந்தால் நேரத்தை வீணாக்காமல் (!), அதைப் பார்ப்பதுண்டு. அவர் சொன்ன குட்டிக் கதைதான் இது.

அவர் அன்றைக்குப் பேசிய பொருள்: “நாம் பொருட்களை மனிதர்கள் போலவும், மனிதர்களைப் பொருட்கள் போலவும் நடத்துகிறோம்”, என்பது.

அவர் சொன்னதைக் கேட்ட போது எனக்கு இன்னொரு வேடிக்கையான கதை(?) நினைவு வந்தது.

இரண்டு பெண்கள் ஒரு திருமணத்துக்குப் போனார்கள். அதில் ஒரு பெண் போகுமிடத்துக்கெல்லாம் இன்னொரு பெண் ஒரு நாற்காலியையும் கையோடு தூக்கிக் கொண்டே சென்றாள். அந்தப் பெண் உட்கார வேண்டுமென்றால், உடனே இவள் நாற்காலியைப் போட்டு, ஒரு துண்டால் நன்றாகத் துடைத்து, பிறகு உட்காரும்படி உபசரித்தாள். அவள் ஏதாவது குடிக்க வேண்டுமென்றால், அவள் மடியில் ஒரு துண்டை விரித்துத் தந்தாள். குடித்த பின் தம்ளரை உடனே வாங்கி வைத்தாள். வந்தது முதல் அவளையே கவனித்த வண்ணம் இருந்தாள்.

இதைப் பார்த்தவர்கள், “அடடா, என்ன மாதிரி உதவி செய்கிறாய், இந்தப் பெண்ணுக்கு? என்ன மாதிரி பார்த்துக் கொள்கிறாய்! எத்தனை அன்பு அவள் மேல்!”, என்று வியந்தார்களாம். அதற்கு அந்தப் பெண்ணோ, “அதெல்லாம் ஒன்றுமில்லை. அவள் கட்டியிருப்பது என்னுடைய பட்டுச் சேலை. அதை நான்தானே பாதுகாக்க வேண்டும்?” என்றாளாம்!

ஆக, நாம் நமக்குச் சொந்தமான ஜடப் பொருட்கள் மீது கூட அத்தனை அன்பு செலுத்துகிறோம். ஆனால் சக மனிதர்களிடம் பழகும்போது, ஒருவரைப் பார்த்து புன்னகை புரிவதானாலும், இவரிடம் நாம் நல்லபடியாக நடந்து கொண்டால் பின்னால் உபயோகப்படும் என்ற சுயநல நோக்கம் இருக்கத்தான் இருக்கிறது. பிறரிடம் பழகும் போது, உள்ளார்ந்த அன்புடன் பழக வேண்டும். நமக்கு உரிமையானவற்றைக்கூட ‘என்னுடையது’ என்ற எண்ணமில்லாமல், விலக்கி வைக்கக் கற்க  வேண்டும். அவற்றை நாம் இழக்க நேர்ந்தாலும் அது நம்மைப் பாதிக்கக் கூடாது. அதுவே பற்றில்லாத தன்மை என்பது. அந்த விலக்கி வைக்கும் தன்மையே, நம்மைப் பல துன்பங்களினின்றும் விலக்கி வைக்க வல்லது.

வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல், பற்றில்லாதவனைப் பற்றிக் கொண்டால், பற்றிக் கொண்டவை அனைத்தும் நம்மை விட்டுச் சென்று விடும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

(வழக்கம் போல எனக்கேதான் சொல்லிக் கொள்கிறேன். ஹி…ஹி…)

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அன்புடன்
கவிநயா


படத்துக்கு நன்றி: http://greatfruitarians.blogspot.com/


22 comments:

 1. நல்ல (நிஜ...?) உதாரணங்கள்... பற்று உட்பட காலம் பலவற்றை கற்றுக் கொடுத்து விடும்... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. //பற்று உட்பட காலம் பலவற்றை கற்றுக் கொடுத்து விடும்... //

   உண்மைதான். நன்றி தனபாலன்!

   Delete
 2. ம்... நேத்து ஒருத்தர் கிட்ட சண்டை போட்டேன்.... என்ன செய்யறது?

  ReplyDelete
  Replies
  1. அதனால என்ன, கவலைப்படாதீங்க. நாம எல்லோரும் இந்த விஷயத்தில் ஸ்கூல் பிள்ளைகள்தான்! தனபாலன் சொல்ற மாதிரி கற்றுக்கிட்டே இருக்கோம்... விழிப்புணர்வுதான் முதலில் வேணும் :)

   நன்றி ஸ்கூல் பையன் :)

   Delete
 3. சிறப்பான பகிர்வு. பட்டுப்புடவை கதையும் கமண்டலம் கதையும் மிக நன்று......

  தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete
 4. அருமையான கருத்துடன் கூடிய பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. உண்மைதான் கவிநயா!!. சொத்துக்களுக்குக் கொடுக்கும் மதிப்பை கூடப்பிறந்தவர்கள் காட்டும் பாசத்துக்கு கொடுப்பாரில்லை. இது போல் பல உதாரணங்கள் சொல்லலாம்...

  ////“நாம் பொருட்களை மனிதர்கள் போலவும், மனிதர்களைப் பொருட்கள் போலவும் நடத்துகிறோம்”, /////

  ரொம்ப சரி...

  சமீபத்தில் நான் கண்ட ஒரு காட்சி!!.

  ஒருவருக்கு, அவரது உறவினர், ஒரு ஞாயிறன்று வீட்டுக்கு வருவதாகப் போன் செய்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட நேரம்(அப்பாயின்ட்மெண்ட்?) மாலை மூன்று மணி. காலையிலும், பின் மாலையிலும் வேறெங்கோ போக வேண்டுமென்று சாக்கு. பின்னர் விசாரித்தபோது தெரியவந்தது. காலையில் வந்தால் டிபன் தர வேண்டும். மதியம் என்றால் உணவு. மாலையில் வந்தால் ஒரு கப் காபி, கடையில் வாங்கிய மிக்சருடன் முடிக்கலாம். 'அரிசி கிலோ அம்பது ரூபா மேல விக்கிது.. ஆருக்கு முடியும் சாப்பாடு போட்டு உபசாரம் பண்ண' என்றாரே பாக்கணும்..

  உறவு, அது தரும் இதம் எல்லாம் இப்போது இரண்டாம் பட்சம்தான் போல.

  பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி!!.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பார்வதி. விருந்தோம்பலெல்லாம் இப்போ எதிர்பார்க்க முடியாது! வரவுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி!

   Delete
 6. "பற்றில்லாதவனைப் பற்றிக் கொண்டால், பற்றிக் கொண்டவை அனைத்தும் நம்மை விட்டுச் சென்று விடும்."

  எனது குரு,
  அடிக்கடி மேற்கோள் காட்டும் குறள்நெறி இது!

  'பயனற்ற பற்றைப்' பற்றின கதைகளும்,
  பற்றற்ற தன்மையில் வைக்கும் பற்றின் முக்கியத்துவம் பற்றியும் இணைத்துரைத்த பாங்கு, அழகு! பதிவிற்கு நன்றிகள், கவிநயா !!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுந்தரேசன்!

   Delete
 7. திரு. சிவகுமார் உரையினை தவறாது நானும் கேட்டுக் கொண்டு வருகிறேன்.
  நீங்களும் கேட்பது குறித்து மகிழ்ச்சி.

  //“நாம் பொருட்களை மனிதர்கள் போலவும், மனிதர்களைப் பொருட்கள் போலவும் நடத்துகிறோம்”//

  எவ்வளவு உள்ளார்ந்த சொற்றொடர்! பொருளாதாய உலகுகேற்ப ஜடமாகிப் போன மனிதம்! வாழ்க்கையில் தொலைந்து போனவற்றை-இல்லை, நாம் தொலைத்தவற்றை-- மீட்டெடுக்கவே இன்னொரு வாழ்க்கை வேண்டும் போலிருக்கு!

  ReplyDelete
  Replies
  1. /திரு. சிவகுமார் உரையினை தவறாது நானும் கேட்டுக் கொண்டு வருகிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி ஐயா.

   //பொருளாதாய உலகுகேற்ப ஜடமாகிப் போன மனிதம்!//

   அழகாகச் சொன்னீர்கள். என்ன செய்யலாம்... வருத்தம் தரும் விஷயம்தான்...:(

   வருகைக்கு நன்றி ஐயா!

   Delete
 8. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி, திகழ்! :)

   Delete
 9. உண்மை தான் கவிநயா ! , "வீட்டிலேயே இது என் தலைகாணி, இதுல படுத்துண்டா தான் எனக்கு தூக்கம் வரும். இது என் தட்டு, இதுல சாப்பிட்டா தான் எனக்கு சாப்பிட்டா மாதிரி இருக்கும். எங்க போனாலும் என் வீட்டுக்கு வந்து விழுந்துடனும் அப்பத்தான் எனக்கு திருப்தி." இப்படி பேசுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் மனிதர்களை உபயோக படுத்திக்கொண்டு, பொருட்களை நேசிப்பவர்கள். இது சுயநலத்தின் வெளிப்பாடு.

  குஜராத் பூகம்பத்தில் வீடிழந்தவர்களை போய் கேட்கவேண்டும். இந்தமாதிரி,"என் வீட்டில் படுத்தால் தான் எனக்கு தூக்கம் வருமென்றால், வீடிழந்தால் என்ன செய்வது?", என்று.

  பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்த்ததில் ரொம்பவே மகிழ்ச்சி, தானைத் தலைவி! மிக்க நன்றி.

   Delete
 10. pirantha naalaa?! athu yeppo...?

  vazhthukkal !

  ReplyDelete
  Replies
  1. ஆடி 18. திகழுக்கு எப்படி நினைவிருக்குமோ. சரியாக வருடா வருடம் வாழ்த்து சொல்லி விடுவார்! வாழ்த்துகளுக்கு நன்றி தலைவி.

   Delete
 11. மிகவும் ரசித்தேன்! பிறந்த நாள் குழந்தைக்கு belated வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாளுக்கப்புறம் தக்குடு கோந்தையைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி :) வாழ்த்துக்கு நன்றிப்பா!

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)