Sunday, June 16, 2013

இணையமே… இதயமே…"I had a life once... now I have a computer." ~Author Unknown
 
போன வாரக் கடைசியில் எங்க வீட்ல திடீர்னு இணையம் வேலை செய்யலை! இணையம் வழிதான் தொலைபேசி, தொலைக்காட்சி, எல்லாமே. இந்த மாதிரி சமயங்கள்லதான் தெரியுது,  நாம எந்த அளவு இணையத்தை சார்ந்திருக்கோம்னு.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது கணினியில் செலவிடாட்டா தூக்கம் வராது. சனிக்கிழமை மட்டும் விதி விலக்கு. முழுக்க நடன வகுப்புகள் இருக்கும், அதுலயே அசந்துடும். கணினியாவது ஒண்ணாவதுன்னு இருக்கும். ஆனா திரும்ப ஞாயிற்றுக் கிழமை தேட ஆரம்பிச்சிடும். கோடை விடுமுடுறைனால இந்த வாரத்தில் இருந்து நடன வகுப்புகளும் குறைஞ்சிடுச்சு.

இந்தியால இருக்கிற என் தங்கைகிட்ட பேசிக்கிட்டிருந்த போது சொன்னேன், "ஒண்ணுமே இல்லாம போரடிக்குதுடி”ன்னு. அவ சிரி சிரின்னு சிரிச்சிட்டு சொல்றா, “எங்க வாழ்க்கைய நீயும் ரெண்டு நாளைக்கு வாழ்ந்து பாரேன்”, அப்படின்னு! “என்னடி பண்றது, உனக்கு அப்படியே பழகிருச்சு, எனக்கு இப்படியே பழகிருச்சு”ன்னு சொன்னேன்.

“பாருங்க, என் தங்கை இப்படிச் சொல்றா”, அப்படின்னு என் தோழிகிட்ட சொன்னா, அவங்க அதுக்கு மேல சிரி சிரி! இது எப்படி இருக்கு? இதைத்தான் “இடுக்கண் வருங்கால் நகுக”, அப்டின்னு சொன்னாரோ வள்ளுவர்? :)

இதைப் பற்றி புகார் குடுக்கறதுக்காக அந்த கம்பெனிக்கு தொலைபேசினா, பதிவு பண்ண தகவல்தான் (voice portal) வந்தது. அது நல்லாதான் வேலை செஞ்சதனால (முன்ன பின்ன செத்திருந்தாதானே சுடுகாடு தெரியும்?) நானும் நிஜ மனுஷங்களைக் கூப்பிடாம அதுலயே திங்கட்கிழமைக்கு ஆள் வந்து பார்க்கிறதுன்னு ஏற்பாடு பண்ணி வெச்சாச்சு.

திங்கட்கிழமை கூப்பிட்டு கேட்டா, “அப்படி எதுவுமே எங்க சிஸ்டத்துல இல்லை, நீங்க மறுபடி புதுசா புகார் குடுக்கணும். அதுக்கப்புறம் எப்ப முடியுதோ அப்பதான் தருவோம்”னு சொல்லிட்டாங்க! ரொம்ப டென்ஷனாயிடுச்சு. மறுபடி தொலைபேசில அந்த கம்பெனியக் கூப்பிட்டேன். இந்த முறை முன் ஜாக்கிரதை முத்தம்மாவாகி, நிஜ ஆள்கிட்டதான் பேசணும்னு முதல்லயே '0'வை அமுக்கிட்டேன்! ஒரு பெண்மணிதான் எடுத்தாங்க, பொறுமையாதான் பேசினாங்க, ஆனா செவ்வாய்க்கிழமைதான் முடியும்னு சொல்லிட்டாங்க. வர்றதுக்கு அரை மணி நேரம் முன்னாடி கூப்பிடுவாங்க, யாராவது வீட்ல இருக்கணும் அப்படின்னாங்க. எங்க ரெகார்டட் சிஸ்டத்தை இனிமே பயன்படுத்தாதீங்கன்னு வேற சொன்னாங்க!

இன்னொரு தரம் கூப்பிட்டா இன்னொரு ஆள் வருவாங்க, அவங்ககிட்ட மறுபடி கேட்டுப் பாருன்னு ஐடியா குடுத்தார், ரங்கமணி. சரின்னு மறுபடி கூப்பிட்டப்ப, வேற ஒரு பெண்மணி எடுத்தாங்க. அவங்களும், நான் சொன்னதையெல்லாம் பொறுமையா கேட்டுக்கிட்டாங்க. “என் தப்பில்லை, உங்க சிஸ்டத்து மேலதான் தப்பு. அது வேலை செய்யாதுன்னு எனக்கு எப்படித் தெரியும்?” அப்படின்னு சொன்னேன். “அச்சோ, இப்படியெல்லாம் உங்களுக்கு பிரச்சனை வருதே, பாவம்தான் நீங்க. ரொம்ப ஸாரி”, அப்படின்னு சொல்லி, “ஆனா உங்களுக்கு என்னால உதவ முடியாது, நான் வேற பகுதியில் வேலை செய்யறேன், உங்களுக்கு உதவ வேற ஒருத்தருக்கு கனெக்ஷன் குடுக்கறேன்”னு சொல்லிட்டு, வேற ஒருத்தருக்கு கனெக்ஷன் குடுத்தாங்க.

இப்ப வந்தவரு ஒரு ஆண்மணி. அதுவும் இந்தியர். குரலையும் பேசற விதத்தையும் கேட்டாலே தெரியுது. மற்றவங்களை மாதிரி இவர் தன்னை பேர் சொல்லி அறிமுகப் படுத்திக்கலை. மொட்டையா "ஹலோ… ஹலோ"ன்னாரு. என்னமோ தப்பான எண்ணுக்குப் போயிருச்சாக்கும்னு நினைச்சிட்டேன். பிறகு நானே எதுக்குக் கூப்பிட்டேன் விவரம் சொன்னேன். அவருக்குப் பொறுமையும் இல்லை. அவர் சொல்றது ஏதாச்சும் புரியலைன்னு இன்னொரு தரம் கேட்டா கோவம் வேற வருது. சிடுசிடுப்பா பதில் சொல்றாரு. நியாயமா பார்த்தா கோவப்பட வேண்டியது நானு. ஆனா நான் பொறுமையா, நிதானமா, மென்மையா, நிலைமையை எடுத்துச் சொல்லிக்கிட்டிருக்கேன். இத்தனைக்கும் இந்த உரையாடல்களை எல்லாம் ரெகார்ட் பண்றாங்க. அப்படியும் இவங்கல்லாம் இப்படிப் பேசறாங்க. ஆனா இவரு மறுபடியும் பார்த்துட்டு திங்கட்கிழமையே பார்க்க முடியும்னு சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் குடுத்துட்டாரு. அந்த வரை பரவாயில்லை.

திங்கள் மதியம் அந்த டெக்னீஷியன் கூப்பிட்டப்போ செல் போன்ல வேற கால்ல இருந்ததால எடுக்கல. இதென்னடா வம்புன்னு சொல்லி, இன்னும் ஒரு முறை கூப்பிட்டு, மறுபடியும் (நெசம்மா!) இன்னும் ஒரு நிஜ ஆள்கிட்ட பேசினேன். அவரும் ஒரு ஆண்மணி. அமெரிக்கர். அவ்வளவு அருமையா பொறுமையா பேசினாரு.

வாடிக்கையாளர் சேவையை நான் அவ்வளவா கூப்பிட்டதில்லை, இது வரை. ஆனா நிறைய பேரு இதைப் பற்றி புகார் பண்றதைக் கேட்டிருக்கேன். என் அனுபவம் மோசம் இல்லைன்னாலும், முன்னல்லாம் வாடிக்கையாளர்களை ராஜா மாதிரி நடத்துவாங்க. இப்பல்லாம் வேண்டாத விருந்தாளி மாதிரி நடத்தறாங்க. நாம தினசரி சந்திக்கிற, பழகற மனுஷங்ககிட்டயே அன்பா இருக்கணும் அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கோம். ஆனா இங்கே, அன்பா, சிநேகமா இருக்கறதுக்குன்னே காசு (சம்பளத்தைத்தான் சொல்றேன்) குடுக்கறாங்க, அப்படியும் அதொண்ணும் காணும். தொலைபேசியில் மட்டும் சொல்லலை. கடைகளுக்குப் போகும் போதும் அப்படித்தான். சில கடைகள்லதான் வாடிக்கையாளர்களை மரியாதையா நடத்தறாங்க.

இதைப் பற்றிப் பேசும் போது பார்வதிஇராமச்சந்திரன் வல்லமையில் எழுதின கதை ஒண்ணு நினைவு வருது.

ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கத்தான் இருக்கு. ஆனா அதை வேலைக்குன்னு வர்ற இடத்தில் காண்பிக்கிறது நல்லதில்லை. இந்த விஷயத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர்களை நினைச்சாதான் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். எப்பவும் புதுசா, பளிச்சுன்னு, முகம் சுளிக்காம சிரிச்சிக்கிட்டு, கலகலன்னு பேசிக்கிட்டு…. ஒரு நாள், ரெண்டு நாள்னா பரவாயில்லை. வருஷம் பூரா அப்படி இருக்கறது கஷ்டம்தான். ஆனா அவங்க தொடர்ந்து தினமும் வேலை செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

ஒருத்தரோட பழகும்போது “இவர் நமக்கு எதுக்கு பயன்படுவார்” அப்படின்னு காரியவாதித்தனமா யோசிச்சு, ஆதாயம் இருந்தால் மட்டுமே பழகறவங்க அதிகம். அப்படியில்லாம, ஒருத்தரைச் சந்திக்கும்போது “இவருக்கு நாம எப்படி உதவலாம்?” அப்படின்னு நினைச்சே பழகணுமாம். அப்படிச் செய்தா, மனசுக்குள்ள நல்ல எண்ணமும், நட்பும், அன்பும், தானா வந்துரும். அப்படின்னா, மற்றவங்களுக்கு உதவறதையே வேலையா பார்க்க வர்றவங்க இன்னும் எவ்வளவு நல்லபடியா நடந்துக்கணும்!

(இணையத்திலிருந்து இதயத்துக்கு வந்துட்டோமா? :)

என்னமோ போங்க… நாமளாவது நம்ம வரைக்கும் நல்ல பிள்ளைகளா இருப்போம்!

அன்புடன்
கவிநயா 

12 comments:

 1. // “இவருக்கு நாம எப்படி உதவலாம்?” // என்றும் நட்பு நீடிக்கும்...

  சொல்ல வந்ததை சரியாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. சரியாகப் புரிந்து கொண்டீர்கள். நன்றி தனபாலன்! :)

   Delete
 2. வாடிக்கையாளர் சேவை இங்கும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதிலும் அரைகுறையாய் தெரிந்து வைத்திருப்பவர்களை பணிக்கு வைத்திருப்பது இன்னும் கொடுமை.

  இதயத்துக்கு தந்த சேதி நன்று:)!

  ReplyDelete
  Replies
  1. //வாடிக்கையாளர் சேவை இங்கும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதிலும் அரைகுறையாய் தெரிந்து வைத்திருப்பவர்களை பணிக்கு வைத்திருப்பது இன்னும் கொடுமை.//

   ஆமாம், சரியாகச் சொன்னீர்கள், ராமலக்ஷ்மி.

   //இதயத்துக்கு தந்த சேதி நன்று:)!//

   நன்றி! :)

   Delete
 3. நாமளாவது நம்ம வரைக்கும் நல்ல பிள்ளைகளா இருப்போம்!

  உலகம் இவ்வளவுதான்..!

  ReplyDelete
  Replies
  1. //உலகம் இவ்வளவுதான்..!//

   ஆமாம் அம்மா. ஒவ்வொருவரும் தன்னளவில் நல்லவராக இருந்தால் உலகமே சுவர்க்கமாகி விடும் :) வருகைக்கு நன்றி அம்மா.

   Delete
 4. ஒரு வழியா உடல்நலம் சரியாகி நேத்து காலைல ஊரப் பாக்க வந்துட்டேன்.

  முத்தான கருத்துக்களுடன் கூடிய பதிவு. எனக்கும் சமீபத்தில் ஒரு அனுபவம் இம்மாதிரி ஏற்பட்டது.

  நீங்க சொன்னா மாதிரி நாம வரைக்கும் நல்ல பிள்ளைகளா இருப்போம்.

  பதிவில் என் கதைக்கு லிங்க் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி பார்வதி :) உங்கள் அனுபவங்களையும் விரைவில் பகிர்ந்து கொள்ளுங்கள். வருகைக்கு நன்றி!

   Delete
 5. அட?????????????????????/ உங்களைப் பேச வைக்கணும்னா இணையம் வேலை செய்யக் கூடாது! அதானா?? இத்தனை நாட்கள் பேசாமல் இருந்ததெல்லாம் சேர்த்து வைச்சுப் பேச வைச்சுட்டாங்க டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

  ReplyDelete
  Replies
  1. ஐய... நான் பேசறதுக்கு அதெல்லாம் வேண்டாம் அம்மா. ஒண்ணே ஒண்ணுதான் வேணும்... அதாவது நான் பேசறதைக் கேட்கிறதுக்கு ரொம்ம்ம்ம்ம்பக் குடுத்து வெச்சிருக்கணும்... அஷ்டே! :)

   Delete
 6. எங்கள் ஊரிலே பி.எஸ்.என்.எல். தொலை பேசி எண்.1500

  அதை சுழற்றினால் தமிழில் பேச ஒன்றை அமுக்கவும்.
  ஆங்கிலம் என்றால் இரண்டு என்கிறது.

  தமிழில் பேசுவோம் என்று ஒன்றை அமுக்கினேன்.

  உங்கள் தொலை பேசியின் என்னைப் பதிவு செய்யவும்.
  என்றது. செய்தேன். நீங்கள் பதிவு செய்து எண் சரியெனில் ஒன்றை அமுக்கவும். அமுக்கினேன்.

  தொலை பேசி பற்றியதானியங்கி மூலம் புகார் கொடுக்க எண் ஒன்றை அமுக்கவும்.

  சேவை அலுவலகத்தில் இருப்பவருடன் பேச எண் இரண்டை அமுக்கவும்.

  இரண்டை அமுக்கினேன்.

  அடுத்த இருபது நிமிஷங்களுக்கு சங்கீதமோ சங்கீதம்.
  ஆரபி ராகத்தில் சாதின்சனே என்னமா வயலின் ....
  அப்படியே லயித்து விட்டேன்.

  திடிரென கட் ஆகி ...
  வணக்கம். நான் பி.எஸ்.என்.எல். நிர்வாக சேவை அலுவலர் சுசித்ரா பேசுகிறேன்.

  உங்களின் தேவை என்ன ?
  நான் என்ன சொல்லவேண்டும் என்று அழைத்தெனொ அது மறந்து விட்டு இருந்தது. குறிப்பாக அந்த டெலிபோனுடன் இணைந்த ப்ராட் பாண்டு டெபாசிட்டில் வைக்க வேண்டும் என்பது தான். அது குறிப்பாக நினைவுக்கு வரவில்லை.
  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
  ஒரு பத்து வினாடிகளில் கேட்பவரின் பொறுமை போய்விட்டது.
  என்ன சார் ... என்ன வேண்டும் என்றார் .
  இந்த ஆரபி ராகத்தை கேட்டதில் எனக்கு சொல்ல வந்தது மறந்து
  போயிற்று. நீங்கள் ஒரு உதவி செய்யுங்களேன்.
  என்ன ?
  அந்த பாட்டை மறுபடி போடுங்களேன்.என்றேன்.
  டொப் என்று வைத்து விட்டார்.

  சரியான லூசாக இருப்பார் போல் இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருப்பார்.

  சுப்பு தாத்தா.
  http://subbuthatha.blogspot.com/http://subbuthatha.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. //இந்த ஆரபி ராகத்தை கேட்டதில் எனக்கு சொல்ல வந்தது மறந்து
   போயிற்று. நீங்கள் ஒரு உதவி செய்யுங்களேன்.
   என்ன ?
   அந்த பாட்டை மறுபடி போடுங்களேன்.என்றேன்.
   டொப் என்று வைத்து விட்டார்.//

   :) வலையுலகத்துக்கு அவரு வந்ததில்லை போல, இல்லன்னா நீங்க 'சுப்பு தாத்தா'ன்னு சொல்லியிருக்கணும் :)

   அனுபவப் பகிர்வுக்கு நன்றி தாத்தா :)

   Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)